வேத காலம்- நூல் மதிப்புரை

-திருநின்றவூர் ரவிகுமார்

பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ் ஒரு வேத விற்பனர்.  ‘வேதகால வாழ்வியல்’ என்ற அவரது புகழ் பெற்ற மராட்டிய நூல் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது. அந்த நூலின் சுருக்கப்பட்ட பதிப்பாக இந்த நூலை சென்னையில் உள்ள சுவாசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வேதம் நான்கு மட்டுமா?

வேதங்கள் நான்கு. அவை ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்பது பொது வழக்கு. ஆனால் நால் வேதங்கள் (மந்திரங்கள்), பிரமாணங்கள் (யாகங்கள் மற்றும் அதன் செயல்முறைகள்), ஆரண்யகங்கள் (யாகங்களைப் பற்றிய விளக்கங்கள், விளைவுகள், அது குறித்த ஆய்வுகள்), உபநிடதங்கள் (தத்துவ சிந்தனைகள்), ஆகியவை எல்லாம் சேர்ந்ததுதான் வேதம் என்று விளக்குகிறார் பாளா சாஸ்த்ரி.

வேதாங்கங்கள் என்று ஆறு துணைப் படைப்புகளும் இருக்கின்றன. அவை வேதத்தின் துணை அங்கங்களாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வேதங்களைப் புரிந்துகொள்ள வழி காட்டுபவை. சிக்ஷவ (மொழியியல்), கல்ப  (சடங்கு சம்பிரதாயங்களுக்கான விதிமுறைகள்), வியாகரணம் (இலக்கணம்), நிருக்தம் (வார்த்தையின் பல்வேறு அர்த்தங்களைச் சொல்வது, அகராதி), ஜோதிடம் (வானவியல்), சந்தம் (ஒலிக் குறிப்புகள்) என்பன ஆறும் வேதாங்கங்கள் (அத்தியாயம் 25) .

வேதாங்கங்கள் ஒலியியலுக்கும் இலக்கணத்திற்கும் மொழியியலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும் போது அது தமிழைப் போலவே செம்மொழியாகத் தெரிகிறது.  ‘செம்மைப் படுத்தப்பட்ட, சமைக்கப்பட்ட’ என்ற பொருளில் தான் அது  ‘சமஸ்கிருதம்’ எனப்படுகிறது.

ஒலியில் இவ்வளவு விஷயமா?

வரி வடிவம் வந்த பிறகும் வேதங்கள் இன்றும் வாய்மொழியாகவே குருகுலத்தில் தங்க வைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்று கேள்வி எழுவது இயல்பே.

வேத மந்திரங்கள் வலிமையானவை. உச்சரிப்பில் சிறிது மாற்றம் வந்தாலும் தவறாகிவிடும். தவறாக மந்திர உச்சாடனம் செய்தால் அது உச்சரித்தவரை திருப்பித் தாக்கி விடும்.

பிராமணர்களில் சிலருக்கு பிறவி ஊனம் இருப்பதற்குக் காரணம் அதுதான். போன பிறவியில் தவறாக உச்சரித்ததால் அல்லது கருவுற்றிருக்கும் போது தவறான உச்சரிப்பைக் கேட்டதால் என்று சங்கராச்சாரியார் சொல்லி உள்ளார் என்று அவரது சீடர்கள், ஊடகங்களிலும் மேடைகளிலும், சொல்லி வருவதை  யாவரும் (யூ-ட்யூபில்) கேட்கலாம்.

அப்படியானால் மற்ற ஜாதியில் ஊனத்துடன் பிறப்பவர்களுக்கு என்ன சொல்வது? ஒரு பிரிவினருக்கு தவறான உச்சரிப்பு என்று குறிப்பாகவும் ஏனைய பிரிவினருக்கு தலைவிதி / போன  பிறவியின் பலன் என்று பொதுவாக கூறுவதும் ஏற்க தக்கதல்ல.

தமிழ் குறைந்ததா?

தமிழ் மொழியை தவறாக உச்சரித்தால் அது தவறான பொருளை மட்டும் தராது, உங்கள் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கண்ணோட்டத்தில் யாராவது தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார்களா என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.

தேவாரத்தில் இன்ன பாடல்களைச் சொன்னால் இன்ன நோய் குணமாகிறது என்பதற்கு இன்றும் பலர் சாட்சிகளாக இருக்கிறார்கள்.

