ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-2)

-திருநின்றவூர் ரவிகுமார்

நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரெ தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று ராம்நாத் கோவிந்த் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது. இது குறித்து ஒரு முழுமையான பார்வை இங்கே (இது பகுதி-2)….

அரசியல் கட்சிகளின் நிலை

அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்கனவே பார்த்தோம். அதில் பாஜக , என்பிபி (முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பி.ஏ.சங்மா கட்சி) என்ற இரண்டு தேசிய கட்சிகளும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, சிவசேனா, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற மாநில கட்சிகளும் ஆதரித்தன.

கருத்து சொல்லாத கட்சிகள்

பிஹார் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், உ.பி. சார்ந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஹேமந்த் சோரன் , சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பிரகாஷ் சிங் பாதலின் அகாலி தள,ம் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகள் தங்கள் கருத்துக்களை கமிட்டியிடம் பதிவு செய்யவில்லை.

எதிர்த்தவை

தேசிய கட்சிகளில் காங்கிரஸ் , மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,  ஆம் ஆத்மி,  பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை எதிர்த்தன. மாநில கட்சிகளில் திருணாமுல் காங்கிரஸ், திமுக, அதன் கூட்டணி கட்சிகள் என ஒட்டுமொத்தமாக 15 கட்சிகள் எதிர்த்தன.

சொன்ன காரணங்கள் என்ன?

ஒரே தேர்தலை ஆதரித்த கட்சிகள்  ‘செலவு குறையும், நேரம், சக்தி விரையமாவது குறையும், வளர்ச்சி பணிகள் பாதிப்படையாது, ஆட்சி நிர்வாகம் மேம்படும்’ என்று கூறின.

தமிழக சட்டமன்றத்தில்…

திமுக ஒரே தேர்தலை எதிர்க்கிறது.  தமிழக சட்டமன்றத்தில் 2024 பிப்ரவரி 14 தேதி எதிர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. எதிர்ப்புக்கான காரணங்களை அந்தத் தீர்மானத்திலும் முதல்வர் ஸ்டாலின் பேச்சிலும் பட்டியலிட்டது.

 ‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அபாயகரமானது. சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும். நடைமுறை சாத்தியமற்றது. இப்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விடும்’ என்று எதிர்ப்புக்கான காரணங்களை சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.

ஆனால் 1971 இல் அவரது தந்தையும் திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி ஒரே தேர்தலை ஆதரித்துள்ளார். அது மட்டுமின்றி ஒரே தேர்தலுக்காக திமுக ஆட்சிக்காலத்தை ஓராண்டு காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொண்டார். இதோ ஒரு முக்கியமான ஆதாரம்…

“ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரியாக செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படலாம். பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்க வழி வகுக்கும் என்று கருதுகிறேன்…

இன்னும் ஓராண்டு காலம் கழக அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கலாம் என்றாலும் பொது மக்களது நன்மை கருதியும் பாராளுமன்ற தேர்தலுடன் ஒருங்கிணைந்து தேர்தலை நடத்துவதே பொருத்தமாகும்.”

         -மு.கருணாநிதி (நெஞ்சுக்கு நீதி, பாகம் 2 - பக்கம் 273).

கர்நாடக சட்டமன்றத்தில்…

தமிழகத்தை அடுத்து கர்நாடகத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் ஒரே தேர்தலை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தது.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்துக்கும் இணைந்து தேர்தல் நடத்துவதால் தேசிய பிரச்னைகள் முக்கியத்துவம் பெறும்; மாநில பிரச்னைகள் பின்னுக்கு தள்ளப்படும் என்று அந்தத் தீர்மானம் கூறியது. கடும் எதிர்ப்புக்கிடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரள சட்டமன்றத்தில்…

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 10ஆம் தேதி சட்டமன்றத்தில் ஒரே தேர்தலை எதிர்த்து தீர்மானம் போட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கலாச்சார, சமூக, அரசியல் பன்முகத் தன்மைக்கு எதிரானது என்று அந்தத் தீர்மானம் கூறியது.

மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் கட்சி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அடிப்படை தேர்தல் கோட்பாடுகளுக்கு எதிரானது’ என்று சொல்லியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி,  ‘இது ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு வழிவகுக்கும்’ என்று கூறியதுடன், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு இதில் வழியில்லையே என்ற கேள்வியை எழுப்பியது.

