-சோமன் சென் குப்தா
இந்திய அரசியல் சாசனம் வடிவமைக்கப்படுவதற்கு 11 ஆண்டுகள் முன்னதாகவே, ஓர் அரசியல் சாசன வரைவை விடுதலை வீரர் சாவர்க்கர் முன்னெடுத்திருக்கிறார் என்ற தகவல் வியப்பூட்டக்கூடியது. இதோ ஒரு அரிய கட்டுரை....

75 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர இந்தியா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட, அரசமைப்பு சாசனத்தை ஏற்றுக் கொண்டது. நவீன காலத்தில் உருவாக்கப்பட்டதில் சிறந்த ஆவணம் இது என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசமைப்பு சாசனம் குடிமக்களுக்கு மிக உயர்ந்த இடத்தை அளிக்கிறது. ஜனநாயக, மதச்சார்பற்ற சமூகக் கட்டமைப்பை உருவாக்குவது பற்றி அது மிக ஆழமாக ஆராய்வதுடன், விரிவாக அதைப்பற்றி விளக்குவதாகவும் உள்ளது. அதே நேரத்தில் அது ஒரு அரசியல் கட்சியின் (இந்திய தேசிய காங்கிரஸ் என்று படிக்கவும்) செயல் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் உள்ளது என்று எந்த தயக்கமும் இன்றி சொல்ல முடியும்.
காங்கிரசும் மற்றவர்களும்
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தால் தங்கள் கைக்குத்தான் அதிகாரம் வரும் என்று,ம் மற்றவர்களுக்கு அதில் பங்கில்லை என்றும் உறுதியாக நம்பிய காங்கிரஸ் தலைவர்கள் அரசமைப்பு சாசனத்தை உருவாக்குவது பற்றி சிந்தித்ததில் வியப்பொன்றும் இல்லை.
அதேசமயம், ஐரோப்பிய, இந்திய நீதித் துறையை உலுக்கிய சட்டப் போராட்டத்தை நிகழ்த்திய புரட்சியாளர் விநாயகர் தாமோதர சாவர்க்கர் தலைமையிலான, முற்போக்கு சிந்தனை கொண்ட ஹிந்து அமைப்பான ஹிந்து மகாசபையும் மற்றும் சில சிறு அமைப்புகளும் அரசமைப்பு சாசனத்தை பற்றி சிந்தித்தன என்பது சுவாரஸ்யமான செய்தி.
சாவர்க்கர்
சாவர்க்கர் தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் வெவ்வேறு வகையில் சிறைவாசம் என்னும் துன்பத்தில் அவதிப்பட்டு 1937 இல் ஆங்கிலேய அரசால் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார். நிபந்தனை இன்றி விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் மனமுடைந்த மனிதராக இருந்தார். பிறகு அவர் ஹிந்து மகா சபையின் தலைவரானார்.
அவர் மகத்தான தியாகங்களுடன், நினைத்து பார்க்கவும் முடியாத அளவில் உடல் ரீதியான மற்றும் உளவியல் ரீதியான துன்பங்களை ஏற்ற போதிலும், அது வெகு ஜனங்கள் மத்தியில் மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தி இருந்தது. சற்றே மதச்சார்புடன் கூடிய அகிம்சை அரசியலை முன்னெடுத்த காந்தியின் புத்திசாலித்தனமான செயல்பாடுகளில் வெகுஜன சமுதாயம் மயங்கிக் கிடந்தது. வேறெவரையும் விட சாவர்க்கர் இதை தெளிவாகத் தெரிந்து கொண்டார். அதனால் அவர் மனமுடைந்தவராக இருந்தார்.
ஹிந்து மகாசபை
தன் மீது வெளிச்சம் படாததால் மனமுடைந்த அவர் ஹிந்து மகாசபையை ஆக்ரோஷம் மிக்கதாகவும், காந்தியின் அரசியலுக்கு எதிரானதாகவும், ஹிந்துக்களின் நலனை உறுதியாக முன்னெடுப்பதாகவும், வெளிப்படையாக மாற்றினார். அதே வேளையில் சோஷலிஸ்ட் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்றவை போல ஹிந்து மகாசபை முக்கியமான அரசியல் கட்சியாக மாறாவிட்டால் அது ஹிந்து குடிமக்களிடையே காங்கிரசுக்கு மாற்றாகாது என்பதையும் புரிந்து கொண்டார்.
