இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…

தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் அரிய நேர்காணல்

-வ.மு.முரளி

    

     கோவை மாவட்டம், முதலிபாளையத்தில் தவத்திருவாளர்கள் சிவராமசாமிக்கும், கப்பிணியம்மாளுக்கும் நான்காவது மகவாக 1926ல் தோன்றிய இராமசாமி அவர்கள், கௌமார மடாலயத்தின் ஆதிகுரு முதல்வர் இராமானந்த அடிகளாருக்கு அணுக்கப்பணி ஆற்றியவர். 1950ல், பேரூர் திருமடத்தின் தலைவரான ஆறுமுக அடிகளாரின் திருவுளப்படி சாந்தலிங்கர் திருமடத்தின் இளையபட்டத்தை ஏற்றார். 1967ல் திருமடத்தின் தலைவரானார். 

1953ல் திருமடத்தில் தமிழ்க்கல்லூரியைத் துவங்கியதும், தமிழில் வழிபாட்டு முறையை வளர்த்ததும் அடிகளாரின் சீரிய பணிகளில் சில. சமய வகுப்புகள், உழவாரப்பணி, பாடல்பெற்ற தலங்களில் வழிபாடு புரிதல், திருமுறைகளைப் பதிப்பித்தல், திருக்குட நீராட்டு விழாக்கள், இந்து ஒற்றுமைப்பணிகள் என அடிகளாரின் பன்முகச் செயல்பாடுகளை விவரிக்கலாம். 

உலக சைவப் பேரவை, தமிழகத் துறவியர் பேரவை, விஸ்வ இந்து பரிஷத், திருக்குறள் பேரவை, அறநிலையத்துறை ஆலோசனைக்குழு போன்ற பல அமைப்புகளில் பங்குபெற்று, அவற்றுக்குப் பெருமை சேர்த்தவர் அடிகளார். விருத்தம் பாடுவதில் வல்ல புலவர். 92அகவை வரை அருளாட்சி புரிந்த அடிகளார் 2018 ஆகஸ்டு 31 அன்று சிவனுடன் கலந்தார்.

தேசிய வார இதழான விஜயபாரதத்தின் கோவை சிறப்பிதழிலும் (14.04.2000), அடுத்த இதழிலும் (21.04.2000) தவத்திரு அடிகளாரது நீண்ட நேர்காணல் வெளியானது. பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பான அன்பர்களின் ஐயங்களைத் தீர்ப்பதாக உள்ள அந்த நேர்காணல், அவரது நூற்றாண்டை ஒட்டி இங்கு வெளியாகிறது.

கேள்வி: சாந்தலிங்கர் திருமடம் பற்றி தாங்கள் சிறிது கூற வேண்டும்.

          திருக்கயிலாய பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம் கொடி வழியில் வந்த சாந்தலிங்க சுவாமிகளால் நிறுவப்பட்டது, சாந்தலிங்கர் திருமடம். இதன் நெறி வீரசைவம். திருமிகு தமிழால் வழிபாடுகள் நடத்துவது இதன் சமயநெறி. நலிவுற்றோர், தாழ்த்தப்பட்டோர், மிகப் பின்தங்கிய மக்களுக்கான உதவிப்பணிகளைச் செய்வதே இதன் சமுதாய நெறியாகும். 

கேள்வி: சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடையே சென்று தாங்கள் ஆன்மிகப் பிரசாரம் செய்தது குறித்து? 

          அவர்களைக் கைதிகள் என்று சொல்வது தவறு. நாமும் கூட கைதிகள்தான். உண்மையில் சிறைக்குள் இருக்கவேண்டிய பலர், வெளியே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே சிறைவாசிகளை ‘அகப்படுத்தப்பட்டவர்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களது வாழ்க்கை, செம்மையுறப் பணியாற்றுவதும் அவசியமாகிறது. அதற்காகவே சிறைவாசிகளிடையே வாழ்வியல் போதனைகளைப் பல வருடங்களாகச் செய்து வந்தோம். கோவை சிறையில், இது பல வருடங்கள் நடந்தது. சிறைக்குச் சென்று நாள் முழுவதும் அவர்களுடன் இருப்போம். அவர்களைக் கொண்டே உள்ளே இசைப் பாடல்களைப் பாடச் செய்வதுண்டு, இன்று நாம் அவ்வப்போது சென்று வருகிறோம். மற்றவர்கள் தொடர்ந்து சென்று பார்த்து வருகிறார்கள். 

