-கருவாபுரிச் சிறுவன்
நாம் மறந்துவரும் மரபிலக்கியங்களை தொடர்ந்து நினைவுபடுத்தி வரும் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது. திருவண்ணநாதக் கவிராயரின் கோமதியந்தாதி குறித்து இக்கட்டுரை பேசுகிறது…

பிறப்பு, இறப்பு இல்லாத ஒரே கடவுள் சிவபெருமான். அவர் ஆதியும் அந்தமும் இல்லாத ஒப்பற்ற தெய்வம். அவரின் அடியவர்களான நாயன்மார்களும் அவரது அடிச்சுவட்டினைப் பின்பற்றக்கூடிய அடியார்களும் மறந்தும் புறந்தொழா மாந்தர்கள்.
அவர்கள் வழிபடும் சிவபெருமானின் வாமபாகத்தை அலங்கரிக்கக் கூடியவள் தான் அன்னை உமையவள். எங்கெல்லாம் சிவமிருக்கிறதோ அங்கெல்லாம் சக்தி தன்னை தானே சிவனோடு தொடர்புப் படுத்திக் கொண்டு இயங்கும், இயக்கும், இயக்குவிக்கும். அந்த உமையவள் தலத்திற்குத் தலம், வேறு பெயருடன் பக்தர்களுக்கு அருள் செய்கிறாள்.
தென் தமிழகத்தில் பஞ்ச பூதத் தலங்களில் பிருத்விக்குரிய தலமாகத் திகழும் சங்கரன்கோவில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தேடிச்சென்று அருள் பாலிக்கும் ஞானரூபிணி குடியிருக்கும் திருத்தலமாகும். அங்கு அவளின் திருநாமம் கோமதி. அவளின் கடைக்கண் பார்வைக்காக இந்திரன், பிரம்மன் முதலான தேவாதி தேவர்களும் நித்தம் வாசலில் நிலையாய் நிற்கிறார்கள் என்பது பிள்ளைத்தமிழ் ஆசிரியரின் அழகுத்தமிழ். அத்தமிழ் மூலம் அவளின் திருவருள் திறத்தில் தோய்ந்தவர்கள் தான் எத்தனை… எத்தனையோ… அப்பப்பா…. அத்தனை பேரையும் பட்டியிலிட்டு வரிசைப்படுத்த இன்று ஒரு நாள் போதாது…
அந்தம் ஆதி இல்லாத சிவபெருமானுக்கு அணியாக அழகு செய்பவளுக்கு பூமாலை சூட்டி வழிபட்டால் வாடி விடும் எனக் கருதி, வாடாத பாமாலைகளும் சூட்டி மகிழ்ந்துள்ளார்கள் அத்தகைய அருளாளர்கள். அவர்களால் அருளிச் செய்த நூல்கள் பல … அவற்றுள், அவளின் மகத்துவம் பேசும் அந்தாதி இலக்கியம் முக்கிய பங்கு வகிப்பவை. அவைகளில் இன்று வரை கிடைத்தவை இதோ…
* சங்கரநாராயணர் கோயில் அந்தாதி – ஆசிரியர் பெயர் கிடைக்கப்பெறவில்லை
* கோமதி அந்தாதி – தென்காசி மாவட்டம், சென்னிக்குளம் அண்ணாமலைக்கவிராயர்
* கோமதி அந்தாதி – தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்துார், சம்புலிங்கபுரம் திருவண்ணநாதக்கவிராயர்
இவற்றில் திருவண்ணநாதக் கவிராயர் இயற்றிய கோமதியந்தாதியைப் பற்றி கோடிட்டுக் கட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
அந்தாதி என்றால்…
* அந்தாதி என்பது முன்நின்ற பாட்டில் எழுத்தாயினும், அசையாயினும், சீராயினும், அடியாயினும் பின்வரும் பாட்டில் முதலாவதாக வரும்.
* முதலும் முடிவும் மண்டலித்து அதாவது இணைத்துப் பாடும் ஒரு வகை சிற்றிலக்கியம்.
* முடிவை முதலாவதாக வைத்துப் பாடப்படும்.
* ஒரே வகையான செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதி இலக்கியமாக பெரும்பாலும் வழங்கப்படும்.