ஹிந்து தேசியத்தின் அறிவார்ந்த ஊற்றுக்கண்ணான சாவர்க்கர், 1937 இல், ஹிந்து மகா சபை என்பது ஹிந்து தர்ம சபையல்ல என்றும் ஹிந்து ராஷ்ட்ர சபை என்பறும் தெளிவாக அறிவித்தார்.
- ஒவ்வொரு ஹிந்துவையும் ஹிந்து என்ற விழிப்புணர்வுடன் கூடிய அரசியல் ஹிந்துவாக்குவது,
- இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக்குவது,
- ஹிந்து பண்பாட்டின் அடிப்படையில் ஹிந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது
-என்பதாக அவரது அரசியல் செயல்திட்டம் அமைந்திருந்தது. ‘ஹிந்துத்துவத்தின் அடிப்படைகள்’ என்ற அவரது நூல் ஹிந்து தேசியம், ஹிந்து பண்பாடு என்ற சிக்கலான விஷயத்தை தெளிவாக வரையறுப்பதாக அமைந்தது.
தேர்தல் அரசியலில்…
1937 தேர்தலில் சாவர்க்கரின் கட்சி போட்டியிட்டு கணிசமான இடங்களைப் பெற்றது. தொடர்ந்து காந்தியின் காங்கிரசை ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்ப்பதில் உறுதியாக நின்றது . சுதந்திர இந்தியாவில் குடிமக்களுக்கான உரிமைகள் பற்றி சாவர்க்கர் தன் கவனத்தைச் செலுத்தினர். காங்கிரஸ், முஸ்லிம் லீக் உடனான போட்டியில் இது அவருக்கு அவசியமானதாக இருந்தது. காங்கிரசுக்கு மாற்றாக ஒரு அரசமைப்பு சட்ட வரைவை முன்வைப்பது காங்கிரசுக்கு சவாலாக இருக்கும் என்று அவர் கருதினார்.
கல்கத்தா மாநாடு
1939 இல் கல்கத்தாவில் நடந்த ஹிந்து மகாசபையின் அகில இந்திய மாநாட்டிற்கு சாவர்க்கர் வந்தார். வடக்கு கல்கத்தாவில் உள்ள தேசபந்து மைதானத்தில் பெரிய மேடை அமைக்கப்பட்டது. அதிலிருந்து, 29 டிசம்பர் 1939இல், நீண்ட உரை நிகழ்த்தினார். அப்போதுதான் உலகம் வியப்படையும் படியாக சுதந்திர இந்தியாவின் அரசமைப்பு சட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
சாவர்க்கர் உரை: எதிர்பார்ப்பும் எதிர்பாராததும்
அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான குழுவை சாவர்க்கர் கல்கத்தா மாநாட்டில் நியமிக்கவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தெந்த அம்சங்கள் கருத்தில் கொள்ள வேண்டுமென்றும் அவர் விளக்கமாகச் சொல்லவில்லை. இருந்தாலும், அவர் பேச்சில் எதிர்கால சுதந்திர இந்தியா பற்றிய கீற்றோவியத்தை வரைந்தார் என்றே சொல்ல வேண்டும். அவரது உரை முழுக்கவும் ‘சுதந்திர ஹிந்துஸ்தான்’ என்ற சொல்லை வலியுறுத்தினார்.
