-கருவாபுரிச் சிறுவன்
சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் மூன்றாம் பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)
- காண்க: பகுதி- 2

கச்சியப்ப முனிவர் பிரான் திருநோக்கில் வெளிப்பட்ட திருத்தலங்கள்
1. திருத்தணிகை
எந்த வேளையும் கந்தவேளை நினைத்தால் வந்தவினையும் வருகின்ற வினையும் வலம் வந்து செல்லும். எண்ணற்ற முருகபக்தர்களின் இதயத்தாமரையில் இருப்பவர் தணிகை வேலன்.
இவரின் ஆறுபடையில் ஐந்தாம் படையாகத் திகழ்கிறது திருத்தணி.
வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்ட தலம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த புகழ் மிக்க முருகன் கோயில்.
ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில்.
அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சதராலும் ஏனைய அருளாளராலும் பாடப் பெற்ற தலம்.
சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறு வேறு அல்ல என்பதை உணர்த்துவது சைவ சித்தாந்தம். அந்த சித்தாந்ததின் மணிமுடியாக விளங்கியவர்கள் பட்டர் பிரான்கள்.
இத்திருக்கோயில் இலக்கியங்களில் தணிகையாற்றுப்படை, தணிகை பதிற்றுப்பத்தந்தாதி என்பவற்றுடன் திருத்தணிகை புராணத்தையும் அருளிச் செய்துள்ளார் கச்சியப்ப முனிவர் பிரான்.
இந்நூலை கற்றுத் தோய்ந்துணர்வோர் முதலில் மொழி துவேஷம் செய்ய மாட்டார். ஹிந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு போன்றவற்றை காட்டியதற்காக வெட்கப்படுவார்கள்.
சுயநலத்தோடு இருப்பவர்களுக்கு பொது நலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மொத்தத்தில் குருநாதரின் திருவடியை சிக்கெனப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகி திருவாகும்.
திருத்தணிகை புராணத்தில் கச்சியப்ப முனிவர் பிரானுக்கு குருவாக வரும் முருகப் பெருமானை தமிழ் அமுதால் போற்றித் துதிக்கும் பாங்கினை எல்லோரும் பருகலாமே…
எண்ணுவார் எண்ணமெலாம் இனிது நல்கும் ஏற்றுவாரே ஏற்றமிலாம் எய்தச் செய்யும் கண்டார்தம் குலமுழுதும் காத்துப் போற்றும் கதியளிக்கும் விதிமாற்று மருதச் சூழல் அண்டர் குலாம்தணிகையெழின் மலைமீ(து)ஓங்கும் அழகைமா மணிச்சுனையை அருமருந்தை தண்ணமுதை அருட்கடலை அகலா(த)அன்பைச் சற்குருவைச் சண்முகனை சார்ந்து வாழ்வாம்! (நாகநாதர் பூஜித்த படலம்)
2. திருவானைக்கா
இத்திருத்தலத்தில் சிவ பெருமானே! சித்தானாக வந்து அவரது மேற்பார்வையில் கட்டப்பட்ட திருமதில் ஒன்று இன்றும் உள்ளது. இதனை திருநீற்று மதிற்சுவர் என்பர். இதனை வணங்கி வந்தாலே சகல நலன்களையும் பெறலாம். மேலும் பல விதத்திலும் சிறப்புற்றது என்கிறார் பட்டரில் ஒருவராகிய கச்சியப்ப முனிவர் பிரான்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமயத் தெளிவில்லாத அதிகாரிகள் பொதுஜன மக்களுக்கு சிரமமாக இருப்பதாக எண்ணி இம்மதிற்சுவரை இடிக்கப் போகிறோம் என அறிவிப்பைக் கசியவிட்டார்கள். அதனை கேள்விப்பட்ட ஹிந்து சைவ மக்கள் ஒங்கி எழுந்து எழுச்சிழுற முட்டாள் தனத்தை ஒத்தி வைத்தது மதச்சார்பற்ற தமிழக அரசு.
தமிழகத்தின் பஞ்சபூத ஸ்தலங்களில் இரண்டாவதும், சமயாச்சாரியார்களாலும் ஏனைய சமயப் பெரியோர்களாலும் பாடப்பெற்ற சிவஸ்தலம். ஆதிசங்கரராலும், கார்த்திகை அமாவாசைஸ்ரீ தர வெங்கடேசுவர அய்யாவாள் அவர்களாலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது இத்தலம்.
