-திருநின்றவூர் ரவிகுமார்
கொடூரமான ரத்தக்கறை படிந்த வரலாற்றுக்கு உரியவரான திப்பு சுல்தான் ஒரு மனிதநேயப் புனிதர் போல இடதுசாரி ஆய்வாளர்களால் கொண்டாடப்படுகிறார். அவர்களின் சதிகளை தனது காத்திரமான ஆய்வுகள் மூலம் பொடிப்பொடி ஆக்கியவர் திரு. விக்ரம் சம்பத். அவரைப் பற்றிய கட்டுரை இது….

அந்த மாணவனின் தாயார் மிகவும் பயந்து போய்விட்டார். தன் மகனிடம் ‘இனி திப்பு சுல்தானைப் பற்றி பொதுவெளியில் பேசவோ, எழுதவோ மாட்டேன்’ என்று சத்தியம் வாங்கினார். இது நடந்தது 2008 ஆம் ஆண்டில்.
அந்த மாணவன் தொலைக்காட்சியில் ‘திப்பு சுல்தானின் வாள்’ என்ற தொடரைப் பார்த்தான். அதில் மைசூர் மன்னர்களைப் பற்றி தவறாக சித்தரித்திருப்பதாகக் கருதினான். அப்போது அவனுக்கு 11 ,12 வயதிருக்கும் . தொடர்ந்து பல நூல்களைத் தேடித் தேடிப் படித்தான். தனது 26 ஆவது வயதில் மைசூர் மன்னர்களின் மகத்தான செயல்பாடுகளைக் குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டான்.
அதை ஒட்டி பத்திரிகைகளில் அவனது நேர்காணல் வந்தது. சில இடங்களில் , அந்த நூல் விற்பனைக்காக, அவனைப் பேச அழைத்தனர். முஸ்லிம்கள் கோபமடைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அவனது கட்டுரையை வெளியிட்ட பெங்களூரு பத்திரிகை அலுவலகம் முன்பு அவனது கொடும்பாவியை எரித்தனர். மிரட்டல் கடிதம் அவனது தந்தைக்கு வந்தது.
அம்மா பயந்து போய் சத்தியம் வாங்கினார். சத்தியம் செய்த அவனும் அதை மீறவில்லை. அதே வேளையில் திப்புவைப் பற்றி அவனது ஆவலுடன் கூடிய குறுகுறுப்பு அதிகரித்தது. பல வரலாற்றாளர்களின் நூல்களை தொடர்ந்து படித்தான். கள ஆய்வுகளை மேற்கொண்டான்.
2014 இல் கர்நாடக காங்கிரஸ் அரசு ‘திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’ என அறிவித்தது. பாஜக அதை எதிர்த்தது. திப்பு அரசியல் உதைப்பந்தானார்.
இந்த நிலையில்தான் அவனது அம்மா 2018 இல் காலமானார் அதுவரை அவனைக் கட்டுப்படுத்திய உறுதிமொழி விலகியது 2004 இல் திப்பு சுல்தான் பற்றிய விரிவான ஆய்வு நூலை அந்த மாணவர் வெளியிட்டார் அவர்தான் கர்நாடகத்தைச் சேர்ந்த வரலாற்றாளர் டாக்டர் விக்ரம் சம்பத்.
வரலாற்றுப் பாடத்திலிருந்த திப்பு சுல்தானை வீதிக்கு இழுத்து வந்த பெருமை காங்கிரஸுக்கே உரியது. 2014 இல் மோடி அரசு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் எதிர்க்கட்சி தகுதியைக் கூட பெற முடியாமல் போனது. உடனே சிறுபான்மைப் பித்து தலைக்கேறிய கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, ‘சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என அறிவித்தார்.
அதற்கு மாநிலமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. மைசூர் பகுதியில் போராட்டம் வெடித்தது. ஊரடங்கை (144 தடை உத்தரவு) அறிவித்து ‘சுதந்திர போராட்ட வீர’ரின் பிறந்த நாளைக் கொண்டாடும் அவல நிலை ஏற்பட்டது. இது தொடர்ந்தது . அடுத்து வந்த பாஜக அரசு அதை ரத்து செய்தது .
இம்முறை காங்கிரஸ் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். திப்பு சுல்தான் வக்ஃபு வாரியத்தின் தலைவராக இருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தன்வீர் சேத் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இரண்டாம் முறை பதவிக்கு வந்த சித்தராமையா இதுவரை திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வில்லை.
