–நாராயணன் திருப்பதி, சௌம்யா ராகவன்
‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...

காண்க:
7. குறைகளை மறந்து நிறைகளைப் பாராட்டுவோம்!
-நாராயணன் திருப்பதி.
அமரன் திரைப்படம் பார்த்டேன்; அற்புதமான படைப்பு. சிவ கார்த்திகேயன் சாய் பல்லவி உட்பட படத்தில் நடித்த அனைவரும் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இது மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்றும் இப்படத்தை அவரின் தியாகத்திற்கு அர்ப்பணிப்பதாகவும் படத்தின் தொடக்கத்திலேயே தெரிவித்திருப்பது சிறப்பு. காவல் துறையில் பணியாற்றியவரின் மகனான சிவ கார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது உண்மை.
கடந்த சில வருடங்களில், இது போன்ற தேசபக்தியை வெளிப்படுத்தும் தமிழ்ப் படங்கள் அதிக அளவில் வரவில்லை என்ற நிலையில், காஷ்மீரில் 2014க்கு முன்பு நடைபெற்ற தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை தோலுரித்துக் காட்டியிருப்பது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் ராணுவத்தில் இருப்பதாக சொல்லப்பட்டிருப்பது மகிழ்ச்சி. படத்தின் பல்வேறு காட்சிகளின் முடிவில் பொது மக்கள்/ ரசிகர்கள் ஆராவாரம் செய்வது படத்தின் திரைக்கதை மற்றும் உணர்வுகளோடு ஒன்றிப் போவதை நம்மால் உணர முடிகிறது.
நாட்டுக்கு தன்னை அர்பணித்துக் கொண்ட ஒரு ராணுவ வீரனின் மனைவி எப்படி தன் வாழ்க்கையை கணவனின் விருப்பத்திற்காக அர்ப்பணித்துக் கொள்வார் என்பதற்கு உதாரணமாக சாய் பல்லவி தன் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். தன் கணவன் இறந்த செய்தியைக் கேட்ட பின்னர், படத்தின் இறுதி வரை இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ராணுவ வீரனின் மனைவி என்ற பெருமையை தனது முகத்தில் வெளிப்படுத்துவதை அவரது நடிப்பின் சிகரம் என்றே சொல்ல வேண்டும்.
பல மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும், பல மதங்களைச் சேர்ந்த வீரர்களளும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கிடையே இந்திய இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தை வேரறுக்க நம் ராணுவத்திற்கு எப்படி துணை புரிகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கமான விஷயங்களை இந்தப் படம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
மூன்று மணிநேரத்திற்குள் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை அலசி, ஆராய்ந்து முழுமையாக சித்தரிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. குறிப்பாக மேஜர் முகுந்த் அவர்களின் தாத்தா மற்றும் இரு தாய் மாமன்கள் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றும், அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டே முகுந்த் ராணுவத்தில் பணியாற்ற விரும்பினார் என்றும் நான் படித்ததாக நினைவு. ஆனால், இப்படத்தில் 5வது வகுப்பு படிக்கும் போது அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களைப் பார்த்து தனக்கு ஆசை வந்தது என்று சிவ கார்த்திகேயன் சொல்வதாக அமைந்துள்ள காட்சியைத் தவிர்த்திருக்கலாம்.
இப்படத்தில் மேஜர் முகுந்தின் ஜாதியை மறைத்து விட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. அப்படி சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றே நான் கருதுகிறேன். அது படைப்பாளிகளின் உரிமை. ஒரு ஜாதியை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தத் தேவையில்லை அல்லது அவசியமில்லை என்றோ, அல்லது அப்படி அடையாளப்படுத்தினால் படம் வெற்றி பெறுமா என்று படத்தின் தயாரிப்பாளர்களோ இயக்குநரோ நினைத்திருக்கலாம்.
இந்த முடிவு முழுக்க முழுக்க வர்த்தகம் தொடர்பானது. ‘அமரன்’ படத்திற்கு வரி விலக்கோ அல்லது சலுகைகளோ எதுவும் இல்லை. லாபம் அடைந்தாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் அது முதலீடு செய்தவர்களுக்கே. மேலும், முகுந்த் வரதராஜன் அவர்களின் ஜாதி குறித்த உண்மைகளை மறைப்பது என்பது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வே. இதனால் சமுதாயத்தில் எந்த மாற்றமோ/ தாக்கமோ ஏற்படப் போவதில்லை என்பதால் அவற்றை நாம் வழக்கம் போல் கடந்து சென்று விட வேண்டும் என்றே கருதுகிறேன்.
எத்துணையோ படங்களில் குறிப்பிட்ட ஜாதியை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் எந்த ஜாதியையும் இகழ்ந்தோ, பரிகசித்தோ அல்லது மிகைப்படுத்தியோ வசனங்களோ/ காட்சிகளோ இல்லை.
பாரதியின்,
“அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே!
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!
