கம்பன் ஏமாந்தானா?

-ச.சண்முகநாதன்

பெண்களின் கண்களை வேல்விழி, மலர்விழி, மைவிழி, மான்விழி, மீன்விழி, சேல்விழி, சுடர்விழி என்று கொண்டாடுவது கவிஞர்களின் இயல்பு. மலர் போன்ற மென்மையைக் கொண்டிருந்தாலும், வேல் போன்ற கூர்மையை உடையவை இக்கண்கள். கவியரசர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் நாயகியின் கண்களை அம்புவிழி என்று நாயகன் பாடுவதாக எழுதி இருக்கிறார். அதையொட்டிய சிறு ஆய்வுப் பதிவு இது…. மனம் கனிய, இலக்கியம் பயில்வோம்.

என்னென்னவோ அரசியல் நாடகங்கள்  தினமும் அரங்கேறுகின்றன. இந்த களேபரத்துக்கிடையில் இலக்கியம் எழுதுவது என்பது driving against headwind.

எப்படி இருந்தாலும் இந்த அரசியல் கூத்துக்களையெல்லாம் ரசித்துக்கொண்டே கம்பனையும் ரசிக்கலாம்.

***

“அம்புவிழி என்று ஏன் சொன்னான்,
அது பாய்வதினால் தானோ?
அவள் அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்,
அது கொதிப்பதினால் தானோ?”

இலக்கியத்தில் தோய்த்தெடுத்த வரிகள் கவிஞர் எழுதியது. உண்மையில் இது with toungue in cheek ரொமான்டிக் வரிகள்.

எங்கெங்கெல்லாம் அம்புவிழி என்று பாடினான் கம்பன் என்று தேடத் தொடங்கியது மனது. தேடியதில் எண்ணிலடங்காத இடங்களில் உண்டு என்று கண்டுகொண்டோம்.

ஆனால் கம்பன் ஏமாந்தானா?

“திண் சிலை புருவம் ஆக,
சேயரிக் கருங் கண் அம்பால்,
புண் சில செய்வர் என்று
போவன போன்ற, மஞ்ஞை;”

அழகிய பெண்கள் கூட்டம் ஒரு சோலைக்குள் புகுந்து பூக்களைக் கொய்து விளையாடுகிறது. சோலையில் மகிழ்ந்து திரியும் மயிலும் குயிலும் அன்னமும் பெண்களுக்கு பயந்து, வெட்கித் தலைகுனிந்து இடத்தைக் காலி செய்து விட்டு வேறு இடம் செல்கின்றன.

“புருவம் எனும் வலிமையான வில் கொண்டு, செவ்வரி பரந்த கரிய விழி எனும் அம்பு எய்தி காயப்படுத்துவர் (புண் செய்வர்) என்று மயில் அப்புறம் சென்றது.”

அம்புவிழி!

“பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப,
நாணினால் பறந்த, கிள்ளை;”

அந்த இளம்பெண்கள் இசைமொழி பேசக் கண்டு தனக்கு இப்படி குரல் இல்லையே என்று நாணம் கொண்டு பறந்து சென்றனவாம் கிளிகள்.

“ஒண் சிலம்பு அரற்ற, மாதர்
ஒதுங்குதோறு, ஒதுங்கும் அன்னம்.”

சிலம்பணிந்து அவர்கள் நடக்கும் அழகைக் கண்டு இவ்வளவு அழகாக நடக்க முயற்சி செய்ய வேண்டும் என்று ஒதுங்கியது அன்னம்.

கவிதைன்னா இது கவிதை.

இயற்கையாக, பக்தியோடு மிகுந்த ரசனையும் கொண்டவன் கம்பன்.

திண் சிலை புருவம் ஆக.
   சேயரிக் கருங் கண் அம்பால்.
புண் சிலர் செய்வர் என்று
   போவன போன்ற, மஞ்ஞை;
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப.
   நாணினால் பறந்த, கிள்ளை;
ஒண் சிலம்பு அரற்ற. மாதர்
   ஒதுங்குதோறு, ஒதுங்கும் அன்னம்.

     (கம்ப ராமாயணம்- பால காண்டம்- பூக்கொய் படலம்-பாடல்: 893) 

அம்புவிழி என்று ஏன் சொன்னான்? கம்பனுக்கும் கண்ணதாசனுக்கும் மட்டும் அல்ல, மயிலுக்கும் தெரிந்திருக்கிறது, அவர்கள் விழிகளால் புண் செய்வர் என்று.

கம்பன் ஏமாறவில்லை.

But, இப்படி “சேயரிக் கருங் கண் அம்பால், புண் சிலை செய்யும்” கண்களைப் பார்த்துக் கொண்டே  “பண் சிலம்பு அணி வாய் ஆர்க்கும்” பெண்ணுடன் சில மணிநேரம் தனிமையில் பேசுபவன் வீரன்.

காண்க:
   கம்பன் ஏமாந்தான்...

$$$

Leave a comment