* இதனை வட நூலார் ‘அந்தாதி பிரபந்தம்’ என்று அழைப்பர்.
* சங்க இலக்கியம், காப்பியங்கள், திருமுறைகள், திவ்ய பிரபந்தங்கள் மற்றும் பிற இலக்கியங்களிலும் அந்தாதிப் பாடல்களுக்கான கூறுகளை காணலாம்.
* அந்தாதிக்கான இலக்கணங்கள் பல உள்ளன. சங்கர நயினார் கோயிலில் எழுந்தருளியுள்ள கோமதியம்பிகையின் மீது பாடப்பட்ட இவ்வந்தாதி கட்டளைக் கலித்துறையால் ஆனது.
இதன் இலக்கணத்தை…
அடியடி தோறும் ஐஞ்சீராகி முதற் சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்காயாகி நேர் பதினாறே நிரை பதினேழென் றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே!
-என்பார் அமிர்த சாகரர்.
(ஐஞ்சீரடி நான்காய் ஒவ்வொரு அடியினும் முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாமல் அமைய ஈற்றுச்சீர் கருவிளங்காய் கூவிளங்காய் என்பவற்றுள் ஒன்றைப் பெற்று முதற்சீர் முதலசை நேரசையாயின் அடியொன்றுக்கு எழுத்து பதினாறும், நிரையாசையாயின் அடியொன்றுக்கு எழுத்து பதினேழும் உடையதாயும் ஏகாரத்தில் முடிவது கட்டளை கலித்துறை என்பது யாப்பலங்காரக் காரிகையாகும்)
கவிராயரைப் பற்றி…
தமிழகத்தின் தவக்குறைவு பல்வேறு ஞானிகள், மகான்கள், புலவர்கள், கவிஞர்கள் போன்றோரின் முழுமையான வரலாறு கிடைக்காமல் போனது. அந்த வகையில் சங்கர நயினார் கோயிலில் அருள் பாலிக்கும் கோமதியம்பிகை மீது கலித்துறை அந்தாதியை அருளிச்செய்த திருவண்ண நாதக் கவிராயரின் வரலாற்றுக் குறிப்பும் அடங்கும்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம் புத்துார் கஸ்பாவிற்கு உட்பட்ட சம்பு லிங்கபுரத்தில் தோன்றியவர் திருவண்ணநாதக்கவிராயர். தந்தையார் திருநாமம் வீரராகவக் கவிராயர்.
இவருடைய திருமகனார் திருவண்ண ராமநாதப்பிள்ளை அவர்கள் தூத்துக்குடி சுந்தரவிநாயகர் பதிகம், பாகம்பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் புராண வரலாறு, புராணச்சுருக்கம் போன்றவற்றை இயற்றியுள்ளார்கள்.
இத்தகவலை சைவத்தமிழ் நுால்கள் பலவற்றை தன்னுடைய சுய முயற்சியால் பதிப்பித்தும் வெளியீடு செய்யும் கம்பன் அடிமை ஸ்ரீவைகுண்டம் இ.சங்கரன் அவர்கள் தரும் செய்தி.
நீறு புனைந்திடும் நெற்றியும் முக்கணும் நீண்முடி பூண்சிரமும் கூறுபடும் பிறையொத்த மருப்பொடு குஞ்சர மாமுகமும் வீறு பெருங் கரம் ஐந்தும் இலந்த விரைந்து முன் வந்தருள்வாய் சீறிடு மாகுவின் மீதில் எழந்துயர் சித்தி விநாயகனே!
என முழுமுதற் பொருளை அன்போடு வருவிக்கும் பாடல் படிக்கும் போது நமதுள்ளம் பேருவகை கொள்கிறது. மேலும் வந்த வினையும் வருகின்ற வல்வினையும் தீர்க்கும் வள்ளல் வள்ளி மணாளன் செந்தில் மேயவன் மீதும் ஒரு பதிகம் இயற்றியுள்ளார்.
திருவண்ணநாதக் கவிராயரின் பாடல்களை எல்லாம் ஓதியுணரும் போது அவருடைய சைவத்தமிழ்ப்புலமையும், சிவபக்தியும் உலக உயிர்கள் மீதுள்ள பேரிரக்கமும் நம் கண்களுக்கு கவினுறுவாக காட்சி தருகிறது.
