குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்

-வ.மு.முரளி

மதுரையில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளியின் கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

திருமுருக வழிபாடு தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது. சங்க இலக்கிய நூல்களுள் முதலாவதான திருமுருகாற்றுப்படையின் நாயகரே முருகன் தான். இந்நூலில் முருகனுக்குரிய அறுபடை வீடுகளும் தகுந்த முறையில் போற்றப்பட்டுள்ளன.

பழந்தமிழகத்தின்  நிலப்பரப்பு ஐவகையாகப் பகுக்கப்பட்டிருந்ததை தொல்காப்பியம் கூறுகிறது. அது (இடம்) முதற்பொருள் எனப்பட்டது. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணை இயலின் ஐந்தாம் பாடல், ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய முதன்மைத் தெய்வங்களைச் சுட்டுகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

-இப்பாடலின் படி, மாயவனை வழங்கும் முல்லை, சேயோனை வணங்கும் குறிஞ்சி, இந்திரனை வணங்கும் மருதம், வருணனை வணங்கும் நெய்தல் திணைகள், அக்கால சமுதாயத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலையாகும். அந்தத் திணையின் தெய்வம் கொற்றவை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தமிழின் முதற்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் இந்தப் பாடல், முருக  (சேயோன்) வழிபாடு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே  தமிழகத்தில் நிலவியமைக்கு முதன்மைச் சான்றாகும். முருகனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் ‘கௌமாரம்’ என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இது, சைவ சமயத்தின் அங்கமாகவும், ஹிந்து சமயத்தின் ஒரு வழிபாட்டு முறையாகவும் மாறியது.

நாடு முழுவதிலும் திருமுருக வழிபாடு சிறு வேறுபாடுகளுடன் நிலவுகிறது. தமிழகம் தவிர்த்த பிற பகுதிகளில் சுப்பிரமணியராகவும் சேவசேனாபதியாகவும் ஸ்கந்தனாகவும் முருகப் பெருமான் போற்றப்படுகிறார்.

“சேனைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன்” என்று பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் (கீதை- விபூதி யோகம்:10-24). மகாபாரதத்திலும் முருக வழிபாடு குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன.

ராமாயணத்தில், அகத்திய மாமுனி, ஸ்ரீராமனுக்கு  ‘ஆதித்ய ஹிருதயம்’ மந்திரத்தை உபதேசித்த நிகழ்வு குறிக்கப்பட்டிருக்கிறது. அகத்தியர் முருகப்பெருமானின் முதன்மைச் சீடராவார்.

தமிழ் வளர்த்த சங்கங்களில் முதற்சங்கத்தை இறையனாருடன் (சிவபெருமான்) இணைந்து நடத்தியவர் முருகப் பெருமானே என்பது நமது நம்பிக்கை. இவரது சீடரான, தமிழ் இலக்கணத்தின் மூல நூலான பேரகத்தியத்தை வழங்கிய அகத்தியர், இடைச் சங்கத்தை வழிநடத்தியவர். 

அத்வைத சித்தாந்த ஸ்தாபகரான ஆதிசங்கரர் (காலம்: பொ.யு. நான்காம் நூற்றாண்டு) தீராத வயிற்றுவலியால் துடித்தபோது திருச்செந்தூர் முருகனின் மீது  ‘சுப்ரமண்ய புஜங்கம்’ என்ற அருமையான தோத்திரத்தைப் பாட, அவரின் வயிற்றுவலி முருகன் அருளால் நீங்கியது. அந்த ஆதிசங்கரர் தான் தொன்மையான பாரத வழிபாட்டு நெறிகளை ஷண்மதங்களாக முறைப்படுத்தினார். அவற்றுள் ‘கௌமாரம்’ என்ற வழிபாட்டு நெறி, முருகப்பெருமானை முதன்மைக் கடவுளாக வழிபடும் பக்தி நெறியாகும்.

சமஸ்கிருதப் பெரும்புலவரான காளிதாசர் (காலம்: பொ.யு. நான்காம் நூற்றாண்டு) எழுதிய  ‘குமார சம்பவம்’ நூல் முருகப் பெருமானின் அவதார மகிமையை எடுத்துக் கூறுகிறது. ஸ்கந்தபுராணம் சமஸ்கிருத இலக்கியங்களுள் மிஅக்வும் குறிப்பிடத் தக்கதாக விளங்கி வருகிறது.

இவ்வாறாக பாரதம் முழுவதும் செல்வாக்குப் பெற்ற பக்திநெறியாக கௌமாரமும், வழிபடு கடவுளாக திருமுருகநாதரும் விளங்கி வருகின்றனர். எனினும் முருகனுக்கு குன்றுதோறும் ஆலயம் இருப்பது தமிழகத்தில் மட்டுமே.

குறிஞ்சி நிலக் கடவுளான முருகனை, வள்ளி, தெய்வானை சமேதராக அருள் பொழியும் குமரனை, சூரனை வென்ற தேவசேனாபதியை, சிவனுக்கு பாடம் சொன்ன குருநாதனை, தமிழகம் போற்றித் துதிக்கிறது. இங்குதான், அறுபடை வீடுகள், காவடி எடுத்தல், பஞ்சாமிர்த அபிஷேகம், சஷ்டி விரதம், பாத யாத்திரை, முடி காணிக்கை, தேரோட்டம், வேல் வழிபாடு போன்ற சிறப்பான அம்சங்களுடன் முருகனை பக்தர்கள் போற்றித் துதிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி சஷ்டி, திருக்கார்த்திகை, தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் குமரன் குடிகொண்ட திருக்கோயில்களில்  பக்தர்கள் திரள்வது கண்கொள்ளாக் காட்சியாகும். பக்தர்களின் ‘அரோகரா’ முழக்கத்திலும், வைராக்கிய பக்தி மிளிரும் பாத யாத்திரைகளிலும் தமிழகத்தின் ஆன்மா வெளிப்படுகிறது.

  • நன்றி: தமிழ் வளர்த்த முருக பக்தர்கள் -நூல்

***

Leave a comment