திப்பு சுல்தான் யார்? போலி மதசார்பின்மை பேசும் காங்கிரஸ் அவரை உயர்த்திப் பிடிப்பது ஏன்? மாநில முழுக்கவும் எதிர்ப்பு குறிப்பாக மாண்டியா, மைசூர் , கூர்க் பகுதியில் போராட்டமென எழுந்தது ஏன் ?
கேள்விக்கென்ன பதில்?
விக்ரம் சம்பத்தின் நூலின் தலைப்பே ஆவலைத் தூண்டுவதாக உள்ளது. திப்பு சுல்தான் இரண்டு காலகட்டத்திற்கும் / ஆட்சிகளுக்கும் இடையேயான திகில் (Tipu Sultan : The Saga of Mysore Interregnum 1760-1799) என்ற தலைப்பே விஷயத்தை பூடகமாக சொல்லி விடுகிறது.
பிரிட்டீஷாரை எதிர்த்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரரென திப்பு சுல்தானை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறது. இது ஏற்புடையது தானா என்ற கேள்விக்கு, இல்லை என்று உறுதிப்படக் கூறுகிறார் விக்ரம் சம்பத். திப்பு தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக போரிட்டாரேயன்றி தேச விடுதலைக்காக போரிடவில்லை. அப்படியானால் வீரபாண்டிய கட்டபொம்முவும் மருது சகோதரர்களும் அப்படித்தானே என்ற கேள்வி எழலாம். இல்லை என்கிறார் சம்பத்.
திப்பு சுல்தான் பிரிட்டிஷாரை எதிர்க்க பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். பிரெஞ்சு மன்னர் 16 வது லூயிஸூக்கு பரிசுப் பொருட்களை கொடுத்தனுப்பி அவருடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷாரைப் போன்றே ஆதிக்கவாதிகள் தான். போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்ததால் பிரிட்டீஷ் ஆட்சி ஏற்பட்டது. இல்லை என்றால் பிரெஞ்சு ஆதிக்கம் ஏற்பட்டிருக்கும். எனவே கட்டபொம்மு, மருது சகோதரர்களைப் போல திப்பு சுல்தான் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இல்லை என்கிறார் சம்பத்.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான மூன்று பெரும் போர்களில் தீரமுடன் போரிட்டு, இரண்டு முறை வெற்றியும் பெற்றிருக்கிறாரே திப்பு என்று சிலர் வாதிடுகின்றனர். அது பற்றியும் சம்பத் கூறியுள்ளார்.
திப்பு தீரமுடன் போரிட்டார் . அவர் வீரர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மைசூர் மன்னருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே மூன்று பெரும் போர்கள் நிகழ்ந்துள்ளன. அதில் முதலிரண்டு போர்களில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப் பட்டார்கள். அந்தப் போர்கள் திப்புவின் தந்தை ஹைதர் அலி தலைமையில் நடந்தவை. தந்தையின் தலைமையின் கீழ் தனயன் போரிட்டார்.
ஆனால் தந்தைக்குப் பிறகு திப்பு சுல்தானான பிறகு அவர் தலைமையில் நடந்த போர்களில் அவர் தோல்வியையே தழுவினார். ஒருமுறை தன் மகன்களை பிரிட்டீஷாரிடம் பிணைக் கைதிகளாக ஒப்படைத்தார். இறுதிப்போரில் கொல்லப்பட்டார். பிரிட்டீஷாருக்கு மைசூரை வெற்றி பெற முப்பதாண்டு காலமானது என்பது கவனிக்கத்தக்கது.
தந்தையைப் போல திப்புவுக்கு ஆட்சி நிர்வாகத் திறனும் இல்லை. போரை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெறும் திறனும் இல்லை. ஹைதர் அலி படிப்பறிவு அற்றவராக இருந்த போதிலும் சாதாரண நிலையில் தொடங்கி தன் வீரத்தாலும் சாமர்த்தியத்தாலும் மேலெழுந்து வந்தவர்; தன்னை நிறுவிக் கொண்டவர்; ஓரளவுக்கு சகிப்புத்தன்மை கொண்டவராக நிர்வாகம் செய்தார்.
