கார்கில் போர்: வெற்றியும் அனுபவங்களும்

-திருநின்றவூர் ரவிகுமார்

அணு ஆயுத நாடுகளிடையே போர் மூளாது என்று நம்பிக்கை உள்ளது. அணு ஆயுதப் போர் நடக்காமல் இருக்கலாம். அதற்கு சற்று குறைவான நிலையில் போர் நடத்த முடியும் என்பதை நிரூபித்தது கார்கில் போர்.

84 நாட்கள் நடந்த அந்தப் போர் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தான் அரசின் நிலையான கொள்கை என்பது உலக நாடுகளுக்குப் புரிந்தது; இந்திய – ரஷ்ய உறவுக்கு எதிராக பாகிஸ்தான் ஆதரவு என்ற மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டிலும் மாற்றம் வந்தது.

வியப்பிலிருந்து வெற்றிக்கு

கார்கில் போரில் 527 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். 1,363 வீரர்கள் காயமடைந்தனர் என்று அரசு அறிக்கை கூறுகிறது. இந்தியா இந்தப் போரை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கார்கில் போரில் தளபதியாக இருந்த வேத பிரகாச மாலிக் பின்னாளில் எழுதிய நூலின் தலைப்பே இதை வெளிப்படுத்துகிறது. வியப்பிலிருந்து வெற்றிக்கு (From Surprise to Victory) என்பது அந்தத் தலைப்பு.

இந்தியா போரை எதிர்பார்க்காததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம், கார்கில் போருக்கு மூன்று மாதங்கள் முன்னர்தான் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு நல்லெண்ண பேருந்துப் பயணம் (பிப்ரவரி 1999) மேற்கொண்டு அமைதி உடன்படிக்கைக்கு வித்திட்டார். இரண்டாவது காரணம், உளவுத்துறையின் உறக்கம்.

போருக்கு வித்திட்ட இந்திய பிறப்பு:

பர்வேஷ் முஷாரப்

இந்தியா போரை எதிர்பார்க்காமல் ஏமாந்து போயிருக்கலாம். ஆனால் போருக்குக் காரணமானவர் இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, பின்னர் பாகிஸ்தானில் குடியேறிய பர்வேஸ் முஷாரப். அவரது நோக்கம் காஷ்மீரின் சில பகுதிகளையாவது கைப்பற்றுவது;  காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அரங்கில் கொதிநிலையிலேயே வைத்திருப்பது.

ஏதோ தலைமைத் தளபதியான பிறகு அல்ல, 1983-84களில் அவர் பிரிகேடியராக இருந்தபோது சியாச்சின் பகுதிகளில் சில இந்திய தளங்களைப் பிடிக்க முயற்சித்தார். அப்போது மேகதூத போர் நடவடிக்கை (ஆப்ரேஷன் மேகதூத்) மூலம் இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது; பாகிஸ்தான் வீரர்கள் ஏராளமானோர் மாண்டனர். படுதோல்வி அடைந்த முஷாரப் அவமானத்திலும் ஆத்திரத்திலும் பொருமிக் கொண்டிருந்தார்.

சிறிது காலத்தில் மேஜர் ஜெனரலான போது அப்போதைய பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசீர் புட்டோவிடம் தாக்குதலுக்கான திட்டத்துடன் அணுகினார்.  ‘முட்டாள் தனமாக எதுவும் செய்யாதே’ என்று அந்த பாயம்மா சொல்லிவிட்டார்.

வியாபாரப் பின்னணி கொண்ட அரசியல்வாதியான நவாஸ் ஷெரீப் பிரதமரானபோது அவர் பர்வேஷ் முஷாரப்பை தலைமைத் தளபதி ஆக்கினார். ஷெரீபின் பின்னணியைப் புரிந்துகொண்ட முஷாரப் அவருக்கு தகவல்களை தராமல் இருட்டில் வைத்தபடியே, 1999 பிப்ரவரியிலேயே கார்கில் பகுதியில் ஊடுருவலுக்கு உத்தரவிட்டார். அது பனிப்புயல்கள் அவ்வப்போது வீசும் காலம். வடக்கு ஷியா முன்னணி படையினர் (Shia Northern Light Infantry) மலைமுகடுகளில் ஏறும்போதும் ஏறிய பிறகும் ஏராளமான உயிரிழப்பைச் சந்தித்தனர் என்று பின்னாளில் தெரிய வந்தது. இப்படித்தான் கார்கில் போர் தொடங்கியது.

