-கருவாபுரிச் சிறுவன்
சிவஞான யோகிகளாலும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் குறித்த குறுந்தொடரின் முதல் பகுதி இது… (சித்திரை மாதம் புனர்பூசம், ஆயில்யம் முறையே கச்சியப்ப முனிவர், சிவஞான யோகிகள் குருபூஜை தினம்)

கண்ணுதலான் ஆலயம் நோக்கும் கண்களே கண்கள்
கறைகண்டன் கோயில் புகும் கால்களே கால்கள்
பெண்ணொருபாகனைப் பணியும் தலைகளே தலைகள்
பிஞ்ஞகனை பூசிக்கும் கைகளே கைகள்
பண்ணவன் தன் சீர்பாடும் நன்னாவே நன்னா
பரன் சரிதையே கேட்கப்படும் செவியே செவிகள்
அண்ணல் பொலன் கழல் நினைக்கும் நெஞ்சமே நெஞ்சம்
அரனடிக்கீழ் அடிமை புகும் அடிமையே அடிமை
-வரதுங்கர்
பரசமயக்கோளரியாகிய திருஞானசம்பந்த நாயனாரில் தொடங்கி சொல்வேந்தர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வரை எத்தனையோ மஹான்கள் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்து ஆன்மாக்களாகிய நாம் உய்வடையும் பொருட்டு தம் மனத்தினாலும், வாக்காலும், செய்கையாலும் பரம்பொருளை வழிபட்டு நமக்கு நல்வழி காட்டியுள்ளார்கள்.
அவர்களின் அவதாரத்தலம், அவர்கள் தரிசித்து, அவர்களால் பாடப்பெற்ற திருக்கோயில்களில் வீற்றிருக்கும் எம்பெருமானை ஒருமுறையேனும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சென்று தரிசிக்க வேண்டும். அப்போது தான் அவரவர் முன் செய்த தீவினை குறையும். தற்போது தெரியாமல் செய்யும் கர்ம வினையும் அறுபடும்.
ஆன்மாக்களுக்கு எதிர்காலத்திற்கான நல்வினை அதிகரிக்க சிவ வழிபாடும், திருக்கோயில் திருப்பணியும் அவசியம் என்பது சற்குரு குன்றக்குடி மேலமடம் நான்காவது பட்டம் கணபதி சுவாமிகளின் திருவாக்கு.
இப்பெருமான் கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ண நாதப்பிரபுவை ஆத்மார்த்த மூர்த்தியாக கொண்டு வாழ்வாங்கு வந்து தர்ம நெறிப்படி நின்ற சன்மார்க்க சத்தியசீலர் ஆவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கரிவல மாநகருக்கு இறைவன் களவில்
அமர் பால்வண்ணக்கடவுள் செம்பொற்
திருவடி சூடிய முடியான் பரராசர்
முடிதோய்ந்த சிவந்த தாளா
அரிய தமிழ்க் குரையாணி அதிவீரராமன்
முன்னோன் அவனிகாக்கும்
மருவளர் கோளரி ஞான வரதுங்கன்
அடியை நிதம் வணங்குவாமே
-நெற்குன்ற நகர் முத்துவீரக்கவிராயர்
பாண்டியர்களும் பட்டர்களும்
பாண்டியர்களில் இருவர் பட்டர்களில் இருவர் என்ற பழமொழி சைவத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தொன்று தொட்டு இடம் பெற்று வருகிறது. எட்டு நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி, தென்காசி, கொற்கை பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் பிற்கால பாண்டிய மன்னர்கள்.
அவர்களது வம்சத்தில் கல்வி, கேள்வி, அறிவு உட்பட சகல கலைகளிலும் பூரண ஞானவான்களாக திகழ்ந்தவர்கள் வரதுங்கராம பாண்டியரும் அவரது சகோதரரான அதிவீரராம பாண்டியர், குலசேகர பாண்டியன் என்பவரும் ஆவார்கள்.
இவர்களில் பின்னவரை விட்டுவிட்டு முன்னவர்கள் இருவரையும் பாண்டியரில் இருவர் என அழைக்கும் சொல் வழக்கு உண்டாயின.