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர் அப்பர் என்று அன்போடு அழைக்கப்படும் திருநாவுக்கரசர் பெருமானார். அவர் திங்களூரில் தனது சீடரான அப்பூதி அடிகளின் மகனை, அரவம் தீண்டி மாண்டவனை, தமிழ்ப் பதிகம் பாடி உயிர்ப்பித்தார் என்கிறது அவரது வரலாறு (நான்காம் திருமுறை – விடம் தீர்த்த பதிகம் 4:18).

அவரும் திருஞானசம்பந்தரும் இணைந்து வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு தலத்தில் பல காலம் பூட்டப்பட்டிருந்த கோயில் கதவை தங்கள் தமிழ் பாடல்கள் மூலம் திறந்து பிறகு பழையபடி மூடச் செய்தனர் (திருமறைக்காடு – திருகுறுந்தொகை).

சென்னையில் உள்ள மயிலாப்பூரில் திருஞானசம்பந்தருக்கு மணம் செய்யக் காத்திருந்த செட்டிப் பெண் பாம்பு தீண்டி மரணித்தார். அவளை , ஆதிசங்கரரால் திராவிட சிசு என்று அழைக்கப்பட்ட, ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவை திருப்பதிகம் (இரண்டாம் திருமுறையில் உள்ளது) பாடி உயிர்ப்பித்தார் என்கின்றன சைவ சமய நூல்கள்.

வைணவ வரலாற்றில்…

மதுராந்தகத்தில் இருக்கும் அகோபில மடத்தில் ஒரு குறிப்பிட்ட பாசுரத்தைச் சொன்னால் குருவி இறப்பதையும் வேறொரு பாசுரத்தைச் சொன்னால்  இறந்த குருவி உயிர் பெற்றதையும் அறிவியலாளர்கள் முன்பு நவீன கருவிகளைக் கொண்டு சோதனை மூலம் நிரூபித்ததை  ‘ந்ருஸிம்ம ப்ரியா’வில் படித்துள்ளேன்.

ஆழ்வார்கள் பதின்மர். அவர்களின் பக்தி சாரர் என கொண்டாடப்படுபவர் திருமழிசை பிரான். இவர் தன் சீடர் கணிகண்ணனுடன் காஞ்சியில் இருந்த போது ஒரு கிழவி இவர்களுக்கு பணிவிடை செய்தாள். அதனால் மகிழ்ச்சி அடைந்த கணிகண்ணன் அவளுக்கு இளமையை அளித்தார்.

அதைக் கேள்விப்பட்ட காஞ்சி மன்னன் தனக்கும் இளமை வேண்ட, ஆழ்வாரின் சீடர் மறுத்தார். அரசன் கோபமுற்று தன் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியேற ஆணையிட்டான். கணிகண்ணன் போக, ஆழ்வாரும் காஞ்சியை விட்டு அகல முடிவெடுத்தார்.

அவர் தாம் வணங்கிய பெருமாளைப் பார்த்து,  ‘கணிகண்ணன் போகிறான். நானும் போகிறேன். நீயும் உன் பாம்பணையை சுருட்டிக் கொண்டு என்னோடு வா’  என்று சொல்லிப் போனார். பெருமாளும் அவ்வாறே ஆழ்வார் பின்னால் காஞ்சியை விட்டு நீங்கினார்.

காஞ்சி பொலிவிழந்தது. மன்னன் மனம் திருந்தி விலகிச் சென்றவர்களை அழைத்தான். ஆழ்வார் சீடருடன் வந்தது மட்டுமல்லாமல், பெருமாளைப் பார்த்து, ‘நீயும் உன் பைநாகணையை விரித்துக் கொள்’ என்று சொல்ல பெருமாள் அவ்வண்ணமே செய்தார். அதனால் அவர்  ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’  -யாதோத்காரி – என்று இன்றும் வணங்கப்படுகிறார்.

ஸ்வாமி நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி (நாலாயிர திவ்ய பிரபந்தம்) ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி ஐந்தாம் பாசுரத்தில்,  ‘மரணம் தந்து வைகுண்டம் கொடுக்கும் பிரான்’  என்று இருந்ததால் மக்கள் திருவாய்மொழியை ஓதுவதையே தவிர்த்து விட்டார்கள் என்றும், நாலாயிர திவ்ய பிரபந்தம் மக்களிடையே வழக்கொழிந்து போய்விட்ட நிலையில் நாதமுனிகள் என்ற வைணவ குரு ஸ்வாமி நம்மாழ்வார் முன்பு தவமியற்றி நாலாயிரத்தையும் மீட்டார் என்றும், பிறகு மேற்சொன்ன பாசுரத்தில் உள்ள வரியை மரணத்துக்கு பிறகு வைகுந்தம் என்று மாற்றி விட்டதாகவும்,  ‘வைணவமும் ஆழ்வார்களும்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது (ஆசிரியர்: தேவராஜன், திருச்சி, சந்தியா பதிப்பகம்).