வீரர், ஆனால்…..

முஷாரபின் நேரடிக் கண்காணிப்பில் இது நடந்தது. 1999 மார்ச் மாதம் குல்தாரி பகுதிக்கு (பாக்- இந்திய எல்லை பகுதி) சென்றார். அங்கு நார்த்தன் லைட் இன்பாண்ட்ரி  படைவீரர்களைச் சந்தித்தார். அந்த படைப்பிரிவினர் தான் கார்கில் பகுதியில் மலை முகடுகளில் முதலில் சென்று நிலை கொண்டவர்கள். இதெல்லாம் போரில் மாண்ட பாகிஸ்தான் படையின் கேப்டன் ஒருவரின் டைரியிலிருந்து தெரியவந்தது.

போரின் போது (மே மாதம்) முஷாரப் ரஷ்யாவில் இருந்தார். அங்கிருந்து பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேசியதை இந்தியா மறித்து ஒட்டுக் கேட்டது. அந்தப் பேச்சிலும் கூட ‘கலங்க வேண்டாம். இது (கார்கில் போர்) இந்தியா உடனான பேச்சுவார்த்தைக்கு உதவும்’ என்று சொல்லி உள்ளார். கடைசி வரை பிரதமர் ஷெரீஃபை நிகழ்வுகள் பற்றி இருட்டிலேயே வைத்திருந்தார் முஷாரப் என்பது அந்தப் பேச்சிலிருந்து புரிகிறது.  ‘முஷாரப் நல்ல வீரர். ஆனால் மோசமாகத் திட்டமிடுபவர்’ என்கிறார் போரில் வென்ற இந்திய தளபதி வேத பிரகாஷ் மாலிக்.

காங்கிரஸ் கால இந்தியா

வேத பிரகாஷ் மாலிக்

இந்தியாவின் நிலையோ படுமோசமாக இருந்தது. வீரர்களுக்கு பனிக்கால ஆடைகள் இல்லை. ஆயுதங்களும் தளவாடங்களும் போதுமான அளவு இல்லை. பத்துப் பேர் இருந்தால் அதில் ஏழு பேரிடம் தான் துப்பாக்கி இருந்தது. எழுபது சதவீதத்திற்கும் கீழே குறைக்க முடியாது என்ற ராணுவ விதி இருந்ததால் அந்த நிலை. இல்லையென்றால் அதைவிட கீழே போய் இருக்கும் காங்கிரஸ் அரசு.

நரசிம்ம ராவ் அரசில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்,  ‘அரசிடம் பணம் இல்லை. இரண்டு மூன்று ஆண்டுகள் பொறுத்துக் கொள்ளுங்கள். பிறகு வேண்டிய அளவு தருகிறோம்’ என்று அப்போதைய ராணுவ தளபதியிடம் சொன்னார். ஆனால் ஐந்து ஆண்டு கால ஆட்சி முடியும் வரை சொன்னதைச் செய்யவில்லை.

அதுமட்டுமின்றி வாஜ்பாய் பிரதமர் ஆனவுடன் நரசிம்ம ராவ் அப்துல் கலாமை அழைத்துக் கொண்டு போய் வாஜ்பாயைப் பார்த்து,  ‘குருவே, (ராவ் வாஜ்பாயை அப்படிதான் அழைப்பார்) நான் ஆட்சியில் இருந்தபோது அணுகுண்டு சோதனை செய்ய முடியாமல் அமெரிக்கா தடுத்து விட்டது. நீங்கள் தான் அதை செய்ய முடியும்’  என்று தேசபக்தியைக் கொப்பளித்தார். அந்த மகானுபாவர்தான் 1993இல்  பாஜக கட்சியையே இல்லாமல் ஆக்க முயற்சித்தவர். வாஜ்பாய் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்துதான் ராவின் திட்டத்தை பின்னெடுக்க வைத்தார்.