இதற்கு மாறாக திப்புவுக்கு அதிகாரம் தங்கத் தட்டில் வைத்துத் தரப்பட்டது. தந்தையின் நிர்வாக முடிவுகள் பலவற்றை அவர் பின்பற்றாமல் மதக் கண்ணோட்டத்தில் அவற்றை மாற்றி அமைத்தார். அதனால் பல சீர்குலைவுகள் ஏற்பட்டன.
எடுத்துக்காட்டாக, மைசூர் பகுதியில் ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுக்களையும் காளைகளையும் கொல்ல ஹைதர் அலி தடை விதித்திருந்தார். ஆனால் திப்பு அதை மதிக்காமல் அவற்றைத் தானே கொன்றார்; சிறைப்பட்ட ஆங்கிலேயர்களை மதம் மாற்ற முனைந்துள்ளார். மராட்டியர்களுக்கு எதிரான போரின்போது (1771) தான் கூறியதைப் பின்பற்றவில்லை என திப்புவின் மீது ஹைதர் அலிக்கு கடும் கோபம் எழுந்துள்ளது. இதுபோல தந்தைக்கும் மகனுக்கும் பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. பலர் முன்னிலையில் திப்புவை பிரம்பால் அடித்து, தனிமை சிறைப்படுத்தி இருக்கிறார் ஹைதர் அலி.
அதற்கு முன்பு (1770 இல்) “தந்தையின் அனுமதி இல்லாமல் எதையும் செய்வதில்லை. திருடினாலோ மோசடி செய்தாலோ தன் கழுத்தை நெறிக்கலாம். பிறரிடம் இருந்து தந்தைக்குத் தெரியாமல் அன்பளிப்பைப் பெற்றாலோ அல்லது கட்டாயப்படுத்தி பிடுங்கிக் கொண்டாலோ தன் மூக்கை அரிந்து விடலாம்” என்றெல்லாம் தந்தையான சுல்தான் ஹைதர் அலிக்கு தன் கைப்பட எழுதி, கையொப்பமிட்டு கொடுத்துள்ளார் திப்பு.
தனக்குப் பின் வாரிசாக ஆட்சியேற தகுதியற்றவன் தன் மகன் திப்பு என்றும், தான் கஷ்டப்பட்டு ஏற்படுத்திய ராஜ்ஜியத்தை தனக்குப் பின் திப்புவால் காப்பாற்ற முடியாமல் போய்விடும் என ஹைதர் அலி புலம்பியுள்ளார். திப்புவைப் பற்றி அவருக்கு தாழ்வான கருத்தே இருந்துள்ளது.
அதற்கேற்பவே திப்புவும் கர்வம் பிடித்தவராக, தனக்கு எல்லாம் தெரியும் என்ற மிதப்புக் கொண்டவராக, உறுதியான முன் முடிவுகளைக் கொண்டவராக இருந்தாரென சான்றுகளுடன் கூறுகிறார் சம்பத்.
மதவெறி: காங்கிரஸ் × பாஜக
மதசார்பின்மை பேசும் காங்கிரஸ் திப்பு சுல்தானை முன்வைப்பதால் தான் பாஜக அவரை எதிர்க்கிறது; மதவெறியனாகச் சித்தரிக்கிறது என்று சொல்கிறார்கள். விக்ரம் சம்பத் அதை மறுக்கிறார்.
திப்பு சுல்தான் தன் தந்தையைப் போலல்லாமல் படிப்பறிவுள்ளவர். இது அவர் எழுதியுள்ள கடிதங்களிலும் தனிப்பட்ட நினைவுக் குறிப்பேடுகளிலும் காணக் கிடைக்கிறது. திப்பு போரின்போது தனக்கு ஆதரவு தர வேண்டுமென்றும் , படை திரட்டி வந்து இங்கு இஸ்லாமிய கிலாபத் ஆட்சியை நிறுவ முன்வர வேண்டுமென்றும், ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர் ஷமான் ஷாவுக்கும், பாரசீகத்தை ஆண்ட மன்னர் ஷாவுக்கும் இரானிய மன்னர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தெளிவாக வெளிப்படுகிறது. அது மட்டுமின்றி முஸ்லிம் மதத் தலைவர்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் தன் தந்தையின் நிர்வாகத்தில் இருந்த ஹிந்து அதிகாரிகளை நீக்கிவிட்டு, திறமையற்றவர்களாக இருந்த போதிலும் முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக பதவியில் நியமித்தார். தன் தோல்விகளுக்குக் காரணம் ஆட்சியில் இருந்த ஹிந்துக்கள் தான் என்று பழி கூறினார்.
