-கருவாபுரிச் சிறுவன்
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டை ஒட்டிய, இரண்டாவது பதிவு இது..

காந்தி ஆசிரமத்தில் செயலாளராகப் பணியாற்றியவர் திரு. டி.கெளரி. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் நூற்றாண்டு விழா மலரில் மகத்தான ஆசிரமப் பணிகளை எழுத்தினால் வண்ணமயமாக நினைவு கூர்கிறார்கள். அவற்றை அப்படியே காந்தி ஆசிரம நூற்றாண்டில் நினைவு கூர்வதில் இவ்வாசிரமத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் பெருமை அடைகிறார்கள். அவர்களோடு நாமும் ராஜாஜி அவர்களின் ஒப்பற்ற பணியை வாசிப்போம். பூஜிப்போம்; கடைப்பிடிப்போம். வளம்பெறுவோம்.

தொரப்பள்ளி சக்கரவர்த்தி ஐயங்காருடைய குமாரராக அவதரித்த ராஜாஜி, சேலம் நகர வாழ்க்கையில் இருந்து திருச்செங்கோடு தாலுகா, புதுப்பாளையம் கிராம வாழ்க்கை யை ஏற்றுக் கொண்டார். மகாத்மா காந்திஜியின் விடுதலை இயக்கப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதே சமயம் நிர்மாணப் பணிகளும் அவசியம் என்று உணர்ந்தார். இதன் காரணமாக புதுபாளையம் மிட்டா ரத்ன சபாபதி கவுண்டர் அன்புடன் அளித்த பூமியில் 1925-இல் காந்தி ஆசிரமத்தை தோற்றுவித்தார். அந்த ஆசிரமத்தில் மனைவியை இழந்த ராஜாஜி, தனது ஐந்து குழந்தைகளுடன் வாழ்க்கையைத் தொடங்கினார்.
தொழுநோய் ஒழிப்பு
அன்றைய காலகட்டத்தில் கிராமத்தைச் சுற்றி தொழுநோயாளர்கள் இருப்பதை உணர்ந்த அவர், அவர்களுக்கும் பணி செய்ய விரும்பி உடனே ஒரு ஆஸ்பத்திரியைத் துவக்கினார். இந்த ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டியவர் வங்கத்தின் தலைவர் சி.பி.ராய் வந்திருந்தார். தனது இனம், பட்டம், கட்சி என்ற நிலைகளுக்கு அப்பால் தனது பணிகளை மேற்கொண்டார். என்பதே அவரிடம் நாம் காணும் புதுமை.
தீண்டாமை ஒழிப்பு
தொழுநோய் நிவாரணப் பணிக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்களின் அவதிகளைப் பார்த்தார். ஆகவே அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்கள் பகுதிக்குத் சென்று ஹரிஜனக் குழந்தைகளை காந்தி ஆசிரமத்திற்கு வரும்படி அழைத்தார். அப்படி அழைத்து வந்தவர்களில் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருபவர்கள் அங்கமுத்து, முனுசாமி. சுவாமிநாதன் போன்றோர் ஆவர். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்த பகுதியில் உயர்ஜாதி இனத்தவர்கள் வந்தால் தங்களுக்கு ஏதாவது தெய்வக் கெடுதல்கள் வரும் என்ற நம்பிக்கை கொண்ட மக்கள், ராஜாஜி அப்பகுதியினுள் வரவிடாமல் தடுக்க பல முன்னேற்றபாடுகளைச் செய்தனர்.
இந்த எண்ணம் எவ்வளவு அறியாமை என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களைத் தம்மோடு சேர்த்துக்கொண்டார்.
அத்துடன் நின்றுவிடாமல் அவர்களுக்காக திருச்செங்கோட்டில் விடுதி ஒன்றையும் ஏற்படுத்தினர். அதில் அவர்களுக்குப் போதிய வசதிகள் செய்து கொடுத்து உயர்கல்வி கற்க ஏற்பாடும் செய்தார். இப்பணி தம் நாடு விடுதலை பெறும் வரை நடைபெற்றது. விடுதலைக்குப் பிறகு இப்பணிகளை சுதந்திர அரசே மேற்கொண்டது.
