-திருநின்றவூர் ரவிகுமார்
சேத்தூர் சங்கரன் நாயர்- இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட மற்றொரு பெயர். அவரைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே...

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 2025 ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்தது. அது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி சர் சேத்தூர் சங்கரன் நாயரைப் பற்றி நினைவு கூர்ந்தார் . அப்போதுதான் அந்தப் பெயர் பலருக்கும் தெரிய வந்தது. காங்கிரஸ் கட்சியால் மறக்கடிக்கப்பட்ட ஒரு தேச பக்தரை மக்கள் முன் நிறுத்தினார் பிரதமர் மோடி.
பிரதமர் சொன்னது:
ஹரியாணாவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் சங்கரன் நாயர். காங்கிரஸால் மறக்கடிக்கப்பட்ட மகத்தான போராளி. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் அதற்குக் காரணமான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தைரியமாகப் போராடியவர். பிரிட்டிஷ் அரசில் உயர் பதவியில் எல்லாவிதமான வசதிகளும் செல்வாக்கும் பெற்றிருந்த அந்த சட்ட வல்லுநர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவை அனைத்தையும் துச்சமென உதறித் தள்ளினார்…”
“சங்கரன் நாயர் இன்றைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். படுகொலை நடந்ததோ பஞ்சாபில். பாதகம் செய்த பிரிட்டிஷாரை நீதிமன்றத்திற்கு இழுத்து வந்து, அதன்மூலம் இந்திய தேசத்தின் ஒற்றுமையை நிலைநாட்டியவர். பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சங்கரன் நாயரின் செயலைத் தெரிந்து கொண்டு அவர் நினைவை போற்ற வேண்டும்” என்று மோடி பேசினார்.
அந்த தைரியமான தேசியவாதியை தங்கள் நேரு – காந்தி சித்தரிப்புக்கு ஒத்து வராதவர் என்பதால், வரலாற்றிலிருந்தே புதைத்து, மறைத்த காங்கிரஸை அவர் சாடினார்.
திரைப்படம்
கேசரி (சிங்கம்) 2 என்ற திரைப்படத்தில் சங்கரன் நாயராக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அதில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக நாயர் நடத்திய சட்டப் போராட்டம் விரிவாக வருகிறது. பிரதமர் மோடி இந்த திரைப்படத்தைப் பற்றி பேசவில்லை என்றாலும், அந்தப் படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு நாயரைப் பற்றி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
யார் அந்த சங்கரன் நாயர்?
சங்கரன் நாயர் 1880இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் தொடங்கினார். தன் திறமையால் புகழ்பெற்று 1906இல் அட்வகேட் ஜெனரலாக ஆனார். செல்வாக்கு மிக்க அந்தப் பதவிக்கு வந்த முதல் இந்தியர் அவர்தான். மூன்றாண்டு காலம் அந்தப் பதவியில் இருந்த அவர், 1908இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியானார். அந்தப் பதவிக்கு வந்த முதல் இந்தியரும் அவர்தான்.
1915 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவர். அதற்குச் சான்றாக அவர் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டுகிறார்கள். ‘மாற்று மதத்திற்குச் சென்று பிறகு தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்புபவர்களை சமூகப் புறக்கணிப்பு செய்யக் கூடாது’ என்று அவர் வழங்கிய தீர்ப்பு, அந்தக் காலத்தில், சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முற்போக்கான தீர்ப்பாகக் கருதப்பட்டது.
அரசியல் களத்தில்…
சங்கரன் நாயர் நீதிபதி யாவதற்கு முன்பே அரசியலில் ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். காங்கிரஸில் இருந்த போது அவருடைய பேச்சாற்றல், கூரிய வாதத்திறத்தினால் மக்களிடையே பெரும் மதிப்பு பெற்றிருந்தார். 1897இல் அமராவதியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு அவர் தலைமை ஏற்றார். அப்போது அவருக்கு வயது நாற்பது . அத்தனை இளம் வயதில் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர் அவர்தான். அதே போல் தலைமை யேற்ற முதல் மலையாளியும் அவர்தான்.