காங்கிரஸ் கட்சி  ‘இது ஜனநாயக விரோதம் . கூட்டாட்சி முறைக்கு எதிரானது. மாநில கட்சிகளை ஒழித்துவிடும். ஜனாதிபதி ஆட்சி முறைக்கு வழி வகுக்கும்’ என்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

ராம்நாத் கோவிந்த் கமிட்டி கூறுவது என்ன?

குலாம் நபி ஆசாத் தவிர கமிட்டியில் இருந்த மற்ற (மூன்று) அரசியல்வாதிகள் எவரும் ராகுல் காந்தி கூறியது போல [I know the system well. Because I was born inside the system] ஆரம்பத்தில் இருந்தே ஆளும் கட்சியில் இருந்தவர்கள் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்தவர்கள்; ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் செய்த அட்டூழியங்களையும் அலங்கோலங்களையும் பார்த்தவர்கள்; அதனால் பாதிக்கப்பட்டவர்கள்.

ஆனால் அவர்கள் எல்லோரும் தேசிய கட்சியில் இருந்தவர்கள்; இருப்பவர்கள். மற்ற உறுப்பினர்களும் தேசியவாதிகள் மட்டுமல்ல, மாநில, தேசிய அளவில் பதவியில் இருந்து அனுபவம் பெற்றவர்கள்.

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு இவர்களின் பதில் என்ன?

மத்திய, மாநில அரசுகளுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால்   அரசியல் சாசனம் அளித்துள்ள எந்த அடிப்படை உரிமையும் பாதிக்கப்படாது.

கூட்டாட்சி முறையும் மாற்றி அமைக்காது. இப்போது உள்ளது போலவே தொடரும்.

மத்திய , மாநில அரசுகளின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக அமைப்பில் எந்தவிதமான குறுக்கீடோ மாற்றமோ இருக்காது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது குடிமக்களின்  ஓட்டுரிமையை பாதிக்காது. தேர்தலில் போட்டியிடும் உரிமையையும் தடுக்காது. ஒரு ஓட்டு ஒரு மதிப்பு என்பதை மாற்றாது.

தேர்தல் நடைமுறையில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தேர்தலில் வெளிப்படைத் தன்மையும் நியாயமாக நடத்தப் படுவதையும் எந்த வகையிலும் பாதிக்காது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பதால், மாநிலக் கட்சிகளின் பதிவு, செயல்பாடுகள், தேர்தலில் பங்கேற்பது, கூட்டணி என எதிலும் எந்த விதமான மாற்றமும் ஏற்படாது.

ஜனாதிபதிக்கும் துணை ஜனாதிபதிக்குமான தேர்தல் இப்போது போலவே நடக்கும். அதில் மாற்றம் இருக்காது.

மக்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற, நகராட்சி, ஊராட்சி உறுப்பினர்களுக்கு வழக்கம் போல ஓட்டளித்து தேர்வு செய்வார்கள். தேர்தல் ஜனநாயகத்திற்கு எந்த ஊறும் ஏற்படாது.

நடைமுறைப் படுத்துவது எப்படி?

தமிழக முதல்வர் நடைமுறை சாத்தியமற்றது என்று சொல்லி உள்ளதற்கு, கமிட்டி அறிக்கையிலேயே பதில் சொல்லப்பட்டுள்ளது.

அதற்கு இரண்டு கட்டங்களான அணுகு முறை   சொல்லப்பட்டுள்ளது. முதல் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலையும் அனைத்து சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும். அடுத்த கட்டமாக, உள்ளாட்சித் தேர்தல்களை ஒருங்கிணைக்க வேண்டுமென அந்த கமிட்டி கூறுகிறது.

இதற்காக அரசியல் சாசனத்தில் சில பிரிவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும்,  சில வார்த்தைகளையும் வரையறைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறது அந்த கமிட்டி.

நாடாளுமன்றம், சட்டமன்றத்தின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகளை ‘முழுமையான ஆயுள் காலம்’ என்ற வார்த்தையால் வரையறுக்கச் சொல்கிறது. இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது ‘மீதமுள்ள ஆயுட்காலம்’ என்ற வார்த்தையைக் கொண்டு விளக்குகிறது.