மங்களூர் மற்றும் கனரா பகுதியில் இருந்த கிறிஸ்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்தார்; சர்ச்சுகளை இடித்துள்ளார்.
மைசூர் பகுதியில் இருந்த ஹிந்துக்கள் மீது சொல்லொணாக் கொடுமைகளை இழைத்துள்ளார். அதன் நினைவாக மாண்டியா பகுதியில் இன்றும் பிராமணர்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. கேரளத்தில் திருச்சூர் பகுதியில் உள்ள கோயில்களை சேதப்படுத்தினார். அங்குள்ள புகழ்பெற்ற வடக்குநாதன் சிவாலயத்தை தனது தங்குமிடமாகக் கொண்டு அந்த கோயிலை அசிங்கப்படுத்தினார்.
குருவாயூர் கோயிலை அழிக்க திப்புவின் படை வருவதை முன்னதாகத் தெரிந்து கொண்ட ஹிந்துக்கள் குருவாயூரப்பனை தூக்கிக்கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அம்பலப்புழாவிற்குக் கொண்டு சென்று மறைத்து வைத்தார்கள்.
வீரர் கூட்டமாக இருந்த நாயர் சமுதாயத்தையே வேரறுக்க திப்பு முனைந்தார். போரிடக்கூடிய இளம் நாயர் தலையை வெட்டி கொண்டு வந்தால் முந்நூறு ரூபாய் (அந்தக் காலத்திலேயே), வயதானவராக இருந்தால் இருநூறு, பெண்கள் குழந்தைகள் தலைக்கு நூறு ரூபாய் பரிசனெ அறிவித்து, வெட்டிச் சாய்த்தார். பிடிபட்ட நாயர் பெண்களை பல பகுதியில் உள்ள மன்னர்களுக்கும் தலைவர்களுக்கும் பரிசாக அனுப்பி ஆதரவை தேடிக் கொண்டார். சரணடைந்த நாயர்களை விருத்த சேதம் செய்து முஸ்லிமாக மாற்றி தன் படையில் சேர்த்துக் கொண்டார்.
ஹைதர் அலி கொடூரமானவராக இருந்த போதிலும் தன் மதத்தைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ராஜ்ஜியத்தில் தீவிர இஸ்லாமியராக இருப்பது அரசியல் ரீதியாக சரியல்ல என்று கருதினார். தான் வென்ற பகுதியில் உள்ள ஹிந்து தலைவர்களைக் கொல்லாமல் தன் தலைமையை ஏற்றுக்கொண்டு, கப்பம் வசூலித்துக் கொண்டு, ஆட்சி செய்ய அனுமதித்தார்.
திப்பு சுல்தான் அதற்கு நேர்மாறாக மைசூரை இஸ்லாமிய மயமாக்கினார். தனது ஆட்சியை சர்க்கார் – இ – குதாதாத் (அல்லா தந்த அரசு) என்று அறிவித்தார். அரசு மொழியாக இருந்த கன்னடத்தையும் மராட்டியையும் நீக்கி விட்டு, பாரசீக மொழியை ஆட்சி மொழியாக்கினார்.
ஊர்களுக்கும் நகரங்களுக்கும் முன்பு இருந்த பெயரை மாற்றி இஸ்லாமியப் பெயர்களைச் சூட்டினார். தன் அந்தபுரத்தில் காம சுகத்திற்காக அடைத்து வைத்திருந்த ஹிந்துப் பெண்களை தாழ்வாகவும், முஸ்லிமாக மதம் மாறிய பெண்களை ஹிந்து பெண்களை விட சற்று உயர்வாகவும் நடத்தினார். தீபாவளி தினத்தில் ஹிந்துக்களைக் கொல்வதையும், சாம்பல் திருநாளின் போது கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் அவர் திட்டமிட்டே நடத்தினார். எல்லா வகையிலும் அவர் கொடூர மதவெறி கொண்டவராகவே இருந்தார்.
இதையெல்லாம் பிரிட்டீஷார் பதிவு செய்துள்ளனர். ஆங்கிலேயர்களின் ஆவணத்தை நம்ப மாட்டோம் என்பவர்களுக்கு, பாரசீக மொழியில் உள்ள ஆவணங்களைக் காட்டுகிறார் விக்ரம் சம்பத். அதையும் சந்தேகிப்பவர்கள் திப்பு கைப்பட எழுதியுள்ள நாட்குறிப்பேட்டையும் கடிதங்களையும் பார்க்க வேண்டும் என்கிறார் வரலாற்றாளர் விக்ரம் சம்பத்.