அவரது தலைமை உரையில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ‘ஆதிக்க மனப்பான்மை’யைச் சாடினார். ஆட்சியில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலேயக் குடிமக்களுக்கு இணையாக இந்தியக் குடிமக்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றார். பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட வகையில், ஒரு தொடக்கமாக, இந்தியர்களின் ஆட்சி நிர்வாகம் வேண்டும் என்றார் (டொமினியன் அந்தஸ்து). ஆங்கிலேயர்களுக்கு இணையான உரிமைகள் இந்தியர்களுக்கும் வேண்டுமென அவர் பேசவும் எழுதவும் மட்டுமன்றி, பல சட்டப் போராட்டங்களை நடத்தினார்.
ஆங்கில அரசின் விருதுகள்
நாயரின் சட்ட அறிவையும் முற்போக்குச் சிந்தனையையும் ஆங்கிலேயர்களும் மதித்தனர். அதனால் அவருக்கு பல முக்கிய பதவிகளும், கமிட்டிகளில் இடமும் கொடுத்தனர். 1902இல் வைஸ்ராய் கர்சன் பிரபு, இந்தியாவில் உயர்கல்வியைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ராலே பல்கலைக்கழக கமிஷனின் (Raleigh University Commission) செயலாளராக நியமித்தார். நாயரின் சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு அவருக்கு 1904இல் இந்தியப் பேரரசின் சகா (Companion of the Indian Empire – CIE) என்ற விருதைக் கொடுத்தது. 1912 இல் அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.
1915 இல் வைஸ்ராய் கவுன்சிலில் இடம் பெற்றார். கவர்னர் ஜெனரலின் தலைமையிலான சிறிய அமைச்சரவை அது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர் அதிகபட்சமாக எட்டக்கூடிய நிலை அதுதான். அதில் கல்வி பற்றிய விஷயத்திற்கு பொறுப்பாளராக (மத்திய கல்வி அமைச்சர் !) நியமிக்கப்பட்டார்.
வைஸ்ராய் கவுன்சிலில் இருந்த போது (1915 – 1919) நாயர் பல முற்போக்கான மாற்றங்களைக் கொண்டு வர முனைந்தார். 1919இல் மாண்டெகு – செம்ஸ்போர்டு குழுவின் ஆலோசனைகளை விமர்சித்து அவர் கொடுத்த மறுப்பு அறிக்கை (Minutes of Dissent) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஆட்சி அதிகாரத்தில் இந்தியர்களுக்குப் போதுமான இடமில்லை என்றும், பிரிட்டிஷ் ஆட்சி முறையிலேயே குறைபாடுகள் இருக்கின்றன என்றும், அந்த குறைகளைப் போக்க எடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
அவர் கூறிய பல ஆலோசனைகளை பிரிட்டிஷ் அரசு ஏற்றுக் கொண்டது. அவரது மறுப்பு அறிக்கை 1919 இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. பிரிட்டிஷ் அரசில் உயர் பதவியில் இருந்தபோதிலும் உண்மையை அரசுக்கு உரக்கச் சொல்ல அவர் தயங்கியதில்லை. காலனிய ஆட்சியாளருடன் ஒத்துழைத்து சீர்திருத்தச் செயல்களை மேற்கொண்ட அதேவேளையில், தேசபக்திக் கண்ணோட்டத்துடன் அரசை விமர்சிக்கவும் அவர் தயங்கவில்லை. 1919 வரை இதுவே அவரது அரசியல் செயல் திட்டமாக இருந்தது.
