வெளியுறவிலும் சாகசம் படைக்கும் மோடி அரசு!

-சேக்கிழான்

அண்டை நாடான பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட இந்தியாவின்  ‘ஆபரேஷன் சிந்தூர்’  நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கமளிக்க  அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள்  குழுவை  மோடி அரசு பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பியது மாபெரும் ராஜதந்திர செயல்பாடாக மதிப்பிடப்படுகிறது.

31 அரசியல் கட்சிகளைச் சார்ந்த 59 எம்.பி.க்கள் (இவர்களில் 20 பேர் எதிர்க்கட்சியினர்) இதற்கான 7 குழுக்களில் பங்கேற்றனர். இதன்மூலம், உலக நாடுகளிடையே, இந்தியாவின் நிலைப்பாடு தெள்ளத் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. தவிர, உள்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியில் சில சுயநலவாதிகள் தவிர்த்து அனைத்துக் கட்சிகளிடையே இணக்கமான சூழலை மோடி அரசு வெற்றிகரமாக ஏற்படுத்தி இருக்கிறது.

ஆபரேஷன் சிந்தூர்:

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குல் நடத்தி 26 அப்பாவி உயிர்களைப் பறித்தனர். அதற்கு பதிலடியாக நமது ராணுவம் நடத்திய ’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதைத் தடுத்திட மத்திய அரசு,  சர்வ கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது.

மத்திய அரசு அமைத்த ஏழு குழுக்களில் நான்கு குழுக்களில் தலைவர்களாக பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா எம்.பி.,க்கள் இடம்பெற்றனர். மற்ற மூன்று குழுக்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள்  தலைமை வகித்தனர்.

எம்.பி. குழுக்கள்:

பாஜ., எம்.பி., பைஜெயந்த் பாண்டா தலைமையிலான முதல் குழு சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், அல்ஜீரியாவுக்கும், பா.ஜ., எம்.பி., ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான 2வது எம்.பி.,க்கள்  குழு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன், இத்தாலி, டென்மார்க்குக்கும் சென்றது.

ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா தலைமையிலான 3வது குழு இந்தோனேஷியா, மலேசியா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூருக்கும், சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான 4வது குழுவினர் லைபீரியா, காங்கோ, சியாரா லியோனுக்கும் சென்றது.

காங்., எம்.பி.,சசி தரூர் தலைமையிலான 5வது குழு அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியாவுக்கு சென்றது. திமுக எம்.பி., கனிமொழி தலைமையிலான 6வது குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா,   ரஷ்யாவுக்கு சென்றது. சுப்ரீயா சுலே தலைமையிலான 7 வது குழு எகிப்து, கத்தார், எத்தியோப்பியா மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கும் சென்றது.

இந்த குழுக்கள், இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டன.  மேலும், ஐ.நா.சபை பிரதிநிதிகளையும் சந்தித்து பேசின. பஹல்காம் தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடி, பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்ததுதல் தொடர்பாக இந்தச் குழுவினர், உலக நாடுகளிடம் இந்தியாவின் கருத்துக்களை உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் நாகரிகம்:

இதற்காக பல்வேறு கட்சிகளிடமும் பிரதிநிதிகளை அனுப்புமாறு மத்திய அரசு கோரி இருந்தது.  காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட உறுப்பினர்களை தவிர்த்து விட்டு, வேறு உறுப்பினர் (சசி தரூர்) தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு அக் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்தார். அது அக்கட்சியின் களங்கமாக அமைந்துவிட்டது.

காங்கிரஸ் சார்பாக ஆனந்த் சர்மா, கௌரவ் கோகோய், ராஜா பரார், நாசர் ஹுசைன் ஆகிய நான்கு எம்.பி.கள் பெயர் அளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.   அதேசமயம், ஐ.நா.வில் பணிபுரிந்தவரான சசி தரூரின் பெயரை பட்டியலில் காங்கிரஸ் தவிர்த்தது. எனினும், அவரது முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர் தலைமையில் ஒரு குழுவை மோடி அரசு அமைத்தது. அவரும் தனது பணியை மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார். அதனைத்தான் காங்கிரஸ் கட்சியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் எம்.பி.  சசி தரூர், பாஜக ஆதரவாளராக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சி அவருக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்தது, அக்கட்சிக்குள் நிலவும் குழப்பத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறது.

