பஹல்காம் படுகொலைக்கு பதிலடி தாமதம் ஏன்?

– ஸ்வபன் தாஸ் குப்தா 

இந்தக் கட்டுரை மே 4-இல் -இந்தியாவின் பதிலடிக்கு முன் - வெளிவந்தது. பதிலடி தாமதம் ஏன் என்ற ஆதங்கம் இழையோடும் இக்கட்டுரை, பெருவாரியான இந்தியர்களின் மனநிலை மாறிவிட்டதையும் பதிவு செய்திருக்கிறது…

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் பல திரள் படுகொலைகள் நடந்துள்ளன. ஒரு காலத்தில், பிஹாரில் ஜாதி வெறியர்கள் அப்பாவி கிராமத்து மக்களை கொத்துக் கொத்தாக படுகொலை செய்வதை தங்கள் பொழுதுபோக்கு போல வைத்திருந்தனர். 1990களில் பஞ்சாபில் கொத்தளிப்பான காலகட்டத்தில், ஆயுதமேந்திய காலிஸ்தானியர்கள் நீண்ட தூரம் செல்லும்  பேருந்துகளை மடக்கி அதிலிருந்த ஹிந்துப் பயணிகளை மட்டும் தனிமைப்படுத்தி சுட்டுக் கொன்றனர்.

2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமர்நாத்திற்குச்  சென்ற ஆன்மிகப் பயணிகள் 36 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அதேபோல, 2017 ஜூலை மாதத்தில் அமர்நாத் பயணிகளை முன்னைவிட சற்றுக் குறைவான எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் கொன்றனர். இதுபோன்ற துயர சம்பவங்கள் ஒவ்வொன்றின் போதும் அரசியல் பதற்றமும் சூழ்நிலை மேலும் மோசமாகும் என்ற அச்சுறுத்தலும் எழுந்தன.

பேராயர் பிரான்ஸ் பெர்டினாண்ட் 1914இ ல் சரஜேவோவில் படுகொலை செய்யப்பட்டது கொடூரமான  உலகப்போருக்கு வித்திட்டது. அதில் சுமார் 22 கோடி மக்கள் கொல்லப்பட்டனர். உலக அரசியலின் முகம் அடையாளம் காண முடியாதபடி மாறிவிட்டது. வரலாறு திசை மாற மறுக்கும் போது படுகொலைகள் மூலம் அது திருப்பி விடப்படுகிறது.

பஹல்காம் துயரச்சம்பவம் ஒரு முழுமையான போருக்கு வழி வகுக்காது என்ற போதிலும், இரண்டு அணு ஆயுத நாடுகள் முட்டிக் கொண்டிருப்பதை உலகம் அச்சத்துடனேயே பார்க்கிறது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்குப் பின்புலமாக இருப்பவர்களுக்கும் சரியான பதிலடி கொடுக்கும் அதே வேளையில், அது பிராந்திய மோதலாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடுமையான சவால் பிரதமர் மோடிக்கு உள்ளது.

பாகிஸ்தான் தேசியத்தின் நோக்கம் அந்த தேசத்தைக் கட்டமைப்பதற்குப் பதிலாக அதை  உருச்சிதைப்பதாகவே இருப்பது ஒரு முரண்பாடான விஷயம். 1980களில் ஆப்கானிஸ்தான் போரில் தொடங்கி 2001 செப்டம்பர் 9/11 தாக்குதல் வரை உலக நாடுகளிடமிருந்து தங்களுக்கு வேண்டிய தொகையை விலையாகப் பெறுவதே பாகிஸ்தானின்  யூக வகுப்பாளர்களின் உத்தியாக இருந்துள்ளது. அவர்களின் கண்ணோட்டத்தில் ஹமாஸ் அமைப்பின் நகலாக உள்ள,  ‘எதிர்ப்பு முன்னணி’ ஒரு நல்ல எடுபிடி. அதேவேளையில் சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டால் சுலபமாகக் கழற்றி விட்டு விடலாம்.

பாகிஸ்தானில் பொதுமக்கள் கருத்து என்பது ஓர் அற்ப விஷயம். ஆட்சியாளர்கள் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. மேட்டுக்குடியினரோ இரு தேசக் கொள்கை எனும் தற்காப்பு வேலிக்குள் வசதியாக இருக்கிறார்கள். இந்தியாவில் ஜனநாயகப் பொறுப்புணர்வு/ கடமையால், முடிவெடுப்பது நெகிழ்வற்று இறுக்கமாக இருக்கிறது.

1960இல் ஜவஹர்லால் நேரு சிந்து நதிநீர்ப் பங்கீடு விஷயத்தில் காட்டிய வெகு தாராளம் அல்லது 1972இல் சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் இந்திராகாந்தி தவறான இடத்தில் காட்டிய பெருந்தன்மை போன்ற செயல்களை, இன்றுள்ள இந்தியாவில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இதற்கு காரணம் கடுமையான தேர்தல் அரசியல் மட்டுமல்ல. இந்தியர்களின் ஆளுமை முற்றிலும் மாறி உள்ளது. ‘மென்மையான’ ,  ‘பொறுமையான’  என்றெல்லாம் சுவாமி விவேகானந்தரால் கேலி செய்யப்பட்ட , எல்லாவற்றையும் ஏற்று அனுசரித்துப் போகும் ஹிந்து கடந்த பத்தாண்டுகளில் மாறிவிட்டான்.