பொருளாதார அபிவிருத்தி
கிராம மக்களுக்கு வெறும் சேவை மட்டும் போதாது என்றுணர்த்த ராஜாஜி பொருளாதாரத்திலும் உயர்வடையச் செய்ய விரும்பினார். இதன் காரணமாக மகாத்மா கூறிய கதர் திட்டத்தை ஏற்று கிராமப்பகுதியிலுள்ள மக்களிடம் கைராட்டைகளை அறிமுகம் செய்து, கதராடைகள் உற்பத்தி செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தினர். இத்தொழில் விவசாயத்தை மட்டும் நம்பி இருந்த மக்களுக்கு பேருதவியாக அமைந்தது, அவர்கள் வீட்டு வேலைகள் போக மிகுதி நேரங்களில் நூல் நூற்பை மேற்கொண்டனர். அதன் மூலம் ஓரளவு வருவாயும் அடைந்தார்கள். ஆனால் இந்த வருவாய் ஆசிரமத்தில் பெற்று வீடு திரும்பு வதற்குள் அவர்களிடமிருந்து அபகரிக்கப் பட்டுக் கள்ளுக்கடை, சாராயக்கடை முதலியவற்றுக்குச் செல்வதைக் கண்டார். மனம் வேதனை அடைந்து மது ஒழிப்பு வேலையில் ஈடுபட்டார். இதற்காகத் தினமும் தன்னுடைய சகாக்களுடன் இரவு நேரங்களில் கிராமங்களுக்குச் சென்று மது குடிப்பதினால் ஏற்படும் தீமைகளை விளக்கினார். இதில் ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள் ஏற்பட்டு பின்பு சாதகமான சூழ்நிலைகளும் அவருக்கு கிடைத்தன்.
சமுதாயப் பணி
இதுபோலவே தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் பல சோதனைகள் ஏற்பட்டதுண்டு. அவற்றை எல்லாம் அமைதியாக அவர் சமாளித்து வந்தார். இவ்விதம் தனது, வருமானம் மிகுந்த வாழ்க்கையிலிருந்து மாறி எந்தச் சூழ்நிலையில் தன் பணியை இந்த மனித குலத்திற்காக செய்திருக்கிறார் என்பதை நாம் நன்றாக உணர வேண்டும். இன்றைய சமுதாய சூழ்நிலையிலும் கொடுமைகள் இருந்து கொண்டிருக்கின்றன. இதைப் பற்றிச் சொன்னால் மேலும் வளர்ந்து இருப்பதாகவே கூற முடியும். ஆகவே இப் பணிகளை ராஜாஜிக்குப் பின்னால் யார் செய்வது! என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் உணர்வது நலமாக இருக்கும்.
பிறர் நலம் பேணுதல்:
1942-இல் ராஜாஜி காங்கிரஸ் மகாசபையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியே வந்து விட்டார். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அந்த மாபெரும் இயக்கத்தில் எத்தனையோ கோடி மக்கள் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தார்கள். இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குலசேகரபட்டினம் என்ற ஊரில் நடைபெற்ற கலவரத்தில் ஐரிஷ்துரையான லோன் என்பவர் மரணம் அடைந்தார். அவர்களுடைய மரணத்திற்குக் காரணமானவர்கள் என்று கருதி மிகவும் இளைஞர்களான காசிராஜன், ராஜகோபால் என்ற இருவருக்கும் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் துாக்குத்தண்டனை விதித்தது. இவர்களுடைய உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் போது அவர்களைக் காக்க ராஜாஜி முன்வந்தார்
மனிதாபிமானம்
இக்கட்டத்தில் ராஜாஜி மனித இனத்தின் உயிர் என்பதைக் தவிர வேறு எந்த நோக்கத்திலும் பார்க்காமல், குறிப்பாக 1942 இயக்கத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையே என்று எண்ணாமல், அவர்களுடைய உயிரைக் காப்பது தனது பணி எனக் கருதி அதற்காக மக்களுடைய செல்வாக்கைப் பெற்று இறுதியில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற பிரிட்டிஷ் அரசு மூலமாகவே ஏற்பாடு செய்தார். இன்றைய அரசியல் சூழ்நிலையில் இதை நினைத்துப் பார்த்தால் தனது காட்சி சார்ந்தவர்களைத் தவிர மற்றவர்களை ஏறிட்டுப் பார்க்காமலும், தாங்களே வாழ வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்கும் சூழ்நிலையில் இருந்து எவ்வளவு மாறுபட்டது என்பதை நாம் காண முடியும்.