ஒலிப்புக்கு அப்பால்…

எனவே வேதத்தைக் கற்பதில் உச்சரிப்புக்கு மாத்திரம் முக்கியத்துவம் என்பது அல்ல. உடல், மனத் தூய்மையையும், பிறர் நலனைச் சிந்திக்கின்ற வாழ்வியலையும் நிபந்தனையாக வைக்கிறது வேதம்.

வள்ளுவர் கூற்றில்…

கம்யூனிஸ, திராவிடக் கட்சிகளால் இன்று ஹிந்து வேதங்களுக்கு எதிராக நிறுத்தப்படும்  திருக்குறளிலும் கூட, தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இதையே குறிப்பிடுகிறார்.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். 

     (திருக்குறள்- 134)

பிராமணன் உயர்ந்த குலத்தான் என்பது அவன் வேதம் ஓதுவதால் அன்று. வேதம் ஓதுவதை மறந்து விட்டாலும் குற்றமில்லை. தன்னுடைய ஒழுக்கத்தில் குறைந்தால் அவன் உயர்குலத்தான் என்பது அழிந்து போகும். (நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை உரை).

வேறொரு இடத்தில் தெய்வப் புலவர் கூறுகிறார்:

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழகலான். 

    (திருக்குறள் – 30)

வேதம் கற்க இப்படிப்பட்ட வாழ்வியலை நிபந்தனையாக வைத்ததுதான் அதன் சிறப்பு. பலவீனமும் அதுதான்.

வேதம் விதிக்கின்ற நிபந்தனைக்கு ஏற்ப வாழ முடியாத சூழ்நிலை இன்று சமுதாயத்தில் நிலவுகிறது. வேதத்தை, வேத விற்பனர்களை, வேதம் கற்பவர்களை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய, வேதம் நலிவடைந்து வருகிறது. இது காலத்தின் கோலமன்றி வேறென்ன?

தோற்றம் குறித்த வேறுபாடுகள்

எந்த ஒரு மதமாக இருந்தாலும் அதன் மூல நூல், உலகம், அதில் உயிரினங்கள் தோன்றியது பற்றி பேசுவதைப் பார்க்கலாம். ஆப்ரகாமிய மதங்கள் (யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள்) இறைவன் ஆறு நாட்கள் தொடர்ந்து படைப்புத் தொழிலில் ஈடுபட்டு உலகை உருவாக்கினார் என்றும் ஏழாம் நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்றும் கூறுகின்றன.

இறைவன் ஆணின் விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்தான் என்கிறது விவிலியம். (ஆதியாகமம் 2: 21-25). படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களிலும் ஆரம்பத்தில் ஆண் பெண்ணென ஒரே ஒரு ஜோடியைத் தான் இறைவன் படைத்தான் என்பதை ஆபிரகாமிய மதங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்கின்றன.

இது, யாரும் யாருடனும் புணரலாம் என்ற பழங்குடி கூட்டு சமூக வாழ்வியலுக்கு வித்திட்டது. அது  கிரேக்க, ரோமானிய நாகரிகக் காலத்திலும் தொடர்ந்தது. தந்தையை மது மயக்கத்தில் ஆழ்த்தி அவரைப் புணர்ந்த மகள்களின் கதை விவிலியத்தில் இருக்கிறது. இதுவே மனித நாகரிகத்தின் வளர்ச்சி படிக்கட்டுகள் என்று ஏங்கல்ஸ், மார்க்ஸ், ராகுல சாங்கிருத்தியாயன் ஆகியோர் முன்வைத்தனர். இது வேதகால மக்களுக்கும் பொருந்தும் என்கிறார் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவரான எஸ்.ஏ.டாங்கே.