சிறைவாசிகளிடையே சமய விழிப்புணர்வுப் பணியை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப் பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள். ஆனால் தமிழ் மக்களோ இத்தகைய ஏற்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். அதற்காகவே நாம், இந்த முயற்சியை மேற்கொண்டோம். இதனால் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணமாக, பாலதண்டாயுதம் என்ற, கடவுள் நம்பிக்கையற்ற, கம்யூனிஸ்டுத் தலைவரை எனது சிறைச்சாலைச் சந்திப்பு மாற்றியிருப்பதைச் சொல்லலாம். சைவ சித்தாந்தப் பாடம் கேட்க விரும்பிய அவருக்கு, சிறையில் ஓர் ஆண்டு பாடம் நடத்தினேன். அதன்பிறகு அவர், ‘இதுவரை நான் இத்தனை செய்திகளைத் தெரிந்து கொள்ளாமல் போனேனே’ என்று வருந்தினார். ‘போலீஸ்காரன் இல்லாத நாடு எப்படியோ, அதேபோலத்தான் சமயம் இல்லாத வாழ்வியல்,’ என்று மனப்பூர்வமாக மேடையிலேயே அவர் பேசினார். நெறிப்படுத்துவதன் வாயிலாக கடுமையான உள்ளங்களையும் மாற்ற முடியும் என்பதற்கு, இது சான்றாகும். 

கேள்வி: தமிழில் சமயவழிபாடு நடத்துவதில் சாந்தலிங்கர் திருமடம் ஆற்றும் பணிகள் குறித்து? 

          மேலைச் சிதம்பரம் என்றழைக்கப்படும் பேரூரில் 1953ல் தமிழில் அர்ச்சனையைத் துவக்கினோம். இதுவே தமிழில் வழிபாட்டுக்கான முதல் பெரிய முயற்சி என்று சொல்லலாம். திருமணச் சடங்குகள், புதுமனை புகுதல், நீத்தார்கடன், போன்ற வாழ்வியல் சடங்குகள் அனைத்தையும் தமிழிலேயே செய்வதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

          கோடைக்காலப் பயிற்சிகள் வாயிலாக, ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இத்தகு தமிழ் வழிபாட்டை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த 45 ஆண்டுகளில் ஏறக்குறைய 3000 கோயில்களில், சிற்றூர்கள் தோறும் திருக்குட நன்னீராட்டு விழாவை தமிழில் நடத்தியிருக்கிறோம். 

          தமிழில் வழிபாடு என்றவுடன் ஏதோ எங்களது புதிய முயற்சி என்று கருதக் கூடாது. தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற அருளாளர்களின் அருட்செல்வங்களைப் பயன்படுத்தியே வழிபாடு நடத்துகிறோம். 

          பிட்டுக்கு மண் சுமந்த எளியவனாக ஈசனை நம் கண்முன் நிறுத்தியது, தமிழ். முதலை வாய்ப்பட்ட பிள்ளைக்கும், சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்ட பக்தருக்கும் அருளியதும் தமிழ்தான். அப்படிப்பட்ட அருட்பாடல்களைப் பாடியே வழிபாடுகளை நடத்துகிறோம். 

கேள்வி: ‘வடமொழியும் தென்தமிழும் ஆனாய் போற்றி’ என்று சமயக்குரவர்களில் ஒருவரான அப்பர் கூறியிருக்கிறாரே? 