கல்கத்தா மாநாட்டில் சாவர்க்கர் நிகழ்த்திய தலைமைவுரையைப் படிக்கும் எவரும் வியப்படைவது உறுதி. அடிமைத்தளையில் இருந்து விடுபட வேண்டிய, உலகப்போருக்கு பின்னாலான உலகில் இந்தியாவின் நிலை பற்றி அவ்வளவு தெளிவாக, வெளிப்படையாக அவர் பேசியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் அரசமைப்பு சட்டம் பற்றி சாவர்க்கர் குறிப்பிடுவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஹிந்து- முஸ்லிம் பிரச்னை, காங்கிரசிலிருந்து சுபாஷ் போஸ் வெளியேறியது, போஸின் புதிய அரசியல் நகர்வுகள் , நாடு முழுக்கவும் நிலவும் சமூக மோதல்கள், முஸ்லிம் லீகர்களின் அட்டூழியங்கள், காந்தியின் முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கினால் ஹிந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இது போன்ற இன்னும் சில விஷயங்களை அவர் பேசுவார் என்று தான் அரசியல் நோக்கங்கள் எதிர்பார்த்திருந்தனர்.
சாவர்க்கர் உரையில் அரசமைப்பு சாசனம்
தலைமை உரையின் நடுவில் ஹிந்துஸ்தானின் அரசமைப்பு சட்டம் பற்றியும், ஜாதி, இன, மத வேறுபாடு இன்றி எல்லா குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு என்றும், அதற்கு ஒரே நிபந்தனை ஹிந்துஸ்தானின் மீது அசைக்க முடியாத பக்தி மட்டும்தான் என்றும் அவர் பேசியதும், மாநாட்டு பிரதிநிதிகள் வாய்பிளந்து நின்றனர்.
‘பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, கூட்டாகச் செயல்படும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் எல்லா குடிமக்களுக்கும் சமமாக இருக்கும். பொது அமைதி , தேசம் முழுவதும் அவசர நிலை அறிவிப்பு போன்றவை மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களால் அறிவிக்கப்பட மாட்டாது. மாறாக பொதுவான தேசிய நலனை கருத்தில் கொண்டே நடைமுறைப்படுத்தப்படும்’ என்று அவரது தலைமை உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
ஹிந்து நலன்களைப் பாதுகாப்பது தான் எங்களது அடிப்படைச் செயல்பாடு என்று தெளிவாக அறிவித்து செயல்படும் ஹிந்து மகாசபை என்ற அமைப்பிடமிருந்து இது போன்றதொரு அறிவிப்பு வந்தது, யாரும் எதிர்பாராதது.
கருத்தியல் விலகலா?
முனைவர் அர்க்யா சென் குப்தா தான் எழுதிய ‘கலோனியல் கான்ஸ்டிட்யூஷன்’ (Colonial Constitution – 2023) என்ற நூலில் சாவர்க்கரின் கல்கத்தா பேச்சுக்கும் அவர் எழுதிய ‘ஹிந்துத்துவத்தின் அடிப்படைகள்’ என்ற நூலுக்கும் இடையேயான வேறுபாட்டை சுட்டிக்காட்டி உள்ளார். ‘ஹிந்துத்துவக் கோட்பாட்டில் இருந்து பெரிய விலகல் இது. அந்த நூலில், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டின் மீது பற்றுடன் இருப்பேன் என்று உறுதி கூறினாலும், அவர்கள் சம உரிமை பெற முடியாது. காரணம் அவர்களது புனித பூமி என்பது வேறெங்கோ இருக்கிறது’ என்றுள்ளதென முனைவர் சென் குப்தா குறிப்பிடுகிறார்.
சாவர்க்கரின் பேச்சில் உள்ள வியப்பளிக்கும் இந்தத் திருப்பத்திற்கு தெளிவான விளக்கத்தை அளிக்கிறார் சென் குப்தா . ‘இந்த திருப்பம் யதேச்சையாக நடந்தது அல்ல. அரசமைப்பு சட்டம் பற்றி அவர் பேசியதன் நோக்கமே ஹிந்து மகாசபையை மைய நீரோட்டத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சியாக மக்களை ஏற்கச் செய்வதற்காகத்தான். ஹிந்துத்துவம் என்ற புரட்சிகரமான கருத்தியலை சற்றே நீர்க்கச் செய்வதன் மூலம் காங்கிரஸுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்தத் தான்’ என்கிறார் அர்க்யா சென் குப்தா.
