-திருநின்றவூர் ரவிகுமார்
சுதந்திர இந்தியாவில் பெரும் நாசம் விளைவித்து, நாட்டு முன்னேற்றத்தைத் தடுத்ததில் நக்சல்வாதிகளுக்கு பேரிடம் உண்டு. அந்த சிவப்பு பயங்கரவாதம் தனது இறுதிக்கட்டத்தை நோக்கி தற்போது தள்ளப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை, ஆரம்பப் புள்ளியில் இருந்து சுருக்கமாக அலசுகிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

அவன் தன் சகாக்கள் நால்வருடன் அந்த காட்டுப் பாதையில் நடந்தான். திடீரென்று வாகனம் வரும் சத்தம் கேட்டது. ஐவரும் பதுங்கிக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து அவன் தன் சகாகளில் மூவரை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு பக்தர்கள் வேனில் வந்துள்ளனர் என்று அவர்கள் திரும்பி வந்து சொன்னார்கள்.
ஆனால் கொஞ்சம் நேரத்தில் அவர்கள் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அவனும் அவனது சகாக்களும் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட , அவர்களும் பதிலுக்கு சுட்டனர். பெரிய பாறையின் பின்பு ஒளிந்திருந்த அவனை போலீசார் மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்றனர். உடனிருந்தவனும் கொல்லப்பட்டான். மற்ற மூவர் தப்பி ஓடி விட்டனர். ‘லால் சலாம்’ என்றபடி அவன் உடல் சரிந்தது.
இது நடந்தது 2005 பிப்ரவரி ஆறாம் தேதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மங்களூர் மாவட்டத்தில். அவன் பெயர் சாகேத ராமன்; மைசூரில் உள்ள தமிழ் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவன்; கர்நாடகத்தில் நக்சல் குழுவின் தலைவன்.
மூளைச்சலவை
சாகேத ராமன் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். முதுகலை பட்டப் படிப்பிற்காக தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கிப் படித்தபோது நக்சல்பாரிகளின் தொடர்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் முதல் தலைமுறை நக்சல்பாரிகள் குழுவின் தலைவனானான்.
கர்நாடகத்தின் வரலாற்றை அடிமட்ட மக்கள் நிலையிலிருந்து எழுதுவதாகச் சொல்லி வரலாற்றை எழுதத் தொடங்கினான். அதில் மைசூர் அரசர்களான உடையார்களை விமர்சித்தும் திப்பு சுல்தானைப் போற்றியும் எழுதி உள்ளான். சகி, மாஸ்டர் பிரேம், பாண்டு என்று அவனுக்கு பல பெயர்கள். இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. தனது சகாவான ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டான் . அந்தப் பெண்ணும் 2001 இல் விசாகப்பட்டினத்தில் நடந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் போலீசாரால் கொல்லப் பட்டாள்.
பிரபலங்கள் கொடுத்த அழுத்தம்
சாகேத ராமனின் மரணத்திற்கு யூ.ஆர்.அனந்த மூர்த்தி, அருணா ராய், ராஜேந்திர சச்சார், மகாஸ்வேதா தேவி, தீஸ்தா சீத்தல்வாட், ராமச்சந்திர குஹா, ஷபனா ஆஸ்மி, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்; துக்கம் கடைபிடித்தனர்.
அவனது சடலத்தைக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் பலர். “முதலில் தருவதாகச் சொன்ன காங்கிரஸ் முதல்வர் தரம்சிங் பின்னர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக்கு இணங்கி உடலைத் தர மறுத்து, அடையாளம் தெரியாதபடி மறைவாக அடக்கம் செய்து விட்டனர்” என்று கௌரி லங்கேஷ் பதிவு செய்துள்ளார். முதல்வரை பலரும் திட்டித் தீர்த்தனர்.
சட்டமன்றத்தில் முதல்வர் தரம்சிங் , புத்திசாலியான அவரது மரணம் தனக்கு வேதனை அளிப்பதாக, மன்னிப்பு கோரும் பாவனையில் வருத்தத்தைப் பதிவு செய்தார். காங்கிரசின் இதுபோன்ற சொதப்பல்கள் நேரு காலத்திலேயே தொடங்கி விட்டன.

நேருவிடம் தொடக்கம்
நேரு இடதுசாரி மனச்சாய்வு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவி இந்தியாவுக்கு வந்த போது அதை ஏற்க மறுத்து சீனாவுக்கு விட்டுக் கொடுத்தவர் அவர். இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்தபோது அது புல் கூட முளைக்காத பூமி என்று அலட்சியமாகப் பேசி, இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க அனுமதித்தவர்.