          நாம் வடமொழியை என்றும் வெறுக்கவில்லை. வடமொழியிலுள்ள வேதங்களும், ஆகமங்களும் தவறு என்று நாம் சொல்லவில்லை. அதற்காக தமிழில் வேதம் இருக்கக் கூடாது என்று கருதலாமா? கடவுள்தன்மை உடையவர்களால் அருளப்படுவதே வேதங்களாகும். கடவுள்தன்மை உடையவர்களுக்கு, எல்லா மொழியும் தெரியும். ‘எழுதுமறை மொழிந்த பிரான்’ என்று ஞானசம்பந்தரின் வாக்கைப் பற்றி சேக்கிழார் குறிப்பிடுவார். ஆகவே வேதவழி என்பது எந்த ஒரு மொழிக்கும் சொந்தமானதல்ல. அனைத்து மொழிகளுக்கும் தொடர்புடையது என அறியலாம். 

          மொழி என்பது வெறும் கருவிதான். சமயமே, மூலமானது. மருத்துவ சாத்திரத்தை ரஷ்ய மொழியிலும், சீன மொழியிலும், ஏன், இந்தி மொழியிலும்கூட மொழிபெயர்த்துப் பயன்படுத்திவருகிறார்களே அதுபோலத்தான். நாம் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். அதே சமயம் உணர்ந்த மொழியில் வழிபாடு இருப்பின் சிறப்பு என்று வலியுறுத்துகிறோம். 

          நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப என்று தொல்காப்பியம் கூறும், நிறைமொழி மாந்தர்கள் வடமொழியில் மட்டும்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அனைத்து மொழிகளிலும் இருக்கலாம். இதனையே திருவள்ளுவர், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் என்று சொன்னார். 

          தேவாரத்தையும், திருவாசகத்தையும், அருட்பாடல்களையும், அபிராம பட்டரையும் பார்க்கிறபோது அவர்களது மறைமொழியின் அருமை நமக்குப் புரிகிறது. தமிழ்பாடலின் மூலம் முருகனைத் தோன்றச் செய்த (கம்பத்து இளையனார்) அருணகிரி நாதரை மறக்க முடியுமா? 

கேள்வி: ஆலயங்களில் தமிழில் வழிபாடு சிறந்ததா? சம்ஸ்க்ருதத்தில் வழிபாடு சிறந்ததா என்ற சர்ச்சை இன்றும் நீறுபூத்த நெருப்பாக இருந்துகொண்டிருக்கிறது. இதற்குத் தாங்கள் கூறும் சுமுகமான தீர்வு என்ன?

          தமிழில் வழிபாட்டைச் செய்வதில் அக்கறை காட்ட வேண்டும். வேத வழிபாட்டிலும், ஆகம வழிபாட்டிலும் நமக்குக் கசப்புணர்வு கிடையாது. ஆனால், மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வது, இன்றைய சமய உலகிற்கு அவசியமான ஒன்று. கோயில் செல்கின்ற மக்கள், பொழுதுபோக்காகவோ, வேடிக்கை பார்ப்பதாகவோ, நினைக்காமல் தங்களுடைய மனம் ஒன்றி, கடவுளை வழிபட வாய்ப்பு என்ன? இதற்குத் தமிழில் வழிபாடு உறுதுணையாகத் தான் இருக்கும். இதை மறுப்பதற்கான புரியவில்லை. 

வீட்டிலிருக்கும் வரை தமிழில் பேசுபவன், கடவுளிடம் மட்டும் ஏன் வேற்றுமொழியில் பாடவேண்டும்? அதுவும் நம்மால் கடவுள் அருள் பெற்றவர்களாகக் கருதப்படும் ஆன்றோர்கள் அருளிச் செய்த பாடல்களைச் சொல்லுவதில் தயக்கம் ஏன்? 

கேள்வி: ஒருவேளை, இந்த விவாதம் அரசியல் படுத்தப்பட்டதால் சர்ச்சையாக மாறியிருக்கலாமோ? 

          இல்லை. பெரும்பாலும் ஆதிக்க உணர்வின் வெளிப்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. அரசின் தலையீடும், சிக்கலை ஏற்படுத்தியுள்ளது உண்மையே. அதிலும் கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர் இதைச் சொல்லும்போது, இவர் எதற்கு ஆன்மிகச் செயல்பாடுகளில் தலையிடுகிறார் என்ற கோபம் எழுவது இயற்கையே. 

