மூக்கு சீர் ஒட்டறுவைச் சிகிச்சை- ஒரு தகவல்

-திருநின்றவூர் ரவிகுமார்

நடிகை ஸ்ரீதேவிக்கு குண்டு மூக்கு. தமிழ் சினிமாவை விட்டு பாலிவுட் சினிமாவுக்குப் போக விரும்பிய அவர்  ‘ரெயினோ பிளாஸ்டிக்’ எனப்படும் ஒட்டறுவைச் சிகிச்சையை செய்து கொண்டார். அது மூக்கை சீராக்கி அழகு படுத்துவதாகும்.

நவீன மருத்துவ உலகின் கூற்றுப்படி முதன்முதலில் இந்த மூக்கு சீர் சிகிச்சையை செய்தது இங்கிலாந்து நாட்டில் ஜோசப் கான்ஸ்டன்ட்டைன் கார்ப் என்ற மருத்துவர் இதை 1814 ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி செய்தார். தனது மருத்துவ மாணவர்கள் புடைசூழ அப்போது பிரபலமாக இருந்த தாமஸ் குருசோ, ஜேம்ஸ் பின்லோ என்ற இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களை சாட்சியாக வைத்துக் கொண்டு அதனைச் செய்தார்.

இரண்டாவது சிகிச்சையை தீபகற்பப் போரில் (மே 1808 – ஏப்ரல் 1814) ஈடுபட்ட ராணுவ அதிகாரி ஒருவருக்கு செய்து வைத்தார். பிறகு அதைப் பற்றி 1816 இல் ஒரு புத்தகம் எழுதினார்.

அதில்,  ‘இந்தச் சிகிச்சையை ஹிந்துக்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். அதில் நிபுணத்துவமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களது இந்தத் திறமைக்கு காரணம் நிச்சயமாக ஐரோப்பியர்கள் இல்லை. எண்ணற்ற காலமாக நடைமுறையில் இருந்து வரும் இந்திய சிகிச்சை முறை இது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எப்போதும் வந்திராத இவருக்கு, இந்திய பழக்கம் பற்றி எப்படி தெரியும்?  ஒரு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டார்.

இங்கிலாந்தில்  ‘ஜென்டில்மென்ஸ் மேகசின்’ என்று ஒரு மாத பத்திரிகை வெளிவந்தது. 1731 ஜனவரி மாதத்தில் இருந்து வெளியாகத் தொடங்கிய அந்த பத்திரிகையை ஆரம்பித்தவர் எட்வர்ட் கேவ் என்பவர். சுமார் 200 ஆண்டு காலம் நடந்த பின், பணத்தட்டுப்பாட்டு காரணத்தால் அந்தப் பத்திரிகை 1922 இல் நின்று போனது. மேல்தட்டு மக்களுக்கான பத்திரிக்கை அது. அதன் ஆசிரியரை வாசகர்கள்  ‘மிஸ்டர் அர்பன்’ (நாகரீகமானவரே/பண்பாளரே) என்றுதான் எழுதுவார்கள்.

அந்தப் பத்திரிகையில் 1794 இல் ஒரு கட்டுரை வெளியானது. பத்திரிகை ஆசிரியருக்கு எழுதப்பட்ட கடிதமான அந்தக் கட்டுரையை முழுமையாக பிரசுரித்து இருந்தார்கள். அதில் கூறப்பட்டதாவது:

1792இல் மைசூரை ஆண்ட திப்பு சுல்தானுக்கும் பிரிட்டீஷாருக்கும் போர் நடந்தது. பிரிட்டீஷாரை நேரடியாகத் தோற்கடிக்க முடியாத திப்பு அவர்களை பட்டினி போட்டு சாகடிக்கத் திட்டமிட்டார். அதன்படி பிரிட்டீஷாருக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதை தடை செய்தார். திப்புவுக்கு பயந்து பலர் பிரிட்டீஷாருக்கு பொருட்களை அனுப்பவில்லை. ஆனால் அதை மீறி கோவாஸ்ஜி என்ற பார்சி வணிகர் மாட்டு வண்டிகளில் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார். (பேராசிரியர் அலோக்குமார் அவரை மராட்டிய வணிகர் என்கிறார்).

