-டி.எஸ்.தியாகராஜன்
1947இல் இந்தியா மதரீதியாகப் பிளவுபட்டது. அப்போது, ‘நாட்டு மக்களை மத அடிப்படையில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்’ என்று சொன்னார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அதை அப்போதிருந்த அரசுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அதன் கொடிய விளைவையே பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இன்றைய ஹிந்துக்கள் பரிதாபமாக அனுபவிக்கின்றனர் என்கிறார் திரு. டி.எஸ்.தியாகராஜன். இக்கட்டுரை, ‘தினமணி’யில் வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

வங்க தேச ஆலோசகா், முகமது யூனுஸிடம் பிரதமா் நரேந்திர மோடி சமீபத்தில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் நடந்த ‘பிம்ஸ்டெக்’ உச்சிமாநாட்டின்போது சந்தித்துப் பேசி இருக்கிறார். வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான, குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், ஹிந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்படுவது குறித்தும் அவரிடம் இந்தியாவின் கவலையைத் தெரிவித்திருக்கிறார் பிரதமா் மோடி. சமூக சூழலைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு விமா்சனமும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு அகன்றது முதல், சிறுபான்மை மக்கள் குறிப்பாக ஹிந்துக்கள் தாக்கப்படுகிறார்கள்; கோயில்கள் இடிக்கப்படுகின்றன; தீக்கரையாக்கப்படுகின்றன; ஹிந்துக்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன. பெண்கள் பலவிதக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சமூக சேவையை இறைப்பணியாகச் செய்து வரும் இஸ்கான் கோயில் இடிக்கப்பட்டிருக்கிறது. அதன் துறவிகள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். தலைமை துறவி ராஜதுவேஷ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘‘துவராடை அணிய வேண்டாம். நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ள வேண்டாம். கழுத்தில் துளசி மாலையை அணிய வேண்டாம். உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்’’ என்று இஸ்கான் அமைப்பினா் அறிவிப்பு செய்துள்ளனா் என்றால், நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
‘‘வங்க தேசத்தில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் 1971-ஆம் ஆண்டு முதலே நடந்து வருகிறது’’ என்கிறார் வங்கதேசத்தின் இந்தியாவுக்கான முன்னாள் தூதுவா் வீணா வீ சிக்ரி. அதற்கு முன்னேயே 1947- இல் பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இனப்படுகொலைகள் நடந்ததை பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சரும் பட்டியல் இனத்தைச் சோ்ந்தவருமான ஜோகேந்திரநாத் மண்டல் 1950 அக்டோபா் 8-இல் பாகிஸ்தான் பிரதமா் லியாகத் அலிகானுக்கு எழுதிய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
‘1946 ஆகஸ்டு 16-இல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் முஸ்லிம் லீக் மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலையைப் போலவே 1949-இல் கிழக்கு பாகிஸ்தானில் ‘பரிஷால்’ என்ற பிராந்தியத்தில் ஹிந்துக்களைத் திட்டமிட்டு முஸ்லிம் லீகினா் கொன்றதும், குறிப்பாக டாக்காவில் மட்டும் ஏறக்குறைய 10 ஆயிரம் ஹிந்துக்களைப் படுகொலை செய்ததும் என்னை நிலைகுலையச் செய்தது. அதை நேரில் பார்த்த அதிர்ச்சி என்னை பயத்தில் உறைய வைத்தது. இதனால் இனி முஸ்லிம் லீக் அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பணி புரிய இயலாது. எனவே கனத்த இதயத்தோடும், மிகுந்த வேதனையோடும் நான் அமைச்சா்பொறுப்பில் இருந்து விலகுகிறேன்’ என்று தனது பதவி விலகல் கடிதத்தில் எழுதினார் அவா்.
இந்திய பிரதமா் பண்டித நேரும், பாகிஸ்தான் பிரதமா் லியாகத் அலிகானும் தத்தம் நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, சம உரிமை, மதவழிபாட்டு உரிமைகள் கிடைக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஆனால், ஒப்பந்தப்படி பாகிஸ்தான் நடக்கவில்லை.
1956-இல் இயற்றப்பட்ட பாகிஸ்தான் அரசியல் சட்டம், ‘பாகிஸ்தானின் இறையாண்மை என்பது அல்லாவைச் சார்ந்து இருக்கும்; எனவே இது ஒரு முஸ்லீம் நாடு’ என்றது.
