மாநில சுயாட்சியும் திமுகவும்

-முரளி சீதாராமன்

திமுக அரசின்  ‘மாநில சுயாட்சி தீர்மானம்’ குறித்து சரித்திரப் பின்னணியுடன் பகடி செய்கிறார் திரு. முரளி சீதாராமன்…

முன்னெல்லாம்  ‘துக்ளக்’ இதழில் மாநில சுயாட்சி கிடைத்தால் பாராட்டுவதற்காக… 

ஆசிரியர் சோ அவர்கள்  ‘இது மாநில சுயாட்சி இடம்’ – என்று தலைப்புப் போட்டு சிறிய கட்டம் ஒன்றை அச்சிட்டு அதில் ஒன்றும் எழுதாமல் காலியாக விட்டு வைப்பார்! 

வாசகர் கேள்வி – பதில் வெளியாகும் பகுதியில் ஓரத்தில் கீழே –  ‘இது மாநில சுயாட்சி இடம்’- என்று அழகான கட்டம் போட்டு அது வெளியாகும். 

காலப்போக்கில் சோ அவர்களே இது வேலைக்கு ஆகாது என்று அந்தக் கட்டத்தை எடுத்துவிட்டார். 

திமுக – காங்கிரஸ்  ‘லட்சிய உறவு’ மலர்ந்த காலத்தில்,   “நேருவின் மகளே வருக – நிலையான ஆட்சியைத் தருக!”  என்று திமுக – காங்கிரஸ் கூட்டணி உருவான காலத்தில்… 

‘STATE AUTONOMY IS MEANINGLESS’ – என்று இந்திரா காந்தி பேசினார். 

வேறு எவராவது கூறி இருந்தால் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக கருணாநிதி குதித்திருப்பார். ஆனால்  லட்சிய உறவு மலர்ந்துவிட்டதால் கருணாநிதி மௌனம் காத்தார். 

அது மட்டுமல்ல! 

ஜனவரி 1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது. 

தமிழகத்தில் 37/ 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக இரண்டே இரண்டு இடங்கள் வென்று (கோபிசெட்டிபாளையம் & சிவகாசி) படுதோல்வி அடைந்தது. 

1977 இல் பார்லிமெண்ட் தேர்தலில் ஜனதா பிரமாண்ட வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததும் – காங்கிரஸ் ஆண்ட மாநில அரசுகளைக் கலைத்தது – மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகக் கூறி! 

இப்போது 1980 இல் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றி பெற்று –  ‘நிலையான ஆட்சி’ என்ற கோஷத்தால் – மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஜனதா கட்சி ஆண்ட மாநில அரசுகளைக் கலைக்கத் தீர்மானித்தது – மக்கள் ஆதரவை இழந்துவிட்டீர்கள் என்று கூறி! 

உடனே இங்கிருந்து கருணாநிதி டெல்லிக்கு படை எடுத்தார் கருணாநிதி –  “அதிமுகவும் 2/39 சீட்தானே வென்றுள்ளது? நாம்தானே 37/39 வென்றுள்ளோம்? அதிமுக அரசும் மக்கள் ஆதரவை இழந்த அரசுதானே? அதையும் கலையுங்கள்!” என்று, நேருவின் மகளிடம் வலியுறுத்தினார் கருணாநிதி! 

அப்போது கருணாநிதிக்கு அரசியல் சட்டம்- 356 ஆவது பிரிவு நினைவு வரவில்லை! 

இத்தனைக்கும் தன்னுடைய அரசையே இதற்கு முன்பு 1976 இல் இதே இந்திரா காந்திதானே கலைத்தார்?  என்பது கருணாநிதிக்கு நினைவுக்கு வரவேயில்லை!

அப்போது நாம் இந்திரா காந்திக்கு எதிராக, எமர்ஜென்சிக்கு எதிராக, அரசியல் சட்டம் 356 ஆவது பிரிவுக்கு எதிராக, அதை துஷ்பிரயோகம் செய்து மாநில அரசுகளைக் கலைத்த காங்கிரசுக்கு எதிராக… என்னென்ன பேசினோம்  என்பதைக் கருணாநிதி சௌகரியமாக மறந்துவிட்டார்! 

“சேலை கட்டிய ஹிட்லர் – மீசை இல்லாத முசோலினி – சாத்தூர் பாலகிருஷ்ணன், சிட்டிபாபு உயிரைக் குடித்த பூதகி…” -இந்திராவைப் பற்றி திமுக மேடைகளில் அனல் பறந்ததை சௌகரியமாக மறந்து விட்டார் கருணாநிதி! 

