சென்னை படைப்பாளர்கள் சங்கமத்தின் பிரகடனம்!

-ஆசிரியர் குழு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அனைவரும், ‘சென்னை படைப்பாளர்கள் சங்கமம்’ என்ற பெயரில் 15.06.2025 அன்று சென்னையில் கூடி, ஆபரேஷன் சிந்தூர் வீரர்களைப் பாராட்டி, ஒருமித்த குரலில் வெளியிட்ட பிரகடனம் இது…

தீர்மானம்- 1:  முப்படைகளுக்கு வீரவணக்கம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய மனிதத்தன்மையற்ற துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாவுக்கு வந்த 26 அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து, பயங்கரவாதிகளை பின்னணியில் இருந்து இயக்கும் பாகிஸ்தானுக்குப் படிப்பினை அளிக்கும் வகையில், துல்லியத் தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ (நெற்றித் திலக நடவடிக்கை) என்ற பெயரும் சூட்டப்பட்டது.

அதன்படி, பாகிஸ்தானுக்கு நமது ராணுவம் தகுந்த பதிலடியை கடந்த மே 7 முதல் மே 10 வரை,  4 நாட்களில்  அளித்தது. மே 7ஆம் தேதி அதிகாலையில், பாகிஸ்தான் வான் எல்லைக்குள் ஊடுருவிய நமது விமானப்படை விமானங்கள் நடத்திய துல்லியத் தாக்குதலில், பயங்கரவாதிகளின் 11 பயிற்சி முகாம்கள் நிர்மூலமாயின.  அதேசமயம், பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணைகள் அனைத்தையும் வானிலேயே தடுத்து நிறுத்தி நமது ராணுவம் சாதனை படைத்தது. அடுத்த நாட்களில் நமது ராணுவம் தொடர்ந்து நடத்திய வான் தாக்குதல்களில் பாகிஸ்தானின் படைத்தளங்கள் பலத்த சேதமடைந்தன. இறுதியில் அந்த நாட்டின் வேண்டுகோளை ஏற்று  நமது அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

உண்மையில், இந்தியாவுக்கு அண்டைநாடு மீது போர் தொடுக்க விருப்பமில்லை. அதேசமயம், அந்நாட்டின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்தவும், அந்நாடு திருந்த ஒரு வாய்ப்பளிக்கவும் தான், அந்நாட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போர் அல்ல. நமது ராணுவத்தின் துல்லியத் தாக்குதல் மட்டுமே. இந்த நடவடிக்கையில் பாக். ஆதரவு பெற்ற சுமார் 300 பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான பாக். படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தருணத்தில், இந்தியா மீதான பகையைக் கைவிட்டு, சொந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்துமாறு நமது அண்டை நாட்டுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் சதிகள் எதுவும் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதை  அந்நாட்டுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பஹல்காமிலும்,  ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போதும், எதிரி நாட்டின் பீரங்கித் தாக்குதலிலும் வீரமரணம் அடைந்த நமது பாதுகாப்புப் படையினர், குடிமக்கள் உள்ளிட்ட அனைவரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

மிகவும் குறைந்த உயிர்ச்சேதத்துடன், அதிநவீனப் போர் முறையில், நான்கே நாட்களில் பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்பை நமது வீரர்கள் அழித்துள்ளனர். இந்தப் பதிலடி  நடவடிக்கை இந்திய ராணுவத்தின் வெற்றித் திலகமாக மிளிர்கிறது. நமது முப்படைகளின் நிகரற்ற வீரத்துக்கும், மக்களாட்சியின் மாண்புக்குக் கட்டுப்பட்ட அதன் சீரிய செயல்திறனுக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களைக் காணிக்கை ஆக்குகிறோம்.

தீர்மானம்- 2: மத்திய அரசுக்கு வேண்டுகோள்

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு நமது அரசு  ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக தகுந்த பதிலடி கொடுத்திருப்பதைப் பாராட்டுகிறோம்.  நாட்டுக்குச் சவாலான இந்தக் காலகட்டத்தில் நமது அரசியல் வேற்றுமைகளை மறந்து, அரசுக்கும் ராணுவத்துக்கும் உறுதுணையாக நிற்பது குடிமக்கள் அனைவரின் பொறுப்பாகும்.

படைப்பாளர்கள் சமூகத்தின் மனசாட்சியாகத் திகழ்பவர்கள். எனவே, சென்னையில் இயங்கும் படைப்பாளர்கள் அனைவரும், நமது அரசின் செயல்பாட்டையும், முப்படை வீரர்களின்  தீரத்தையும் மனமாரப் பாராட்டுகிறோம்.

அதேசமயம், சித்தாந்தரீதியாக இந்திய அரசை எதிர்க்கும் சிலர், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். வெளியிலிருந்து தாக்கும் பகைவர்களை விட துரோகிகளின் உட்பகை மோசமானது. எனவே, அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்துகிறோம்.

தேசிய ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாக, காசி சங்கமம், சௌராஷ்டிர சங்கமம் நிகழ்வுகள் போல  ‘காஷ்மீர் சங்கமம்’ நிகழ்வை ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதேபோல, ஏப்ரல் 22ஆம் தேதியை தேசிய சுற்றுலா தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு!

வந்தேமாதரம்!

$$$

One thought on “சென்னை படைப்பாளர்கள் சங்கமத்தின் பிரகடனம்!

Leave a comment