1920 இல் வைஸ்ராய் கவுன்சிலில் இருந்து விலகிய பிறகு அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்தது போன்ற டொமினியன் அந்தஸ்து இந்தியாவிலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றார் . பூரண ஸ்வராஜ் (முழுமையான சுதந்திரம்) என்ற கருத்து முதன்மை முழக்கமாக எழுவதற்கு முன்பே ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு பங்கு வேண்டும் என்ற இவரது கருத்து கவனிக்கத்தக்கது.
கட்டம் கட்டிய காங்கிரஸ்
காங்கிரஸ்காரராக அறியப்பட்ட போதிலும், காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவராக இருந்த போதிலும், காங்கிரஸ் வட்டாரத்தில் இவர் ஒரு கட்டுப்படுத்த முடியாத காளையாகக் கருதப்பட்டார். காந்தியின் செயல்பாடுகள் இவருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. கொள்கைகளை தர்க்கபூர்வமாக விவாதிப்பதற்கும் தனக்கு ஏற்பில்லாத கொள்கைகளை கூரிய வாதங்களை கொண்டு விமர்சிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்ததால் காங்கிரஸ் தலைவர்களுக்கு இவரைப் பிடிக்காமல் போனது வியப்பில்லை.
எடுத்துக்காட்டாக, அரசியலில் மதத்தைக் கலப்பதை அவர் எதிர்த்தார். 1920இல் கிலாபத் இயக்கத்திற்கு காந்திஜி ஆதரவு அளித்ததை நாயர் கடுமையாக விமர்சனம் செய்தார். இது பல கேடுகளுக்கு வழி வகுக்கும் என்றார்.
காந்திஜி பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஜாதி முறைமையை ஏற்றுக் கொண்டவர். நாயர் அதை ஏற்கவில்லை. காந்திஜியின் மீதான விமர்சனங்களை அவர் தர்க்கபூர்வமாகவும் கூரிய வார்த்தைகளாலும் முன் வைத்தார். இது போன்ற தன்னிச்சையான நிலைப்பாடுகளால் காங்கிரஸ் வட்டாரத்தில் அவர் ஓரங்கட்டப்பட்டார்.
காங்கிரஸ் ‘வெகு ஜனங்களின் பிரதிநிதி’ என்று சங்கரன் நாயர் கருதினாலும், அது முற்போக்குச் சிந்தனை கொண்டதாகவும் குறைந்தபட்சம் கட்சிக்குள்ளாவது கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொறுப்புணர்வு கொண்டதாகவும் இருக்க வேண்டுமென அவர் கருதினார். இதனால் அவரை சுதந்திரப் போராட்ட வீரர் என்பதற்கான வழக்கமான வரையறைக்கு மாறானவராக , தங்கள் சட்டகத்துக்குள் பொருந்தாதவராக , காந்தி – நேரு காங்கிரஸ் கருதியது.
ஜாலியன் வாலாபாக் : பிரிட்டிஷ் அரசுக்கு எதிர்ப்பு
1919 ஏப்ரல் 13 ஆம் தேதி ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களைச் சுற்றி வளைத்து படுகொலை செய்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு. அந்தப் படுகொலை சங்கரன் நாயர் உட்பட பல இந்தியத் தலைவர்களின் போக்கில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது.
ஜெனரல் ரெஜினால்டு டயர் என்பவரின் ஆணைப்படி அந்தப் படுகொலை (துப்பாக்கிச் சூடு) நடத்தப்பட்டது. அப்பொழுது பஞ்சாப் மாகாணத்தின் கவர்னராக இருந்தவர் மைக்கேல் ஓ டயர். அவரது கொடுங்கோல் கொள்கைகள் தான் ஜெனரல் ரெஜினால்டு டயருக்கு அதிகாரத்தைக் கொடுத்தன. இந்தப் படுகொலை நடந்த போது சங்கரன் நாயர் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார்.
படுகொலை செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த நாயர், வைஸ்ராய் கவுன்சிலில் இருந்து ராஜினாமா செய்தார். இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவரது பதவி விலகல் கடிதத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை கடுமையாக கண்டனம் செய்திருந்தார். அந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த ஆங்கிலேய நிர்வாகத்தை கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார்.