அவருடைய ஒரே லட்சியம் – எம்ஜிஆர் ஆட்சியைக் கலைக்க வேண்டும் –  திமுக காங்கிரஸ் கூட்டணி 37/39 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றுள்ளது – அதிமுக செல்வாக்கு இழந்துவிட்டது – எனவே மற்ற மாநில ஜனதா அரசுகளை மக்கள் ஆதரவை இழந்துவிட்டதால் கலைத்தது போல் – தமிழக அதிமுக அரசையும் கலை… 

கலைத்தார் இந்திரா காந்தி! 

அதே 1980 மே / ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. 

அதற்கு முன்பாக 1980 ஜனவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி தந்த களிப்பில் – நிச்சயம் திமுக – காங்கிரஸ் கூட்டணி வென்று தாம் முதல்வராகிவிடுவோம் என்று கனவில் மிதந்தார் கருணாநிதி. 

ஆனால் இந்திரா காந்தி அந்தக் கனவுக்கு சில  ‘செக்’ வைத்தார். 

திமுக 114 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது! காங்கிரசுக்கு 112 சட்டமன்றத் தொகுதிகளை விட்டுக் கொடுத்தது. 

அதாவது அப்படியே திமுக – காங்கிரஸ் கூட்டணி வென்றாலும் திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது! 

அது மட்டுமின்றி – கூட்டணி வென்றால் யார் முதல்வர் என்று அறிவிப்பதிலும் காங்கிரஸ் நீண்ட இழுபறி செய்தது. கடைசியில் நீண்ட மௌனத்துக்குப் பிறகு –  ‘கூட்டணி வென்றால் கருணாநிதிதான் முதல்வர்’ என்று அறிவித்தது காங்கிரஸ்!  

திமுக கூட்டணி வென்றாலும் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்றாகியது நிலைமை! இது எல்லாம் அதிமுக கூட்டணிக்கு சாதகமாகி விட்டது! 

“கருணாநிதி அவர்களே! மாநில சுயாட்சிக்கு ஆதரவாக எகிறி குதித்தீர்களே! அரசியல் சட்டப் பிரிவு 356ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் கூடாது என்று கூவினீர்களே – இப்போது எங்கே போயிற்று உமது மாநில சுயாட்சி வீரம்?”

திமுக – காங்கிரஸ் கூட்டணியை எலி – தவளை கூட்டணி என்று வர்ணித்தார் அதிமுகவின் காளிமுத்து! பருந்து கொத்த வரும்போது தவளை தண்ணீரை நோக்கிப் பாயும் – எலி தரையை நோக்கி இழுக்கும் – இரண்டும் பருந்திடம் பிடிபடும் என்று காளிமுத்து இலக்கிய நயத்தோடு பேசியது அன்று பிரபலம்!  

“கருணாநிதி அவர்களே! மத்தியில் இந்திரா தலைமையில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைத்துவிட்டது! இங்கே நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் போட்டி – காங்கிரசுக்கு 112 இடங்களைத் தந்துள்ளீர்கள் – உங்கள் கூட்டணி வென்றாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதானே ஏற்படும்? உங்களால் தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்க முடியாதே?”

“நேருவின் மகளே வருக – நிலையான ஆட்சியைத் தருக என்று கோஷம் போட்டீர்கள்! அங்கே மத்தியில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி  அமைத்துவிட்டது! இங்கே காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி என்கிறீர்கள். மாநில சுயாட்சி தத்துவத்தையே தலைகீழாக மாற்றிவிட்டீர்களே?”

“மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பது போய் அப்படியே தலைகீழாக – மத்தியில் சுயாட்சி, மாநிலத்தில் கூட்டாட்சி என்று ஆக்கிவிட்டீர்களே?”

-அதிமுக கூட்டணி பிரசார மேடைகளில் திமுகவையும் கருணாநிதியையும் வறுத்து எடுத்துவிட்டார்கள். 

எம்ஜிஆர் ஆட்சியைக் கலைத்ததை மக்கள் ஏற்காமல், ஓட்டுப் பெட்டியை திறந்த போது அதிமுகவுக்கு ஆதரவை அள்ளிக் குவித்துவிட்டார்கள். 

ஜூன் 3, 1980 தனது பிறந்தநாளன்று வள்ளுவர் கோட்டத்தில் பதவி ஏற்பதாக கனவு கண்டு கொண்டிருந்த கருணாநிதியின் கனவுக்கோட்டை தகர்ந்தது! 

எனவே திமுகவுக்கு சௌகரியப்பட்டபோது…  “மத்தியில் சுயாட்சி – மாநிலத்தில் கூட்டாட்சி” என்று ப்ளேட்டை மாற்றியதும் நடந்துள்ளது! 

வரலாறு முக்கியம் அமைச்சரே…!

$$$

Leave a comment