ஆனாலும் தேசநலன் கருதி வாஜ்பாய் அரசு அணு ஆயுத சோதனையை 1998இல் மேற்கொண்டார். உலக நாடுகள் அதைக் கண்டித்து பொருளாதாரத் தடை விதித்தன. 1999 கார்கில் போரின்போது ஒருவரும் ஆயுதங்களை, அதிக விலைக்கும் கூட, விற்க முன்வரவில்லை. செய்தியாளர் கூட்டத்தில் ஆயுதத் தட்டுப்பாடு பற்றி கேட்டபோது,  ‘இருப்பதைக் கொண்டு போரிடுவோம்’ என்றார் தளபதி மாலிக்.

வீரமும் விவேகமும் உரசிக் கொண்டன

உண்மையில் குண்டடி பட்டு வீரமரணம் அடைந்தவர்கள் 468 பேர். மலை ஏறும் போது தவறி விழுந்து விபத்தாக இறந்தவர்கள் மற்றும் உயரத்தில் பனி சூழ்ந்த வானிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. அது மட்டுமன்றி எல்லை தாண்டிச் செல்ல வேண்டாம் என்று பிரதமர் வாஜ்பாய் உறுதியாகக் கூறிவிட்டார். மாறாக எல்லை தாண்டி செல்ல வேண்டி இருந்தால் இழப்பின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று பின்னர் கூறினார் வே.பி.மாலிக்.

வாஜ்பாய் அவ்வாறு கூறியதற்குக் காரணம், எல்லை தாண்டாத வரை உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்காத நிலை உள்ளது. நாம் எல்லை தாண்டி போரைக் கொண்டு சென்றால் அது நமக்கு எதிராக போகும் என்று அவரது அயலுறவு அனுபவம் சொல்லியது.

அதேபோல இன்னொரு விஷயத்திலும் தளபதிக்கும் பிரதமருக்கும் உரசல் வந்தது. பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவிடம் தன்னைக் காப்பாற்றும் படியும் இந்தியாவை போர் நிறுத்தம் செய்யும்படியும் நேரில் சென்று வேண்டினார். அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் போர் நிறுத்தம் பற்றி பேச அமெரிக்காவுக்கு வரும்படி தொலைபேசியில் வாஜ்பாயை அழைத்தார்.

அப்போது கார்கிலில் தொண்ணூறு சதவீத இடத்தை இந்திய ராணுவம் மீட்டிருந்த நிலை. எனவே போர் நிறுத்தம் வேண்டாம் என்றார் தளபதி. இழந்ததை மீட்பது நமது நோக்கமே அன்றி போரிடுவதில் இல்லை என்பது பிரதமரின் கருத்து. எனவே அவர் கிளின்டனிடம் ‘நான் அங்கு வர மாட்டேன். அதே வேளையில் பாகிஸ்தான் படைகள் பின்வாங்க ஒரு வழியைக் கொடுக்கிறோம். அதன் வழியே அவர்கள் திரும்பிச் செல்லட்டும். நாங்கள் தாக்க மாட்டோம்’  என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தார்.

விட்டால் போதும் என்று எஞ்சிய பாகிஸ்தானியப் படைகள் நாம் காட்டிய வழியில் அவமானப்பட்டு ஓடின. பாக். கிழக்கு பிராந்திய படைப்பிரிவை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விட்டார்கள் இந்தியர்கள் என்று பின்னர் நவாஸ் ஷெரீப் தளபதி முஷாரப் மீது குற்றம் சாட்டினார்.

வெற்றி வரலாறு

கார்கில் போரின் போது வாஜ்பாய் அரசு இடைக்கால அரசு. போரினால் தேர்தல் தள்ளிப் போயிருந்தது. போர் முடிந்தவுடன் தேர்தலைச் சந்திக்க வேண்டி இருந்தார் அவர். போர் நடக்கும் போதே சவப்பெட்டி ஊழல் என்று சோனியா காந்தி கூச்சல் எழுப்பி விட்டார். அந்த நிலையில் தான் கார்கில் போரின் வெற்றி வரலாறு எழுதப்பட்டது.