இந்தியத் தலைவர்களின் வேண்டுகோள்
அவரது பதவி விலகல் மிதவாத காங்கிரஸ் தலைவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது துணிச்சலான செயல் அவர்களுக்கு வியப்பளித்தாலும், பிரிட்டிஷ் அரசின் உயர் பதவியில் இருந்தவொரு இந்தியர் அதை துறப்பதை அவர்கள் ஏற்கவில்லை. மோதிலால் நேரு , ராஜினாமாவை திரும்பப் பெற்று, உள்ளுக்குள் இருந்து போராடுங்கள் என்று சங்கரன் நாயரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் காலனிய அரசின் மிகப்பெரிய தவறான செயலை ஏற்க நாயரின் மனம் ஒப்பவில்லை.
வைஸ்ராய்க்கும் நாயரின் பதவி விலகல் பிடிக்கவில்லை. ‘உங்களுக்கு பதில் உங்கள் இடத்தை யாரைக் கொண்டு நிரப்புவது?’ என்று நாயரையே கேட்டாராம் . அதற்கு, “நல்ல ஆடை அணிந்த பியூனை போடுங்கள். உங்களுக்கு தேவை ஒரு ஆமாம் சாமி தானே?” என்று பதிலளித்தாராம் நாயர். அந்த பதிலைக் கேட்ட வைஸ்ராய் அதிர்ச்சி அடைந்தார் என்று, வரலாற்றாளரும் எழுத்தாளருமான புஷ்பா குரூப் குறிப்பிடுகிறார்.
பிரிட்டிஷாருக்கும் இந்திய தேசத் தலைவர்களுக்கும் நாயரின் செயல் அதிர்ச்சி அளித்த போதிலும், பொதுமக்கள் மத்தியில் அவரது செயலுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. பதவி விலகிய பிறகு தில்லியில் இருந்து சங்கரன் நாயர் சென்னை வந்த போது பொது ஜனங்கள் திரளாகத் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.
எழுத்துப் பணி

பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளை அம்பலப்படுத்த முடிவெடுத்த சங்கரன் நாயர் அதற்காக மீண்டும் எழுதுகோலை எடுத்தார். 1922இல் ‘காந்தியும் அராஜக வாதமும்’ என்ற நூலை வெளியிட்டார். தலைப்பைப் பார்த்தவுடன் அது காந்திஜியை விமர்சிக்கும் நூல் போல் தெரிந்தாலும் -அவர் ஏற்கனவே பொதுவெளியில் காந்திஜியை விமர்சித்தவர் தானே – அந்த நூலில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணம் வெறி பிடித்தபடி சுட்டுத் தள்ளிய ஜெனரல் டயர் மட்டுமே அல்ல, பஞ்சாப் மாகாண ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ டயரின் கொடுங்கோல் நிர்வாகம் தான் முக்கிய காரணம் என்று வாதிட்டிருந்தார்.
ஒரு சிறு விளக்கம்
புதிய வாசகர்கள் குழப்பம் அடையாமல் இருக்க ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்வோம். ஜாலியன் வாலாபாக் படுகொலையில் சம்பந்தப்பட்ட இருவரின் பெயரும் டயர் என்று வருவது குழப்பம் ஏற்படுத்தலாம்.