இந்நுாலில் உள்ள சாற்றுக்கவி மூலம் கவிராயரின் சகோதரர் பெயர், வரகவி திரவிய சங்கர நாராயணக்கவிராயர் எனத் தெரிய வருகிறது.
ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லுகிறார் கவிராயர்: என்னைப் போன்ற போலியருக்கு கோமதியம்பிகையின் திருவருளே சத்தியம்; மற்றவை யாவும் அநித்தியம் என்பதை ஒவ்வொரு பாடலிலும் பொதிந்து வைத்து புத்தி புகட்டுகிறார்.
காலதேவன் கரங்களில் மறைபொருளாக உள்ள கவிராயரின் வரலாறு தேவதேவன் திருவடித்திறனால் விளைபொருளாக வெளிவரும் நன்னாளை எதிர்பார்த்து உணருவது உள்ளக்கிடக்கை. இருப்பினும் , கிடைத்ததைக் கொண்டு ஒருவாறு மனஅமைதி கொள்வது சாலச்சிறந்ததாகும்.
ஒரு பாடலின் நயம்
வழிபடும் கடவுளின் தனித்தன்மை கண்ட அருளாளர்கள் பின்னை வேறொரு சமயத்தையோ, கடவுளையோ கனவிலும் நினைக்க மாட்டார்கள். அந்த வகையில் நமக்கு முன்னோடியாகவும் முதன்மையாகவும் திகழ்பவர் நம் மாணிக்கவாசக சுவாமிகள், வரதுங்கராம பாண்டியர், அபிராமி பட்டர் மற்றும் ஆழ்வாராதிகளே.
அவர்களுடைய அருள் கருத்தினை அப்படியே எடுத்தாள்கிறார் கவிராயர். ‘பரசமயம் விரும்பேன்’ என கோமதியந்தாதியில் பாடுவது படித்து இன்புறுத்தக்கது.
இவ்வுலத்தில் என்றும் நித்தியமாக உள்ள உண்மைப்பொருள் எது வென்று கண்டுவிட்டால் அவர்கள் முடிவிற்குக் கர்த்தாவான எமதர்மனையும் எதிர்க்கும் வல்லமை பெற்றவர்கள் ஆக மாறிவிடுவர். அவனை மிகவும் அலட்சியமாக நினைத்து உயிர்களாகிய நமக்கு எமனைக்கண்டு அஞ்சாதீர்கள் என அருளுரை வழங்குவார்கள்.
அடிக்கடி நம் அருணகிரிநாத சுவாமிகளும், திருப்புகழில் ‘முருகபக்தர்களை ஒன்றும் செய்யாதே’ என எமதர்மனை எச்சரிக்கை செய்வார்.
திருநெல்வேலி தச்சநல்லுார் அழகிய சொக்கநாத பிள்ளையவர்களும், ‘கோமதியே உன் பதத்தின் அருகில் இருக்கும் போது கேடு செய்யும் எமன் கிட்டவருவானோ?’ என ஆனந்த இறுமாப்போடு ஒரு பாடலில் துதித்து போற்றுவார்.
தேசியகவியான பாரதியாரும் ‘காலனையும் காலால் மிதித்திடுவேன்’ என்பார்.
காஞ்சிபுரத்தில் அகத்திய பெருமான் சிவ தரிசனம் பெற்ற பின் நானே சிறந்தவன் என புளங்காகிதம் அடைவார். ஏனென்றால் சிவதரிசனம் பெற்றுவிட்டார் அல்லவா.. இதையே சிவஞானயோகிகளும் அழகாக, நானே பெருஞ்செல்வன் என சொல்லி பத்து பாடல்களில் பாடி நம்மையும் பாடச் செய்வார்.
மேற்கண்ட கருத்துக்களும் கோமதியந்தாதி பாடலில் இசைந்து செல்கின்றன. இத்தகைய ஞானங்களைப் பெற்ற கவிராயர் ‘எனக்கு நிகர் நானே…’ என பெருமிதம் கொள்கிறார்.

