தேவை நல்லிணக்கம்

-லக்ஷ்மி மணிவண்ணன்

சமம் என்ற கருத்தே நம் மீது திணிக்கப்பட்டது என்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன். இந்தக் கட்டுரை நமது சிந்தனைக்காக….

சமம் என்கிற கருத்தாக்கம் பொய்யானது.மனித குல பரிணாமத்திற்கு எதிரானது. எந்த ஒன்றும் எந்த ஒன்றுடனும் சமமானது அல்ல.

வைரமும்  தகடும் ஒன்றல்ல. நானும் நீயும் ஒன்றல்ல. என்னிலும் நிறைவானது பலவும்,என்னிலும் குறைவானது பலவும் நிறைந்தது நாடு. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

சமமாகி தட்டையாகி விடக் கூடாது என்றே அனைவரும் அகத்திலும் புறத்திலும் போராடுகிறார்கள்; விரும்புகிறார்கள். ஆனால் வெளியில் வேறுவிதமாக நடிக்க வேண்டியிருக்கிறது. சமம் என்கிற கருத்தாக்கம் வந்தது தொடங்கி, அது புறத்தில் அப்படி நடிக்குமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறது. தினமும் கேட்டுக் கொள்கிறது. நமக்கு உண்மையிலேயே தேவையாக இருப்பது இந்த நடிப்பல்ல. சமமற்ற பல விஷயங்களுக்கு மத்தியில், சீரான நல்லிணக்கமே நமக்கு தேவை. சமம் என்பது நல்லிணக்கத்தைக் கெடுக்கும் பச்சைப் பொய்; கள்ளம்.

வைக்கம் முகம்மது பஷீரும் நானும் ஒன்றல்ல. அவர் என்னிலும் பெரியவர்.பீரப்பா என்னிலும் மேலானவர். வள்ளலாரைப் போல . ஜெயமோகனும் நானும் நிகர் அல்ல .கண்டடைதல்களால் உயர்ந்து நிற்பவர் அவர். அவர்களுக்கு நிகராக ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் உரியது. என்னிலும் குறைந்தோர் ஏராளம் பேர் உண்டு. அவர்களும் நானும் ஒருபோதும் ஒன்றல்ல.

அயோத்திதாச பண்டிதரும் நானும் சமமாக இயலுமா? முடியாது. அவர் அவர் தளத்தின் உயரம். சிந்தனையின் உச்சம். நான் அவரிடம் சிறியோன். அவரை அறிய காத்து பொறுமையுடன் நிற்கவேண்டியவன் நான். ஆனால் இவர்கள் அனைவரையும் மறித்து என்னுடைய ஒரு கவிதை மேல்நிலையில் சில சமயங்களில் நிற்கவும் கூடும்.

அய்யங்காளியிடம் பணிய வேண்டும். வைகுண்டரிடம் காட்டும் அதே பணிவு. அய்யா வைகுண்டரும் அய்யங்காளியும் இணைந்து சாப்பாட்டு மேஜைக்கு ஒன்றாக வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இவர்களுடன் இணைந்து இ.எம்.எஸ்ஸும் வரக் கூடும். “அய்யா நீங்களெல்லாம் வருவதற்கு முன்பே நான் காத்திருக்கிறேன்” என விதண்டாவாதம் செய்ய இயலாது. அவர்கள் அப்படி முந்த மாட்டார்கள் என்பது வேறு விஷயம். ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன்.

மற்றொன்று ஒரு முதியவர் வருகிறார், அவரும் நானும் ஒன்றல்ல. அவரின் காலமும் என்னுடைய காலமும் இணையானதல்ல. சற்றே மாறுபாடு கொண்டது. உரிமையின் வரிசையில் நான் அவரை,மாநகரப் பேருந்தில் முந்துதல் கூடாது. அப்படியானால் நானும் அவரும் சமம் இல்லையா ? இல்லை. இந்த இடத்தில் நீயும் அவரும் சமம் இல்லை.