பஞ்சாப் மாகாண ஆளுநராக இருந்தவர் சர் மைக்கேல் ஓ டயர் (Lieutenant Governor – Sir Michael O’Dwyer). இவரைத்தான் 1940 மார்ச் மாதம் 13 ஆம் நாள் லண்டனில் சுட்டுக்கொன்று , ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்த்துக் கொண்டார் உத்தம் சிங். ( அது பற்றி ‘குறிசாரும் வரை’ என்ற எனது கட்டுரையைக் காணவும்)
“சுட்டேன், சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டுக் கொன்றேன்” என்று வெறி பிடித்துக் கொக்கரித்தவன் ஜெனரல் ரெஜினால்டு டயர் (Brigadier- General Reginald Dyer) . இவனது கொக்கரிப்பு பிரிட்டனில் இருந்தவர்களின் மனசாட்சியை உலுக்கியது. எல்லோரும் இவனை கண்டனம் செய்தனர். இவனது குடும்பமும் இவனைக் கைவிட்டது. அதனால் இவனுக்கு பைத்தியம் பிடித்தது. எல்லோராலும் கைவிடப்பட்டு மனநல மருத்துவமனையில் அனாதையாகச் செத்தான். ராணுவ உயரதிகாரியாக இருந்தபடியால் பிரிட்டிஷ் ராணுவ கல்லறைத் தோட்டத்தில் மரியாதையுடன் புதைக்கப் பட்டான்.
டயர் போட்ட வழக்கு
படுகொலையின் போது ஆளுநராக இருந்த ஸர் மைக்கேல் ஓ டயர் ஓய்வு பெற்று லண்டன் திரும்பிய பிறகு, சங்கரன் நாயரின் நூலை அடிப்படையாகக் கொண்டு அவர் மீது அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். நாயர் மன்னிப்பு கேட்டு வழக்கை சந்திக்காமல் பின்வாங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நாயர் சவாலை ஏற்று வழக்கை எதிர்கொள்ள, 1924 இல், லண்டனுக்கு பயணமானார். பிரிட்டிஷ் உயர் அதிகாரியை, பிரிட்டிஷ் மண்ணில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில், ஓர் இந்தியர் எதிர்கொள்வது என்பது இரு நாட்டு மக்கள் மத்தியில் விறுவிறுப்பைத் தூண்டியது. நீதிமன்ற நடவடிக்கைகள் சுவாரஸ்யமாக விவாதிக்கப்பட்டன.
ஐந்து வாரங்கள் தொடர்ந்து நடந்த அந்த வழக்கு விசாரணையில் நாயர் உறுதியாக தன் தரப்பு வாதங்களை, பஞ்சாபில் நடந்த அட்டூழியங்களை, உண்மையென முன் வைத்தார். ஆனால் பிரிட்டிஷ் மண்ணில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு இந்திய வெற்றி பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். (ஆங்கில நீதிபதிகள் நம்மூர் நடுநக்கிகள் அல்லவே).
அப்போது செய்தித்தாள்களில் வெளியானதைப் பார்க்கும் போது நீதிபதிகள் ஓ டயர் மீது ஓரவாஞ்சை கொண்டிருந்தனர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனாலும் தீர்ப்பு ஒருமித்ததாக இல்லை. பெருவாரியான நீதிபதிகளில் கருத்து நாயருக்கு எதிராக வெளிப்பட்டது. மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ஐநூறு பவுண்டுகள் தண்டம் கட்ட வேண்டும் என்பது தீர்ப்பு.
உண்மையைச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நாயர் முடிவெடுத்தார். ஐநூறு பவுண்டுகள் தண்டம் கொடுத்தாலும், ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய விஷயத்தை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த விஷயத்தில் அவர் வெற்றியே பெற்றார்.