வேதங்களில் அக்னி பற்றி இருக்கும் ஸ்லோகங்கள் பழங்குடி வேத மக்கள் நெருப்பைக் கண்டுபிடித்ததையும், அது அவர்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதையும் குறிப்பிடுகிறது என்கிறார் டாங்கே.  ‘ஒன்றாக மது அருந்தி, விருந்து உண்டுவிட்டு, நெருப்பைச் சுற்றி ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். பிறகு உறவுமுறை இன்றி தங்களுக்குப் பிடித்தவர்களோடு கூடினார்கள். கூட்டு சமூக வாழ்க்கையை வாழ்ந்தார்கள் வேதகால மக்கள்’ என்று,  டாங்கே தனது மேற்கத்திய ஆசான்கள் கூறியதை, சுயசிந்தனையற்று அப்படியே வழிமொழிந்துள்ளார்.

ஹிந்து வேதங்கள் சொல்வது என்ன?

ஆனால் இவையெல்லாம் உண்மையா? உலகின் தோற்றம் பற்றியும் அதில் உயிரினங்கள் உருவானது பற்றியும் வேதங்கள் என்ன சொல்கின்றன?

கடவுளா யார் அது?

ரிக் வேதத்தில் வேதரிஷி தீர்க்கதமஸ் சொல்கிறார்:

‘பரமாத்மாவே இந்த உலகைப் படைத்து நிலை நிறுத்தியும் வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பௌதீக உலகை நிலைநிறுத்தி வரும் பிறப்பு இறப்பு இல்லாத, எலும்பும் சதையும் இல்லாத, வடிவமும் உருவமும் இல்லாத, அந்த பரப்பிரம்மத்தை யார் பார்த்திருக்கிறார்கள்? அந்த பரமாத்மா பிறந்த போது இந்த பருப்பொருளும் ஆன்மாவும் இந்த உலகில் இருக்கும் அனைத்தும் எங்கு இருந்தன என்று நான் கேட்கவா? இவை எல்லாவற்றையும் அறிந்தவராகச் சொல்லப்படும் அந்தப் பரமாத்மாவை யாரேனும் பார்த்ததுண்டா? இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டதுண்டா?’

     (ரிக் வேதம் 1:164)
       (நூலில் பக். 119)

இறைவன், படைத்தவன் என்ற கருத்தையே கேள்விக்குள்ளாக்குகிறார் வேத ரிஷி தீர்க்கதமஸ். இப்படியிருக்க ஆறுநாள் படைப்புத் தொழிலைச் செய்தார். பிறகு தனியே சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது இயல்பாகவே தூள் தூளாகி விடுகிறது.

வேதரிஷி தீர்கதமஸை மேற்கோள் காட்டிய பாளா சாஸ்திரி ஹர்தாஸ் அடுத்ததாக படைப்பைப் பற்றி வேதத்திலுள்ள  ‘நாசதீய சூக்த’த்தை விளக்குகிறார்.

உயிரினங்களின் தோற்றம் பற்றி ஹிந்து வேதங்கள்

சூரியன் உதிக்கும்போது அதன் கதிர்கள் பூமி எங்கும் பரவுவது போல சிருஷ்டி நடந்தது. பல வடிவங்களில், உருவங்களில், பெயர்களில் வெளிப்பட வேண்டும் என்று பரமாத்மாவின் மனதில் ஒரு சலனம், விருப்பம் உருவானது.

இந்த ஆதி விருப்பம் அல்லது ஆதி அதிருப்தியே, அந்த அழிவற்ற, முடிவற்ற பரப்பிரம்மத்தின் மனதில் ஏற்பட்ட தூண்டுதலுக்குக் காரணம். ஆதி விருப்பம் அல்லது ஆதி அதிருப்தியே பிரபஞ்சம் உருவாக்கத்திற்கான காரணம் என்று அதர்வண வேதம் சொல்கிறது.

இறைவன் என்பவன் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சமே இறைவனின் வடிவம். நாம் காணும் எல்லா வடிவங்களிலும் உருவங்களிலும் உயிர்களிலும் இறைவன் இருக்கிறான், வெளிப்படுகிறான் என்கின்றன  ஹிந்துவின் வேதங்கள்.

அதுமட்டுமன்றி, இனத்துக்கு ஒரு ஜோடியைப் படைத்தான் என்பதன்றி, உலகின் எல்லா பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக படைப்பு நிகழ்ந்தது. சூரியன் உதிக்கும்போது அதன் கதிர்கள் பரவுவது போல சிருஷ்டி உலகமெங்கும் நடந்தது என்று கூறுகின்றன இந்து வேதங்கள்.

