நமது குழந்தைகளைக் காப்போம்!

-சு.சத்தியநாராயணன்

திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன், மிக முக்கியமான எச்சரிக்கையை இக்கட்டுரையில் அளித்திருக்கிறார். படியுங்கள்… பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

ஜப்பானில் ஒரு செயல் நடக்கிறது. இணையத்தில் இருந்து எடுத்ததைக் கீழே அளித்திருக்கிறேன் ஆங்கிலத்தில். டிஎம்.இன்போயின்மென்ட் என்ற யூ-டியூப் சானலிலும் இது குறித்து வெளியான செய்தியைக் கேட்டேன்.  

//In Japan, many nightclubs, particularly in areas like Shibuya and Roppongi, offer free entry for women, especially during early hours of the night, essentially providing a "free club party for girls" where they can enter without paying a cover charge; popular spots to check include Vizel in Shibuya which often has free entry for Japanese women with a complimentary drink, and larger clubs like V2 Tokyo in Roppongi may also have similar promotions depending on the night and time. //

இப்படி அனுமதிக்கப்படும் பெண்கள் சிறிது சிறிதாக போதைக்கு அடிமை ஆகிறார்கள். அப்படி போதைக்கு அடிமையாகி, மீண்டும் மீண்டும் அதனைப் பெற விரும்புகையில் பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்படிச் சிக்கிக் கொள்ளும் பணக்காரப் பெண்களை அவர்களது பெற்றோர் போதைப் பழக்கத்திலிருந்து மருத்துவமனை வழியாக மீட்டெடுக்கிறார்கள். ஏழைப் பெண்கள் பாலியல் குற்றவாளிகளிடம் சிக்கி சீரழிகிறார்கள்.

//நவநாகரீகம்// இந்த வார்த்தையை தமிழில் எழுத்தாளர்கள் தவறான பொருளுக்காகவே பயன்படுத்தி இருக்கிறார்கள். புறந்தள்ள வேண்டிய ஒன்று சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய அனைத்தும் இதன் அம்சங்களாக இருக்கின்றன. 

ஜப்பான் மட்டுமல்ல, பல நாடுகளில் இந்த விஷம் பல்வேறு வடிவங்களில் புகுந்து வருகிறது. பெண் முன்னேற்றம் அடைந்திருக்கிறால் என்றால் அவள் ஆணைப் போல உடை அணிய வேண்டும். புகை, மது போன்ற பழக்கங்களை மிகச் சுலபமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பாரம்பரியம் மரபு சார்ந்த விஷய்ங்களை ஏளனமாகப் பேசி புறந்தள்ள வேண்டும். இப்பொழுது கூட ஒரு புதிய விஷயம் சேர்க்கப்பட்டு இருக்கிறது, பெண்ணின் மீது புனிதம், தாய்மை, தெய்வம், கற்பு இப்படி வலிந்து திணிக்கப்பட்ட விஷயங்களை புறந்தள்ள வேண்டுமாம். 

சரி இங்கு எப்படி வருகிறது?

‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ அதன் ஒரு வடிவம். மற்றொன்று ஜப்பானில் நடப்பது போல இங்கும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படி பெண்களை நவநாகரீகம் என்ற பெயரில் போதைக்கு அடிமையாக்கி தங்களது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள பல கயவர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள். 

அவரவர் தட்டில் என்ன உணவு? அவரவர் மேல் என்ன உடை? அவரவர் எங்கு செல்ல வேண்டும், யாருடன் செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? இதெல்லாம் அவரவர் உரிமை. இதையெல்லாம் யாரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது. அது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது. 

பெற்றோர் கூட குழந்தைகள் விஷயத்தில் தலையிடக் கூடாது. பெற்றோர்  இந்தப் பூமியில் குழந்தை பிறக்கக் காரணமாக இருக்கும் கருவிகளே அன்றி அதைத் தாண்டி பெற்றோருக்கு குழந்தைகள் மீது எந்த உரிமையும் இல்லை. இப்படிச் சொல்லிக் கொண்டும், சொல்லிக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறது ஒரு கூட்டம். இதனையும் ஆஹா ஆஹா என்று வரவேற்றுச் செயல்படுத்தும் பெற்றோர் கூட்டமும் இருக்கிறது. 