ரங்கநாதர் கோயில் விவகாரம்
அதேபோல ஸ்ரீரங்கப் பட்டினம் ரங்கநாதர் விஷயம். தொடர்ந்து போர், நிலையற்ற அரசியல் சூழ்நிலை, குழப்பங்கள், சதிகள் என வாழ்ந்த நிலையில் திப்பு சுல்தானுக்கு பல மூட நம்பிக்கைகள் ஏற்பட்டன. இது இயல்பு தான். அவ்வாறான மூடநம்பிக்கைகள் ஜோதிடர்கள் பிடியில் திப்புவை ஆழ்த்தியது. ஜோதிடர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டார். நின்ற நிலையிலும் படுத்த நிலையிலும் உள்ள சுவாமி சிலைகளை உடைப்பது தோல்வியையும் பாவத்தையும் கொண்டுவரும் என்று அவர்கள் சொல்லி உள்ளார்கள். எனவே அவர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற பெரிய ரங்கநாதர் ஆலயத்தைத் தாக்கி தகர்க்கவில்லை.
இதைத் தெரிந்து கொண்ட பிராமணர்கள் பல கோயில்களில் சம்பந்தமே இல்லாமல் சுவாமி பெயருடன் ‘ரங்கா’ என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டு தங்கள் கோயில்களையும் சுவாமிகளையும் காத்துக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக கல்யாண ரங்கா, மகாடி ரங்கா, குண்டாட ரங்கா என்று தெற்கு கர்நாடகப் பகுதியில் உள்ள கோயில்களைக் காட்டலாம். பல கோயில்கள் ரங்கநாதன் கோயில்களே அல்ல. கோயில்களில் வேகவேகமாக ரங்கநாதர் சன்னிதியை நிறுவி விட்டார்கள். உண்மைப் பெயருடன் ரங்காவைச் சேர்த்துக் கொண்டார்கள். இதற்கு முன்பு இல்லாதபடி இப்படி புதுமையான முறையைக் கையாண்டு ஹிந்துக்கள் தங்கள் கோயில்களையும் சாமி விக்கிரகங்களையும் காப்பாற்றிக் கொண்டார்கள்.
அது மட்டுமல்ல, பல கோயில்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், மானியங்கள் ஹைதர் அலி கால ஆட்சியின் போது வழங்கப்பட்டவை. திப்புவின் ஆட்சியில் அவை தொடர்ந்தன. திப்பு சுல்தான் ஆன பிறகு மத நல்லிணக்கத்திற்காக, சமரசத்திற்காகக் கொடுத்தது என்று ஏதுமில்லை.
முன்னோடிகள் மூடர்களா?
இதெல்லாம் உண்மை என்றால், இதற்கு முன்னிருந்த வரலாற்றாளர்கள் கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள் மீது திப்பு சுல்தான் நடத்திய அட்டூழியங்களை அரசியல் காரணத்திற்காக மூடி மறைத்தார்களா? என்ற கேள்வியை சம்பத்திடம் கேட்டார் ஒரு செய்தியாளர்.
“ஆமாம் . அரசியல் காரணத்திற்காக மறைத்தார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு தேச நிர்மாணப் பணியில் வரலாறு ஒரு கருவியாகக் கருதப்பட்டது. சில கொடூரமான உண்மைகளைச் சொல்லாமல் இருப்பது நல்லது என்று கருதினார்கள். மனித இன வரலாற்றிலேயே மிகவும் ரத்தக் கறை படிந்த பகுதி இந்தியாவின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு / ஆதிக்கம் நிகழ்ந்த காலம்தான் என்று உலகப் புகழ்பெற்ற வரலாற்றாளரான வில் டூரண்ட் எழுதியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின் ஆட்சியாளர்கள் இந்தக் கொடூரங்களைச் சொல்வது சமூக ஒற்றுமைக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் என்று தவறாகக் கருதினர் . அப்படி நினைத்ததன் மூலம் இன்றுள்ள முஸ்லிம்களை கஜினி, கோரி, தைமூர், ஔரங்கசீப், திப்பு போன்ற கொடூரமான இன்னும் பலருடன் இணைத்து விட்டனர் . எனவே முஸ்லிம் சமூகத்தை வெள்ளை அடித்து தூயதாகக் காட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இன்றுள்ள முஸ்லிம்களை அன்றிருந்த காட்டுமிராண்டிகளின் செயல்களுக்குப் பொறுப்பாக்க முடியாது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். கடந்த கால நிகழ்வுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மாற்றிவிட முடியாது. அன்று திப்பு செய்த குற்றங்களை இன்றுள்ள மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் எடை போடக் கூடாது. அவர் வாழ்ந்த காலத்தில் அப்படியான சூழல் நிலவியது.