அறிதலும் அதற்குப் அப்பாலும்…

ஆனால் அந்த பரப்பிரம்மத்துக்கும் கூட அது தெரியாமல் இருக்கலாம் என்று வேதரிஷி தீர்க்கதமஸ் சொல்கிறாரே என்றால், அது பரப்பிரம்மத்தின் போதாமை காரணம் அல்ல. அறிதல், ஞானம் என்ற ஒன்று, சிருஷ்டிக்குப் பின்னர் வரக்கூடிய விஷயம்.

உலகம், பிரபஞ்சம் என்று நாம் அறிந்து வைத்துள்ள விஷயங்கள் நம் புரிதலுக்கு முன்பாக பரப்பிரம்மமாக, இருந்தது என்பதிலும், பிரபஞ்சம் (நம் அறிதல்) அழிந்த பின்னரும் அது (பரப்பிரம்மம்) மட்டுமே எஞ்சும் என்பதிலும் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று வேதப் பாடல்களைக் கொண்டு விளக்குகிறார் பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ்.

மார்க்ஸ் முல்லரும் அரசியலும்

விவிலியத்தின் படி உலகம் படைக்கப்பட்டு நான்காயிரம் ஆண்டுகள் ஆகின்றன. வேதங்களைப் படித்து அவற்றை மொழிபெயர்த்தவர் ஜெர்மானிய அறிஞர் மார்க்ஸ் முல்லர்.

வேதங்கள் அநாதி (என்று தோன்றியது என்று கூற முடியாதபடி தொன்மை வாய்ந்தது) என்ற ஹிந்துக்களின் கூற்றை கிறிஸ்தவரான மார்க்ஸ் முல்லரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே வேதங்களின் காலம் பொதுயுகத்துக்கு முன் 1200 ஆண்டுகள் என்றார். வேத காலத்தை நிர்ணயம் செய்வதன் பின்னணியில் இருந்த இந்த அரசியலை அம்பலப்படுத்துகிறார் பாளா சாஸ்திரி.

பிரளயம் ஏற்பட்டதை (நோவாவின் படகு) ஏற்றுக் கொள்ளும் மேற்குலகு அதற்கு முன்பிருந்ததை தங்களது தவத்தால் (தியானத்தால், நினைவாற்றலால்) வேதரிஷிகள் மீட்டெடுத்தனர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் என்ற கேள்வி, நூலைப் படிப்பவருக்கு ஏற்படுவது இயல்பு. அதற்கு ஒரே காரணம் பாரதம் ஆயிரம் ஆண்டுகள் தேங்கிப் போனதும் ஐரோப்பியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததும்தான்.  

காலும் அதற்குக் கீழும்

நம்மூரில் வேதம் என்று ஆரம்பித்தாலே, தலையில் பிறந்தான்… தொடையில் பிறந்தான்.. காலில் மிதித்தான்… என்று மேடைதோறும் பேசுவதைக் கேட்கலாம். ஆரம்பத்தில் நான்கு வர்ண பிரிவுகள் இல்லை, மூன்று தான் இருந்தது என்பதை ரிக் வேதத்திலிருந்து சான்றோடு சாஸ்திரி கூறுவது (பக் – 156) சுவாரஸ்யமான தகவல். அதேவேளையில் புருஷ சூக்தத்தில் நால்வகை பகுப்புகள் உள்ளதையும் சுட்டிக்காட்ட அவர் தயங்கவில்லை.

‘பஞ்சவர்ணம்’ என்றும் வர்ண சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் வேத காலத்தில் யாரையும் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார்.  ‘இன்று பட்டியல் இனத்தினர் பலரும் தம்முடைய முன்னோர் உயரிய நிலையில் இருந்ததாகச் சொல்வதெல்லாம் வெறும் அடையாள மீட்பு அல்லது போலியான மிகைப் பெருமை அல்ல’ என்று பாளா சாஸ்திரி கூறுவது கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.

தாக்குதல் திட்டமிட்டா, அறியாமலா?

வேதங்களை, ஹிந்துக்களின் தத்துவங்களை, வாழ்வியலை திட்டமிட்ட ரீதியில் தாழ்த்துகின்ற,  கேவலப்படுத்துகின்ற கும்பல் ஒருபுறம் என்றால், விஷயம் தெரியாமல் அறியாமையால் ஊறுவிளைவிப்பவர்கள் இன்னொரு வகை.

ஒருவருக்கு உணவு கிடைக்கவில்லை பட்டினியாக இருக்கிறார்; இன்னொருவருக்கு வேலை கிடைக்கவில்லை கஷ்டப்படுகிறார், என்றால் அது ஆட்சியாளர்களின் திறமையின்மை என்பதற்குப் பதிலாக அவர் கஷ்டப்படுவதற்குக் காரணம் அவர் செய்த கர்மா என்று வினைக் கொள்கையைக் கொண்டு பதில் சொல்கிறார்கள்.