திருமணம் என்பதே லைசென்ஸ் வாங்கிய விபசாரம் என்று ஒரு கூட்டம். பெண்களுக்கு எதற்கு கர்ப்பப்பை. எந்த தார்மிகப் பொறுப்பும் இல்லாமல், ஆணும் பெண்ணூம் அவரவர் இச்சையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதானே என்றொரு கூட்டம். 

கல்தோன்றி ,மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடி; 5000 வருடத்துக்கு முன்பே இரும்பு பயன்பாடு; கடல் வணிகம்; கடற்படை; கல்லணை; வானுயர்ந்த ஆயிரம் வருடம் கடந்து நிற்கும் கோவில்கள் இந்தப் பெருமை ஒரு புறம்.

ஆனால் இந்த சமூகம் கைக் கொண்டு இருந்த இலக்கியம் சுட்டும் கலாசாரம், கடவுளர் என அனைத்தும் அபத்தங்கள். வெள்ளைக்காரனின் கலாசாரம் கல்வி முறைதான் உயர்ந்தது. அவன் இல்லாவிட்டால் நாம் எல்லாம் காட்டுமிராண்டிகளாக இருந்து இருப்போம். இது ஒரு புறம்.

இந்த தேசத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. அவர்கள் மீதான் அக்கறை இருந்தது. அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. ஏனெனில் ஒரு சமூக உருவாக்கம் என்பது குழந்தையை வளர்த்தெடுக்கும் பெண்களின் வசமே இருக்கிறது. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்ற வழக்காடும் அதனால்தானே? 

ஒரு குழந்தை அறத்தை மீறுகையில் ‘உன்னைப் பெற்ற வயிற்றில் பிரண்டையத்தான் கட்டிக் கொள்ள வேண்டும்’ என்று தாய்கள் சொல்லும் வழக்காடும் இந்த மண்ணில். 

ஒரு தாயால் அறம் சார்ந்து வளர்க்கப்படும் குழந்தையை அவையத்து முந்தியிருப்பச் செயல் தந்தையின் வேலை. ஆக திருமணம் என்பது நல்ல குழந்தைகளைக் கொண்ட சமூகத்தை அமைப்பதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

எல்லாக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே. இன்றும் கூட நீதிமன்றங்கள் விவாகரத்து சமயங்களில் குழந்தையைத் தாயிடம் அளிப்பதன் நோக்கமும் அக்குழந்தை நல்லவிதமாக வளர்க்கப்பட்டு சமூகத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தானே? 

இது எங்கோ யாருக்கோ நடக்கிறது நமக்கென்ன என்று கடந்து செல்ல இயலாது. நமது குழந்தைகளும் அடுத்தடுத்த சந்ததிகளும் இந்த சமூகத்தில் தான் வாழ் வேண்டும். நமக்கு எப்படி சமூகம் வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். எதை அங்கீகரிக்க வேண்டும், எதனை அங்கீகரிக்கக் கூடாது என்பதில் தெளிவு பெறுவோம்.

தீயவைகளை எதிர்ப்பதில் நமது நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பதைக் காட்டிலும், நல்லதைப் பெருக்குவதில் ஈடுபாடு கொள்வோம். நமது குழந்தைகளை நல்வழிப்படுத்துவோம். அவர்களது நண்பர்கள் யார் என்று கவனிப்போம்.

சுதந்திரம் என்பது சில வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டது என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்போம். சமூகத்தில் நடக்கும் குற்றங்களைச் சுட்டி அற வாழ்வின் மகத்துவத்தைச் சொல்லிக் கொடு[ப்போம். இதில் நிச்சயமாக ஆண் -பெண் பேதமில்லை; அறமென்பதை இருவருக்கும் பொதுவில் வைப்போம்.

$$$

One thought on “நமது குழந்தைகளைக் காப்போம்!

  1. இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அவசியமான கட்டுரை.
    பெண் குழந்தைகளை பெற்றிருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம்
    செலவிட வேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். அன்பை காட்ட வேண்டும்.
    இது இல்லாததே இந்த கலாச்சார சீரழிவிற்கு காரணமாக இருக்கிறது. எது தேவை? எது
    தேவையில்லை?
    எது அவசியம்? எது அனாவசியம்?
    இவற்றை புரிய வைக்க வேண்டும்.

    Like

Leave a comment