விஜயபாரதம் பிரசுரம் ஆண்டு விழாவில் சு.விஸ்வநாதன் உரை
-சேக்கிழான்

தமிழகத்தில் நிலவும் தேச விரோத, ஊழல் மலிந்த, பிரிவினைவாதக் காரிருள் மறைந்து கிழக்கு வெளுக்கத் தொடங்கி விட்டது என்று கூறினார், ‘பிரக்ஞா பிரவாஹ்’ அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் சு.விஸ்வநாதன்.
தேசிய சிந்தனையுடன் கூடிய நூல்களை வெளியிட்டு வரும் விஜயபாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் ஏப். 13-ஆம் தேதி மாலை நடைபெற்றது. சென்னை, நாரதகான சபாவின் சிற்றரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், உவேசா, பாரதி விருதுகள் நால்வருக்கு வழங்கப்பட்டன.
உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது, ‘கலைமகள்’ பத்திரிகை ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த எழுத்தாளருக்கான பாரதி விருது ம.வெங்கடேசனுக்கும் (எம்.சி.ராஜா: மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை நூல்), சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான பாரதி விருது பி.ஆர்.மகாதேவனுக்கும் (அழகிய மரம் உள்ளிட்ட நூல்கள்), சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது ஹரன் பிரசன்னாவுக்கும் (சுவாசம் பதிப்பகம்) வழங்கப்பட்டன. நால்வரும் ஏற்புரை நிகழ்த்தினர்.
விழாவுக்கு தலைமை வகித்த கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரி பேசியதாவது:
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு செயற்கைச் சூழல் காரணமாக, சிலருக்கு மட்டுமே விருதுகள் கிடைக்கின்றன. தங்கள் கருத்தியலுக்கு மாறான எவரையும் அங்கீகரிக்க மறுக்கும் இறுக்கமான மனோபாவம் இங்குள்ளது. இந்த நிலையை மாற்ற பெரும் முயற்சி தேவை. அந்த வகையில் விஜயபாரதம் பிரசுரத்தின் விருது வழங்கும் விழா நல்ல தொடக்கமாகும்.
இங்கு பாரதி விருது பெறும் மூவருடனும் எனக்கு நீண்டகாலமாக தொடர்பு உள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பே பிரமிப்பூட்டுகிறது. அவர் பணிபுரியும் கலைமகள் பத்திரிகையின் முதல் ஆசிரியராக உவேசாவும் இரண்டாம் ஆசிரியராக கிவாஜவும் இருந்துள்ளனர். உவேசா ஆசிரியராக இருக்கையில் அதில் பங்காற்றிய எழுத்தாளர் குழுவில் இருந்தவர்கள் அனைவருமே மிகப் பெரியவர்கள். அப்படிப்பட்ட உயர்நிலையில் இருந்த தமிழ்ப் பத்திரிகை உலகம் தற்போது கடும் தர வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்நிலையை மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
தமிழ்நாட்டில் காவி, சங்கி, ஆர்.எஸ்.எஸ்., வலதுசாரி போன்ற சொற்கள் கெட்ட வார்த்தைகள் என்பது போன்ற நிலையை எதிர்க் கருத்தாளர்கள் உருவாக்கி உள்ளனர். இதனையும் மாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். யாருக்கும் தயங்காமல், துணிவுடன் வலுவாக நம் தரப்பை நாம் முன்வைத்தாக வேண்டும். தமிழகத்தில் அடுத்த நூறாண்டுகளுக்கு கலாசார தளத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகள் பல இருக்கின்றன. நாம் தொடர்ந்து, மனச்சோர்வின்றிப் பயணிக்க வேண்டும் என்றார்.


விஜயபாரதத்தின் பாரதி விருது பெறும் ம.வெங்கடேசன்
விருதாளர்களுக்கு வாழ்த்துரை வழங்கிய வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் வானவில் க.ரவி பேசியதாவது:
இந்த விழாவில் விருது பெறுவோரும் பங்கேற்றுள்ளோரும் அச்சமற்றவர்கள்; மகாகவி பாரதி பாடிய ‘அச்சமில்லை’ பாடலுக்கு உதாரணமானவர்கள். எழுத்தாளர் மகாதேவன் கூறியது போல, இவ்விழா மாபெரும் விழாவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எண்ணிக்கையை விட உணர்வே மேலானது. அந்த வகையில் இவ்விழா மிகவும் சிறப்பானது.
தமிழ்த் தாத்தா உவேசாவும் மகாகவி பாரதியும் உணர்வுரீதியில் மிகவும் நெருங்கிய நட்புடன் திகழ்ந்தவர்கள். உவேசாவுக்கு பாராட்டு விழா நடந்தபோது அதில் பங்கேற்ற பாரதி, உவேசாவை வாழ்த்தி எழுதிய கவிதை இன்று வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அதில் கும்பமுனி அகத்தியரை உவேசாவுடன் பாரதி ஒப்பிட்டிருப்பார். இதேபோன்ற உவமையை தாகூரின் கவிதையிலும் காண்கிறோம். உவேசாவைச் சந்திக்க 1930இல் வந்த வங்கக்கவியான ரவீந்திரநாத் தாகூர், அவர் இல்லாததால் ஒரு ஆங்கிலக் கவிதை எழுதித் தந்துவிட்டுச் சென்றார். அதில் அவர் அகஸ்தியர் போன்றவர் உவேசா என்று குறிப்பிட்டிருக்கிறார். இதுவே மகான்களிடையிலான உணர்வுப்பூர்வமான ஒருமைப்பாடு என்றார்.