தயானந்தர் தெளிவுபடுத்துகிறார்:

தயானந்த சுவாமியிடம் நேர்காணலில் ஒருவர்,   ‘ஹிந்துக்கள் கல்வி அறிவில்லாமல்  வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அதைப் போக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு தயானந்தர், ‘நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? பசியைப் போக்குவது, கல்வியைக் கொடுப்பது, வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது ஆட்சியாளர்களின் வேலை. அதைச் செய்ய அவர்கள் தவறுகிறார்கள். நீங்கள் அங்கு கேட்க வேண்டிய கேள்வியை இங்கு கேட்கிறீர்கள். நான் ஆன்மிகவாதி. பசியைப் போக்குவது என் வேலை அல்ல. பசியை தாங்கிக் கொள்வது எப்படி என்று வேண்டுமானால் என்னால் சொல்லித் தர முடியும்’ என்று தன் பதிலைத் தொடங்கினார்.

தொடர்ந்து, அவரது ஆன்மிக அமைப்பின் மூலம் எத்தனை கல்வி நிலையங்கள், எத்தனை தொழில் பயிற்சி மையங்கள், சுயதொழில் பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன என்பதையும், பயிற்சி பெற்றவர்களுக்கு என்ன விதமான உதவிகள் செய்யப்படுகின்றன என்பதையும், பயனடைந்தோரின் எண்ணிக்கை அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் வரிசையாக பட்டியலிட்டுச் சொன்னார்.

கேள்விக்கு பதிலைச் சொன்னார். அதேவேளையில் கேள்வியில் இருந்த அறியாமையையும் சுட்டிக்காட்டினார். கேள்வியாளர் குதர்க்கமாகக் கேட்டிருந்தாலும் சரி, அறியாமையில் கேட்டிருந்தாலும் சரி, இரண்டிற்கும் தயானந்தர் பதில் கொடுத்தார்.

என் உணவு, என் உரிமை…

அதேபோல, மாமிச உணவு. ஹிந்தி தெரியாது போடா என்று வீர வசனம் பேசும் நம்மூர் திராவிட சிந்தனையாளர்களும் கம்யூனிஸ்டுகளும் வடமொழியில் உள்ள ஹிந்து வேதங்களில் மூழ்கி,  ‘யாகத்தில் பசுவை பலியிட்டார்கள். பலியிட்டதை சாப்பிட்டார்கள். சோம பானம் என்னும் சாராயம் அருந்தினார்கள்’ என்று அலப்பரை செய்வதைப் பார்க்கிறோம். ராகுலசாங்கிருத்தியாயன், டாங்கே போன்றவர்களைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.

யாகத்தில் பலியிடப்படும் விலங்குகள், அது குதிரையோ ஆடோ மாடோ கோழியோ எப்போதும் ஆண் வர்க்கம்தான் என்பதையும், பெண்ணினம் பலியிடுவதில்லை என்பதையும் சான்றுகளோடு எடுத்துக் காட்டுகிறார் சாஸ்திரி. அதேபோல சோமரசம் என்பது டாஸ்மாக் அல்லது கள்ளக்குறிச்சி சரக்கு போன்ற போதை அல்ல என்பதையும் (பக்கம் 285) விளக்கியுள்ளார்.

மரக்கறி உணவு மட்டுமே என்பது சிலருக்கு விதிக்கப்பட்ட நிலையில், ஏனையவர்க்கு இறைச்சி அனுமதிக்கப்பட்டது; மறுக்கப்படவில்லை என்பதையும், செத்த மாட்டை சாப்பிட சில பிரிவினருக்கு அனுமதியும் இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

மோட்சக் கொள்கை

இதுபோன்ற அறியாமைகளில் ஒன்று மோட்சம் பற்றியது. என் நண்பர் அடிக்கடி சொல்லுவார்,   ‘ஹிந்துவுக்கு சமயவுணர்வு  அதிகரித்தால் அவன் சாதுவாகி (மென்மையாகி விடுதல் மற்றும் துறவறம்) விடுகிறான்; கிறிஸ்தவனோ மதமாற்றத்தில் தீவிரமாகி விடுகிறான்; முஸ்லிமோ வெடிகுண்டு வைக்கிறான்’  என்று. முக்திக்கு முயற்சித்தல், மோட்சம் அடைய வழி தேடி இமயமலையில் திரிதல் அல்லது திருவண்ணாமலை குகைகளில் உட்கார்ந்து கொள்ளுதல் என்று தனித்து சமுதாயத்தில் இருந்து விலகி ஒதுங்கி செல்வதைத் தான் அவர் அப்படி விமர்சிப்பார்.