கருணைபொழி திருமுகத்தில் திருநீற்று நுதலும்
கண்டாரை வசப்படுத்தக் கனிந்தவா யழகும்
பெருமைதரு துறவோடு பொறையுளத்திற் பொறுத்தே
பிஞ்ஞகனார் மலர்த்தாள்கள் பிரியாத மனமும்
மருவினர்கள் அகலாத ஞானமே வடிவாம்
வளர்துறைசைச் சிவஞான மாமுனிவன் மலர்த்தாள்
ஒருபொழுதும் நீங்காமல் எமதுளத்தில் சிரத்தில்
ஓதிடுநா வினிலென்றும் உன்னிவைத்தே உரைப்பாம்.
-தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்.
சித்தாந்த சைவர்களின் ஆதி தலைமையகமாகிய திருவாவடுதுறை ஆதினத்தின் தம்பிரான் திருக்கூட்டத்து அடியவர்களான ஸ்ரீமத் சிவஞானயோகிகளையும் அவரது முதன்மைச் சீடர்களில் ஒருவரான கச்சியப்ப முனிவரையும் பட்டரில் இருவர் என அழைக்கும் சம்பிரதாய முறை இவர்கள் காலத்தில் இருந்து உருவாயின.
பின்னாளில் இந்நால்வருடைய திருநூற்களையும் கற்று அறிந்து உணர்ந்த ஒருவர் இருவரையும் இணைத்து ‘பாண்டியரில் இருவர் பட்டரில் இருவர்’ என்னும் சொல்லாட்சியை இவ்வுலகில் அறிமுகம் செய்திருக்க வேண்டும்.
தமிழ் இலக்கியம் தந்த அறிஞர் பெருமக்களும், ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியம் தந்த எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்களும் அவர் இன்னார் தான் என குறிப்பிடவில்லை.

பட்டர்கள் என்போர்…
தென்தமிழக சிவாலயங்களில் பூஜை புரியும் உரிமையை பெற்றவர்களை பட்டர் என அழைப்பதுண்டு. இவர்களை ஆதிசைவர், சிவாச்சாரியர், குருக்கள் எனவும் அழைப்பர்.
வைணவத்திருக்கோயில்களில் பெருமாளுக்கு திருவாதாரனம் செய்யும் பேறு பட்டாச்சாரியார்களுக்கு உரியது.
‘பட்டர் பிரான்கோதை சொன்ன நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராய ணாயவென் பாரே’ என்பார் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் நாச்சியார்.
அபிராமி அந்தாதி பாடி அமாவாசை அன்று முழு நிலவினை வர வழைத்த திருக்கடையூர் சுப்பிரமணிய அடியவரின் சிறப்புத் திருநாமம் அபிராமி பட்டர் என்பதாகும்.
இன்றும் பல ஊர்களில் பட்டமார் தெரு, பட்டமார் வீதி என்ற சொல்வழக்கு உள்ளது என்பதை அஞ்சல் துறையினரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
நீண்ட அனுபவத்தை உடையவரை பட்டறிவு உடையவர் என்றும் அவர்களை சிறப்பாக பட்டன், பாட்டன் என வழங்கும் சொற்பிரயோகம் கிராமங்களில் உண்டு.
கிராமங்களில் கம்மாளர்கள் என்னும் ஆசாரி மரபினர் ஒன்றுக்கு மேற்பட்டோர் வேலை செய்யும் இடத்தினை பட்டறை என சொல்வதுண்டு.
உண்மைவாதிகளுக்கு அதாவது மெய்யியலாளர்களுக்கு எல்லாம் தெரிந்த ஞானிகளுக்கும், அவர்கள் வழிவழியாக பரம்பரையினருக்கும் மரியாதை நிமித்தமாக ஆர் விகுதி கொடுத்து வழங்கப்படும் மற்றொரு பெயரே பட்டர் என தீர்மானமாகக் கொள்ளலாம்.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இப்பூவுலகில் அவதாரம் செய்தவர்கள். சைவ வேளாளர் மரபினைச் சார்ந்த முக்களாலிங்கரும், கச்சியப்ப முனிவரும் குரு சீடர் உறவின் முறைக்குரியவர்களும், துறைசை ஆதினத்தின் தம்பிரான் கூட்டத்து அடியவர்களும் ஆவார்கள்.
இவர்கள் தென்தமிழிலும் , வடமொழியிலும் நிலை கண்டுணர்ந்த புலமை பெற்ற புண்ணிய புருஷர்கள்.
