வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்

-சுப்பு

மூத்த பத்திரிகையாளர் திரு. ‘திராவிட மாயை’ சுப்பு, அல்பத்தனமாக மோதிக்கொண்டு சிறுமைப்படும் ஹிந்து சகோதரர்களுக்கு அறிவுரை கூறுகிறார் இந்தச் சிறு பதிவில்… அவரது முகநூல் பதிவு இது…

தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தீராத பகை உண்டு;  பார்த்தாலே பற்றிக் கொள்ளும் என்கிற ஒரு மாயை இங்கே நூற்றாண்டுகளாக பரப்புரை செய்யப்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறது.  தமிழ் உயரம் என்று சொல்லும் போதே, சமஸ்கிருதம் குட்டை என்று சொல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி 

பெரும்பாலான மக்கள், ‌இது திட்டமிட்ட பரப்புரை என்பதை அறியாமல் இருக்கிறார்கள். சிலர் மாயையைப் பரப்பும் அல்பத் தொழிலைச்  செய்கிறார்கள்.  சதியை உணர்ந்த மூன்றாவது பிரிவு வலுவில்லாமல் இருக்கிறது. 

நானும் பல வடமொழி வல்லுநர்களை சந்தித்துப் பேசி இருக்கிறேன். ஆயிரக்கணக்கான படைப்புகளைக் கொண்ட அந்த மொழியில் எங்காவது தமிழ் மொழியைக் குறை சொல்லும் வாக்கியம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறேன்.  இல்லை என்றார்கள்; சிலர் தேடிப் பார்க்கணும் என்றார்கள். யாரும் எந்த எடுத்துக்காட்டையும் தரவில்லை.

இதே மாதிரி தமிழறிஞர்களை அணுகி தமிழுக்கும் வடமொழிக்கும் மோதல் உண்டா, இது பற்றிய இலக்கியக் குறிப்புகள் உண்டா என்று கேட்டேன்.

இந்த முறை ஒன்றிரண்டு குறிப்புகளைக் கொடுத்தார்கள். அதைப் பார்த்தவுடன் நான் தெளிவு பெற்றேன். பழங்காலம் தொட்டு தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையே மிஞ்சிப்போனால் போட்டி இருந்திருக்கலாம்; ஆனால் பொறாமையோ வன்மமோ இல்லை என்பது தெளிவானது. 

இந்த விஷயத்தை இன்னும் ஆய்வு செய்தால்  விஷயம் புரிந்தது.   இரண்டு மொழிகளுக்குள் மோதல் உண்டு என்கிற கருத்தும், சமஸ்கிருத ஆதிக்கம் தமிழை அழித்துவிடும் என்ற அச்சமும் – எல்லாமே தயாரிக்கப்பட்டவை தான்.   இந்த மாயை காலாவதியாகும் நாள் எப்போது என்று தெரியவில்லை. ஆனால் உற்பத்தியான நாள் எது, உற்பத்தி செய்தவர் யார் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. ஆள்  கால்டுவெல் என்ற பாதிரியார்.  காலம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.   இதற்குப் பிறகும் இந்த தமிழ்-  சமஸ்கிருதம் மோதல் குறித்து பேசுபவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இன்னொரு சிறப்பான செய்தி. ஒரு பக்கம் சமஸ்கிருதத்திற்கு  எதிராகப் பகை வளர்த்துக் கொண்டிருக்கும் பாதிரிகள், அவர்களுக்குப் பரிவட்டம் கட்டும்‌‌ திராவிடர்கள் என்று அணிவகுப்பு.

இன்னொரு பக்கம், பாதிரிமார்களுக்கு சமஸ்கிருதப் பயிற்சி தரப்படுகிறது.  அதாவது எந்தக் கட்சி ஜெயித்தாலும் அதில் நமக்கு பங்கீடு வேண்டும் என்கிற ரீதியில் செயல்படுகிறார்கள். 

இலங்கைப் பிரச்னையிலும் இதைத்தான் செய்தார்கள்.   ஒரு பக்கம் சிங்கள அரசுக்கு ஆதரவு; இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளுக்கு உதவி என்று செயல்பட்டார்கள். 

இந்த சதியைப் புரிந்து கொண்டவர்களுக்கு நான் சொல்லும் செய்தி, எதிரி யார் என்கிற தெளிவு முக்கியம்.‌ எப்படித் தாக்குவது என்பது யதா சௌகர்யம்.

கோடிக் கணக்கான மக்களைக் கொண்ட ஹிந்து சமுதாயத்தில் எல்லோரும் ஒரே கருத்தை, ஒரே பார்வையைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. ஒரு குறிப்பிட்ட விவகாரத்தை மூன்று அல்லது நான்கு வெவ்வேறு வகையாகப் பார்க்கலாம்; தப்பில்லை.  தனக்குப் பிடித்த வழிமுறையைச் சார்ந்து இருக்கலாம். செய்யக் கூடாதது எது என்றால் அடுத்தவர் வழியைத் தூஷிப்பது.

சிவராத்திரி அன்று லட்சக்கணக்கான அன்பர்கள் கோவை ஈஷா மையத்தில் கூடுகிறார்கள்; ஆடுகிறார்கள். யாருக்கு அதில் நாட்டம் இருக்கிறதோ அவர்கள் கோவைக்குப் போகலாம். அது சரிவராது, ஒடுக்கம்    தான் உற்ற துணை என்று அறிந்தவர்கள் திருவண்ணாமலைக்குப் போகலாம்.  அக்கினி மலையில் அமைதி பழகலாம்.

‘அவரவர் தமதமது அறிவறி…’ என்கிறார் நம்மாழ்வார்.

$$$

Leave a comment