மோட்சம் என்பது ஒரு தனி நபர், தனியாக, புற உலகில் இருந்து ஒதுங்கிச் சென்று அடைய வேண்டியது என்ற எண்ணம் தவறு. மாறாக, ஒரு தனி நபர் தன்னை பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக பிரபஞ்சத்துடன் தன்னை அடையாளம் கண்டு கொள்வது தான் மோட்ச தத்துவத்தின் அடிப்படை. எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துச் செல்லும் கோட்பாடு அல்ல அது. உயிருள்ள, உயிரற்ற அனைத்துடனும் ஒன்றிணைதலை முன்வைக்கக்கூடியது (பக்கம் 149) என்கிறார் பாளா சாஸ்திரி.

ஸ்ரீ அரவிந்தரும் அவரது குருவும்

யோகத்தைப் பற்றிய தனது நூலில் மகரிஷி ஸ்ரீ அரவிந்தரும் இதைத் தான் கூறியுள்ளார். அவரது குருவான சுவாமி விவேகானந்தரும் இதையே,  ‘மூர்க்க தேவோ பவ’ ,  ‘தரித்திர தேவோ பவ’  என்று விளக்கியுள்ளார். இதற்கெல்லாம் அடிப்படை, பிற உயிர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது, அவற்றின் துன்பம் துயரங்களைப் போக்க பணி செய்வது,  அதுவே முக்தி என்பதை ஐந்து பக்கங்களில் விளக்கியுள்ளார் பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ்.

இது யாருடைய நாடு?

இது ஹிந்துக்களுக்கு மட்டுமேயான தேசம் அல்ல, எல்லோருக்குமான நாடு என்று மதச்சார்பற்ற வெறிக் கூச்சல் எழுவதைக் கேட்கிறோம். இக்கூச்சலை எழுப்பும் ஓட்டுப் பொறுக்கிகள் தேசபக்தி அற்றவர்கள் என்று கூற முடியாது. ஆனால் தேசியம் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

ஹிந்து வேதங்களில் தேசபக்தி, தேசியம் பற்றிய கருத்துக்கள் என்ன என்பதையும் அது எப்படி பொதுவாக உலக நாடுகளில் சொல்லப் படுவதிலிருந்து வேறுபட்டது என்பதையும் பாளா சாஸ்த்ரி சான்றுகளோடு எடுத்துக் கூறுகிறார்.

தேசமும் தேசபக்தியும்

தந்தை நாடு, தாய்நாட்டுப் பற்று என்ற கோட்பாடுகள் எல்லாம் தாய்நாடு மாறும் போது (குடியுரிமை) மாறக் கூடியவையே. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் பிறந்தது ஒரு விபத்து என்று நினைக்கிறார்கள். அதேவேளையில் இங்கிருந்து வெளியேற முடியாத காரணத்தால் இதை அவர்கள் தங்கள் மத கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றத் துடிக்கிறார்கள். அப்படி பிளவு பட்டதுதான் பாகிஸ்தான். ஆனால் ஹிந்துக்கள் பாரத நாட்டை தங்கள் தாய்நாடாக, புனித பூமியாக மட்டுமல்ல, அதை விட மேலாக கர்ம பூமியாக மதிக்கிறார்கள்.

பாரதத்திற்கு வெளியே, புனித பூமியும் இல்லை கர்ம பூமியும் இல்லை.

எல்லா வேத சடங்குகளும் சம்பிரதாயங்களும் இந்த பாரத மண்ணில் செய்யப் பட்டால்தான் பலன் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. விண்ணுலகத்தை ஆண்ட பலி சக்கரவர்த்தி அங்கு அஸ்வமேத யாகம் நடத்த முடியாதென்பதால் நர்மதை நதிக்கு வடக்கே இருக்கும் பகுதிக்கு வந்து சேர்கிறார் என்று பாகவத புராணத்தில் எட்டாவது ஸ்கந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்று பாளா சாஸ்திரி எடுத்துக் காட்டுகிறார் (பக்கம் 142) . அதர்வண வேதத்தில் (12:1)  ‘இந்த பாரத பூமியே கர்ம பூமி, தவ பூமி’ என்று கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

ஹிந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?