திப்பு அவரைப் பிடித்து மூக்கை அரிந்துவிட்டதுடன் ஒரு முழங்கையும் வெட்டி விட்டார். அது அந்தக் காலத்துப் பழக்கம்.(வணிகரை கொல்லாமல் விட்டது கவனிக்கத்தக்கது)

ஓராண்டு கழித்து அந்த வணிகர் தன் மூக்கை சீராக்கிக் கொள்ள அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதற்காக அவரது நெற்றிப் பகுதியில் இருந்து தோல் எடுக்கப்பட்டு மூக்குப் பகுதியில் வைக்கப்பட்டு சீராக்கப்பட்டது. அந்த சிகிச்சைக்கு 25 நாட்கள் ஆயின.

சிகிச்சைக்குப் பிறகு பார்க்க அவரது மூக்கு முன்பு இருந்தது போலவே ஆகிவிட்டது. நெற்றிப் பகுதியில் இருந்த வடுவும் காலப்போக்கில் மறைந்து விடும் என்று சொல்லப்பட்ட து. சிகிச்சைக்கு முன்பும் பின்பும் அவரது படம் வரைந்து ஆவணப்படுத்தப்பட்டது. அந்த இரண்டு படங்களும் பத்திரிகைக்கு அனுப்பப்பட்டன.

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த மெடிக்கல் போர்டில் உறுப்பினராக இருந்தவர் கோலி லியோன் லூகாஸ் என்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர். அவர்தான் அந்தக் கட்டுரையை எழுதினார். அவர் மூக்கு அறுவை சிகிச்சையை நேரில் பார்த்தவர்.

இனிதான் ட்விஸ்ட்.

ஜோசப் கார்ப் தன் புத்தகத்தில் அறுவைச் சிகிச்சை விவரங்களையும் ஹிந்துக்களையும் புகழ்ந்து எழுதிவிட்டு, இறுதியில் இந்த மூக்கு சீர் சிகிச்சையை செய்தவர் ஒரு  ‘குயவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுதான் வெள்ளைக்காரன் புத்தி.


சுஷ்ருதர்

கூடுதல் தகவல்:

பாரதத்தின் முன்னோடி மருத்துவரான சுஷ்ருதர் (காலம்: பொ.யு.மு. எட்டாம் நூற்றாண்டு) தான் ஒட்டறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் எழுதிய சுஷ்ருத சம்ஹிதையில், அறுவைச் சிகிச்சை தொடர்பான பல்வேறு விவரங்கள் அடங்கியுள்ளன.

ஷத்திரிய மரபைச் சேர்ந்தவர் என்பதால், ஆயுதங்களால் நேரிடும் ரத்தக் காயம், அமிலக் காயம், ரசாயனக் காயம், தீக்காயம் உள்ளிட்ட போர்க்களக் காயங்களின் வகைகளை நன்கு அறிந்திருந்த சுஷ்ருதர், அவற்றுக்கான தையல், கட்டுகள், சிகிச்சை முறைகளை தனது நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.

சிக்கலான மூளை மண்டல நரம்பியல் அறுவைச் சிகிச்சை, தோல் ஒட்டு அறுவைச் சிகிச்சை (Plastic Surgery), கண்புரை அறுவைச் சிகிச்சை (Catract Surgery) ஆகியவற்றை அவர் செய்துள்ளார். குறிப்பாக போர்க்களத்தில் வெட்டுப்பட்ட மூக்கின் மீது உடலின் வேறொரு பகுதியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட தோலைத் தைத்து அறுபட்ட மூக்கை மறுசீரமைத்துள்ளார். எனவே தான், பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் நவீன மருத்துவத்தின் முன்னோடியாக சுஷ்ருதர் கருதப்படுகிறார்.

$$$

Leave a comment