அமாவாசை அன்று பௌர்ணமியை வரவழைத்துக் காட்டி அந்தாதி பாடிய அன்னையின் தரிசனத்தை மீண்டும் மீண்டும் பெற்றாரே அபிராமி பட்டர். அவரைப் போலவே, கோமதியின் தரிசனம் பெற்றபின்பு தான் இவ்வந்தாதி பாடியிருப்பார் என்பது திண்ணம்.
அருளாளர்கள் வரிசையில் அணி செய்யும் திருவண்ணநாதக்கவிராயரின் கோமதியந்தாதியின் எட்டாவது பாடலைப் பாடினால் எமனின் கரங்களுக்கு எட்டாமல் வாழும் வாய்ப்பினை அருளுவாள் அந்த சங்கர கோமதி.
பாடல் முழுவதையும் படித்து விடுவோமா…?
கண்டேன் கருணை தரும் கோமதி யிணைக் கைதொழுது விண்டேன் அவள் புகழ் யாவையும் வாய்கொண்டு வேண்டியருள் கொண்டேன் பரசமயம் குறுகேன் கொடுங்கூற்று முட்கி அண்டேன் எனச்சொல்ல மேன்மை பெற்றேன் என்கார் நிகரே. (8)
இவளை வணங்குவதால் என்னென்ன நன்மை கிடைக்கிறது என்பதை முதல் பாடலிலேயே பட்டியல் இடுகிறார் கவிராயர்.
செல்வி கடாட்சம் உண்டாயப் பொருள் சேரப் சிறந்த பெரும் கல்வி மெய்ஞானம் கருத்ததில் உண்டாகக் கதி பொருந்த நல்விதமாய்ப் துதிப்பாய் மனமே எழிலாடுமலைச் செல்வி எனும் பெயர்க் கோமதியாள் தன் திருவடியே (1)
பதிப்பும் பார்வையும்
இந்நூல் 1897ஆம் ஆண்டு தூத்துக்குடி சிவஞானப்பிரகாச சபையின் தமிழ்ப் பண்டிதர் ஜீ. சதாசிவம் பிள்ளை யவர்களால் பார்வையிடப்பட்டு முதன் முதலாக பதிப்பித்து அச்சிடப்பட்டது.
அதன் பிறகு, 2017 ம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்க நூலகத்தில் கருவாபுரிச் சிறுவனால் இந்நூல் கண்டெடுக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதினத்தின் மகரத் தலை நாள் குருபூஜை பத்துநாள் விழாவில் ஓர் அங்கமாக குகபதி பதிப்பகத்தாரால் வெளியீடு செய்யப்பட்டு இரண்டாவது பதிப்பினைப் பெற்றது.
விண்ணப்பமும் வேண்டுகோளும்
பேரன்புடைய அறிவுசார்புடைய ஆன்றோர்களே!
அன்னாரைப் போன்ற பல கவிராயர்கள், பண்டிதர்கள், சித்தாந்த ஆசிரியர்கள், சிவத்தொண்டு செய்த அடியார்களின் வழி வழி பரம்பரையினரும், அவர்களது சீடர் குழுவினரும் தான் யார் என்பது தெரியாமலே இவ்வுலகில் வாழ்கிறார்கள்.
இளம் சந்ததியினரும் முன்னோர்களின் பெருமையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், கொண்டதே கோலம் கண்டதே காட்சி என நவநாகரிகத்தில் சிக்கி, இதுவே நிலையான இன்பம் என வாழ்கிறார்கள்.
நமது வம்சத்தில், நமது இனத்தில் மேன்மை பொருந்திய ஒருவர் இருந்தார். அவர்கள் திருத்தொண்டுகள் பல செய்துள்ளார். பிறரையும் செய்விக்கச் செய்தார் என தெரியாமலே வாழ்ந்து மடிக்கிறார்கள். இதுவா… வாழ்க்கை.. பிறந்த குடியின் பெருமையை அறிந்துணர்ந்து கொள்வது அல்லவா தெய்வீக வாழ்க்கை.
குடும்பத்தில் உள்ளவர்களும் காலம் நேரம் வரும் போது குடியின் சிறப்பினை எடுத்து சொல்லுங்கள். தற் பெருமைக்காகச் சொல்வதில்லை என்பதை கவனத்தில் கொள்க.