கேள்வி: அடிப்படைக்கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பதிலும்கூட சர்ச்சை தொடர்கிறதே? 

          தமிழ்வழிக் கல்விக்கு இடையூறு ஏற்படுத்துவது நல்லதல்ல. உலகின் எந்த மூலையிலும் தாய்மொழிக் கல்வியன்றி வேறு மொழிகளில் கல்வி கற்பிப்பதாக ஆதாரம் காட்ட அந்த எதிர்ப்பாளர்களால் முடியுமா? நானும் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்கெல்லாம் தாய்மொழிக் கல்வியே இருக்கிறது.

          நான் கயிலாயமலைக்குச் சென்றிருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது. அங்கு எங்களுக்கு உதவுவதற்காக ஆங்கில மொழிபெயர்ப்பாளரை அழைத்துச் சென்றிருந்தோம். ஆனால் அங்கிருந்தவர்கள் ஆங்கிலத்தில் சொல்வதை ஏற்கவில்லை. வேறு ஏதாவது பாரத மொழியில் மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்யுமாறு அங்கிருந்தவர்கள் கூறினார்கள். (கயிலாயத்தில் சீன மொழியிலேயே சடங்குகள் நடத்துகிறார்கள்) அதன்படியே நடந்தது. எனவே, ஆங்கில மோகத்தில், தாய்மொழியான தமிழை விட்டு நீங்கிவிடக் கூடாது.

கேள்வி: பேரூரில் தமிழ்க் கல்லூரியைத் தாங்கள் தொடங்கியிருக்கிறீர்கள் இது எந்தச் சூழ்நிலையில் துவக்கப்பட்டது?

          தமிழ்க் கல்லூரி என்பது எனது புதிய சிந்தனையல்ல. தமிழகத்தில் வடமொழி ஆதிக்கம் வலிமையாக இருந்த அந்தக் காலகட்டத்தில், 1936-37களில், தமிழ்க் கல்லூரிகள் தமிழகத்தின் சில இடங்களில் துவக்கப்பட்டன. திருவையாறு கல்லூரி வடமொழிக் கல்லூரியாக இருந்தபோது, தமிழுக்காக ஒரு இயக்கம் அங்கு உருவானது. அதையடுத்து தமிழுக்காக அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. கா.நமச்சிவாய முதலியார் காலத்தில் தமிழில் பாடத்திட்டமும் வகுக்கப்பட்டது. அது 1937ல் நடைமுறைக்கு வந்தது. உ.வே.சா. போன்ற பெரியோர்களும், தமிழ்ப் புலவர்களும் அதற்கான நூல்களைத் தொகுப்பதில் முனைந்தனர். மயிலம், கரந்தை போன்ற இடங்களிலும் தமிழ்க் கல்லூரிகள் துவங்கின. 1940க்குப் பிறகு, திருமடங்கள் இந்தக் கல்விப் பணியில் நுழைந்தன. தருமபுரம், திருப்பனந்தாள் ஆகிய மடங்களைத் தொடர்ந்து, 1952-53களில் பேரூரில் நாம் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கினோம். ஆர்.கே. சண்முகம் செட்டியார், கோவைக்கிழார், வெ.சி. சுப்பையா கவுண்டர் போன்ற சான்றோர்களின் துணையோடு இது நிறுவப்பட்டது.

கேள்வி: தமிழகத்தில் பல திருமடங்களும், ஆன்றோர்களும் இருந்தும்கூட, மக்களிடையே சாதி உணர்வு மங்கவில்லையே, இதற்கு என்ன காரணம்?