விஜயபாரதத்தின் பாரதி விருது பெறும்
ஹரன் பிரசன்னா
விழாவில் சிறப்புரையாற்றிய பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் (தமிழகத்தில் தேசிய சிந்தனைப் பேரவை) தென்பாரத அமைப்பாளர் சு.விஸ்வநாதன் பேசியதாவது:
தமிழகத்தில் பல ஆண்டுகளாக பிரிவினைவாதச் சிந்தனை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், தேச விரோத, ஊழல் மலிந்த, பிரிவினைவாதக் காரிருள் விலகி கிழக்கு வெளுக்கும் வேளை வந்துவிட்டதை இவ்விழா காட்டுகிறது. விஜயபாரதம் பிரசுரத்தின் விழா முயற்சி தாமதமானதாக இருக்கலாம்; ஆனால் மிகவும் புத்திளமையாக இருக்கிறது.
நூற்றாண்டு காணும் தேசிய மறுமலர்ச்சி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை ஊற்றாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால், சாதிக்க முடியாதவை என்று கருதப்பட்டவற்றை எல்லாம் அரசியல் களத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம். எழுத்துலகிலும் மாற்றம் நிகழ்த்தும் திறனுள்ள சாதனையாளர்கள் இங்கே இருக்கிறீர்கள்.
1897இல் “வருகின்ற 50 ஆண்டுகளுக்கு பாரத அன்னையே நம் அனைவரின் தெய்வமாக இருக்க வேண்டும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அதன்படியே நாம் 50 ஆண்டுகளில், 1947-இல் சுதந்திரம் பெற்றோம். அதே லட்சியத்தை இப்போதும் முன்வைக்கிறேன். பாரதம் வையத் தலைமை கொள்ளும் வகையில் செயல்படுவோம். தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக உள்ள தேசிய சிந்தனையைப் பெருக்க வேண்டும். தேசிய சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும். மாநிலத்தைச் சூழ்ந்த காரிருள் மிக விரைவில் அகற்றப்பட வேண்டும் என்றார்.

விழாவில் ஆண்டுவிழா மலரை வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களும், விருதாளர்களும் இணைந்து விழா மலரினை வெளியிட்டனர். விஜயபாரதம் பிரசுரத்தின் உறுப்பினர் வ.மு.முரளி வரவேற்றார். பிரசுர நிர்வாகி கார்த்திகேயன், எழுத்தாளர் பத்மன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர். பிரசுரத்தின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் ஹரிகிருஷ்ணகுமார், தென்பாரத பிரசாரச் செயலாளர் ஸ்ரீராம், தென்பாரத மக்கள் தொடர்புப் பொறுப்பாளர் பிரகாஷ் ஆகியோரும், சங்க துணை இயக்கங்களின் பல நிர்வாகிகளும், இலக்கிய ஆர்வலர்களும் விழாவில் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய ஆண்டுவிழா, தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.
***
விருதாளர்களின் ஏற்புரை: உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்க சுப்பிரமணியன் பேசுகையில், “இவ்விருது கலைமகள் பத்திரிகையின் முன்னோடிகளுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். சகோதர பத்திரிகையான விஜயபாரதத்திற்கு நன்றி” என்றார். சிறந்த எழுத்தாளருக்கான பாரதி விருது பெற்ற ம.வெங்கடேசன், “என்னை எழுதவைத்து எழுத்தாளனாக ஆக்கியவை மாணவர்சக்தி, பசுத்தாய், விஜயபாரதம் போன்ற சங்க இயக்க பத்திரிகைகள்தான். அவர்களின் செல்லப்பிள்ளை நான். எனது உயர்வுக்கு உறுதுணையாக உள்ள எனது குடும்பத்தினருக்கும் நன்றி” என்றார். சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான பாரதி விருது பெற்ற பி.ஆர்.மகாதேவன், “இவ்விழா மாநில அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். அந்த அளவுக்கு விழா போதிய முக்கியத்துவம் பெறவில்லை என்பது சிறு வருத்தம்தான். நமது தொடர்பு எல்லைகளை விரிவாக்க வேண்டும்” என்றார். சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது பெற்ற ஹரன் பிரசன்னா பேசுகையில், “எனது வழிகாட்டியான பத்ரி சேஷாத்ரி அவர்களின் கரங்களால் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்தான் என்னை வளர்த்தவர். இந்த விருதினை, சுவாசம் பதிப்பகத்தின் பங்குதாரர்கள், ஊழியர்கள், எழுத்தாளர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். நாம் அனைவரும் மாதம் ஒரு நூல் வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.
- காண்க: சென்ற ஆண்டு நடைபெற்ற விழா செய்திகள்
- * பட விளக்கம்: (வலமிருந்து) வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் வானவில் க.ரவி, பாரதி விருது பெற்ற பி.ஆர்.மகாதேவன், ஹரன் பிரசன்னா, உவேசா விருது பெற்ற ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரி, பாரதி விருது பெற்ற ம.வெங்கடேசன், பிரக்ஞா பிரவாஹ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் சு.விஸ்வநாதன், விஜயபாரதம் பிரசுரத்தின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்.
$$$