என்னுடைய நூல்கள் எதிலும் இன்றைய கண்ணோட்டங்களையும் வரையறைகளையும் கொண்டு வரலாற்று ஆளுமைகளை எடை போட்டதில்லை. வன்முறை என்பது ஆட்சியுடனும் அதிகாரத்துடனும் இணைந்தே இருக்கின்ற விஷயம். சிலர், அவர்கள் காலத்தில் இருந்தவர்களை விடவும் கொடூரமானவர்களாக இருந்துள்ளார்கள். மதச் சிந்தனையுடன் குறிப்பிட்ட சமூகத்தைக் குறி வைத்து வன்முறையை நிகழ்த்தியுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
அவற்றைப் பேசுவதால் இப்பொழுதுள்ள சமுதாயத்தில் கொத்தளிப்பு ஏற்படும் என்பது இப்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை அந்தக் காலத்துடன் பிணைப்பதாகும். இது முற்றிலும் நியாயமற்றது. இன்று உள்ளவர்கள் அன்றைய கொடுமைகளுக்கு எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள்” என்று சம்பத் பதிலளித்துள்ளார்.
விக்ரம் சம்பத் எந்தப் பக்கம்: வலதா, இடதா?
வலதுசாரி பாஜக ஆட்சியில் ஹிந்துத்துவ உள்நோக்கோடு திப்பு சுல்தானைப் பற்றி விக்ரம் சம்பத் எழுதியுள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
விக்ரம் சம்பத் இதுவரை 10 புத்தகங்களை எழுதி உள்ளார். 17 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் களமாடி வருகிறார். அவர் மீது எண்ணற்ற தாக்குதல்கள் நடந்துள்ளன; பல அவதூறுகள் சுமத்தப்பட்டன. வாழ்த்துக்களையும் வசைகளையும் தாங்கிக் கொண்டே தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
தான் எந்த அரசியல் கட்சியையோ குழுவையோ சார்ந்தவர் இல்லை என்று கூறும் சம்பத் தன்னை ‘உண்மையின் பக்கம் நிற்பவன். பாரதத்தின் பக்கம் நிற்பவன்’ என்று வேண்டுமானால் அடையாளப் படுத்தலாம் என்கிறார் .இந்திய வரலாறு மற்றும் கலாச்சார ஆய்வு அமைப்பை நிறுவி, அதன்மூலம் உள்நோக்கம் இல்லாமல் உண்மையையும் சான்றுகளையும் கொண்டு ஆரோக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ள பலரை தயார்படுத்தி வருகிறார்.
‘வலதுசாரி ‘ வரலாற்றாளர்கள் என்று சொல்லிக்கொண்டு மாற்று வரலாற்றை யாராவது எழுதினால் அதில் என்ன தவறு ? பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் (உயர்நிலை அதிகாரக் குழு) இருப்பவர்கள் மார்க்ஸிய வரலாற்றாளர்கள் என்று தங்களை கூறிக் கொண்டு வரலாற்றை அவர்கள் விருப்பம் போல் எழுதியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தங்கள் பக்கச் சாய்வுகளை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள் வரலாற்றை எழுதும்போது, இப்போது வேறொரு புதிய குழுவினர் வந்து இதுவரை இருந்ததற்கு மாறான வரலாற்றை அறிவார்ந்த நிலையில் நிறுவினால் அதில் தவறென்ன? வரலாற்றின் வாயில் காப்போராக இதுவரை இருந்தவர்கள் பதறுவது ஏன்? என்று சம்பத் வினவுகிறார். இது நியாயமான கேள்விதான்.
- தகவல் உதவி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 15-12-2024 / மனி கன்ட்ரோல், 27-11-2024
$$$