காஷ்மீரில் ஒழியுமா பயங்கரவாதம்?

-திருநின்றவூர் ரவிகுமார்

இன்னும் சில தினங்களில் (அக். 8) யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இத்தருணத்தில், ஜம்மு காஷ்மீரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்கிறது, திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இந்தக் கட்டுரை….
2019க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர்…

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  (5 ஆகஸ்ட் 2019) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 370 சட்டப் பிரிவை நீக்குவதற்கான சட்ட வரைவை முன்வைத்தார். அது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு அது உடனடியாக அமலுக்கு வந்தது.

அது மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019இன் படி, அம்மாநிலம், ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. ஆளுநர் ஆட்சியின் கீழ் அம்மாநிலம் இருந்ததைக்கொண்டு, தற்போதைய மத்திய அரசு சமயோசிதமாக இம்முடிவை எடுத்தது. மேலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை வழங்கப்படக் காரணமான அரசியல் சாசனத்தின் 35ஏ பிரிவும் நீக்கப்பட்டது.

இதனால் காஷ்மீர் பற்றி எரியும் என்று எதிர்பார்த்து மூன்று நாட்கள் முன்னதாகவே அமர்நாத் புனித பயணத்தில் இருந்த ஹிந்துக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்; பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் நடந்தது என்ன?

மாநிலம் ஸ்தம்பித்து, அமைதியில் உறைந்தது. அரசியல் கட்சிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்க, கல் எறிதல் தொடங்க குறைந்தது பத்து நாட்கள் ஆனது. ‘ஆரம்பத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில வன்முறைச் சம்பவங்கள் நடந்தனவே தவிர, பெரிய அளவில் வன்முறையும் போராட்டமும் வெடிக்கவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பெருமளவுக்கு மாநிலம் முழுக்கவும் அமைதியே நிலவியது’ என்று பெயர் சொல்ல விரும்பாத காவல் துறை உயர் அதிகாரி கூறியுள்ளார் (ஹிந்துஸ்தான் டைம்ஸ்- 5.8.24).

நீதிமன்றமும் அரசியலும்

அடுத்த நாளே உச்ச நீதிமன்றத்தில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.  ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 370 சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்துவோம்’ என்றது காங்கிரஸ் மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள். உச்ச நீதிமன்றம்  ‘370 சட்டப்பிரிவை நீக்கியதே சரி’ என்றது.  இனி அதை மீண்டும் உயிர்பிக்க முடியாது என்பது உறுதியானது.

அதேசமயம், அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்துமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பயங்கரவாதச் சூழல் காரணமாக தள்ளிப்போடப்பட்டு வந்த சட்டசபைத் தேர்தலையும் வெற்றிகரமாக, எந்த ஒரு அசமபாவிதமும் இல்லாமல் நடத்தி முடித்தாகி விட்டது. மூன்று கட்டமாக நடந்த தேர்தலில், சராசரியாக 63.8 % வாக்குகள் பதிவாகின.

சரித்திரத் தவறு

1947இல் ஒரு சிறு கணத்தில் செய்யப்பட்ட தவறுகளால் ஆண்டுக் கணக்காகத் தொடரும் வேதனைகளை வரலாறு கண்டுள்ளது. 370 சட்டப்பிரிவு என்பது அப்படிப்பட்ட ஒரு தவறு. பல ஆண்டுகள் தொடர்ந்த துயரம். முதன்முதலில் காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் நடத்திய போரின் போது, திடீரென்று இந்தியப் படைகளின் முன்னேற்றத்தை நிறுத்தி பிரச்னையை ஐ.நா.சபைக்குக் கொண்டு சென்றார் அன்றைய பிரதமர் நேரு. அடுத்த பத்து ஆண்டுகளில் ஐ.நா. சபையில் பதிமூன்றுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக போடப்பட்டன. அதுபோன்ற அத்தனை அவமானங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு காணவே 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.