முகமூடிக்குப் பின்னால்
சோவியத் ரஷ்யா மூலம் கம்யூனிசச் சிந்தனைகள், செயல்பாடுகள் இந்தியாவில் நுழைக்கப்பட்டன. 1967 இல் சாரு மஜூம்தார் என்பவரால் கம்யூனிசக் கட்சியிலிருந்து பிரிந்து உருவாக்கப்பட்டதே நக்சல்பாரி அமைப்பு. மார்க்ஸிசம், மாவோயிசம், ஸ்டாலினிஸம் , லெனினிசம், நக்சலிஸம் என்று இன்று இந்தியாவில் A முதல் Z வரை உள்ள எல்லா வகை கம்யூனிஸ்ட் அமைப்புகளின் நோக்கம் இந்தியாவில் ஜனநாயகத்தைச் சிதைப்பது. சுதந்திரமான, இறையாண்மை கொண்ட இந்தியா என்பது முறைகேடானது என்பதே இவை அனைத்தின் கருத்தியல் மற்றும் நடைமுறை சிந்தனை.
தேர்தல் மூலம் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்குச் சென்று உள்ளிருந்து சிதைப்பது. ஆயுதமேந்தி பயங்கரவாதச் செயல்கள் மூலம் வெளியிலிருந்து ஜனநாயக இந்தியாவைக் குலைப்பது இதுவே இவர்களது நோக்கம்.
சுதந்திரப் போராட்டத்தை உள்ளிருந்து சதி செய்து கம்யூனிஸ்டுகள் சிதைத்தனர் என்பதற்கு ஆதாரமாக பல நூல்கள் வந்துள்ளன. இந்தியாவைத் தூண்டாடி பாகிஸ்தானை உருவாக்குவது நியாயம் என்றும் அதுவே தங்கள் நோக்கம் என்றும், கங்காதர அதிகாரி என்ற கம்யூனிசத் தலைவர் எழுதியுள்ளார். ‘முஸ்லிம் லீக்கின் நெருங்கிய, சிறந்த நண்பன் கம்யூனிச கட்சி’ என்று லீகர்களே கூறியுள்ளனர்.
இந்திரா வளர்த்தது
இந்திரா அம்மையார் காலத்தில் கம்யூனிஸ்டுகள் கல்வித் துறை, பத்திரிகைகள், ஊடகங்கள், வரலாற்றுத் துறை ஆகியவற்றில் ஆதிக்கம் செய்ய அனுமதித்தார். பதிலுக்கு அவர்களது ஆதரவைப் பெற்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தை ‘சுதந்திரமான மார்க்ஸிய குடியரசாக’ கம்யூனிஸ்டுகளுக்கு தாரை வார்த்தார்.
சோனியா — மன்மோகன்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் (மன்மோகன்- சோனியா) போடப்பட்ட பல சட்டங்களில் மார்க்சிய முத்திரையை தெளிவாகப் பார்க்கலாம் . முதல் ஐ. மு. கூட்டணி அரசை மார்க்சிஸ்டுகள் வெளிப்படையாக ஆட்டிப் படைத்தனர் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். இரண்டாவது ஐ.மு.கூட்டணி ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாக, ‘மாவோயிஸ்டுகளின் பயங்கரவாதம் நாட்டை அரித்து தின்கிறது’ என்றார். ஆனால் தன்னால் ஏதும் செய்ய முடியவில்லை என்று இயலாமையையும் வெளிப்படுத்தினார்.