          இது இடைக்காலத்தில் ஏற்பட்ட சிக்கல். பழங்காலத்தில் சாதி வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதற்கு பெரிய புராணம் சான்று பகர்கிறது. பெரிய புராணத்தில், அப்பூதி அடிகள் வீட்டிற்கு அப்பரடிகள் சென்றபோது, அவரது திருப்பாதங்களை நீரால் கழுவி, தனக்கு மட்டுமல்லாது தனது குலத்தினர் அனைவர் மீதும் அதனைத் தீர்த்தமாகத் தெளித்ததைக் காண்கிறோம். அந்தக் காலத்திலும் சாதி இருந்திருந்தாலும், சாதி உணர்வுகள் இல்லாமல் இருந்துள்ளது. திருஞானசம்பந்தருடன் சென்ற பாணர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, வேள்விச் சாலையில் இடமளித்ததையும் காண்கிறோம். அந்தணரும் வழிபடலாம், வேடனாகிய கண்ணப்பரும் வழிபடலாம் என்ற வகையில் சமூக ஒருங்கிணைப்பை சமயம் ஆற்றியிருக்கிறது.

          சாதிய உணர்வுகளைக் குறைப்பதில், முற்கால சமய அருளாளர்கள் முனைந்துள்ளனர். திருத்தொண்டர் புராணத்தில் அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் நாயன்மார்களாக இருப்பதைக் காணலாம். ஆழ்வார்களிலும் அப்படியே. இதைவிட ஒருபடி மேலாக, முருகனின் ஒருபுறத்தில் வள்ளியையும் (குற மகள்) மறுபுறத்தில் தேவயானையையும் (தேவ மகள்) இடம்பெறச் செய்தது நமது சமயம். ஆனால், வள்ளியைக் கோயிலுக்குள் அனுமதிப்பவர்கள், வள்ளியின் குலத்தினை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது என்ன நியாயம்? இது மாற்றப்பட வேண்டும்.

✰✰✰

கேள்வி: இன்றும் பல கிராமங்களில், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில்கூட, இரட்டைக் குவளை முறை அனுசரிக்கப்படுகிறதே, இதனை மாற்ற சமயப் பெரியோர்களான தங்களைப் போன்றோர் எந்தவகையில் செயலாற்றுகிறீர்கள்? 

          நாங்கள் எங்களால் இயன்றவரை செய்து வருகிறோம். உதாரணமாக இந்தத் திருமடத்தில், அரிஜன சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் இருக்கிறார். அவர் வேள்விகளைச் செய்கிறார்; திருமணம் போன்ற புனிதச் சடங்குகளை நடத்துகிறார். திருக்குட நன்னீராட்டு விழாக்களில் பங்கேற்கிறார். அவர் இன்னார் என்று ·நாங்கள் வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை. நமது மடங்களில் சாதி வேறுபாட்டுடன் உணவு படைக்கப்படுவதில்லை. ஆயினும் மற்ற பல மடங்களில், கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அனைத்து மடங்களிலும் மாற்றம் வரும்போது, சமுதாயத்திலும் மாற்றம் வரும். 

கேள்வி: இந்த சாதி வேற்றுமையின் தீண்டாமையின் காரணமாகவும், மதமாற்றங்கள் பெருகுகின்றனவே!? நமது சொந்த மக்களே வேற்று மதத்தைத் தழுவி, நமக்குப் பகைவர்களாகத் தங்களை கருதிக் கொள்கிறார்களே? 

          வழிபாட்டு முறைகளிலும்கூட முறைகளிலும்கூட நாம் இதனையே வலியுறுத்துகிறோம். புரியாத ஒன்றைச் சொல்வதைவிட, புரிந்த ஒன்றைச் சொன்னால், அதை மனித மனம் நாடவே செய்யும். ஆகவே புரிந்ததைச் சொல்லும் இடத்துக்கு மதம் மாறுவதும் நடக்கிறது. தன்னோடு வந்தால், சமமான மதிப்புத் தருவதாக பிற மதத்துக்காரன் சொல்லும்போதும் அதேபோன்ற ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதானே? அப்படி மதம் மாறுபவன், தான் இந்த நாட்டிற்கும், பண்பாட்டிற்கும் எதிரியாகப் போகிறோமே என்று சிந்திப்பதில்லை. பின்பு, தூண்டில் மீன்போலத் துன்பப்படுகிறான். நமக்கோ, இருபுறமும் தொல்லைகள். ஒருபுறம், ஜாதிவாத, பழமைவாதத் தொல்லைகள்; மறுபுறம், மதமாற்றச் சிக்கல்கள். 