அப்படியானால் இன்று அந்த மாநிலம் இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைந்து விட்டதா? அங்கு அமைதி நிலவுகிறதா? அம் மாநிலம் வளர்ச்சி கண்டு உள்ளதா? வன்முறைச் சம்பவங்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் நின்று விட்டனவா? என்றெல்லாம் கேள்விகள் எழும்புகின்றன. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் முன்பு சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

பாகிஸ்தான்

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள்  ‘பாஜக புகுந்துவிடும்’ என்று பூச்சாண்டி காட்டுவது போல, பாகிஸ்தானில் இந்தியா புகுந்துவிடும்; ஆதிக்கம் செலுத்தும் என்று சொல்லாத பிரதமர் யாருமே இல்லை. எல்லோருக்கும் அங்கு ஆட்சியில் நீடிக்க இந்தியா பூச்சாண்டி தேவைப்பட்டது. பாகிஸ்தானிய ராணுவம் அவ்வப்போது மத உணர்வைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும்; இஸ்லாமிய கோட்டை பாகிஸ்தான்  என்ற கோஷத்தை முன்வைத்து ‘இஸ்லாமிய அணுகுண்டை’ வாங்கி வைத்துள்ளது. ஆனாலும் பிரயோஜனம் இல்லை. தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. எனவே பயங்கரவாதப் பட்டறையை நியாயப்படுத்துகிறது.

பனிப்போர் அரசியல்

பனிப்போர் அரசியலில் காஷ்மீர் பகடைக் காயானது. ஏற்கனவே சொன்னது போல 1948 ஐ.நா.வுக்கு பிரச்னையை இந்தியா கொண்டுசென்ற பிறகு அடுத்த 10 ஆண்டுகளில் 13 தீர்மானங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் போடப்பட்டன. லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் தான் அந்தப் போக்கில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

காஷ்மீர்ப் பிரச்னையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றது; நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பெற்றது. அமெரிக்கா பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவை உளவு பார்க்கவே, 1960 களில் பாகிஸ்தான் மண்ணிலேயே இரண்டு அமெரிக்க உளவு விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது. 1970 களில் அமெரிக்கா- சீனா ரகசிய சந்திப்புகள் பாகிஸ்தானில் நடந்தன என்பது உலகறிந்த ரகசியம். ரஷ்யாவை எதிர்க்க ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களுக்கு பாகிஸ்தான் மூலமாக அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. அந்த ஆயுதங்கள் காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டன. அதனால் அந்த மாநிலத்திலே பயங்கரவாதம் வளர்ந்தது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இஸ்லாமிய மதவுணர்வு

பாகிஸ்தானை விட அதிக முஸ்லிம்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். ஜம்முவிலும் லதாக்கிலும் தான் மிக அதிகமாக புத்த சமயத்தினர் வசிக்கின்றனர். காஷ்மீர் முஸ்லிம்களிடையே பின்பற்றப்படும் சூஃபி இஸ்லாமியப் பிரிவுக்கும் வஹாபியிஸ  தீவிர இஸ்லாத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஷேக் அப்துல்லாவின் தாத்தா ஒரு ஹிந்து. ஷேக் அப்துல்லாவே ‘காஷ்மீர் முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாமானது  சைவ சமயம், புத்த சமயம், ரிஷிகளை, மகான்களை வழிபடுவது, கொஞ்சம் பழமை வாத இஸ்லாம் ஆகியவற்றின் கலவை’ என்று சொல்லி உள்ளார்.

ஆனாலும் இந்த காஷ்மீரியத்- காஷ்மீரத் தன்மையுடன் கூடிய இஸ்லாம் -1984இல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிந்துக்கள் தாக்கப்பட்ட போது அதைத் தடுக்கவில்லை; ஹிந்துக்களைப் பாதுகாக்கவில்லை என்பது சோகம்தான். என்றாலும் பயங்கரவாதச் செயல்கள், துப்பாக்கி மூலம் மத உணர்வு பாதுகாக்கப்படுவதை காஷ்மீர முஸ்லிம்கள் ஏற்கவில்லை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.