அதாவது, இடைத்தேர்தல் நடந்தால் அங்கிருந்து ஐந்தாண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையாது. மாறாக முழு ஆயுள் காலமான ஐந்து ஆண்டு காலத்தில் விடுபட்டுள்ள மீதி காலத்துக்கு தான் அந்த அரசு அமையும். இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியின் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் அனுமதி தேவையில்லை

இந்த இரண்டு வார்த்தைகளை/ விஷயங்களை அரசியல் சாசனத்தில் வரையறுக்க மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை. அரசியல் சாசனம் பிரிவு 248 படி இதை செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அது மட்டுமன்றி சட்டப்பிரிவு 327 பிரிவும் இந்த அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்குக் கொடுத்துள்ளது.

இந்த மாற்றங்கள் மூலமாகவும் ,  சட்டப்பிரிவு 82 அ என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கும்படி செய்ய முடியும்.

ஆனால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம். 368 (2) பிரிவில் இதற்கு மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 50 சதவீதம் மாநில அரசுகளின் ஆதரவு தேவை.

ஒரே வாக்காளர் பட்டியல்

கோவிந்த் கமிட்டி வேறொரு விஷயத்தையும் சொல்லி உள்ளது. நாடு முழுவதற்குமான ஒரே வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டுமெனக்   கூறியுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம், மாநில அளவில் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க உரிமை பெற்றது. நாடு முழுக்க ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அந்த உரிமையை மாற்றித் தர வேண்டும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டையை விநியோகிக்க வேண்டும். இதற்கு சட்டப்பிரிவு 325 இல் மாற்றம் செய்ய வேண்டுமென கமிட்டி ஆலோசனை கூறியுள்ளது.

எப்போது நடைமுறைக்கு வரும்?

மத்திய அரசு 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் தீ நுண்மீ நோய் தொற்றால் அப்போது நடத்த முடியவில்லை. பிறகு பொருளாதார மீட்டெடுப்பு, இரண்டாம் அலை நோய் தொற்று, அதன் பிறகு தேர்தல் என்று காலம் கழிந்தது.

அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை 2025-26 ஆம் ஆண்டில் நடத்துவதாக உள்ளது. அதன் அடிப்படையில் தொகுதி சீரமைப்பு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகரிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு தான் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மகளிர் இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் ஒப்புதலோடு சட்டம் ஆகிவிட்டது. ஆனால் அமல்படுத்தப்படவில்லை. உயர்த்தப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இதையெல்லாம் செய்த பிறகு அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டிய 2029 இல்  ‘ஒரே தேர்தல்’ முறை நடைமுறைக்கு வரலாம். அல்லது பெருவாரியான மாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டிய ஆண்டில் இது நடைமுறைக்கு வரலாம். இதனால் இப்போது உள்ள நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் குறைக்கப்படும் அல்லது அதிகரிக்கும்.

சவால்கள்

ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் ஆலோசனைகள் இந்திய தேர்தல் முறைமையில் வலுவான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது நிச்சயம் . இதனால் தேர்தல் செலவினங்கள் – நேரம், மனித வளம், பணம், சக்தி – கணிசமாகக் குறையும். ஆட்சி நிர்வாகத்தின் திறன் மேம்படும் என்பதும் திண்ணம்.

ஆனால், இதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு கட்டாயம். இதைப் பெறுவது ஆளும் கட்சியின் – எண்ணிக்கையில் மட்டுமல்ல – அரசியல் நிர்வாகத் திறமையில் தான் இருக்கிறது.

இதற்கு மேல் நீதிமன்றங்கள் உள்ளன. ஆயிரம் தான் சொன்னாலும், அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, வேண்டாத தனி நபர்கள் கூட இந்த விஷயத்தில், அரசியல் சாசனத்திற்கு ஆபத்து என்று நீதிமன்றங்களுக்கு பொதுநல வழக்குகளைக் கொண்டு செல்ல  வாய்ப்புள்ளது. அங்கும் நீதிபதிகள் திருப்தி அடையும்படி இந்த மாற்றங்களைப் பற்றி மத்திய அரசு எடுத்துரைக்க வேண்டும்.

மேற்கண்ட இரண்டும் காலம் பிடிக்கக் கூடியவை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதற்கேற்ப தொகுதி சீரமைப்பு ஆகியவையும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இதுவும் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடும்.

மத்திய அரசுக்கு மட்டுமல்ல, நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் நீதித்துறைக்கும் சவாலான, ஆனால் நாட்டிற்கு பெரும் நன்மை தரக்கூடிய, விஷயத்தை அவர்கள் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(நிறைவு)

$$$

One thought on “ஒரே நாடு ஒரே தேர்தல் – தேவையா? (பகுதி-2)

Leave a comment