(சமீபத்தில் தமிழகம் அறியப்படாத தமிழ் புலவர்கள் என்ற தலைப்பில் இணையத்தில் ஒரு கட்டுரை உலாவியது. அதில் நம் திருவண்ணநாதக்கவிராயர் பெயரையும், அவருடைய தந்தையார் திருநாமம் மற்றும் அவர் அருளிய நூலின் பெயரான கோமதியந்தாதி பற்றியும் குறிப்பிட்டு இருந்தார் என்பது ஒரு ஆறுதலான தகவல்)
தத்தம் வசிக்கும் பகுதிகளிலும் ஆக்கப்பூர்வமுடைய அருளாளர்களின் வரலாறு, அவர்கள் அருளிச் செய்த திருநூல்களை மீட்டெடுப்பதையும், மீண்டும் அச்சிட்டு வெளிப்படுத்துவதையும் எதிர்கால லட்சியமாக கொள்ளுங்கள்.
அதன் மூலம் தெரியாத வரலாற்று விஷயங்களும், அரியாத செய்திகளும் தெரிய வரும். வாழும் பகுதி எவ்வளவு சிறப்பு பொருந்தியது என மற்றவர்கள் உணருவதற்கு அத்தகைய செயல் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று கூறி நிறைவாக, ஆதிசங்கரரின் பிரதான சீடர்களில் ஒருவரான வித்யாரண்ய சுவாமிகள் அருளிச் செய்த ‘கோமதியம்பாள் அஷ்டகம்’ பாடி இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
கோமதியம்பாள் அஷ்டகம் முகபரஸமக போலே பக்தசித்தானுகூலே வினம தமரஜாலே விஷ்டபாராதி காலே விரசிதசினலீலே வல்லகீநாத லோலே ஹிமகிரிவர பாலே கோமதீ த்ராஹிபாலே 1 புவனஜனனிமாயே பார்வதீ நாமதேயே த்ருதஸூகுண நிகாவே திவ்ய ஸௌளந்தர்யகாயே ஸகலவிபுதகேயே மன்மனோபாகதேயே ஹிமகரிவரபாலே கோமதீ த்ராஹிபாலே 2 கதனஹர கடாே க்ஷ லோகரக்ஷா விதக்ஷ கலிதவிந தரகேக்ஷ கல்பிதாராதினேட்ஷே ப்ரமுதித விஷமாேக்ஷ பக்தஸந்தத்த மோட்ஷே ஹிமகிரிவர பாலே கோமதீ த்ராஹிபாலே 3 ஸகல நிகமரூபே ஹஸ்தவின்யஸ்த சாபே ப்ரகதித பவதாபே சுத்ததத்வஸ்ரூபே மதிதஸகலபாபே தைத்யலின் யஸ்தகோபே ஹிமகிரிவரபாலே கோமதீ த்ராஹிபாலே 4 மரகத மணீஹாரே ஸல்லஸத்கேசபாரே ஸமிததநுகுமாரே யுத்தஸன்னாஹதீரே துரித தருகுடாரே துஷ்டஸந்தோஷகோரே ஹிமகிரிவரபாலே கோமதீ த்ராஹிபாலே 5 ப்ருதுலாதி தம்பே பாஸமானோஷ்ட பிம்பே ச்ரிதருசிரகதம்பே சந்த்ர துல்யாஸ்ய பிம்பே ஸூசரிதநி குரும்பே சூலவித்வஸ்தசும்பே ஹிமகிரிவரபாலே கோமதீ த்ராஹிபாலே 6 சுகசிசுகலபாஷே சோபிமுக்தா விபூஷே விரசிதரிபுரோ ஷேபத்ர காள்யாதி னேஷே சசதா தகோஷே மதஸ்யடக்வாயிலாஷே ஹிமகிரிவரபாலே கோமதீ த்ராஹிபாலே 7 நிகல பயகபூத ப்ரே தபைசாசஜாதா: ஜ்வரபயவிஷவாத க்ரூரயு தஸன்னிபாதா: அதிசமனஸமேதா: யத்கடாக்ஷாத்ப்ரபீதா: ஹிமகிரிவரபாலே கோமதீ த்ராஹிபாலே! 8
கோமதியின் திருவடிகளே சரணம்!
வாழ்க பாரதம்! வளர்க மணித்திருநாடு!
$$$