பல்வேறு சிறப்புகளை உடைய இத்தலத்தினை யாவரும் வாழ்நாளில் தரிசிப்பது அவசியம்.
ராணுவம், போலீஸ், தீயணைப்புத் துறையில் பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளை தரிசிக்க, நினைத்த பணிக்கு தடையின்றி செல்லலாம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.
கச்சியப்ப முனிவர் பிரான் இத்தலத்திற்கு ஒரு தலபுராணத்தை அருளியுள்ளார்கள்.
பின்னாளில் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் அதனை இத்தல தர்மகர்த்தாவிடம் சென்று அவர் வீட்டில் வைத்தே இத்தல புராணத்தை படித்து இன்புற்றார் என்கிற செய்தியை உ. வே. சா. அவர்களின் வாக்கின் வழியே உணரலாம்.
நமக்கு கிடைத்த சற்குரு நாதர்களில் ஒருவராகிய கச்சியப்ப முனிவர் பிரான் அருளிய திருவானைக்கா புராணத்தில் உள்ள அன்னை அகிலாண்ட நாயகியை துதி செய்யும் இத்திருப்பாடலை நாமும் படித்து இன்புறுவோமா…
எண்ணிறந்த தாயர்வயிற் றிருந்துபிறந் திடுந்துயரம் எனைத்தும் நீங்க மண்ணிறந்து புனலிறந்து வயங்கியசெந் தீயிறந்து வளியி னோடு விண்ணிறந்து பெருங்கருணைத் தாயாகித் தனதகட்டின் விரவ வைத்துக் கண்ணிறந்த கவின் காட்டும் அகிலாண்ட நாயகியைக் கருத்துள் வைப்பாம்.

3. திருச்சிராப்பள்ளி- பூவாளூர்
திருச்சிராப்பள்ளியில் இருந்து 25 கி.மீ. தொலைவுக்குள் உள்ளது லால்குடி. இதன் அருகே அமைந்த தலம் பூவாளூர். சிவபெருமானிடம் ரதி தேவியான தன் கணவன் மீண்டும் மன்மதனின் உயிரை பெறச் செய்த தலமாகும். சுவாமி திருமூலநாதர். அம்பிகை குங்கும சவுந்தரி என்பதாகும்.
இத்தலத்தினைச் சுற்றி பூக்கள் நிறைந்த இடமாக இது விளங்கியது ஆதலால் இப் பெயர் வந்தது என்பதும் ஒரு சாரர் கருத்து.
துறைசை ஆதினத்தின் அடியவரான சி. தியாகராச செட்டியாரின் சொந்த ஊர் இதுவேயாகும்.
சித்தாந்தத்தில் தோய்ந்திருந்த செட்டியார் அவர்களே பூவாளூர் புராணத்தை பதிப்பித்துள்ளார்கள்.
தமிழ் தாத்தா அவர்கள் வழங்கிய சிறப்புப்பாயிரம் இந்நூலின் சிறப்பினை விதந்து ஏத்தும்.
கச்சியப்ப முனிவர் பிரான் திருவாக்கின் படி திருமூலர் பதம் சேர்ந்து வாழலாமா…
பொன் பூத்த மணிமார்பன் வளியழலும் கணையாகப் புவிதேராக மின்பூத்த விருசுடரு முருளாக வெளி வழியா விரைந்து கங்கை கொன்பூத்த சடை துளும்பப் பகை கடந்தெண் வடிவு மொரு கோல மெய்யின் தென் பூத்த வுறுப்பாக்கும் திருமூல நாதர் பதம் சேர்ந்து வாழ்வாம்.

4. மேலைச்சிதம்பரம் என்னும் பேரூர்
கோயம்புத்துாரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர். இங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமியின் திருநாமம் பட்டீசுவரர், அம்பிகையின் திருநாமம் பச்சைநாயகி.
தன்னை வேண்டி தவம்புரிந்த காமதேனுவிற்குக் காட்சியளித்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி முக்தி அளித்ததால் பிறவா நெறித்தலம் என்னும் பெயர் பெற்றது.