இது போல சமீபத்தில் 1971 ஆம் ஆண்டு அப்போதிருந்த தமிழக அரசு மதுவிலக்கை ரத்து செய்ய முன்வந்தபோது, ‘இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று கூறி சேலத்தில் பள்ளிப்பாளையம் திரு. என். ஈ. மணி அய்யர் அவர்களுக்கும் விருதுநகரில் திரு. ஆர். டி. பி. சுப்பிரமணிய நாடார் அவர்களும் சாகும் வரை உண்ணா விரதத்தை ஆரம்பித்தார்கள். அவர்கள் இருவரும் யார் சொல்லியும் உண்ணா விரத்தைக் கைவிட மறுத்தார்கள். இதை அறிந்த ராஜாஜி அவ்விருவருக்கும் கடிதம் மூலம் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினார்.
”உங்கள் இருவரின் உயிர்களுக்கும் இறைவனுடைய சொத்தாகும். இதை அழிப்பதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது. ஆகவே அரசு செய்யும் காரியம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர அதற்காக உயிரை விடுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்து விட்டார். இதை இந்த இரு பெரியவர்களும் ஏற்றுக் கொண்டனர். இங்கு நாம் ராஜாஜி அவர்களை நன்றாக உணர வேண்டும். பிறருடைய உயிரைக் காப்பாற்றுவதில் அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறை இது. எந்தக் குறுகிய எண்ணத்திற்கும் இடம் அளிக்காமல் அவருடைய பணி தொடர்ந்தது.
அணுஎதிர்ப்பு
அணு குண்டு வெடிப்பதனால் உலக மக்கள் எவ்விதம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த ராஜாஜி அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியை சந்தித்து விட்டு வந்த செய்தி யாவரும் அறிந்ததே. அதற்குப் பின்பு பிரெஞ்சு தேசம் இந்து மகா கடலில் அணு சோதனை செய்ய விரும்பிய பொழுது அதை எதிர்க்க பெர்னாண்டு ரஸ்ஸல் போன்ற விஞ்ஞானிகள் முன் வந்தார்கள். தனியாக ஒரு கப்பலில் சென்று அணு சோதனைக்கு முன்பு தங்களை அழித்துவிட்டு அவர்கள் அணு சோதனைகளை விரும்பினால் செய்யட்டும் என்ற ஒரு சத்தியாகிர இயக்கத்தை ஆரம்பித்தார்கள். இந்த இயக்கத்திற்குப் பேராதரவு கொடுத்த ராஜாஜி, கப்பலில் செல்லும் முதல் மனிதனாக என்னை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இதை விட மனித குலத்திற்குத் தியாகம் செய்ய வேறு என்ன வேண்டும் தன்னுயிரையே மக்களுக்காக கொடுக்க முன் வந்த மகா புருஷர் ராஜாஜி.
வேதாரண்ய வீரர்
ராஜாஜி இத்தனை வேலைகளைச் செய்து கொண்டு விடுதலை இயக்கத்திலும் தன் பங்கை ஆற்றி வந்தார், இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. 1930-இல் நடை பெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம். திருச்சி டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் இல்லத்தில் இருந்து 100 தொண்டர்களை அழைத்துக்கொண்டு கால்நடையாக வேதாரண்யம் சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தினர். இதற்கான ஊழியர்களையும், பின்பு நடைபெற்ற போராட்டங்களிலும் அதிக அளவில் ஊழியர்களை ஈடுபட வைத்தார். இக்காரியங்களைச் செய்ய காந்தி ஆசிரமம் பேருதவியாக இருந்தது. அவர் அங்கு தங்கியிருந்த 10 ஆண்டுக் காலத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லப பாய் பட்டேல், அன்னை கஸ்தூரிபாய், தொழிலதிபர் ஜி.டி.பிர்லா போன்ற முக்கியஸ்தர்கள் காந்தி ஆசிரமத்திற்கு வருகை தந்து தேசப் போராட்டங்களைப் பற்றி விவாதித்து அவ்வப்போது அவருடைய ஆலோசனைகளைப் பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னிற்கும் கேள்விக்குறி
ராஜாஜி விட்டுச் சென்ற மனிதகுல சேவைகள் மேலும் வளரவேண்டும். அதற்காக நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதே இப்போது நம்முன் கேள்விக் குறியாகும். இதைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதே இந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாச் செய்தியாகும்.
$$$