இலக்கணம், இலக்கியம், சாத்திரம், புராணம், நுணுக்கம், தாத்பரியம் தெய்வீகம் ஆகியவற்றில் துறை போகிய மெய்யியலாளர்கள். அதனால்தான் பெரும் புலவர்களாகிய தம்பிரான் கூட்டத்து முடிசூடா தலைவர்களாகிய இருபெரும் ஞானிகளுடைய அருமையையும் பெருமையும் உணர்ந்த பெயர் விரும்பாத அன்பர் ஒருவர் பட்டரில் இருவர் இவர்களே என்ற நன்மொழி பட்டத்தைச் சூட்டி அருளினார் போலும்.
சிவகதி மேவும் வகை செப்புமோர் விநாயகர் தவம் அருள் புராணம் இங்குலகில் அருளியபேர் கச்சியப்ப முனிவரர் தம் பாத மலர் பங்கயத்தை உச்சி வைத்து உளம் மகிழ துதித்திடுவாய் நன்னெஞ்சே! -விநாயகர் புராண பதிப்பிலுள்ள துதிப் பாடல்
மகாகவி பாரதிக்குக் கிடைத்த பெரும் புதையல்
ஏட்டுச்சுவடியில் இருந்த சிவஞான மாபாடியத்தை 1906-ஆம் ஆண்டில், மதுரை – விவேகபானு பதிப்பகம் வெளியிட்டது. அந்த அச்சு நுாலுக்கு, புரட்சிக்கவிஞர் சி.சுப்பிரமணிய பாரதியார் ‘இந்தியா’ இதழில் (சென்னை-டிசம்பர்-22, 1906) கீழே உள்ளவாறு மதிப்புரை எழுதியுள்ளார்:
“இப்புத்தகத்தை நாம் மிக ஆவலுடன் படித்தோம். மதுரை ‘விவேகபாநு’ ஆபீஸிலிருந்து நமக்கு அனுப்பப்பட்டது. தமிழிலே நல்ல பழக்கமுடைய எல்லோரும் நெடுங்காலமாக இது எப்போது வெளியாகுமோ என்று, யூத ஜாதியார் மேஸையாவின் வரவுக்குக் காத்திருப்பதுபோலக் காத்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்ப் பாஷையில் மிகுந்த பயிற்சியில்லாத நாம் கூட இளமை முதலாக, “ஐயோ, சிவஞான முனிவர் செய்திருப்பதாகச் சொல்லப்படும் ‘ஆதி திராவிட மஹாபாஷ்யம்’ என்ற அரிய நூலை, திருவாவடு துறை ஆதீனத்தார் உலகம் அறியாமல் மூடி வைத்திருக்கின்றார்களாமே? அது எத்தனை அருமையுடையதாய் இருக்குமோ எப்போதுதான் வெளிவருமோ?” என்று பலமுறை பெருமூச்செறித்திருக்கின்றோம். இப்போது, அருமையான நூலைக் குறைந்தவிலையில் அச்சிட்டனுப்பியதன் பொருட்டு விவேகபாநு ஆபீஸாருக்கு மிகவும் நன்றி செலுத்துகிறோம். இந்த நூல் நாம் எதிர்பார்த்திருந்ததற்குச் சிறிதேனும் பெருமையிலே குறைவுபடாது விளங்குகிறது. இன்னும் சில பகுதிகள், பிரசுரித்தோருக்குக் கிடையாமல் போய்விட்டமை பற்றி விசனமுறுகின்றோம். இந்நூலிலே விஷயங்கள் சைவசித்தாந்த மார்க்க சம்பந்தமானதால், அவற்றைப் பற்றிய பெருமையாக விவரிப்பது பொது ஐனங்களுக்கு ஒருவேளை விரஸமாய் இருக்குமென்று அஞ்சி, அங்ஙனம் செய்யாது விடுகின்றோம். எனினும், சைவ சித்தாந்திகள் முதலிய எல்லா வகுப்பினருக்கும் தமிழறிவுள்ள அனைவரும் அதை ஆவலுடன் ஆதரவு செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.”
