செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து ஆங்கிலேய அரசிடம் வாதிட்டு நஷ்டஈடு பெற்றவர், ‘சேலத்து நாயகன்’ எனவும் ‘தென்னிந்தியாவின் சிங்கம்’ எனவும் பாராட்டப்பட்ட விடுதலை வீரர், சேலம் சி.விஜயராகவாச்சாரியார் என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார். இவர் தான் காங்கிரஸ் அமைப்பின் ஆரம்பகால கொள்கைகளை வடிவமைத்தவர்!

செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து ஆங்கிலேய அரசிடம் வாதிட்டு நஷ்டஈடு பெற்றவர், ‘சேலத்து நாயகன்’ எனவும் ‘தென்னிந்தியாவின் சிங்கம்’ எனவும் பாராட்டப்பட்ட விடுதலை வீரர், சேலம் சி.விஜயராகவாச்சாரியார் என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார்.
சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொன்விளைந்தகளத்தூரில் கோயில் பூஜாரி சடகோபாச்சாரியாரின் மகனாக 1852 ஜூன் 18இல் பிறந்தவர். இளம் வயதிலேயே வேதங்களைப் பயின்ற அவர், 1870இல் பச்சையப்பா மேல்நிலைப் பள்ளியில் படித்து தேறினார். பிறகு சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
1875 இல் அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர், பிறகு மூன்றாண்டுகள் மங்களூரில் பணியாற்றினார். அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அவர் சேலம் நகரவை கல்லூரியில் 1879இல் பணியாற்றத் துவங்கினார். அங்கேயே தாமாக முயன்று சட்டம் பயின்று வழக்குரைஞராகவும் ஆனார்.
1882 ஆம் ஆண்டில் சேலம் மாநகர சபை உறுப்பினராக அரசியல் நுழைந்து, 1895-1901இல் சென்னை மாநில கவுன்சில் உறுப்பினராகவும் 1913- 1916இல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
தண்டனையும் நஷ்டஈடும்:
1880களில் சேலம் நகரின் செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட முயன்றபோது அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பிறகு அரசின் அனுமதியுடன் மசூதி கட்டப்பட்டது. 1882இல் மசூதி இருந்த சாலை வழியாக ஹிந்துக்களின் சுவாமி ஊர்வலம் சென்றபோது அதற்கு சில இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது.
1882 ஆகஸ்டில் நிலை கட்டுக்கடங்காமல் போனது. மூன்று நாட்கள் நடந்த கலவரத்தின் இறுதியில் அந்த மசூதி இடிக்கப்பட்டதுடன், இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்துக்கு இந்திய தேசியவாதிகளே காரணம் என்று ஆங்கிலேய அரசு குற்றம் சாட்டியது. அதன்மூலமாக, இந்து- முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தி சுதந்திரப் போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த அரசு முயன்றது.
சேலத்தில் அமைதி திரும்பிய பின்னர், கலவரத்துக்குக் காரணமானவர்கள் என பலரை அடையாளம் கண்டு ஆங்கிலேய அரசு கைது செய்தது. வழக்கு விசாரணையின் முடிவில் பலரை அந்தமான் செல்லுலர் சிறையில் அடைத்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், வழக்குரைஞர் சேலம் விஜயராகாவாச்சாரியார் பிரதானமானவர். அவருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதனால் தனது நகரமன்றப் பதவியையும் இழந்தார்.
ஆயினும், அந்த மதக் கலவரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்த விஜயராகவாச்சாரியார், சிறையிலிருந்தபடியே தான் குற்றமற்றவர் என வாதாடினார். அன்றைய வைஸ்ராயாக இருந்த ரிப்பன் பிரபுவுக்கு மேல்முறையீடும் செய்தார். அதன் விளைவாக அவர் அரசால் விடுதலை செய்யப்பட்டார்; அவருடன் தண்டிக்கப்பட்ட மேலும் பலரும் விடுதலையாகினர்.