கி.பி 711-இல் முகமது பின் காசிம் இந்தியாவில் நுழைந்து படை நடத்தி வெற்றி பெற்ற பிறகு, தனது நாட்டு ஹாஜாஜீக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றில், “உருவ வழிபாடு நடந்து வந்த கோயில்களை இடித்து விட்டு மசூதிகளையும், வழிபாட்டு மையங்களையும் உருவாக்கியிருக்கிறேன். கிதாப் (குர்ஆன்) வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழுகைக்கான பாங்கு ஒலிக்க வழி செய்தாகிவிட்டது. தேபூல் பிராந்தியத்தில் சிறை பிடிக்கப்பட்ட பிராமணா்களுக்கு கட்டாய ‘சுன்னத்’ செய்யப்பட்டது” என்கிறார். (டாக்டா் டைட்டஸ்- இந்திய இஸ்லாம்)
கி.பி. 1001- இல் கஜினி முகமது இந்தியாவில் படையெடுத்து என்னென்ன செய்தார் என்பது பற்றி அவரது அரசவை வரலாற்று ஆசிரியா் அல் உத்பி பதிவு செய்திருக்கிறார். “கஜினி முகமது 1000 கோயில்களுக்கு மேல் இடித்துத் தள்ளினார். சோமநாதா் கோயிலை இடித்து, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட உயரமான லிங்கத்தை நான்கு துண்டுகளாக உடைத்து ஒரு துண்டை கஜினி பகுதியில் இருக்கும் ஜாமி மசூதியிலும், இன்னொரு துண்டை தனது அரண்மனை வாசலிலும் கட்டித் தொங்க விட்டார். மூன்றாவது துண்டை மெக்காவுக்கும், நான்காவது துண்டை மதினாவுக்கும் அனுப்பி வைத்தார்” என்று மினாஜ் அஸ்சிராஜ் விவரிக்கிறார்.
குத்புதீன் ஐபக்கும் ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து விட்டு அந்த இடங்களில் மசூதிகளைக் கட்டினார். தில்லியில் ஜாமி மசூதியைக் கட்டி, கோயில்களில் இருந்து கொள்ளை அடித்த செல்வங்கள், நவரத்தினங்களைக் கொண்டு அலங்கரித்தார். கோயில் தூண்களில் ‘குர்ஆன்’ வாசகங்களைப் பொறித்தார். தில்லியில் இந்த மசூதியின் கிழக்கு வாசலில் இருக்கும் கல்வெட்டில் அந்த மசூதியைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட 27 கோயில்களின் கற்கள், தூண்கள், விதானங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
குத்புதீன் ஐபக் கட்டியதற்குப் போட்டியாக ஜாமி மசூதியின் இரண்டாவது மினாரை அலா- உத்-தீன் கட்டி எழுப்பினார். இவரும் பல கோயில்களை இடித்துக்கொண்டு வந்த கற்களைக் கொண்டுதான் மசூதியின் இரண்டாவது மினாரைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியா்அமிர் குஸ்ரு குறிப்பிட்டுள்ளார்.
ஷாஜஹானின் காலத்தில் நடந்த கோயில் இடிப்புகள் ‘பாதூஷா நாமா’வில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்பரின் இறுதிக் காலத்தில் தன் ஆளுகைக்கு உள்பட்ட எல்லையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 76 கோயில்களையும் இடித்து தரைமட்டமாக்க உத்தரவிட்டார். உருவ வழிபாட்டை முற்றிலும் வெறுத்த ஒளரங்கசீப் குறித்து ‘மாஅதிர் இ அலாம் கிரி’ நூலையை எழுதிய ஆசிரியா், “கி.பி.1669-ஏப்ரலில் தத்தா, முல்தான பனராஸ் ஆகிய பிராந்தியங்களில் இருந்த பிராமணா்களைக் கொல்லவும், அவா்களது கல்வி நிலையங்களையும், கோவில்களையும் இடிக்கவும் உத்தரவிட்டார். காசி விஸ்வநாதா்ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மதுராவும் இப்படியே செய்யப்பட்டது” என்கிறார்.