இந்த மதிப்புரையில், நூலின் சில பகுதிகள் கிடைக்காமல், போனது பற்றி வருத்தமுறுவதாய்க் கூறியுள்ளார் பாரதியார். ஆனால், பிற்காலத்தில் அக்குறை நீங்கியது. கிடைக்காத பகுதிகள் கிடைத்தன. நூல் முழு வடிவம் பெற்று திருவாவடுதுறை ஆதினம், தருமை ஆதினம், சைவ சித்தாந்த நுாற்பதிப்புக்கழகம், சென்னை சைவ சித்தாந்த பெருமன்றம், காஞ்சிபுரம் மெய்கண்டார் கழகம் யாவும் பல பதிப்புகளை (பாரதியார் தேடிய புதையல்) கண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆதிதிராவிட பாஷ்யத்தின் பட்டர் பிரான்
வட மொழியில் உள்ள பிரம்ம சூத்திரங்களுக்கு ஆதிசங்கரர், மத்வர், ராமானுஜர் இம்மூவரும் இயற்றிய பாஷ்ய நுால் மிகவும் பிரபலமாய் இருந்தன. தென்மொழியாகிய தமிழுக்கு அதைப்போல பாஷ்யம் (விரிவுரை) ஒன்று இல்லையே என்ற வருத்தம் பலரின் உள்ளத்தில் பல காலமாய் இருந்தது.
அக்குறையை நீக்கும் பொருட்டு சிவஞான யோகிகள் திருவெண்ணெய்நல்லுாரில் அவதரித்த மெய்கண்ட தேவனார் அருளிய சிவஞான போதத்திற்கு மாபெரும் விரிவுரையை அருளிச்செய்தார்கள். அதுவே தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரிய பாஷ்ய நுாலாகும்.
சிவஞானயோகிகளின் அடிச்சுவட்டின் வழியிலும், தெய்வீகக் கொடி ஞான சிஷ்யர்கள் பாதையிலும் பின்னாளில், தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரிய புராணத்திற்கு சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்கள் தந்த உரை மற்றொரு சிறந்த பாஷ்ய நுாலாகும்.
மிக உயர்ந்த தத்துவத்தை சொல்லக்கூடிய திராவிடம் என்ற சொல்லை பத்து திக்குகளிலும் சுயநலம் மிகுந்து அரசியல்வாதிகளால் கையாளப்பட்டு அதன் உண்மைத் தன்மை இது தான் என்பது மறைந்து போகிறது, மறுக்கப்பட்டும் வருகிறதே என்பதே வருத்தத்திற்குரிய விஷயம் . சிந்திக்க.
பலரும் தேவார, திருவாசக பாடல்பெற்ற தலங்கள், திருப்புகழ் பாடப்பெற்ற தலங்கள், பஞ்சபூத தலங்கள், படை வீட்டுத்தலங்கள், ஜோதிலிங்கத் தலங்கள், நவக்கிரகங்கள் வழிபாடு செய்த தலங்கள், ஆற்றங்கரையோரத்தலங்கள், ஞானிகள், ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் கிங்கரர்கள் வழிபட்ட தலங்கள் என இன்னும் பல்வேறு சிறப்புடைய தலங்களையெல்லாம் அன்பர் பெருமக்கள் தன் வாழ்நாளில் தரிசித்து மகிழ்கிறார்கள்.
இதனைப்போலவே, சிவநேய அன்பர்களும் பட்டர்கள் என்கிற சிறப்புத் திருநாமத்தினைப் பெற்ற சிவஞான யோகிகளும் கச்சியப்ப முனிவராலும் பாடப்பெற்ற திருத்தலங்கள் அதாவது அவர்களுடைய வாழ்வியலில் தொடர்புடைய திருத்தலங்களை அவரவர் வசதிக்கு ஏற்றவாறு யாத்திரையாக சென்று தரிசனம் செய்ய வேண்டும். பட்டர் பெருமக்களின் பரமகாருண்யம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நோக்கத்தினை குறிக்கோளாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
திண்ண இன்பச் சேவடியும் திருவிழியும்
திருமார்பும் செல்வக் கையும்
நண்ணும் அன்பர்க் கருள் கருணைத் திருமுகமும்
பசுங்குழவி நடையே யாகிப்
புண்ணியத்தின் பொலிவாகி அற்புதக்கோலக்
கொழுந்தாய்ப் புலை நாயேற்குப்
கண்ணை விட்டு நீங்காத சிவஞான
சற்குருவே கருணை வாழ்வே
-தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்
(தொடர்கிறது)
$$$
மிக அருமையான கட்டுரை.தங்கள் தமிழ்த் தொண்டு சைவத்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.சபா.அருணாசலம்.சைவசித்தாந்தப் பேராசிரியர்.
LikeLike