2004 — 2014 வரை மாவோயிஸ்டுகளின் பயங்கரவாதம் உச்சகட்டத்தில் இருந்தது என்பதை 2013 இல் மன்மோகன் சிங் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
உச்சநீதிமன்றத்தில்
“மனித உரிமை அமைப்புகள் என்று அரசு சாராத அமைப்புகள் (என் ஜி ஓ) மூலம் மாவோயிஸ்டுகள் செயல்படுகின்றனர் . அதில் கல்வித் துறை சார்ந்தவர்கள், சிந்தனையாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள் என்று பல நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகள்… “இவர்கள் போலியான குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர். இந்திய சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகளை இழிவு படுத்துகின்றனர். தங்கள் அமைப்பின் மூலம் அரசுத்துறை அமைப்புகள் மீது தவறான செய்திகளைப் பரப்புவது, அவதூறு பிரசாரம் செய்வதை மேற்கொள்கின்றனர். அதன் மூலம் தங்கள் 'புரட்சி'யை முன்னெடுக்கின்றனர். இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்போது அது பல நேரங்களில் அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்து விடுகிறது… “முன்பிருந்ததை விட நக்சல்களின் செல்வாக்கு இரு மடங்காகியுள்ளது. 14 மாநிலங்களில் 203 மாவட்டங்களில் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். ஆயுதமேந்திய நக்சல்பாரிகளின் எண்ணிக்கை ஏழாயிரத்திலிருந்து அதிகரித்து இப்பொழுது 13,500 ஆக உள்ளது. ஆயுதக் கடத்தல் மூலமாக அவர்களது படை வலிமை அதிகரித்துள்ளது. அவர்கள் தைரியமாக வியாபாரிகள், வர்த்தகர்கள், நிறுவனங்களை மிரட்டி ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் திரட்டி விடுகிறார்கள். அதிலிருந்து தங்கள் தொண்டர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்…. “இடதுசாரி தீவிரவாதம் என்றால் பயங்கரவாதம் தான் என்பது வெளிப்படையான விஷயம். வன்முறை வழியாக தான் அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். இந்திய தேசியத்தை மறுக்கின்ற எல்லாவற்றையும் அவர்கள் ஆதரிக்கிறார்கள். அவர்கள் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானவர்கள்”
– என்று உச்ச நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
இப்படிப்பட்டவர்களான நக்சல்பாரி தலைவரான கத்தார் போன்றோருடன் தான் ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது சந்தித்து, உறவாடி, உணவருந்தினார்.
2013 ல் மன்மோகன் சிங் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் நிலை இன்று இல்லை. மோடி பிரதமரான பிறகு நிலைமை மாறி வருகிறது.
குஜராத்தியா, தேசியவாதியா?
மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது சர்தார் படேலுக்கு சிலை எழுப்ப நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார். ஐந்து லட்சம் கிராமங்களில் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டது.
‘பாஜகவுக்கு தலைவர்கள் இல்லை. எனவே எங்கள் தலைவர்களைத் திருடுகிறார்கள்’ என்று நகையாடியது காங்கிரஸ். படேல் குஜராத்தி என்பதால் பட்டேலை உயர்த்துகிறார் மோடி என்றனர் சிலர். காங்கிரஸ் உட்பட புறம்பேசிய யாரும் அதற்கு முன்தினம் வரை படேலை முன்னிறுத்தவும் இல்லை; தங்கள் முன்மாதிரியாகவும் கொண்டவர்கள் இல்லை.

முன்மாதிரியான சர்தார்
சர்தார் படேல் சமஸ்தானங்களை ஒருங்கிணைத்த சாமர்த்தியம் அபாரமானது. அவரது வலதுகரமாகச் செயல்பட்ட வி.கே.மேனன், “படேல் சமஸ்தான அதிபர்களைச் சந்திக்கும் போது அவர்களது ஆட்சிப் பகுதியைப் புகழ்ந்து பேசுவார். இப்படிப்பட்ட அழகிய பகுதி சிறு பகுதியாக இருந்தால் தேங்கிய குட்டையாக நாற்றமடிக்கும். எல்லாம் இணைந்து ஏரியாக இருந்தால் ரம்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பார். அரசர்கள் புரிந்து கொள்வார்கள். இந்தியாவுடன் இணைந்து விடுவார்கள்” என்று பதிவு செய்துள்ளார்.
இணங்காத ஹைதராபாத் நிஜாமை அதிரடி நடவடிக்கை மூலம் இந்தியாவில் இணைத்தார் படேல். கோவாவும் அப்படியே. ஆனால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இணைய முன் வந்த பிறகும் கூட, ஏதேதோ காரணம் காட்டி அலைக்கழித்து, இன்றும் காஷ்மீர் பிரச்னையாக இருக்கக் காரணமானார் பண்டித நேரு.
இரும்பு மனிதரும் இணையரும்
நரேந்திர மோடியும் அமித் ஷாவும் இரும்பு மனிதர் சர்தார் படேலை முன்மாதிரியாகக் கொண்ட இணையர்கள். படேல் செய்ய நினைத்த -ஆனால் பண்டித நேருவால் செய்ய விடாமல் தடுக்கப்பட்ட விஷயம், காஷ்மீர் பிரச்னை. அதை இந்த இணையர்கள் தீர்க்க முனைந்தனர். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது; கல்லெறிதல் நின்றது; அமைதி ஏற்படத் தொடங்கியது. அமைதியைக் குலைக்க முயன்ற பாக் – அமெரிக்காவின் முகத்தில் ரத்தம் தெறித்தது. கார்கிலைப் போல உலக வரலாறு படைத்தது சிந்தூர் நடவடிக்கை.