இது கொங்குநாட்டில் புகழ் பெற்ற தலமாகும். புராண காலத்தில் இது அரசவனமாக இருந்தது. இவ்வனத்தில் பெருமானார் புற்றுக்களால் சூழப்பெற்றிருந்தார். படைப்புத் தொழிலைச் செய்யும் ஆற்றலைப் பெறவிழைந்த காமதேனு இங்கு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் தனது கன்றின் கால் புற்றின் உள்ளே அகப்பட்டுக் கொள்ள, அதை எடுப்பதற்காக தன் கொம்புகளால் புற்றைக் குத்தி களைந்தெடுத்த போது கன்றின் கால் சுவடும், தனது கொம்பின் சுவடும் லிங்க ரூபமாக இருந்த சதாசிவத்தின் திருமேனியில் பட்டு ரத்தம் வரக்கண்டு வருந்திற்று.
சுவாமி அச்சுவடுகளைத் தமக்கு அடையாளமாக விரும்பி ஏற்றுக் கொள்வதாகக் கூறி, காமதேனுவின் விருப்பத்தை கருவூரிலே நிறைவேற்றினார் என்பது வரலாறு.
காமதேனு தங்கி வழிபட்டதால் ‘திருவான்பட்டியுடையார்’ என்ற பெயரோடு,சுவாமி இங்கே வழிபடும் ஆன்மாக்களுக்கு முக்தியின்பத்தை அருள் செய்கிறார். இன்றும் இவ்வடையாளங்களை காணப்படுகின்றன.
இக்கோயிலின் மூலஸ்தானத்தை கரிகால் சோழர் உருவாக்கினார்.
இக்கோயிலின் தலபுராணம் வடமொழியில் ஆதிபுரி மகாத்மியம் எனும் பெயரில் இருந்ததை நம் பட்டரில் ஒருவராகிய கச்சியப்ப முனிவர் தமிழில் ’பேரூர் புராணம்’ என்னும் பெயரில் அருளிச் செய்துள்ளார்.
பெரிய புராண பாஷ்ய ஆசிரியர் சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்களின் ஆத்மார்த்த திருத்தலம்.
தேவாரத்திருத் தலமாகவும், பல்வேறு சிறப்புகளை கொண்ட இத்தலத்திற்கு இருபதுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் உள்ளன.
இக்கோயில் தல புராணத்தில் உள்ள ஒரு துதியில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு திருநடனம் காண்பித்த வரலாற்றினை தெரிவிக்கும் தமிழ்ப்பாவினை படித்து மகிழ்வோமா…
கோமுனிக்குத் தொழுமுனிக்கும் குருமுனிக்கும் குவலயஞ்செய் மாமுனிக்கும் தில்லையில் வாழ் மறையவர் முவாயிரர்க்கும் தாமுனிக்கும் படி வேதத் தமிழ்பாடத் தடுத்தாண்ட பாமுனிக்குக் திருநடனம் பயில் அரசம்பலம் போற்றி. -பெயரை விரும்பாத புலவர்
5. திருவாவடுதுறை
தன் குருநாதர் எவ்வழியோ அவ்வழியே தம் வழி என்ற உறுதிப்பாட்டினை உடைய கச்சியப்ப முனிவர் பிரான் துறைசையாதின குரு முதல்வர் மீது பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி பாடியுள்ளார்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
மனிதர்களுக்கு பெரிதும் தேவையாக இருப்பது பணம். இப்பணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்கிற மன நிலைக்கு பெரும்பாலானவர்கள் வந்து விட்டார்கள். இந்த நிலை தவறு என்று சொல்லுவதற்கு யாருக்கும் துணிவில்லை.
நல்ல வழியில் வருகிற பணம் நற்காரியத்திற்கு பயன்படும்.
தீயவழியில் வருகிற பணமும் நற்காரியத்திற்கு பயன்படும்.
ஆனால் இரண்டாவது முறையில் வந்த பணம் காலவோட்டத்தில் காற்றோடு காற்றாக கரைந்து காணாமல் போய்விடும்.
பணம் தேவை என நினைப்பவர்கள் தினந்தோறும் விளக்கு முன்பாக இத்தலத்தில் திருஞானசம்பந்த நாயனார் தன் தந்தையாரின் ஞான வேள்விக்கு பாடிய தேவாரப்பாடல்கள் முழுவதையும் பதினொறு திங்கள் பாடுங்கள்.
பணம் வரும். வந்த பணம் நிலைக்கும். அதனால் காலத்தால் நிலைத்து நிற்கும் புகழ் மிக்க புண்ணியச் செயலில் ஈடுபடலாம்.