இஸ்லாமியர்களின் பங்களிப்பு:

இக்குழுவில், மோடி அரசின் கடுமையான விமர்சகரான அசாதுதீன் ஓவைஸி சேர்க்கப்பட்டதை பாஜக ஆதரவாளர்கள் சிலரே குறை கூறினர். ஆனால், அவர் தனது பங்கேற்பின் மூலமாக, இந்தியாவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுவதாக பாகிஸ்தான் செய்துவரும் பிரசாரத்தை முறியடித்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சி எம்பி. மியான் அல்டாஃப் அகமது, காங்கிரஸ் எம்.பி. சல்மான் குர்ஷீத், முஸ்லிம் லீக் எம்.பி. முகமது பஷீர்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சர்ஃப்ராஸ் அகமது முன்னாள் ஐ.நா.அதிகரி சையத் அக்பருதீன் ஆகியோர் இந்த எம்.பிக்களின் குழுக்களில் அங்கம் வகித்தனர். இதன்மூலமாக, மோடி அரசின் சமூக நல்லிணக்க உணர்வை உலகம் உணர்ந்தது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி மட்டும், வழக்கம் போல, இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிகள் குழுவுக்கு தனது கட்சியினரை அனுப்பாமல் தனது மோசமான முகத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க மக்களிடையே அவரது இரட்டைவேடம் அம்பலமாகி இருக்கிறது.

வெளியுறவில் பெரும் பாய்ச்சல்:

ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னதாகவே, நமது ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அவ்வப்போது உலக நாடுகளுக்கு விஜயம் செய்து, பெரும்பாலான நாடுகளுடன் நல்புரவை வலுப்படுத்தி இருந்தனர். அதனால் தான், பாகிஸ்தானின் உள்பகுதியில் இந்திய ராணுவ விமானங்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் எதுவும் விமர்சிக்கவில்லை. இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள், “பயங்கரவாதிகளை அழிக்க இந்தியாவுக்கு உரிமை இருக்கிறது” என்று அறிவித்ததையும் உலகம் கண்டது.

இப்போதைக்கு துருக்கி, சீனா, அஜர்பைதான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதாரவாக இருக்கின்றன. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் கூட பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. இது, மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் வெற்றி எனலாம். இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொல்லை தரும் சீனா கூட ஆபரேஷன் சிந்தூர் விஷயத்தில் அமைதி காத்தது. பல ஐரோப்பிய நாடுகளுக்கு பாகிஸ்தானின் கோரமுகத்தை நமது எம்.பி.க்கள் குழுக்கள் புரியவைத்துள்ளன.

வசுதைவ குடும்பகம்:

உலகின் எந்த ஒரு நாடும் சுயநல நோக்கத்துடன் பயங்கவாதிகளை  ஆதரிப்பது தனக்குத் தானே வெட்டிக்கொள்ளும் படுகுழி தான் என்பது இந்த முறை இந்திய பிரதிநிதிகளால் மிகவும் வன்மையாகவும் மென்மையாகவும் உணர்த்தப்பட்டிருக்கிறது. இது இந்திய வெளியுறவுக் கொள்கையின் மாபெரும் வெற்றி எனலாம்.

நவீன உலக அரசியலில் வெளியுறவும் தூதுச் செயல்பாடுகளும் பேரங்கம் வகிக்கின்றன. அந்தவகையில், மோடி அரசு கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டுவரும் நல்லேண்ன நடவடிக்கைகள் இபோது பலனளிக்கத் தொடங்கி இருக்கின்ர. தவிர, நமது வெளியுறவுத் துறையின் புதிய தூதுவர்களாக நாடாளுமன்ற எம்.பி.க்களே சென்றிருப்பது, இந்தியாவின் பண்பட்ட ஜனநாயகத்தை காட்டி இருக்கிறது.  ‘பயங்கவாதத்தை ஓரணுவும் அனுமதிக்க மாட்டோம்’ என்று சசி தரூர், கனிமொழி, சல்மான் குர்ஷீத் போன்ற எதிரக்கட்சித் தலைவர்களே உலக அரங்கில் கர்ஜித்திருப்பது மோடி அரசின் மகத்தான வெற்றி.

உலகமே ஒரு குடும்பம் என்ற லட்சியத்துடன் செயல்படும் மோடி அரசுக்கு ஆபரேஷன் சிந்தூருக்குப் பிந்தைய வெளியுறவுத் துறையின் வெற்றி மேலும் வலுக் கூட்டி இருக்கிறது. உலக அரங்கில் பாகிஸ்தானின் பொய்கள் அம்பலப்பட்டு நிற்கும் வேளையில், பாரதத்தின் பெருமை மேலும் கூடி வருகிறது. அரசியல் வேற்றுமைகளை மறந்து நாட்டு நலனுக்காக அனைவரையும் ஒருங்கிணைப்பதிலும் பிரதமர் மோடி வென்றிருப்பதையே இக்காட்சிகள் காட்டுகின்றன.

$$$

Leave a comment