இடதுசாரி பயங்கரவாதம்
இடதுசாரி பயங்கரவாதம் மிகக் கோரமான முகம் கொண்டது. ரத்தத்தின் நிறம் சிவப்பு. ஆனால் கம்யூனிச பயங்கரவாதத்தின் நிறம் அடர் சிவப்பு. இவர்கள் செய்த திரள் படுகொலைகள் ஏராளம். அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு மரிச்சபியில் (1979) செய்த இனப் படுகொலை வரலாறு.
சீனா, நேபாளம், மேற்குவங்கம், சத்திஸ்கர், ஜார்க்கண்ட் , மத்திய பிரதேசம், பிஹார், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளம் என நீண்ட சிவப்புப் பாதை இருந்தது. அன்னிய சக்திகள் நினைத்தால் சிவப்பு , பச்சையின் துணை கொண்டு இந்தியாவில் ரத்த ஓடைகளை பெருகச் செய்ய முடியும் என்பது, வெற்றுப் பேச்சு அல்ல உண்மை என்பதை இந்திய உளவுத்துறையின் பல அறிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு
இடதுசாரி பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேலை அரசினுடையது என்று ஒதுங்கி நிற்கவில்லை இந்திய சமுதாயம். அறிவார்ந்த தேசபக்தர்களான ராம் ஸ்வரூப், சீதாராம் கோயல், ஈஸ்வர சரண், அருண் ஷோரி, என்.எஸ். ராஜாராம், ஹர்ஷ் நாராயணன், கொயின்ட்ராட் எல்ஸ் போன்ற பலர் சிவப்பு பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதினர். ஆர்எஸ்எஸ்.ஸும் அதைச் சார்ந்த அமைப்புகளும் சிவப்பு பயங்கரவாதத்திற்கு எதிராகக் களமாடினர். கருத்தியல் ரீதியிலும் களத்திலும் இந்துத்துவர்கள் கொடுத்த பதிலடியும் தற்காக ஈந்த உயிர்ப் பலியும் மிக அதிகம்.
எடுபடாததற்கு காரணம்
தேசியவாதிகளின் குரல் மக்கள் மத்தியில் எதிரொலிக்க முடியாததற்குக் காரணம் இருந்தது. அன்றைய செய்தி, ஊடகத்துறையில் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகம். (இன்றும் கூட தென்னிந்தியாவில் நிலைமை மாறவில்லை). பல செய்தியாளர்கள் ‘தோழரே’ என்றுதான் விளிப்பார்கள். சில பத்திரிகையாளர்கள் சீனா அல்லது ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார்கள். வெளிநாட்டில் மூளைச் சலவை செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் அவர்கள்.
மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில்
அடுத்ததாக, நூல்கள். நக்சல்பாரிகள் சுயநலமற்றவர்கள்; தன்னையே தியாகம் செய்யக் கூடியவர்கள்;, வீரமான போராளிகள்; சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் போராடுபவர்கள்; சுரண்டலுக்கு எதிரானவர்கள்; ஏழைப் பங்காளர்கள்; காப்பாளர்கள் – என்றெல்லாம் ஒளிவட்டத்துடன் பாடநூல்களிலும், நவீன இலக்கியங்களிலும் எழுதி, பரப்பி, மாணவர்களையும் இளைஞர்களையும் கவர்ந்தனர்.
சினிமா
தென்னிந்தியாவில் குறிப்பாக தெலுங்கு திரை உலகில் சிவப்பு திரைப்படங்கள் ஏராளம். தமிழ், மலையாள திரை உலகம் விதிவிலக்கல்ல. ஆரம்பத்தில் ஹிந்தி திரை உலகில் அமிதாப்பச்சனுக்கு ஆக்ரோஷமான இளைஞன் என்ற சித்திரம்தான். ஆந்திரா, தெலுங்கானாவில் இன்றும் தெருவோர நாடகங்கள், பாடல்கள் மூலம் நக்சல்பாரிகளின் கருத்து பேசுபொருளாக உள்ளது. கத்தாரின் பாடல்கள் கிராமங்களில் பிரபலம். அவருடன் தான் அண்மையில் ராகுல் காந்தி நடைபயணத்தின் போது உறவாடினார்.
காங்கிரஸ் அரசியல்
நேரு, இந்திரா, தரம் சிங், சோனியா, ராகுலைப் பற்றி பார்த்தோம். ஒட்டுமொத்த ஆந்திராவின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு சென்றபோது அவரது கார் கண்ணி (புதை) வெடிகுண்டால் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். நக்சல்பாரிகளை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியின் ராஜசேகர ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.
அமைதிப் பேச்சுவார்த்தை
எப்போதெல்லாம் ஏதோ ஒரு நக்சல் பயங்கரவாதி சுடப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ உடனே ஊடகங்கள் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பும். அவர்கள் திருந்தி வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூச்சல் எழும்.