கேள்வி: புதிது புதிதாக ஆலயங்கள் கட்டப்பட்டுவரும் அதே நேரத்தில், பழம்பெரும் கோயில்கள்கூட, கவனிப்பாரின்றிப் போகின்றனவே? 

          இது சரியான முறையல்ல. பழைய கோயில்களைச் சீர்திருத்தம் செய்வதே முதல்பணி, அதுவே, முன்னோர்களை மதிக்கும் நமது உணர்வுகளின் பிரதிபலிப்பாக இருக்க முடியும்.

நமது மக்கள் அவ்வப்போது சமயத்துறையிலும் கீழிறங்கி விடுகிறார்கள். சாக்கடை மீதும்கூட கோயில்களைக் கட்டுகிறார்கள். இதை எப்படி ஏற்க முடியும்? இதனைக் கட்டுப்படுத்த நமக்கு யாரும் இல்லை. மலேசியாவில் இப்படி இல்லை. பல்சமயக் கூட்டமைப்பு ஒன்று அங்குள்ளது. அவர்களது மதிப்பீடு மற்றும் அனுமதிக்குப் பிறகே அங்கு எந்த ஒரு சமய ஆலயமும் எழுப்பப்பட முடியும். அதுபோன்ற நெறிப்படுத்தும் அமைப்பு, நம் நாட்டிற்கும் தேவை. 

கேள்வி: இந்து ஆலயங்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாகத் தாங்கள் குரல் கொடுத்து வருகிறீர்கள். அந்த இயக்கம், தற்போது எந்த நிலையில் உள்ளது? 

          இது நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டுவரும் கோரிக்கை. மக்களிடமுள்ள வாக்குச்சீட்டுதான் இதற்குப் பதிலளிக்க முடியும். மக்கள் தமது வாக்குச்சீட்டின் மகிமையை உணராதவரை, எந்த ஆட்சி வந்தாலும் இந்தச் சூழ்நிலை மாறாது. அதுவரை, பா.ஜ.க.வே நாளைக்கு ஆட்சிப் பொறுப்பேற்றாலும்கூட, ஆலயங்களை விட்டுத்தருவது கடினமானதாகவே இருக்கும். மக்கள் விழிப்புணர்வு, வாக்குச்சீட்டில் பிரதிபலிக்கும்போது, இதில் தானாக மாற்றம் வரும். 

கேள்வி: மதவெறியர்களின் செயல்பாடுகளாலும், வெடிகுண்டுச் சம்பவங்களாலும், சமீபகாலமாக கோவை மாவட்டத்தின் இயல்பான அமைதி குலைந்துள்ளது. இதற்குத் தீர்வு என்ன? 

          இந்த மதக் கலவரங்களுக்கு இரண்டு வகையான காரணங்கள் உள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வேகமாகப் பரவுவதற்கு, நமது மக்களே காரணமாகிவிட்டார்கள். இரண்டாவது, அரசும் அவர்களுக்குத் துணைபுரிந்துவிட்டது. இதன் காரணமாக, தங்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லை என்று அந்த பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவிட்டன. இதைச் சரிப்படுத்துவது சிரமமாகிவிட்டது. நானும்கூட, இஸ்லாமிய அமைப்பினரிடையேயும் ஜமாத்துகளிலும் சென்று, இதற்காகப் பேசியிருக்கிறேன். மௌல்விகளே என்னை அழைத்தும் இருக்கிறார்கள். 