துச்சமாக எண்ணி நம்மைச் தூறு செய்த போதினும்
அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே”
-என்ற வரிகள் இந்த படத்தின் முதுகெலும்பாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆனாலும், ஒரு படத்தை படமாகத் தான் பார்க்க வேண்டும் என்பதிலும், அதில் உள்ள பொருளை, அந்தப் படம் சொல்லும் செய்தியைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
திரைப்படம் எடுப்பது என்பது தொழில். முதலீட்டை செய்து லாபம் எடுப்பது தான் தொழில் தர்மம். அதனடிப்படையில் தொழில் சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் உறுதியாக கலைஞர்களுக்கு உள்ளது. வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு தான் படம் எடுக்கிறார்களேயன்றி, அப்படியே தத்ரூபமாக படம் எடுக்க முடியாது. சில மசாலாக்களை சேர்க்க வேண்டும். சில உண்மைகளை மறைக்க வேண்டும். சில தரவுகளை மிகைப்படுத்த வேண்டும். அப்போது தான் போட்ட பணத்தை எடுக்க முடியும்.
ஜாதியை விட, மதத்தை விட, இனத்தை விட, மொழியை விட தேசமே பெரிது என்பதை உணர்வுபூர்வமாகக் காட்டி மக்களைத் தட்டி எழுப்பியிருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
இந்தப் படத்தைப் பொருத்தவரையில் எதை மறைத்திருந்தாலும், எதைச் சேர்த்திருந்தாலும் , எதை மிகைப்படுத்தியிருந்தாலும் கடைசிக் காட்சிகளில் படம் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கின்ற, பார்க்கப் போகிற ஒவ்வொருவருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் வெளிவருவதைத் தடுக்க முடியாது! அதேபோல திரைப்படம் முடிவடைந்ததும் மக்கள் எழுந்து நின்று கைதட்டி கரகோஷம் எழுப்புவதை சமீப காலங்களில் தமிழ் திரைப்படங்களில் நாம் பார்த்ததில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற தேச பக்தன், தமிழன், இந்தியன் மீண்டும் நம் கண்களுக்கு, மனங்களுக்கு, காதுகளுக்கு உற்சாகத்தை ‘அமரன்’ மூலம் அளித்திருக்கிறார். அதில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு குறைகள் ஏதேனும் இருந்தால் மறந்து,கடந்து செல்வோம்.
- திரு. நாராயணன் திருப்பதி, தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர்.
$$$
8. சாய் பல்லவியும் ஜீவியும்
-சௌம்யா ராகவன்
அமரன் படத்தில் எந்த சஸ்பென்ஸூம், திருப்பமும் நமக்கு இல்லை. மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு என்பது முன்பே தெரிந்துதான் பெரும்பான்மையானோர் படத்தைப் பார்க்கிறோம். நாயகன் இறந்து விடுவார் என்பது தெரிந்த ஒன்று. நாயகன் இறக்கும் போது நாயகி மற்றோர் முன் அழப் போவதில்லை என்பதையும் முந்தைய உரையாடல்கள் வழி யூகிக்க முடிகிறது.
அப்படி எந்தத் திருப்பமும் இல்லாத, முன்பே தெரிந்த ஒரு சம்பவத்திற்கு நம் மனம் தயாராகி விடும். இதுதான் நடக்கப் போகிறதென்று தெரிந்த பின் பாதிப்பின் கனம் குறைத்து அந்த வருத்தத்தை மூளை ஏற்றுக் கொள்ளச் செய்து விடும். இவை அனைத்தையுமே தாண்டி நம்மை உடையச் செய்வது எது எனச் சிந்தித்தால்…. சாய்பல்லவியின் நடிப்பும் ஜீவியின் இசையும்.
இந்து அழாமல் பார்க்கும் ஒவ்வொரு கணமும் நம் அழுகையில் ஒவ்வொரு கண்ணீர்த் துளி அதிகரிக்கிறது. புரட்சிப் பெண் போல் மிகை நடிப்பில்லாமல் காதலினால் வந்த உறுதியை இத்தனை இயல்பாக அதே நேரம் மனதை உலுக்கும் வண்ணம் வெளிப்படுத்த முடியுமா என்ற வியப்பு இன்னும் என்னிலிருந்து அகலவில்லை.
படம் முடியும் போது நான் அழுவதை யாரும் பார்த்து விடக்கூடாதே… இப்போது விளக்கைப் போட்டு வெளிச்சம் வந்து விடுமே என்ற மெல்லிய பதற்றம் எனக்கு வந்தது. அந்த அளவு தேம்பிக் கொண்டிருந்தேன். விளக்கைப் போட்ட பின் வேகமாக துப்பட்டாவால் கண்களைத் துடைத்து விட்டுப் பார்த்தால் அரங்கில் பெரும்பான்மையோர் அழுது கொண்டிருந்தனர். அத்தனை நேரமும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுளே அஜித்தே’ என்று முன் வரிசையில் எல்லாக் காட்சிக்கும் கத்திக் கொண்டிருந்த கும்பல் ஒன்று அப்படியே அமைதியாகி விட்டது.
இந்த தசாப்தத்தின் சிறந்த நடிகை சாய்பல்லவி. அவரது நடிப்புக்கு இணையாக நின்றிருக்கிறது இசை.
- முகநூலில் பதிவர் சௌம்யா ராகவனின் மனம் கவரும் பதிவு இது…
$$$
2 thoughts on “அமரன் – மேலும் சில பார்வைகள் -2”