இந்த சமம் என்னும் போலிக் கருத்தாக்கம், பல விதங்களில் உள்ளே நுழைந்தது. அது என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த இணக்கம் கூட இப்போது இல்லை. அனைத்து விதங்களிலும் இணக்கம் கெட்டுப் போயிருக்கிறது; தேய்ந்து வருகிறது. இந்தக் கருத்தாக்கம் அனைத்து விதங்களிலும் பரவி, சின்ன இடம், பெரிய இடம் என்கிற பாகுபாடுகள் இன்றி ,அனைத்து காரியங்களின் முன்பாகவும் கேள்வியாக அனைவரின் மனதிலும் முன்பாக வந்து உதிக்கிறது.

உயர்ந்தவர்களை தன் மட்டத்திற்கு இறக்கி யோசிக்கிறது. இறக்க இயலாதெனின் தாக்குகிறது. உயர்ந்தோரிடம் வேலை செய்கிற பணியாட்கள், ஒப்பந்ததாரர்கள் இல்லையெனின் கடும் விரோதப் பாங்குடன் வேலை செய்கிறார்கள். ஒரு வார வேலையெனில் இருமடங்காக மாற்றிவிடுகிறார்கள். சமூகத்தில் தாழ்வாரம் வரையில் இந்த கருத்தாக்கம் பாய்ந்து இறங்கி, இணக்கத்தை அனைத்து இடங்களிலும் பறித்துச் சென்றிருக்கிறது.

மேலேறுபவனை அரைக் கம்பத்தில் நிறுத்த கடுமையாக இந்தக் கருத்தாக்கம் உழைக்கிறது. யார் மேலேறினாலும் இன்று இதுவே கதி. இந்தக் கருத்தாக்கம் உண்மையிலேயே தான் ஆற்ற வேண்டிய கடனை ஆற்றிவிட்டது. அதனால் உருவான இன்னல்களில் நாம் தோல்வியடைந்திருகிறோம்.

இசைவும் இணக்கமும் பெறுவது எப்படி? என்பதே இப்போது இந்தப் போலிக் கருத்தாக்கதிற்கு நிகராக நாம் கற்க வேண்டியது. பிள்ளைகள் பாடங்களில் கற்க வேண்டியது. இப்போது அப்படியானால் நான் நிகரில்லையா? என்கிற சொல்லித் தந்த கேள்வியை மட்டும், எல்லோரிடம் கேட்கிற குரங்குகள் அதிகமாகி விட்டன. ஆமாம் குரங்கே நீயும் அவனும் நிகரில்லை. அவன் பின்பற்றிய நெறிகளால், உழைத்த உழைப்பால் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து, நீ தாழ்வில் இருக்கிறாய். நீ அந்த நெறி பழகி மேலே ஏற வேண்டும் குரங்கே … என்று சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

பெரும்பான்மை சாதியென்றால் அது அவ்வளவு சுலபமில்லை. எவ்வளவோ மேன்மைகள், நற்குணங்கள் எல்லாம் இணைந்தே ஒரு பெரும்பான்மை சாதி உருவாகிறது. அது பற்றியான சமூக ஆய்வுகளே நம்மிடம் கிடையாது. ஒரு சமுகத்தில் எப்படி அது பெரும்பான்மை ஆயிற்று என்கிற அறிதல் இருக்க வேண்டாமா? இல்லையெனில் பெரும்பான்மையாக ஒரு சாதி, காலத்தில் எந்தெந்த தாழ்வால் சிறுபான்மை ஆயிற்று என்கிற ஆய்வுகள் இருக்க வேண்டாமா?

நம்மிடம் இருப்பதெல்லாம் இந்த கருத்தாக்கம் வழியே வந்து சேர்ந்த பகை உணர்ச்சிகளே. வெறுந்திண்ணைப் பேச்சுகளே. எல்லாவிதமாகவும் சுழலும் சமூகத்தில், எப்படி இணைவது, இசைவது என்கிற இரண்டுமே நம் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள்.

இசைவிற்கும்,இணக்கதிற்கும் எதிரானவை- நம்மை சிதறடிக்க வந்த கருத்தாக்கங்கள் என்பது அறிக.

  • இது திரு. லக்ஷ்மி மணிவண்ணன்அவர்களின் முகநூல் பதிவு…

$$$

Leave a comment