போருக்குப் பின், கார்கில் போர் பல பாடங்களைக் கற்றுத் தந்தது; மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

பாகிஸ்தானில்…

அவமானத்தில் கொதித்த முஷாரப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வீட்டுக் காவலில் வைத்து ராணுவ ஆட்சியை அமைத்தார். பிறகு வெளிநாட்டுக்கு ஓடிப் போனார் ஷெரீப். முஷாரப் ஆட்சியும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. அவரும் கைது செய்யப்பட்டு தூக்கில் இடப்படுவோம் என்று பயந்து துபாய் சென்று அங்கேயே செத்தார். பிறகு உடல் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு ராணுவ வீரர்களுக்கான கல்லறையில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டுதான் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப முடிந்தது.

ஆட்சியாளர்கள் மாறினாலும் பாகிஸ்தானின் கொள்கைகள் மாறவில்லை. கார்கில் போருக்குப் பிறகு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814 காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. அதை மீட்க சிறையில் இருந்த இஸ்லாமிய பயங்கரவாதி மசூத் ஹசார் விடுதலை செய்யப்பட்டான். அவன் பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-மொஹமத் என்ற அமைப்பை ஆரம்பித்து அதன்மூலம் 2001 அக்டோபரில் காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை தாக்கினான். அதே ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றக் கட்டடத்தை அந்த அமைப்பினர் தாக்கினார்கள்.

2002 மே மாதம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஸ்கர்-இ-தெய்பா என்ற பயங்கரவாத அமைப்பு கலுசாக்கி என்ற இடத்தில் இருந்த இந்திய ராணுவ முகாமைத் தாக்கியது; 2008 நவம்பரில் மும்பை தாக்குதலை நடத்தியது.

அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளில்…

இவ்வளவுக்கும் பிறகும் கூட அமெரிக்கா பாகிஸ்தானை ஆதரித்தது. இராக், ஆப்கானிஸ்தானில் அது ஒசாமா பின் லேடனை தேடிக் கொண்டிருந்தது; அதற்கு பாகிஸ்தான் உதவி செய்யும் என நம்பிக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் உதவி செய்வதாக நாடகமாடிக் கொண்டு ஒசாமாவைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. அமெரிக்கா ஒசாமாவை  பாகிஸ்தான் மண்ணில் கொன்ற பிறகுதான் அதன் இரட்டை வேடம் அம்பலமானது; அமெரிக்கா தன்  நிலையை மாற்றிக்கொள்ளவும் முன்வந்தது.

பல மேற்கத்திய நாடுகளிலும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சூடு ஏறத் தொடங்கியதும் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் இருப்பது தெரிந்து அவையும்  தங்கள் நிலைப்பாட்டை மாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு வந்தன.

கார்கில் போருக்கு முன்:
வாஜ்பாயும் நவாஸ் ஷெரீபும்

இந்தியாவில்…

கார்கில் போருக்குப் பிறகு அது பற்றி ஆராய சுப்பிரமணியம் தலைமையில் வாஜ்பாய் அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. சுப்பிரமணியம் வேறு யாருமல்ல, இப்போதைய அயலுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய்சங்கரின் தந்தை. அவர் பாதுகாப்புத் துறை நிபுணர். அவருடன் இப்பொழுது பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருக்கும் அஜித் தோவலும் இணைந்து ஓர் ஆய்வு அறிக்கையை வாஜ்பாய் அரசிடம் கொடுத்தனர்.

அதை அரசு ஏற்றுக்கொண்டது. அதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய அமைச்சர்கள் குழுவை அமைத்தார் வாஜ்பாய். ஆனால் கூட்டணி அரசில் உருப்படியாக ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

செயல்பாட்டில் சுணக்கம்

உதாரணத்திற்கு, கார்கில் போர் குறித்து முன்னெச்சரிக்கையாக உளவுத் துறை தகவல் சொல்லவில்லை. காணாமல் போன தனது எருமை மாட்டை தேடிப் போனவன்தான் பாகிஸ்தானிய வீரர்கள் நம் பகுதியில் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்ற தகவலைச் சொன்னான். உளவுத்துறைக்கும் ராணுவத் தலைமைக்கும் ஒருங்கிணைப்பு இல்லை. போர் தொடங்கிய பிறகும் ராணுவத்திற்கும் விமானப்படைக்கும் ஒருங்கிணைப்பு இல்லை.