‘ராஷ்ட்ர’  என்ற வார்த்தை வேதங்களில் பல இடங்களில் காணப்படுகிறது. சில இடங்களில் அது ராஜ்ஜியம் (அரசு) என்ற பொருளிலும், சில இடங்களில் தேசம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாம்ராஜ்யம் (அரசு) என்ற அர்த்தம் மட்டுமே சரியானது என்ற கூறுவது தவறு. அதுமட்டுமன்றி அரசு என்பதற்கும் தேசம் என்பதற்குமான வேறுபாடு வேதகாலத்திலேயே (வேதங்களிலேயே) தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தின்படி இந்திய அரசு மதச்சார்பற்ற அரசு. ஆனால் தேசம், தேசியம் என்னும் போது பாரதம் ஹிந்து ராஷ்ட்ரமாகவே இன்றும் இருக்கிறது. ஹிந்துத்துவா (ஹிந்து தன்மை) இருப்பதால்தான் இந்தியாவில் அனைத்து மதங்களையும் அரவணைக்கும் போக்கு அரசுக்கு இருக்கிறது. மேலைநாடுகளில் மதச்சார்பின்மை என்றால் மதங்களிடமிருந்து அரசு விலகி இருப்பது என்ற பொருள் கொள்ளப்படுகிறது.

இப்போ எதுக்கு வேதம்?

தொழில் புரட்சியையும் கம்ப்யூட்டர் யுகத்தையும் கடந்து செயற்கை அறிவு என்ற காலகட்டத்திற்கு வந்து விட்டோம். இந்நிலையில் வேதம் பற்றியும் வேதகாலச் சிந்தனைகள், வாழ்வியல் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையென்ன என்ற கேள்வி எழுவது இயல்பே.

நம் தேசத்தின் கடந்த காலம் திராவிட கட்சியினரும் இந்திய கம்யூனிஸ்ட்களும் அவர்களது மேற்கத்திய ஆசான்களும் கூறுவது போல கேவலமானது அல்ல; தாழ்வானது அல்ல;காட்டுமிராண்டித்தனமானது அல்ல. மாறாக, அது உயர்வானது; மகத்தான சாதனைகளை நிகழ்த்தியது; உலகிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலம் தாழ்வு மனப்பான்மை அகலும்.

இன்று உலகில் ஆதிக்கம் செய்து கொண்டிருக்கும் மேற்கத்திய சிந்தனைகள் தாழ்வானவை மட்டுமல்ல, உலகை அழிவுக்கு இழுத்துச் செல்பவை என்பதும் புரியும். நாம் வேதகால வாழ்க்கைக்கு மீண்டும் செல்ல முடியாது என்றாலும் கூட, நாம் அதன் பலவீனமான வாரிசுகள் என்பது பெருமித உணர்வை ஏற்படுத்தும்.

வேத சிந்தனைகளை, கருத்துக்களை இக்காலத்துக்கு ஏற்ப எப்படிச் செயல்படுத்தலாம் என்ற எண்ணம் எழும். ஆயிரம் ஆண்டுகள் தேங்கிப் போன பாரதீய சிந்தனையை மீண்டும் வீறுடன் எழுச்சி பெறச் செய்ய வேண்டும் என்று கூறி நூலை நிறைவு செய்கிறார் பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ்.

***

நூல் விவரம்:

வேதகாலம் (சுருக்கப்பட்ட பதிப்பு)
ஆசிரியர்: பாளா சாஸ்த்ரி ஹர்தாஸ்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

முதல் பதிப்பு: 2024
302 பக்கங்கள்; விலை: ரூ.  340/-

வெளியீடு:
சுவாசம் பதிப்பகம்,  பொன்மார், சென்னை -127
தொடர்புக்கு: சுவாசம் பதிப்பகம்

$$$

One thought on “வேத காலம்- நூல் மதிப்புரை

  1. தவறான​ உச்சரிப்பு மட்டுமே காரணம் என்று சொல்லவில்லை. அதுவும் ஒரு காரணம். இரண்டாவது எப்படி வேதம் ஓதினால் சமுதாய​ நன்மைகள் வருமோ அது போன்றே தீமைகளும் என்று நினைவில் கொண்டு ஒட்டுமொத்த​ சமுதாயமும் செயல்படுதல் அவசியம்.

    Like

Leave a reply to Ravi Shankar Cancel reply