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமை யாளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல் அதுவோவுனது இன்னருள் ஆவடு துறை யரனே (நாலடி மேல் வைப்பு பதிகம்- 1)
6. காஞ்சிபுரம்
கல்விக்கரையில்லா பெருமையினை யுடையது என்று காஞ்சி மாநகரினை போற்றுவார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
இத்தலத்தின் பெருமைகளை ஈண்டு வருணிக்க வார்த்தைகள் போதாது. அதுவும் கவிரட்சகரின் வாக்கினை சொல்வது எம்மால் முடியுமன்றோ!
தமிழில் நலம் பெற விரும்புவோர் கச்சியப்ப முனிவர் பிரானின் திருவடியை இறுகப் பற்றுங்கள்.
காஞ்சிபுராணம், பிரமீசர்பதிற்றுப்பத்தந்தாதி, கச்சிஅனந்த ருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி, ஆனந்த ருத்திரேசர் கழிநெடில் போன்றவை யாவும் முனிவர்பிரானின் திருவாக்கே ஆகும்.
நிறையும் அன்பினால் நினைந்திலை பணிந்திலை
நெடிது அவன் திசை நோக்கி
உறைகள் கண்ணினை கால நன்றுருகலை
உரை தழுதழுத்தில்லாய்
மறை முழக்கறா ஆனந்த ருத்திரே
சத்தமர் மழ வெள்ளேற்று
இறையை எங்ஙனம் பெறுகுவை நெஞ்சமே
என்னையான் புரிகேனே.
சிவபெருமானின் திருநாமத்தை செப்புங்கள். அவனை நினையுங்கள். அவன் இருக்கும் இடம் நோக்கி தொழுது உருகுங்கள் என அன்பர்களின் நெஞ்சிற்கு அறிவுரையாக கூறி ஆற்றுப்படுத்துகிறார் முனிவர் பிரான்.
7. சென்னை
சென்னை, பிரைட்டன் கந்தசாமி முதலியார் பார்க்டவுன் பிரசன்ன விநாயகர் கோயில் சைவர்கள் வாழ்வில் தரிசிக்க வேண்டிய கோயில்.
இது ராசப்ப செட்டித்தெரு கந்தசாமி கோயிலுக்கு அருகிலுள்ள வெங்கடாசல முதலியார் தெருவில் உள்ளது. சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தின் தெற்கு மதில் அருகே உள்ள சந்தின் வழியாகவும் இக்கோயிலுக்கு செல்லலாம்.
இக்கோயிலில் தான் கச்சியப்ப முனிவர் பிரான் விநாயக புராணத்தை அரங்கேற்றம் செய்தார்கள்.
இந்நுாலினை பக்தியோடு கேட்போருக்கும் படிப்பவர்களும் ஆறுதலுடன் கூடிய அருள் மருந்தாக நான்குவரி பாடலில் உற்சாகம் மூட்டுகிறார் பட்டர் பிரான் ஒரு முறையேனும் படியுங்களேன்.
இடரில்லை வறுமையில்லை இன்னல் நோய் சிறிதுமில்லைத் தொடர்தரு துக்கமில்லைச் சோக மோகங்கள் இல்லை அடர்தரு பாவமில்லை அரிட்டங்கள் எதுமில்லைப் படர்தரு பகைகளில்லை பயமில்லை இடையூறுல்லை.
மொத்தத்தில் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாதது என்பதை உணர்த்துகிறார்கள் ஞான குருமார்களாகிய பட்டர்கள் இருவர்.
எழுத்துப் போலியும் எழுத்தென
ஆளுவர் அதுபோல்
புழுத்த நாயினேன் பிதற்றிய
செய்யுட்போ லியையும்
பழுத்த கேள்வியோர் கைக்
கொள்வர் என்பது பற்றி
விழுத்த நாணினேன் சிவகதை
விளம்புதற் கிசைந்தேன்.
(காஞ்சிபுராணம்- பாயிரம் 25)
பட்டர் பெருமக்கள் இருவரும் சிதம்பரம் முதலிய தலங்களுக்கு சென்றார் என அவரது வாழ்க்கை சரித்திர பழம் பதிப்புகளில் குறிப்பிடுவதாலும் தில்லையம்பல நாயகனின் குஞ்சித பாதத்தை ஏற்றியும் போற்றியும் வணங்குவோமாக.
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே
-திருஞானசம்பந்த சுவாமிகள்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறை சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோாமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செயும் பூங்கழல் போற்றி போற்றி
-தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்
(தொடர்கிறது)
$$$
One thought on “மாதவத்தோர் தரிசித்த தலங்கள்- 3”