கூட்டாட்சி சுமை

1947 இல் பாகிஸ்தான் தாக்குதல், 1948 ஐ.நா. சபைக்கு பிரச்னையைக் கொண்டு சென்றது, 1950 இல் இயற்றப்பட்ட 370 சட்டப் பிரிவு, பாகிஸ்தானுடன் நடந்த மூன்று போர்கள், அப்பொழுது ஏற்பட்ட ஒப்பந்தங்கள் (1952,1975,1987) ஆகியவற்றால், காஷ்மீர் விஷயத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர், அயலுறவு அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், நிதி அமைச்சர் போன்ற தில்லியில் இருந்த உயர்மட்டத் தலைவர்களின் நேரடி ஈடுபாடு இருந்துள்ளது . மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த மாநிலத்தில் மத்திய அரசின் உயர்மட்டத் தலைவர்களின் தொடர்பு அதிகம்.

ஆனால் எந்தப் பிரதமரும் எடுக்காத இரண்டு முக்கிய முடிவுகளை இப்பொழுதுள்ள அரசு மேற்கொண்டது. ஒன்று, 370 சட்ட பிரிவு ரத்து. இரண்டு, எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாதிகளைத் தாக்கியது.

பிரிவினைவாத அரசியல்

சியாம பிரசாத் முகர்ஜி சிறையில் மரணம் அடையும் முன், ஷேக் அப்துல்லாவுக்கு எழுதிய கடிதத்தில்,  ‘(இந்தியா என்ற) ஒரு  குடியாட்சிக்குள் இன்னொரு குடியாட்சி (காஷ்மீர்) என்பது ஏற்க முடியாது. இந்தியா பிரிவினை செய்யப்பட்டது இரு தேச கொள்கையால். நீங்கள் இப்பொழுது மூன்று தேசக் கொள்கையை முன்னெடுத்து வருகிறீர்கள். இது உங்கள் மாநிலத்துக்கும் நல்லதல்ல, இந்தியாவுக்கும் நல்லதல்ல’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் சரியாகவே சொல்லியிருந்தார். 370 சட்டப் பிரிவினால் பிரிவினை வாதம் லாபகரமான அரசியலாக வளர்ந்தது. மற்ற மாநிலங்களிலும் இது இருக்கிறது என்றால், அங்கெல்லாம் வேறு அரசியல் சிந்தனைகளின் போட்டி, யதார்த்த சூழ்நிலை, சமரசம் ஆகியவற்றால் சூழ்நிலை வேறுபட்டுள்ளது. ஆனால் காஷ்மீரின் அரசியல், இரண்டு மூன்று குடும்பங்களின் கையில் மட்டுமே சிக்கிக் கொண்டது. அதனால் அந்த மாநில அரசியலும் பொருளாதாரமும் சமூகமும் திரைக்குப் பின்னால் மூடப்பட்டதாகவே இருந்து வந்தது.

இன்றைய நிலை

முதலில் சுதந்திரமான காஷ்மீரை நிறுவுவது, பின்னால் அதை தன்னுடன் இணைத்துக் கொள்வது என்ற பாகிஸ்தானின் இரண்டு அம்சத் திட்டம் தற்போது தோல்வி அடைந்துள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதம் தங்கள் மீது பாயும் என்று 2001க்கு முன்பு அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. 1995 இல் கடத்தப்பட்ட அமெரிக்கர்களைத் தேடி காஷ்மீருக்கு வந்த சிஐஏ உயரதிகாரிகளிடம்,  ‘பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு மேற்கத்திய நாடுகள்தான்  அதிலும் குறிப்பாக அமெரிக்காதான்’ என்று இந்திய அதிகாரிகள் கூறினார்கள் . அதற்கு,  ‘இந்தியா- பாகிஸ்தான் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக சித்தரிக்க வேண்டாம்’ என்று கூறி அமெரிக்கர்கள் அதைப் புறம் தள்ளினார்கள். இன்று நிலைமை மாறியுள்ளது.