அதுமட்டுமல்ல, கைது செய்யப்பட்டதால் பறிக்கப்பட்ட சேலம் நகர்மன்ற உறுப்பினர் பதவியையும் திருப்பி அளிக்குமாறு முறையீடு செய்து வெற்றி பெற்றார். அவரது நகர்மன்ற உறுப்பினர் பதவி திரும்ப வழங்கப்பட்டதுடன், பதவிநீக்கக் காலத்துக்கு நஷ்டஈட்டையும் பிரிட்டிஷ் அரசு வழங்கியது!
பிரிட்டிஷ் இந்திய அரசின் செயலர் விஜயராகவாச்சாரியாருக்கு அன்றைய மதிப்பில் ரூ. 100 தொகையை நஷ்டஈடாக வழங்கினார். விடுதலைவீரர் ஒருவருக்கு, ஆங்கிலேய அரசு தனது தவறை ஒப்புக்கொண்டு நஷ்டஈடு வழங்கியது சரித்திர நிகழ்வானது. இதற்கு விஜயராகாவாச்சாரியாரின் சட்டப்புலமையும் வாதத்திறமையும் தான் காரணம்.
மேலும் தனக்கு எதிரான பொய் வழக்கில் சாட்சியம் அளித்தோருக்கு எதிராகவும் வழக்குத் தொடுத்து, அவர்களுக்கும் தண்டனை பெற்றுத் தந்தார் விஜயராகவாச்சாரியார். இந்த நிகழ்வுகளால் நாடு முழுவதும் பிரபலமானார் சேலம் விஜயராகாவாச்சாரியார். குடிமக்களின் உரிமைக்கான போராளியாக அவர் போற்றப்பட்டார்.
தேசிய அரசியலில் தீவிரம்:
1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது. அதன் முதல் கூட்டத்திலேயே சிறப்பு அழைப்பாளராக விஜயராகவாச்சாரியார் பங்கேற்றார். 1887இல் காங்கிரஸின் கொள்கைகளை வடிவமைத்த குழுவிலும் அவர் இடம் பெற்றார்.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக விளங்கிவந்த அவர், தாதாபாய் நௌரோஜி, பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, லாலா லஜபதி ராய், மௌலானா அபுல்கலாம் ஆசாத், மோதிலால் நேரு உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஆரம்பத்திலிருந்தே தீவிர தேசியவாதிகளின் பக்கம் இருந்தார்.
மகாத்மா காந்தி இந்திய அரசியலில் நுழைந்தபோது அவரது அஹிம்சைப் போராட்டத்தை தீவிர தேசியவாதிகள் ஏற்கவில்லை. ஆயினும் பின்னாளில் அவரது வழிமுறையை ஏற்பதாக விஜயராகவாச்சாரியார் அறிவித்தார்.
1920இல் நாகபுரியில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு விஜயராகவாச்சாரியார் தலைமை தாங்கினார். அதில்தான் மகாத்மா காந்தி, அஹிம்சைப்போராட்டம் மூலமாக பூரண ஸ்வராஜ்ஜியம் என்ற கருத்தை முன்வைத்தார். அதற்கு ஆதரவாக மாநாட்டில் சிறப்பாக உரையாற்றிய விஜயராகவாச்சாரியார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட பூரண ஸ்வராஜ்ஜிய பிரகடனத்தை நிறைவேற்றினார்.
சிறுமியரை பால்ய விவாகம் செய்வதற்கு எதிர்ப்பு, தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் உரிமையைக் கோரியது, சுவாமி சகஜானந்தருடன் இணைந்து தீண்டாமைக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டது என சமூக சீர்திருத்தத்திலும் விஜயராகவாச்சாரியாரின் பங்களிப்பு அளப்பரியது.
ஹிந்து மகாசபையிலும் சில ஆண்டுகள் விஜயராகவாச்சாரியர் பொறுப்பு வகித்தார். 1931இல் அகோலாவில் தேசிய அளவில் நடைபெற்ற ஹிந்து மகாசபை கூட்டத்துக்கு அவர் தலைமை தாங்கினார்.
பிறகு முதுமை காரணமாக தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்த அவர், பொதுநல விஷயங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். அவரது அரசியல் வாரிசாக ராஜாஜி கருதப்படுகிறார். 1944 ஏப். 14இல் அவர் மறைந்தார்.
$$$