ராணுவம், விமானப்படை, கடற்படை, ராணுவ உளவுத் துறை, வெளிநாட்டு உளவுத் துறை எல்லாம் தனித்தனியான தலைமையின் கீழ் தன்னிச்சையாக செயல்பட்டன. ஒருங்கிணைப்பு அவசியம், அதற்கு பாதுகாப்புப் படை அனைத்திற்குமான ஒரு தலைமை ஏற்படுத்த வேண்டுமென்று அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் வாஜ்பாய் ஆட்சி முடிந்து, சோனியா வழிகாட்டுதலில் நடந்த பத்தாண்டு கால ஆட்சி போய், மோடி பிரதமரான பிறகும் ஐந்து ஆண்டுகள் கழித்து 2019இல் தான் பிபின் ராவத் ஒருங்கிணைந்த படைத்தலைவராக (CDS) நியமிக்கப்பட்டார். உளவுத்துறைக்கான ஒருங்கிணைந்த தலைமையகம் 2002 ஏற்படுத்தப்பட்டு, 2004 மேலும் விரிவாக வலுவாக்கப்பட்டது.

நடைமுறையில் மாற்றம்

கார்கில் போன்ற பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி சீன எல்லைப் பகுதியைக் (2020 சீன எல்லை உரசல்) கண்காணிக்கவும் விரைவாக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்தப் பகுதிகென பிராந்திய ராணுவ தலைமை/ தலைமையகம் ஏற்படுத்த வேண்டும் என்றது சுப்பிரமணியம் ஆய்வு குழு. அது இப்போது நிதர்சனமாகியுள்ளது. இதில் வியப்பான தற்செயலாக கார்கில் போரின் போது தளபதியாக இருந்த வே.பி.மாலிக்கின் மகன் மேஜர் ஜெனரல் சச்சின் மாலிக் இப்பொழுது அந்த பிராந்தியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்சார்பு (ஆத்ம நிர்பார்)

ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள் வாங்குவதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் ஓரம் கட்டப்பட்டு, அரசே நேரடியாக பேரத்தில் ஈடுபடுகிறது. ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் இப்போது துப்பாக்கிகளும், தானியங்கி துப்பாக்கிகளும், குண்டு துளைக்காத கவசங்களும், இமயமலை பகுதிகளில் பனிக்காலத்தில் அணிவதற்கான ராணுவ வீரர்களுக்கான ஆடைகளும், நம் நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கி விட்டோம். அவை சர்வதேசத் தரத்துடன் இருப்பதால் ஆயுத ஏற்றுமதியும் பெரும் வர்த்தகமாக வளர்ந்து வருகிறது.

பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த ரபேல் விமானங்களை பிரதமர் தலையிட்டு விரைவாகவும் மலிவாகவும் வாங்க வழி வகுத்தார். வழக்கமாக ஆயுத பேரத்தில் ஆதாயம் அடைந்தவர்கள், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று மூக்கறுப்பட்டது தனிக் கதை. ரபேல் விமானத்தை வாங்கியது மட்டுமன்றி அதை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் என தொழில்நுட்பப் பயன்பாடு ராணுவத்திற்கு வலு சேர்த்துள்ளது. வடக்கு பிராந்தியத்தின் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஜெனரல் ஹூடா சொல்கிறார்,  “பனி படர்ந்த மலைகளையும் பனிப் பாலைவனங்களையும் கடும் வெப்பம் வீசும் மணற்பாலைகளையும் தொழில்நுட்பத்தின் உதவியால் இப்போது சரியாக்க் கண்காணிக்க முடிகிறது. கார்கில் ஊடுருவல் போன்ற செயல் இனி நடக்க வாய்ப்பில்லை”.

தலைமையின் வெளிப்பாடு

இதற்கெல்லாம் காரணம், சரியான, உறுதியான அரசியல் தலைமை. அது எப்படி வெளிப்பட்டது? மேற்கூறிய விஷயங்களில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைவருக்கும் புரியும்படி அது தன்னை வெளிப்படுத்தியது.

20016இல் ஜெய் இ முகம்மது இயக்கம், பதான்கோட்டில் இருந்த விமான படைத்தளத்தைத் தாக்கியது; பலத்த சேதம், உயிரிழப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை  எடுக்கும்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிடம் வலியுறுத்தினார். பாகிஸ்தான் வழக்கம் போல அலைக்கழித்தது; தாக்குதல் நடந்த இடத்தை நாங்கள் பார்வையிட வேண்டும் என்றது. இந்தியாவில் பலரும் இந்தக் கோரிக்கையை எதிர்த்த போதிலும் மோடி பாக். அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். ஆனால் எதிர்பார்த்தபடி பாக். தலைமை பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இழுத்தடித்தது.