“மன்னர் மன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ஏகமனதாக என்னை குற்றவாளி என்று சொன்னாலும் எனக்கு எந்த மானக்கேடும் வராது. இந்த பக்கச் சாய்வு கொண்ட தீர்ப்பால் என்னுடைய மதிப்பும் மரியாதையும் குறையாது” என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தீர்ப்பின் தாக்கம்
வழக்கில் நாயர் தோற்றுப் போனதாக இருந்தாலும், தீர்ப்பு பிரிட்டிஷ் மக்களிடையே விவாதப் பொருளாகியது. சிலர் தீர்ப்பை ஆதரிக்க, பலரும் தீர்ப்பை விமர்சித்தனர். வழக்கு எந்த அளவுக்கு விவாதப் பொருளானது என்பதை, வின்சென்ட் சர்ச்சில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை அரக்கத்தனமானது’ என்று கண்டனம் செய்தார் என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பிரிட்டிஷ் வரலாற்றாளரான சர் ஆல்பிரட் டிராப்பர் என்பவர் பின்னாளில் இந்த வழக்கைப் பற்றி குறிப்பிடும்போது, “இந்த வழக்கின் மூலம் (ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது என்ன என்பதை உலகம் தெரிந்து கொண்டது. நாயரின் சட்டப் போராட்டத்தினால் அந்தப் படுகொலை வரலாற்றில் ரகசியமாக புதைக்கப்பட முடியாமல் போனது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய மாவீரரான சங்கரன் நாயரின் பெயரை இந்திய மக்களுக்குத் தெரியாதபடி மறைப்பதில் நேரு – காந்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸின் இந்த மோசடியைத் தான் பிரதமர் மோடி ஏப்ரல் 13இல் அம்பலப்படுத்தி உள்ளார்.
சங்கரன் நாயர் வாழ்க்கைக் குறிப்பு
- அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் (இன்றைய கேரள மாநிலம்) பாலக்காட்டில் (மலபார்) உள்ள மண்கரா கிராமத்தில் 1857 ஜூலை 11ஆம் தேதி பிறந்தார்.
- (இன்றைய) சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை பட்டமும் (1877), சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பில் பட்டமும் (1879) பெற்றார்.
- 1880 ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
- அமராவதியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு (1897) தலைமையேற்றார். காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமையேற்ற முதல் மலையாளி இவர்தான்.
- 1902 இல் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுவால் கல்விச் சீர்திருத்தம் குறித்து நிறுவப்பட்ட ராலே பல்கலைக்கழக கமிஷனின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
- ‘இந்திய பேரரசின் சகா’ என்ற விருது இவருக்கு 1904 இல் வழங்கப்பட்டது.
- மெட்ராஸ் மாகாணத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) 1906 முதல் 1908 வரை பணியாற்றினார்.
- இவருக்கு ‘சர்’ பட்டம் 1908 ஆண்டு வழங்கப்பட்டது. அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- 1915 இல் வைஸ்ராய் கவுன்சிலில் உறுப்பினரானார். அந்த கவுன்சிலில் இருந்த ஒரே ஒரு இந்தியர் அவர்தான்.
- மாண்டெகு – செம்ஸ்போர்ட் குழுவில் இருந்து மாறுபட்ட அறிக்கையை (Minutes of Dissent) கொடுத்தார். அதிலிருந்த பல ஷரத்துக்களை அரசு ஏற்றுக்கொண்டது.
- 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து வைஸ்ராய் கவுன்சில் இருந்து வெளியேறினார்.
- லண்டனில் இருந்த இந்திய அரசுக்கான செயலாளரின் ஆலோசகராக 1920 – 21 வரை இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
- 192 இல் ‘காந்தியும் அராஜகவாதமும்’ என்ற நூலை வெளியிட்டார். அதில் காந்தியை விமர்சித்ததோடு பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளை, குறிப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி எழுதி இருந்தார்.
- சைமன் கமிஷன் முன்பு, இந்திய பிரதிநிதிகளின் தலைவராக செயல்பட்டு, டொமினியன் அந்தஸ்து கேட்டு மனு அளித்தார்.
- தனது 76 வயதில், 1934 ஏப்ரல் 22 தேதி, சென்னையில் காலமானார்.
- 2001 இல் வாஜ்பாய் தலைமையில் இருந்த இந்திய அரசு இவரது நினைவு தபால் தலையை வெளியிட்டு கௌரவித்தது.
- இவரது வாழ்க்கையை சித்தரிக்கும் கேசரி (சிங்கம்) 2 என்ற திரைப்படம் 2025 இல் வெளியாகி உள்ளது.
$$$