தேசபந்து மைதானமே தலைவரின் இந்த பேச்சைக் கேட்டவுடன் தொடர்ந்து கரவொலியால் அதிர்ந்தது. அதேவேளையில் ஹிந்து மகாசபையின் தலைவர்கள் மத்தியில் அரசமைப்பு சட்டத்தின் இறுதி வடிவம் குறித்து சந்தேகமும் முளைத்தது.
ஹிந்து அல்லாதவர்களுக்கு சாவர்க்கர் கொடுத்த உறுதி
1939 கல்கத்தா மாநாட்டில் தனது தலைமை உரையிலேயே சாவர்க்கர் ஹிந்து அல்லாதவர்கள் ஹிந்து மகாசபையைப் பார்த்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்களது அடிப்படை உரிமைகளுக்கு எந்த விதமான கேடும் வராது என்று தெளிவுபடக் கூடியிருந்தார்.
இந்த விஷயத்தை குறிப்பிட்டு முனைவர் அர்க்யா சென்குப்தா தனது நூலில் , ‘… அவர்களது மதம், பண்பாடு, மொழி உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று அந்த (அரசமைப்பு )ஆவணம் தெளிவாக கூறுகிறது. அரசு உதவி பெற்று சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை ஏற்படுத்தலாம். அதேபோல பெரும்பான்மை சமூகத்தினரும் அரசின் உதவியுடன் கல்வி அமைப்புகளை நடத்தலாம்’என்று எழுதியுள்ளார்.
சிறுபான்மையினர் தங்களது மத அடையாளத்தைப் பேண முடியும் என்று சாவர்க்கர் கூறியதாக குறிப்பிடும் சென்குப்தா , ‘ஆனால், ஒவ்வொருவரும் ஹிந்துஸ்தானின் பிரஜை என்பது மிக முக்கியமானது’ என்பதை சாவர்க்கர் வலியுறுத்துவதாகக் கூறுகிறார்.
சாவர்க்கரின் அரசியல் திட்டம்
ஹிந்துத்துவ அரசியலின் தலைமகனாக இருந்த சாவர்க்கரின் தலைமையிலான ஹிந்து மகாசபை இந்த அரசமைப்பு சட்டத்தின் மூலம் தனது அரசியல் திட்டத்தைத் தெளிவாக்கியது. இரண்டாம் உலகப் போரின் இருள் சூழ்ந்த காலகட்டத்தில் இந்தியாவின் மைய அரசியலில் கலப்பதற்காக ஹிந்து மகாசபை மேற்கொண்ட முதல் சீரிய முயற்சி இது.
உலகப் போருக்குப் பிறகு வல்லமை கொண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விழும். இந்தியா தனது அடிமை விலங்கை உடைத்தெறிந்து விடுதலை பெறும் பொன்னான வாய்ப்பாக அது அமையும், என்று 1944 லேயே சாவர்க்கர் உறுதியாக நம்பினார்.
தோல்வியடைந்தது எப்படி?
அந்த அரசமைப்பு சட்ட வரைவு சாவர்க்கர் எதிர்பார்த்தபடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது வியப்பளிக்கிறது. ஹிந்து மகாசபையில் அவரது காலம், செல்வாக்கு மங்கத் தொடங்கியது. விரைவில், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி தலைவரானார். அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளில் அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வால்கரின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவுடன் புதிய அரசியல் கட்சியை – பாரதிய ஜனசங்கத்தை – அவர் தொடங்கினார்.
1951 – 1952 இல் இந்திய அரசியலில் நேருவின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சாவர்க்கரும் முகர்ஜியும் அந்த நேரு அலையை எதிர்த்து, மடை மாற்ற முடியாமல் தோல்வியடைந்தனர்.
26 ஜனவரி 1950 இல் நம்முடைய மகத்தான அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது, எவரும் சாவர்க்கரின் அரசமைப்பு சட்டத்தைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. பெருமைமிகு சாவர்க்கரின் செயல்கள் திட்டமிட்ட ரீதியில், அரசு இயந்திரத்தின் துணையுடன் மறக்கடிக்கப்பட்டது.
- நன்றி: ஸ்டேட்ஸ்மேன் நாளிதழ்
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$