ஜூலை 18 முதல் 28 ஆம் தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு 318 இல் காட்சிப் படுத்தப்படும் திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் புத்தகங்கள் பற்றிய ஒரு அறிமுகம் இது...
நூலாசிரியரான முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன், மறைந்து கிடக்கும் இந்திய வரலாறு, வரலாற்று நாயகர்கள், இதிஹாசங்கள் மற்றும் சோழர்களது கால நிர்ணயம், வான சாஸ்திரம், தமிழ் இலக்கியம், இந்து கலாசாரம், ஜோதிடம் மற்றும் ஜோதிடம் சார்ந்த வானிலையியல் போன்ற துறைகளில் ஆய்வு செய்யும் பன்முகத் தன்மை கொண்டவர். இதுவரை எட்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
புத்தகங்கள் விவரம்:
(1). ‘ஆண்டாள் தமிழும், அறியாத வைரமுத்துவும்’

‘இவர் எழுதியுள்ள ‘ஆண்டாள் தமிழும், அறியாத வைரமுத்துவும்’ என்னும் நூல், ‘தமிழை ஆண்டாள்’ என்னும் தலைப்பில் வைரமுத்து எழுதிய கட்டுரைக்குப் பதிலடி கொடுப்பது. இது ரேர் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விலை: ரூ. 50-
(2) ‘ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?’

இந்தப் புத்தகத்தில், மதுராந்தகன் என்னும் உத்தம சோழன் குறித்த தவறான கருத்தை நீலகண்ட சாஸ்திரியார் முதல், இன்றைய சரித்திர ஆசிரியர்கள் வரை சொல்லியுள்ளார்கள் என்பதை, திருவாலங்காடு செப்பேட்டின் வடமொழிப் பகுதியின் மூலம் நிரூபித்தது மட்டுமல்லாமல், இராஜராஜ சோழன் உட்பட இடைக் காலச் சோழர் பலரது காலத்தையும், தவறாகக் கணித்துள்ளார்கள் என்பதைப் பல கல்வெட்டுகள் மூலம் நிரூபித்துள்ளார். கல்வெட்டுகளைக் கொண்டு எப்படி காலம் கணிக்க வேண்டும் என்னும் பாடம் எடுத்தது மட்டுமல்லாமல், கல்வெட்டுகள் காட்டும் சோழர்களது உண்மையான ஆட்சி காலத்தையும் இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார். ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்குப் பின் இருந்தது யார் என்பதையும், காந்தளூர் சாலையை அருள்மொழி வர்மன் கலமறுத்தது எவ்வாறு என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்நூல் சுவாசம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விலை: ரூ. 190-
(3) ‘ராமானுஜ இதிகாசம்’

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கிடைக்கும் ‘ராமானுஜ இதிகாசம்’ என்னும் நூல், வைணவத்தை ஸ்தாபித்த ராமானுஜரது வாழ்க்கை குறித்து, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரலாற்று ஆய்வாளர்களுக்குப் புதிராக இருந்த கேள்விகளுக்கு கல்வெட்டுகள், மற்றும் இலக்கிய ஆதாரங்கள் மூலம் விடை காண்கிறது. குறிப்பாக வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஆர். நாகசாமி அவர்கள் ராமானுஜரைக் குறித்து எழுதிய புத்தகத்துக்கு எதிர் வினை ஆற்றுகிறது. ராமானுஜரை சோழ நாட்டை விட்டு வெளியேற்றிய ‘கிருமி கண்ட சோழன்’ யார்? அவனே குலோத்துங்க சோழனா? மேல்கோட்டையை முகலாயர்கள் தாக்கியது உண்மையா? 11-ஆம் நூற்றாண்டில் எந்த முகலாயன் தென்னாட்டிற்குப் படையெடுத்து வந்தான்? ராமானுஜர் தில்லிக்குச் சென்று, களவாடப்பட்ட பெருமாள் விக்கிரகத்தை, முகலாயர்களிடமிருந்து கொணர்ந்தது உண்மையா? இவற்றுக்கான கால ஆதாரம் என்ன? முகலாயப் பெண், இந்து தெய்வத்திடம் காதல் கொண்டு, மேல்கோட்டையில் பெருமாள் திருவடிகளில் கலந்தது உண்மையா? இது போன்ற பல கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாக விடை காண்பது மட்டுமல்லாமல், பின்னாளில், திப்பு சுல்தான், ராமானுஜருடன் தொடர்பு கொண்ட இடங்களை – ‘தொண்டனூர் ஏரி’ உட்பட – பலவற்றையும் அழித்த, மறைக்கப்பட்ட வரலாற்றையும், ராமானுஜர் தங்கியிருந்த நரசிம்மர் கோயிலை அழித்து அங்கு முகலாய ஜிஹாதியின் சமாதியை நிறுவியதையும், அந்த இடங்களை நேரில் பார்வையிட்டு, ஆசிரியர் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கிறார். தில்லை கோவிந்தராஜரைக் கடலில் வீசிய சோழ மன்னனைப் பற்றியும், ராமானுஜர் காலம் தொட்டே இருந்து வந்த இடங்கை-வலங்கை சண்டைகள், இன்று வரை சாதிச் சண்டைகளாகத் தொடர்வதையும் விளக்கும் இந்த நூல், இனி வரப் போகும் காலத்திலும், ஆய்வுகளுக்கு ஒரு அடித்தளமாக விளங்குகிறது. விலை: ரூ. 425-
(4) “மஹாபாரதம் 3136 BCE”.

