அமரன் – மேலும் சில பார்வைகள்- 1

-ஜெயகுமார் ஸ்ரீநிவாசன், காலச்சக்கரம் நரசிம்மா

 ‘அமரன்’ திரைப்படம் குறித்த மேலும் இரு பார்வைகள் இங்கே...

5. பள்ளிக் குழந்தைகள் காண வேண்டும்

-ஜெயகுமார் ஸ்ரீநிவாசன்

ஒரு ராணுவ மேஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகி இருப்பதும் அது மக்களின் மனதிற்கு பிடித்திருப்பதும் தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கமே என்பதற்கான சான்று. 

சில தேச விரோத சக்திகளால் தொடர்ந்து தேசவிரோத, சமூக விரோத சினிமாக்கள் எடுக்கப்பட்டு, அவை வெற்றி பெறுதலை வைத்து தமிழகம் தேசியத்திற்கு எதிரானது என்பது போன்றதொரு மாயையை உருவாக்கிய கழிசடைகளின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இப்படத்தின் வெற்றி. 

இயல்பான காட்சிகள், உண்மைச் சம்பவங்களை அழகாகத் தொகுத்த திரைக்கதை, சிவ கார்த்திகேயனின் உழைப்பு மற்றும் மெனக்கெடல்,,சாய் பல்லவியின் காதல் கொப்பளிக்கும் உடல் மொழி,  நடிப்பு என தோன்றாத சிறப்பான திரையாளுமை, படத்திற்குத் தேவையான உறுத்தாத  இசை, முகுந்தின் பெற்றோராக வருபவர்களின் பாத்திரம் எல்லாம் பார்த்துப் பார்த்து செய்திருக்கின்றனர். 

காஷீமீரக் காட்சிகளைக் கண்டு சில இணைய காகிதப் புலிகள் இஸ்லாமியர்களை இப்படியா காட்டுவது என பொங்கல் வைக்க,  நடுநிலை பேசுவதாக நினைத்துக்கொண்டு லைக்கிற்கு அலையும் சில்லறைகளும் இந்தப் படத்தைக் குறித்து எதிர்மறையாக எழுதி இருக்கின்றனர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் கண் முன்னால் நடந்த பயங்கரவாதத்தை, இப்போதும் கோவை வரை நடக்கும், மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதச் செயல்களை முழுக்க மறைக்க வேண்டும் என்பதே  இவர்களின் எதிர்பார்ப்பு போல. 

மேஜர் முகுந்த் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை திட்டமிட்டு மறைத்து விட்டதைக் குறித்து சிலர் எழுதி இருந்தனர். 

ஆளும்கட்சி திமுக ஆதரவுடன் அதன் கூட்டணி கட்சிகளாலும் இதர சும்ப வீரபாண்டியன் போன்ற ஏவல் நாய்களால் நடத்தப்படும்   பிராமணர்களுக்கு  எதிரான வெறுப்புச் செயல்களுக்கு மத்தியில் இவர்கள் பிராமணர்களைக் குறித்து உண்மை எல்லாம் சொல்வார்கள் என எதிர்பார்ப்பது அதிகம். 

ராஜ்கமல் தயாரிப்பில் படம் வருகையில் முகுந்தை மாட்டுக்கறி உண்ணும் பிராமணராகக் காட்டாமல் விட்டார்களே என மகிழ்கிறேன். 

ஒவ்வொரு மிலிட்டரி ஆப்ரேஷனும் அதை எடுத்திருக்கும் விதத்தில் கலக்கி இருக்கிறார்கள்.  

காஷ்மீரத்தில் இத்தனை பயங்கரவாதங்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வேண்டியோர் மற்றும் ஆதரித்தோர், பயங்கரவாதத்தை ஒழிக்க நம் நாட்டு பாதுகாப்பு படையினருக்கு உதவுவர் இருந்தே வந்துள்ளனர் என்பதையும் இப்படம் பதிவு செய்யத் தவறவில்லை.  இருப்பினும் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு திருப்தியில்லை. 

மேஜர் முகுந்தின் இந்த வாழ்க்கை படம் பல இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்குவிக்கும்; உத்வேகம் அளிக்கும். 