உலக அரங்கில் அநாதையான பாகிஸ்தானின் பரிதவிப்பு இப்பொழுது ஜம்முவில் பயங்கரவாதத் தாக்குதல்களாக வெளிப்பட்டு வருகிறது. இது வரை 20க்கு மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 15 ராணுவ வீரர்களும் ஐந்தாறு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் . இது காஷ்மீரில் தேர்தல் நடப்பதைக் குலைப்பதற்காக நடத்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் அதையும் மீறி மக்களின் ஆரவாரமான பங்கேற்புடன் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. வரும் 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

ஐந்தாண்டுகளில்

‘ஜாதி உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு தரலாம்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இப்பொழுது விவாதிக்கப்பட்டு வருகின்ற விஷயம். ஆனால் காஷ்மீரில் இதுவரையிலும் (370வது பிரிவு நீக்கப்படும் வரை) பட்டியல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்ததில்லை என்பதை யாரும் மறந்தும் கூடப் பேசவில்லை. 370 சட்டப் பிரிவு ரத்தானதற்கு பிறகே, இந்தியா முழுவதும் உள்ளதைப் போல காஷ்மீர் மாநிலத்திலும் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளது.

கோடைக் காலத்துக்கு ஒரு தலைநகரம், குளிர்காலத்துக்கு ஒரு தலைநகரம் என்று இரண்டு ஆட்சி பீடங்கள், இடம் மாற்றங்கள் என்று இதுவரை இருந்தது,   இப்பொழுது ஒழிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் என இந்திய திரை உலகமே முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் போது,  ‘திரைப்படம் பார்ப்பது இஸ்லாத்துக்கு எதிரானது’ என்ற பிரசாரத்தால் காஷ்மீர் மாநிலத்தில் மூடப்பட்ட திரையரங்குகள், தற்போதுதான் – 33 ஆண்டுகளுக்குப் பிறகு – திறக்கப்பட்டுள்ளன.

‘ஒரு தந்தைக்குப் பிறந்தவராக இருந்தால் லால் சௌவுக்கு வந்து மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள்’ என்று பயங்கரவாதிகள் (அல்லா புலிகள் அமைப்பு) சவால் விட்ட நிலைமை  மாறி, இன்று லால் சௌக்கில் பொதுமக்களே மூவர்ணக் கொடி ஏந்தி  கொண்டாடும் நிலைமை வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், திருவள்ளூரில் இருந்து சுற்றுலா சென்ற இளைஞன் காஷ்மீரில் அடித்துக் கொல்லப்பட்டான். உடன் சென்ற நண்பர்கள் தப்பி ஓடி வந்தனர். அதுகுறித்து, ஏன், எதற்கு என்ற கேள்வியை எந்த திராவிடக் கட்சியும் எழுப்பவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் மட்டுமே இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகள் அந்த மாநிலத்துக்குச் சென்று வந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் இதுவரை சுமார் ரூ.60,000 கோடி செலவில் 53 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் (5.8.24)  தலையங்கம் பாராட்டு தெரிவிக்கிறது. ரூ. 90,000 கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக யூனியன் பிரதேச அரசின் (துணைநிலை ஆளுநர் நிர்வாகம்) அறிக்கை கூறுகிறது.

இன்ந்த ஆண்டு மொஹரம் பண்டிகையை மாநிலத்தில் ஷியா முஸ்லிம்கள் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்கள். இது 34 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டு இருந்தது . இப்பொழுது விமர்சையாக பொதுவெளியில் நடந்த ஒரு நிகழ்வு.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததாக கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் இருந்தபடியே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது இந்திய ஜனநாயக முறைமைக்குக் கிடைத்த சான்றிதழாக சிலர் கூறுகின்றனர். சிலர் இது காஷ்மீர் மக்களின் மனநிலையை எதிரொலிப்பதாக கூறுகிறார்கள் (இவர் தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஜாமீனில் வெளிவந்து தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார்).

ஏற்கனவே பஞ்சாயத்து தேர்தல், நகராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அவற்றில் பாஜகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் இதையெல்லாம் நியாயமாக நடத்திக் காட்டி இருப்பதே பாஜக அரசின்  வெற்றியாக சொல்லலாம். தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது. இதிலும் பாஜகவுக்கு பெரிய அளவில் அரசியல் ஆதாயம் கிடைக்காமல் போகலாம். ஆனால், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

முன்னர் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம் திருப்திகரமாக விடை கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது. 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது உறுதியான செயல்தான்; ஆனால் இறுதியான செயல் அல்ல. அரசு பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. ஆயினும், இந்த அரசு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

$$$

Leave a comment