மஹாபாரதத்தின் காலத்தைப் பற்றி, பலரும், பலவிதமாக சொல்லிக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில், அனைவரும் படிக்க வேண்டிய நூல், “மஹாபாரதம் 3136 BCE”. காந்தாரியின் சாபமும், அதன்படி, போர் முடிந்த 36 ஆம் ஆண்டு கிருஷ்ணரும், அவரது குலமும் அழிந்தது என்பதும், கால நிர்ணயம் செய்ய உள்ளுறைச் சான்றாக மஹாபாரதத்திலேயே இருக்கிறது. கிருஷ்ணர் உலகை விட்டு நீங்கிய அந்த வருடமே கலி மஹாயுகத்தின் தொடக்கமாகும். அந்த காலக் கணக்கையே நாம் இன்றும் பின்பற்றுவதாலும், கல்வெட்டுகளில் காணப்படுவதாலும், அந்த வருடமான பொ.மு. 3101 ஆண்டுக்கு முன், 36ஆவது ஆண்டான பொ.மு. 3136 ஆண்டே மஹாபாரதப் போர் நடந்த ஆண்டு என்று பிற வானியல் சான்றுகள் மூலமும், அர்ஜுனனது கொள்ளுப் பேரனான ஜனமேஜய அரசரது செப்பேடுகள் மூலமாகவும் இந்த ஆங்கில நூல் நிரூபிக்கிறது. முக்கிய அம்சமாக, போருக்கு முன்னால் ஒரு வால் நட்சத்திரம் உடைந்து, அதன் துகள்கள் சந்திரன் மற்றும் பூமி மீது விழுந்த ஆதாரங்களை வியாசர் 75 க்கும் மேற்பட்ட அறிகுறிகளாகக் கொடுத்துள்ளார் என்பதை அறிவியல் ரீதியாக நிறுவுகிறது. இதனால், அமாவாசை ஒரு தினம் முன்னால் வந்த விவரத்தையும், அதை எப்படி கதை ரூபமாகக் கொடுத்துள்ளார்கள் என்பதையும், அதனால், போதாயன அமாவாசை உண்டானது என்பதையும், அதனால், உத்தராயணம் தள்ளிப் போகவே, பீஷ்மர், அம்புப் படுக்கையில் படுக்க நேரிட்டதையும், மாறி வந்த உத்தராயணமே ‘ரத சப்தமி’ என்று நினைவில் நாம் நிறுத்தியுள்ளதையும் விவரிக்கும் இந்தப் புத்தகம், விண்கற்கள் விழுந்ததால், மொஹஞ்சதாரோவில் ஏற்பட்ட மரணங்கள், ஆரியப் படையெடுப்பின் ஆதாரமாக எவ்வாறு தவறாக திரிக்கப்பட்டன என்பதையும், அது விழுந்ததால் ஏற்பட்ட கால மாறுதல்கள், மற்றும், பைபிள் கூறும் பெரு வெள்ளம் ஆகியவற்றைப் பற்றியும் விளக்குகிறது. வெளியீடு: நியூ புக்ஸ்; விலை: ரூ. 475-
(5) “ஆதி சங்கரர் 148 BCE”

அத்வைதத்தை நிறுவிய ஆதி சங்கரர் பிறந்த காலம், இன்று வரை அறியப்படாமல் இருந்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு மடத்தினரும், ஒவ்வொரு விதமாகக் கால நிர்ணயம் செய்துள்ளனர். அவற்றையெல்லாம் ஆய்ந்து, அவற்றில் உள்ள தவறுகளைக் காட்டுவது மட்டுமல்லாமல், உண்மையான காலமான பொ.மு. 148 என்பதையும் நிறுவுகிறது, “ஆதி சங்கரர் 148 BCE” என்னும் இந்த ஆங்கிலப் புத்தகம். இந்த ஆய்வு காட்டும் அதிசயம், கரிகால் சோழன் ஆதி சங்கரர் காலத்தவர். திராவிட தேசம் என்று அறியப்பட்ட காஞ்சியை, திரிலோசன பல்லவனிடமிருந்து வென்று, பொன்னால் மதில் கட்டி, ஆதி சங்கரர் விருப்பபடி, காஞ்சியை சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று புனரமைத்தவர் போன்ற விவரங்களையும், கல்லணை கட்டிய காரணத்தையும், காலத்தையும், இளம் திரையன், மற்றும் அந்நாளைய சோழ வம்சாவளியையும் கூறி, ஆதி சங்கரரது காலத்தை, தமிழ் மன்னர்கள் வரலாற்றின் மூலமும் நிரூபிக்கிறது இந்நூல்.விலை: ரூ. 75-
(6) ‘முதல் வேத ஹோமம் யாரால், எப்பொழுது செய்யப்பட்டது?’

முருகப் பெருமானே, முதல் வேத வேள்வியைச் செய்து, வேத கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தவர் என்பதை, ‘முதல் வேத ஹோமம் யாரால், எப்பொழுது செய்யப்பட்டது?’ என்னும் சிறு புத்தகம் நிரூபிக்கிறது. ஆங்கிலத்திலும் கிடைக்கும் இந்தப் புத்தகம், தமிழும், வடமொழியும் ஒன்றாகத் தோன்றிய வரலாற்றையும், காலத்தையும் சொல்வது மட்டுமல்லாமல், சங்க கால நிர்ணயம், மற்றும் முருகனது வழித்தோன்றல்கள் உலகெங்கும் சென்ற ஆதாரங்களையும் கொடுக்கிறது. விலை: ரூ. 50-
இந்த ஆசிரியரது பிற புத்தகங்களைப் பெற அணுக வேண்டிய மின்னஞ்சல்: jayasreebooks@gmail.com
$$$