புரியும் மொழியில்…

இதனிடையே அதே 2016 செப்டம்பரில் ஊரியில் இருந்த ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது ஜெய்-இ-முகம்மது; பத்தொன்பது இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்; சுமார் முப்பது வீரர்கள் காயமடைந்தனர். இந்திய ராணுவ நிலைகள் மீது கடந்த இருபது ஆண்டுகளில் இதுதான் படு பயங்கரமான தாக்குதல் என்றது பிபிசி.

அதையடுத்து, இந்தியா செப்டம்பர் 28ஆம் தேதி   பாக். பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. ஜெய் இ முகம்மது அமைப்பைச் சார்ந்த பயங்கரவாதிகள் 150 பேர்கள் கொல்லப்பட்டார்கள் என செய்திகள் கூறுகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் வாலாட்டவில்லை.

2 019 பிப்ரவரி 14  ,ம் தேதி காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டன; நாற்பது வீரர்கள் கொல்லப்பட்டனர். நான் தான் காரணம் என்றது ஜெய்ஸ் இ முகம்மது. பிப்ரவரி 26 ஆம் தேதி பன்னிரண்டு மிராஜ்-2000 இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பாலாக்கோட்டில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தன. 300 ஜெய் இ முகம்மது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது.

பல்முனை நெருக்குதல்

மீண்டும் 2021இல் ஜம்முவில் அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பலூச்சிஸ்தான், சிந்து,  கைபர் – பக்தூன் காட்  பகுதிகளில் பாக். எதிர்ப்பு வலுத்தது. தாலிபான்கள் பாக்- ஆப்கான் எல்லை பற்றி பாகிஸ்தானின் வரையறையை ஏற்க முடியாது எனக் கூறி பாகிஸ்தான் ராணுவத்தைத் தாக்கி வருகின்றனர்.

அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவின் ஆசிய பிராந்தியத்திற்கான பொறுப்பாளராக இருக்கும் பெண்மணி போன மாதம் ஒரு நேர்காணலில், இந்தியா அற்பத் தொகைக்கு தாலிபான்களை வளைத்துப் போட்டுக் கொண்டு அவர்கள் மூலம் பாகிஸ்தானைத் தாக்கி வருகிறது என்று கூறியது வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில் ஜம்மு பகுதி முழுக்கவும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு பயங்கரவாதிகளை நசுக்கும் பணியும் நடந்து வருகிறது.  

அதேவேளையில் பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் பாகிஸ்தானிலேயே எதிர்ப்பைக் கிளப்புவது,  சர்வதேச அளவில் தனிமைப் படுத்துவது, பொருளாதார ரீதியாக நெருக்குவது என்று இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகளை, தொடர்ந்து செய்தித்தாளை வாசிக்கும் எவரும் கவனிக்கத் தவறவில்லை. இது வாசகர் பகுதிகளிலும் சமூக  ஊடகங்களிலும் தெளிவாக வெளிப்படுகிறது.

தளபதிகள் பாராட்டும் தலைமை

தொழில்நுட்பத்தை பரவலாகப் புகுத்தியதற்கும் அதற்காக ஆதரவு அளித்ததற்காகவும் மோடி அரசைப் பாராட்டுகிறார் வடக்கு பிராந்தியத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற தளபதி ஹூடா. அக்னி வீரர்கள் திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களின் பணிக்காலத்தை இன்னும் சற்று நீட்டிக்க வேண்டும் என்று கூறும் கார்கில் கதாநாயகர் தளபதி மாலிக் பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறார்.

உலக நாடுகளில் மட்டுமின்றி உள்ளூரிலும் பலரின் பாராட்டைப் பெறும் விதமாக இந்திய தலைமை வெளிப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கார்கில் போர் வெற்றியின் (1999) வெள்ளி விழா கடந்த ஜூலை 26 இல் கொண்டாடப்பட்டது.

$$$

Leave a comment