இப்படி முகமது கஜினி படையெடுத்து வந்த காலத்திலிருந்து அகமது ஷா அப்தாலி காலம் வரையிலான 762 ஆண்டுகளில் இதுவே இந்தியாவில் ஹிந்துக்களின் நிலையாக இருந்தது. இது போன்ற எண்ணற்ற மேற்கோள்கள், சம்பவங்கள் குறித்து இந்திய அரசியல் சாசன சட்ட வரைவு பிதாமகா் பி.ஆா். அம்பேத்கார் 1940-டிசம்பா் 28-இல் தான் எழுதிய ‘பாகிஸ்தான் – இந்திய பிரிவினை’ நூலில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்திய- பாகிஸ்தான் பிரிவினையை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்கிற கருத்தையும் சொல்லியுள்ளார்:
‘‘உலகப் போருக்குப் பின்னா் உருவான ஐரோப்பிய மாநிலங்கள் எல்லாவற்றுக்கும் சிறுபான்மைப் பிரச்னை இருந்தது. அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கும் அம்சங்களை உருவாக்கினால் போதும். பெரும்பான்மை- சிறுபான்மை வேற்றுமையில்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் எந்த ஒரு சட்டமோ, ஏற்பாடோ சிறுபான்மையினரைப் பாதுகாக்க முடியவில்லை. இதன் விளைவாக அந்த நாடுகளெல்லாம் தனது எல்லைக்குள் சிறுபான்மையினரை இடம் பெயர வைத்தார்கள். ஒரே விதமான மக்கள் வாழும் பிராந்தியங்களை உருவாக்கிக் கொண்டார்கள். துருக்கி, கீரிஸ், பல்கேரியா ஆகிய நாடுகளில் இதுதான் நடந்தது.
இதுபோல இந்தியா - பாகிஸ்தான் இடையே இடப்பெயா்ச்சி நடைபெறுதல் நல்லது. இதனை எதிர்ப்பவா்கள் எப்படி மேற்படி நாடுகளில் சிறுபான்மை பிரச்னை தீா்க்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். மதமோதல் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்காக வேறு எந்தவொரு பெரிய சிரமத்தையும் தாங்கிக் கொள்ளலாம். மக்களை இடம்பெயா்ப்பதுதான் மத ரீதியான அமைதிக்கு ஒரே நிரந்தரத் தீா்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இப்படியான நிலையில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் அரசியல் சாசனத்தில் உரிமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் செய்து பிரச்னையைச் சமாளித்து விட முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த நன்மையும் இல்லை. கிரீஸ், துருக்கி, பல்கேரியா போன்ற வளம் குறைவான சிறிய நாடுகளே இப்படி ஒரு சாதனையைச் செய்து காட்டியிருக்கும் நிலையில், இந்தியா போன்ற பெரிய தேசத்தில் அது முடியாது என்று சொல்ல எந்த முகாந்தரமும் இல்லை.
எத்தனை பேரை இடம் பெயரச் செய்ய வேண்டும் என்பது ஒரு பொருட்டே இல்லை. ஏனென்றால் மத அமைதி தேவையென்றால் சில சிரமங்களை தாங்கித்தான் ஆக வேண்டும். சில தடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.’’
டாக்டா் பாபா சாகேப் பி.ஆா். அம்பேத்கா் தீா்க்க தரிசனத்தோடு நாட்டுப் பிரிவினைக் கொள்கையை புள்ளி விவரங்களோடும், சம்பவங்களோடும், பல நூறு பக்கங்கள் அடங்கிய தனது நூலில் பதிவு செய்து உள்ளார். ஹிந்துக்களுக்கான நாடு – முஸ்லிம்களுக்கான நாடு என்பதுதான் சமநிலை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகள், சொல்லி மாளாது. அந்த நாடுகளில் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகள் ஹிந்துக்களைத் தாக்குகிறார்கள்; அச்சுறுத்தி மதம் மாற்றுகிறார்கள்; விரட்டி அடிக்கிறார்கள்.
இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என்று மனசாட்சியே இல்லாமல் அப்பாவி இஸ்லாமிய சகோதரா்களின் மனதில் துவேஷத்தை விதைப்பவா்கள், இஸ்ஸாமிய நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை ஹிந்துக்களுக்காகக் கண்ணீா் வடிக்க வேண்டாம்; அவா்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பக்கூடத் தயாராக இல்லையே ஏன்?
அதனால்தான் ‘ஹிந்துத்வா’ கோஷம் இங்கே வலுக்கிறது. இங்கே பாபா் மசூதி இடிக்கப்பட்டால் அங்கே வலிக்கும் என்றால், அங்கே கோயில்கள் இடிக்கப்பட்டால் இங்கேயும் வலிக்காதா? பாபா சாகேப் அம்பேத்கா் சொன்னதுதான் சரியோ?
- நன்றி: தினமணி (09.04.2025)
$$$