          நான் அவர்களிடம் “நீங்கள் சிக்கல் பெரிதான பிறகு வந்திருக்கிறீர்கள். சரி, இருக்கட்டும். உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே உங்கள் இளைஞர்கள்? ஜமாத்துக்குக் கட்டுப்படாமல் ஒரு இஸ்லாமியக் குடும்பம் இருக்கமுடியாது. அப்படியிருக்க, உங்கள் ஜமாத்துக்குக் கட்டுப்பட்டவன்தானே இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டிருக்கிறான்? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அந்த இளைஞர்கள் தங்களுக்குக் கட்டுப்படுவதில்லை என்று சொன்னார்கள். “அப்படியானால், ஜமாத்துக்குக் கட்டுப்படாத கூட்டம் அது என்பதை உங்கள் சமுதாயத்திற்கு ஏன் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை? அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறானவர்கள்; அவர்களது வன்முறைச் செயல்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பொறுப்பல்ல என்று ஏன் தெளிவுபடுத்தவில்லை? அரசாங்கத்திடம் இது பற்றி ஏன் பேசவில்லை? நீங்கள் இவற்றைச் செய்யாதபோது, அவர்களது வன்முறைகளுக்கு உங்களைத்தானே குற்றம் சாட்ட வேண்டியிருக்கிறது?” என்று பொது மேடையிலேயே அவர்களிடம் இதனைக் கேட்டேன். 

          இதற்குத் தீர்வு, அரசின் கடுமையான நடவடிக்கையும், நமது இசைவான நல்லிணக்கமும்தான். ‘வன்முறை நமக்குத் தேவையற்றது. உங்கள் கவனத்தைக் கல்வியில் செலுத்துங்கள், சுய முன்னேற்றத்தில் செலுத்துங்கள் நாமும் அவர்களிடம் வலியுறுத்தவேண்டும். இருதரப்பிலும் கனிவான அணுகுமுறை தேவை. அடிக்கடி கூடிப்பேசுவது ஐயங்களைப் போக்கும். அதேசமயம், இஸ்லாமியர்களிடையே சில மாற்றங்களை நமது சமுதாயம் எதிர்பார்க்கிறது. உதாரணமாக, விஸ்வநாதர் காசியிலுள்ள கோயிலை மீட்க முடியவில்லையே என்ற வருத்தம் நமக்கு உள்ளது. மக்கள் ஆட்சி நிலவும் ஜனநாயகக் காலகட்டத்தில், பெரும்பான்மையினரின் உணர்வுகளை மதித்து விட்டுக் கொடுப்பது தானே நியாயம்? இதைத் தடுப்பது யார்? அரசியல்வாதி தானே? இந்துக்கள் எல்லோரும் ஒன்றுபட்டாலே எல்லோரும் ஒழுங்காக இருப்பார்கள். இந்திரா காந்தி ஒரு முறை சொன்ன கருத்து எனக்கு மிகவும் நன்றாக நினைவில் இருக்கிறது. “சிறுபான்மை மக்களுக்கு அதிகார வர்க்கமும் அரசும் மட்டுமே பாதுகாப்புத் தந்துவிட முடியாது. பெரும்பான்மை சமூகத்தோடு இணைந்து வாழும்போதுதான் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருக்கும்” என்று அவர் சொன்னார். 

கேள்வி: பொதுவாகவே அனைத்து சமுதாயத்தினரிடையேயும் ஆன்மிக உணர்வு குறைந்து வருவதாகச் சிலர் கூறுகிறார்களே?

          அப்படிச் சொல்ல முடியாது. திராவிடர் கழகம், சமயத்துக்கு எதிராகப் புறப்பட்டது. அது இன்று அழிந்துவிட்டது. கம்யூனிஸம் வந்தது. அதுவும் காணாமல் போய்விட்டது. சமய உணர்வுக்கு எதிரானவை, இந்தநாட்டில் நிலைபெற முடியாது. குங்குமப் பொட்டையும் தீ மிதித்தலையும் விமர்சித்துவிட்டு, தமிழக முதல்வர் பட்ட பாட்டை யாரும் மறந்துவிட முடியாது. சமய உணர்வு, இந்த நாட்டின் மண்ணோடு கலந்தது. 

கேள்வி: தாங்கள் நீண்ட நாட்களாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர இந்து இயக்கங்களுடன் தொடர்பில் இருந்துவருகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ். பற்றித் தங்களது கருத்து? 