அருமையாக இந்தப் படத்தை எடுத்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 

பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தப்படத்தை அவசியம் காட்டலாம். தமிழக அரசும் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளித்து ஊக்குவிக்க வேண்டும். 

அவசியம் தியேட்டரில் சென்று பாருங்கள். குழந்தைகளையும் அவசியம் அழைத்து செல்லுங்கள்.

  • திரு. ஜெயகுமார் ஸ்ரீநிவாசன், முகநூல் எழுத்தாளர். இது இவரது முகநூல் பதிவு.

$$$

2. திரைப்படத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்

-காலச்சக்கரம் நரசிம்மா

அமரன் படம் அமர காவியம்தான் என்றாலும்,  சில உண்மைகளை அந்த படம் மறைத்து விட்டது .  

முகுந்த வரதராஜன் முழுநேர மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மாணவன் அல்ல. அவர் பி காம். பட்டப் படிப்பு படித்தது,  காஞ்சி ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி கல்லூரியில் தான்.

எம்சிசி கல்லூரி நடத்திய PGDSJ (Post Graduate Diploma School of Journalism) என்கிற எம்சிசி-யின் கிளைப் பள்ளி நடத்திய வகுப்பில்தான் அவர் ஜர்னலிசம் டிப்ளமோ படித்தார் .  

தி ஹிந்துவில்  பணியாற்றிய என்னை, அங்கே வகுப்புகள் நடத்த முடியுமா என்று திரு. ராஜகோபால், திரு. ஜோஜென் என்கிற எம்சிசி கல்லூரிப் பேராசிரியர்கள்  என்னை அணுகினர் .  

அப்போதைய தி இந்து ஆசிரியர் திரு. என்.ரவி அவர்களின் அனுமதியுடன், நான் மூன்று வருடங்களுக்கு (2001-04)  பத்திரிகைத் துறை வகுப்புகளை நடத்தினேன் .  

அதில்தான் ,  முகுந்த் வரதராஜன் 2003-04 காலகட்டத்தில் படித்தார்.  அப்போது அவருக்கு வயது 19. 

காலை ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரையில்  தான் வகுப்புகள் நடக்கும்.  அதன்பிறகு மாணவர்கள் பணியாற்றவோ,  மேற்படிப்பு படிக்கவோ சென்று விடுவார்கள் . 

எம்சிசி நுழைவாயிலில் இருந்து ஜர்னலிசம் வகுப்புகள் நடைபெற்ற வகுப்பு அறைகளுக்கு,  வெகு தூரம் நடக்க வேண்டும் .  

முகுந்த் மற்றும் இதர மற்ற மாணவ மாணவிகள் கல்லூரியின் மெயின்  கேட் அருகிலேயே நின்று, மின்சார ரயிலில் வரும் எனக்காக காத்திருப்பார்கள்.  நான் வந்ததும் ,  அனைவரும்  சிரித்துப் பேசியபடி வகுப்புக்கு செல்வோம். .  

முகுந்த் எம்சிசி யின் முழு நேர மாணவன் இல்லை.  திரைப்படத்தில் அவர் எம்சிசி மாணவன் என்று காட்டி இருந்தனர்.  

முகுந்த் வரதராஜன் தான் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரியப் போகிறேன் என்று வகுப்பில்  சொன்னபோது காரணத்தைக் கேட்டேன்.  அவர் தாத்தா  ராகவாச்சாரி,  அப்பாவின் சகோதரர்கள் அனைவரும்  இராணுவத்தில் பணியாற்றியதாகக் கூறினார், முகுந்த் .  

மிடுக்கான நடை, straight forward பேச்சு, சர்ச்சைகளில் ஈடுபடாமை என்று  ராணுவத்தில் சேர்வதற்கு முன்பாகவே, ஒரு ராணுவ வீரனின் குணநலன்களை கொண்டிருந்தார்.

நான் பெரும் பாக்கியசாலி என்பதற்கு ஆதாரம்,  முகுந்த் வரதராஜனுடன் உறவாட சந்தர்ப்பம் கிடைத்த அந்த நாட்கள்தான்.

  • மூத்த பத்திரிகையாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் ‘அமரன்’ குறித்த இரண்டாவது (நன்றி: முகநூல்) பதிவு இது….

$$$

3 thoughts on “அமரன் – மேலும் சில பார்வைகள்- 1

Leave a comment