பஹல்காம் படுகொலையில் உள்ள குறிப்பிட்ட சில அம்சங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் பதில்வினையைத் தீர்மானிப்பதாக இருக்கின்றன. முதலாவதாக, 2008இல் மும்பாய் தாக்குதலில் நிகழ்ந்தது போன்ற கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு இல்லை இது. இம்முறை பயங்கரவாதிகள் கொடூரமாக அவமதிப்பு செய்துள்ளார்கள்; இஸ்லாத்தின் மேலாதிக்கத்தை தெளிவாக வலியுறுத்தியுள்ளார்கள்.

இதற்கு முன் நடந்தவற்றில் முஸ்லிம் அல்லாதவர்கள் வகைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதை ஊடகங்கள் மறைத்தன, அல்லது வெளிச்சத்துக்கு வராமல் பார்த்துக் கொண்டன. 1990இல் காஷ்மீரில் ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, அந்தப் பகுதி இன சுத்திகரிப்பு செய்யப்பட்டதை தேசம் தெரிந்துகொள்ள பல மாதங்களானது.  பஹல்காமில் நடந்த கோச்ர சம்பவத்தின் விவரங்கள் அடுத்த சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் பரவி விட்டன.

இரண்டாவதாக, மனைவி, குழந்தைகள் முன்பு கொல்லப்பட்ட அந்த 26 பேரும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்கு வந்தவர்கள். அது மட்டுமல்ல, அவர்கள் அனைவரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.   இவர்களது படுகொலை  காஷ்மீருக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டு இருந்தவர்களையும், அண்மையில் அங்கு சுற்றுலா சென்றவர்களையும் உலுக்கிவிட்டது.  ‘எனக்கும் என் குடும்பத்திற்கும்’ இது நிகழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் நடுத்தர வகுப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.

நீதி வேண்டும், பதிலடி கொடுக்க வேண்டும் என்ற அவர்களது ஆவேசக் குரல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை பாஜக புறந்தள்ள முடியாது.

2008-இல் நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்து, 175 உயிர்களை பலி வாங்கிய மும்பை தாக்குதலின் போதும், பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று இது போன்றதொரு அழுத்தம் எழுந்தது. ஆனால் இவற்றுக்கிடையே இரண்டு முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

முதலாவதாக, பாதிக்கப்பட்டு கோபத்தில் இருக்கும் தேசத்திற்கு உலகம் நீதி வழங்கும் என்றும், ராஜதந்திரச் செயல்பாடுகளால் அதைச் சாதிக்க முடியும் என்றும், மன்மோகன் சிங் மிகை நம்பிக்கை கொண்டிருந்தார். பாகிஸ்தானால் தூண்டப்படும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்வு காண முடியாது என்ற ஞானம் மோடி அரசுக்கு இருக்கிறது.

காசா தாக்குதலுக்கு (இஸ்ரேலியப் பிரதமர்) பெஞ்சமின்  நெதன்யாகுவின் நடைமுறை சார்ந்த எதிர்வினை, மோடி அரசில் முடிவெடுப்போரிடையே ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேலைப் போல போர் முடிவுகளை இந்தியாவால் எடுக்க முடியாது; என்ற போதிலும், பொருளற்ற வாதங்களால் படையினரை நீண்ட காலம் பொறுமை காக்கவைக்க முடியாது.

இரண்டாவதாக, துல்லியத் தாக்குதல் மற்றும் 2019இல் பாலக்கோடுக்கு பதிலடி ஆகியவை நிகழாமல் இருந்தால் மோடி அரசின் மீது மக்களின் எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்திருக்கும். கெடுவாய்ப்பாக, பொதுமக்களின் ஆவேசமும் அதற்கு ஊடகங்களின் தூபமும் பொறுமையின்மையை அதிகரிக்கச் செய்துள்ளன.

இது தொடர அனுமதித்தால் பிரதமருக்கு எதிர்ப்பு வலுத்து, அவர் காகிதப் புலி என்று விமர்சிக்கப்படுவார். மூளை சூடாகிய சிலர் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்,  பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் என்று, உண்மையாகவோ பொய்யாகவோ, இங்கு எதிர்வினை ஆற்றலாம். ஹிந்துக்களின் வாக்குகள்தான் பாஜகவின் அரசியல் அடித்தளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வக்பு திருத்தச் சட்டம் சாதாரண முஸ்லிம்கள் மத்தியில் எப்படி சித்தரிக்கப்பட்டது என்பதையும், அதனால் இரு மதத்தினர் இடையேயான உறவு எவ்வளவு சீர் கெட்டு உள்ளது என்பதையும் பார்க்கிறோம். இந்தச் சீர்கேட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ளுர் அளவில் நடந்த செயல்களே காரணம் என்பதையும் பார்க்கிறோம்.

நடுத்தர வகுப்பு இந்தியர்கள் தங்கள் கோபத்தைத் தணிக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கருதத் தொடங்கினால், அரசு உள்நாட்டுக்குள்ளேயே தீயணைப்புப் பணியில் ஈடுபட வேண்டி வரும்.

.

  • நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா  (04.05.2025)
  • திரு. ஸ்வபன் தாஸ் குப்தா, மூத்த பத்திரிகையாளர்.
  • தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார் 

$$$

One thought on “பஹல்காம் படுகொலைக்கு பதிலடி தாமதம் ஏன்?

Leave a comment