நீதிமன்றங்களும் அதற்கு ஏற்ப அரசிடம் ஆதாரம் கொடு, பேச்சு வார்த்தை நடத்து, திருந்தி வாழ ஏற்பாடு செய் என்றெல்லாம் அறிவுரை கொடுக்கும். பிடிபட்டவர்களை வெளியே விட்டு விடும்.
அமித் ஷாவின் அணுகுமுறை
2019 ல் இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சரானார் அமித்ஷா. இவரைப் பற்றிய ராணுவ அதிகாரியான ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் சொல்லியது இது: “இருபது பட்டத்து இளவரசர்கள் ஒன்றாக வந்தாலும் இந்த ஒரு மனிதருக்கு இணையாக மாட்டார்கள் .”
சட்டப்பிரிவு 370 வை ஒழித்தது போல நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க (2019 மார்ச் 31) நாள் குறித்தார் ஷா. முதல் இலக்கு ஆந்திராவும் தெலுங்கானாவும். அடுத்தது ஒடிசா, பிஹார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர். சட்டீஸ்கரில் காங்கிரசின் வெற்றி விகிதம் எவ்வளவு உயரும் என்று ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருந்த போது அமைதியாக பூபேஷ் பாகேல் ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியைக் கொண்டு வந்தார். நக்சல்பாரிகளுக்கான ஆதரவின் அடித்தளம் ஆட்டம் கண்டது.
அமைதிப் பேச்சு கிடையாது
‘நக்சல் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது; கைது செய்வது கிடையாது. அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். இது மட்டுமே ஒரே வழி. சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு’ என்பது அமித் ஷாவின் அணுகுமுறை ஆனது.
சட்டீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2024-இல் இருந்து 2025 மே மாதம் வரை 420க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டீஸ்கரில் 15 மாவட்டங்கள் நக்சல்பாரிகளின் ஆதிக்கத்தில் இருந்தன. இப்போது அது ஏழாகக் குறைந்துள்ளது. கடந்த மாதம் மக்கள் விடுதலை கொரில்லா படையின் பொதுச் செயலாளர் பசவராஜ் எனப்பட்ட கேசவ ராவ் கொல்லப்பட்டார். ஜூன் முதல் வாரத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர். மூன்றாம் வாரத்தில், ஆந்திராவில் பெண் உட்பட மூன்று மத்திய குழு தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.
2025 ஜூன் 14 தேதி தமிழகத்தில் பசவராஜ் மரணத்திற்கு கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. அரசு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
‘நக்சல்பாரிகளின் மத்திய குழு ஒன்று கூடி முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்தப் பகுதியில் சுற்றி வளைக்கப் பட்டுள்ளார்கள். சந்திக்க முடியாத நிலை உள்ளது’ என்று சரணடைந்த நக்சல்பாரியின் வாக்குமூலம் செய்தித்தாளில் கசிந்துள்ளது.
கள அணுகுமுறை
அமித் ஷா நாள் குறித்தது மட்டுமன்றி அதற்கு ஏற்ப கள நடவடிக்கைகளை மேற்கொண்டார். மத்திய, மாநில காவல்துறையினர் இடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்து செயலாற்ற ஏற்பாடு செய்தார்.
நக்சல்பாரிகளின் கொரில்லா போர் முறையை எதிர்கொள்ள காவல் துறையினருக்கு சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டது. மலைப்பகுதி, காடுகளைப் பற்றி நன்கு தெரிந்த பழங்குடியினர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டனர். சரணடைந்த நக்சல்பாரிகளும் காவல்துறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மண்ணின் மைந்தர்களான அவர்கள் சூழ்நிலையை மாற்ற முக்கிய காரணியாக அமைந்தனர்.
நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதும் மிக முக்கிய காரணமாகும். ஆளில்லா விமானங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. டிஜிட்டல் வயர்லெஸ் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தி அரசுத் தரப்பினரிடையே தொடர்பு மேம்படுத்தப்பட்டு, சேதம் குறைக்கப்பட்டது.
இரண்டே வழி உள்ளது
2026 மார்ச் மாதம் என்ற காலவரம்பு சாத்தியம்தான் என்று செய்தி ஊடகங்களின் மூலம் தெரிகிறது. சிவப்பு பயங்கரவாதிகள் முன்பு இப்போது இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று, இன்னும் கொஞ்ச காலம் போராடி தானாகக் கரைந்து போவது. இரண்டாவது, ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்து, அமைதி வழிக்கு திரும்புவது.
$$$