          ஆர்.எஸ்.எஸ், ஒரு கட்டுக்கோப்பான இயக்கம். அவர்கள் பெரும்பாலும் தங்கள் நடைமுறைகளை நெறிப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது உணர்வுகளைப் பற்றி நான் அதிகம் சொல்ல முடியாது. சில இடங்களில் அவர்கள் தீவிரமாகச் செயல்படலாம். அதற்குக் காரணம், தன்னைப் பற்றிய சிந்தனையன்றி, தேசம் மீதான கவலையே அதிகம் இருப்பதாக இருக்கலாம். போர்முனையில் தனது நிலையை உறுதிப்படுத்த முயலும் தேசபக்த வீரனைப்போலவே அவர்கள் செயல்படுகிறார்கள். கட்டுப்பாடான, நெறிமுறைகள் மிக்க இயக்கம், ஆர்.எஸ்.எஸ். 

கேள்வி: ‘விஜய பாரதம்’ வாசகர்களுக்கு தங்களது புத்தாண்டு ஆசியுரை? 

          இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தத் திருநாட்டில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக கடவுள்நெறியில் தங்களை இணைத்துக்கொண்ட, கடவுள்நெறிப்பட்ட அருளாளர்கள், மொழியினங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களுடைய அருள்மொழிகள் மனிதகுலத்திற்கு எக்காலத்திற்கும் ஏற்புடையதாக விளங்குகின்றன. நம்முடைய திருமந்திரம், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்; நன்றே நினைமின்கள்’ என்று சொல்கிறது. இது உலகிற்கே பொதுவானது, ‘சேர வாரும் ஜெகத்தீரே’ என்ற வாசகம் உலகையே அழைக்கிறது. 

          நமது முன்னோர் மரபு, ஓருலக ஒருமைப்பாட்டுக்கு வழிகாட்டுகிறது. அதே சமயத்தில், இந்நாட்டின் பண்பாடு, அறநெறி, வழிபாடு ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்து, வாழ்ந்து காட்டிய பெருமை உடையது. ஓருலக ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதால், தனது சமயத்தையோ, பண்பாட்டையோ, அறநெறியையோ நமது முனிவர்கள் விட்டுக் கொடுத்து விடவில்லை. எனவே நம் காலத்தில், பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும் வளராத வண்ணம் நமது பணிகள் தொடரவேண்டும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில், இளைய சமுதாயம் நெடிய பாரம்பரியத்தை எண்ணிப்பார்த்து, ‘நாம் இதற்கு சொந்தக்காரர்கள்’ என்ற உணர்வோடு தங்கள் முன்னேற்றத்தில் ஈடுபட வேண்டும். 

          நம்முடைய முன்னோர்கள் நமது திருக்கோயில்களை கலைச் செல்வம் நிறைந்த புனிதத் தலங்களாகப் போற்றி வளர்த்தார்கள். உலகமே வியக்கும் அத்தகு அற்புதப் படைப்புகளை, பொலிவுடன் பேண வேண்டியது இளைய சமுதாயத்தின் கடமை ஆகும். அரசின் பிடியிலிருந்து ஆலயங்களை விடுவிக்கும் உறுதி மேலிடும் அதே வேளையில், அந்த மாற்றம் வரும்வரை காத்திராது, நம்மால் இயன்றவகையில் வழிபாட்டுக் குழுக்கள் அமைத்துச் செயல்பட வேண்டும். 

          குறிப்பாக, வழிபாட்டுணர்வு மிகுந்த மகளிரைக் கொண்டு கூட்டு வழிபாடுகளையும், திருவிளக்கு வழிபாடுகளையும் நடத்துவது மிகுந்த பயன் நல்கும். திருக்கோயில் வளாகம் தூய்மையோடு இருப்பதற்காக, அறநிலையத் துறையை முழுவதுமாக நம்பியிராமல், தொண்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், வங்கிகளின் உதவியுடன் அவற்றைப் பராமரிக்கலாம். இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரிச்சுமைக் குறைப்புக்கு உதவியாகவும் இருக்கும். ஆலயங்களிலுள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்களைப் பாதுகாப்பதும் பக்தர்களின் கடமையாகும்.

$$$

Leave a comment