சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

-வினய் சஹஸ்ரபுத்தே

‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கத்தைப் பொருத்த வரை, வெற்று கோஷங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விலகியே உள்ளது. ‘சமரசதா’ என்பது ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சிந்தனையில் உருவான ஒரு மௌனப் புரட்சி.  இங்கு நாம் நடைமுறையில் மேடையில் பேசும் சமத்துவம் என்பது மேலோட்டமானதாகவும் குறுகிய வாழ்நாள் கொண்டதாகவுமே இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறும் ‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கம் மிகவும் ஆழமானது; இது நம் ஒவ்வொருவரின் நடத்தை, உணர்வுகளில் கவனம் செலுத்துகிறது. 

ஆர்.எஸ்.எஸ்., அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பா.ஜ.க. ஆகிய அமைப்புகளுடன் நான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பில் உள்ளேன். சத்ரபதி சாம்பாஜி நகரில் (முன்பு ஔரங்காபாத்) உள்ள  மராத்வாடா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம் (அதற்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற போராட்டம் தலித் அமைப்புகளால் 1980களில் முன்னெடுக்கப்பட்டது. 1994இல்தான் பெயர் மாற்றம் சாத்தியமானது) தொடர்பான சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு யார் பக்கம் (தலித் சார்பு) நின்றிருந்தது என்பதை நான் அறிவேன். தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை, கடவுள் ராமர், கிருஷ்ணர் குறித்த டாக்டர் அம்பேத்கரின் விமர்சன நூலுக்கு எதிராக பால் தாக்கரே தலைமையிலான சிவசேனை 1982-83இல் நடத்திய இயக்கம் ஆகியவற்றின்போதும், ஆர்.எஸ்.எஸ். ஜாதீய சிந்தனைகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியது. ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான முழுமையான எதிர்ப்பை, உறுதியான அர்ப்பணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். தலைமை எவ்வாறு சமயோசிதமாக வெளிப்படுத்தியது என்பதை அந்த விஷயங்களில் நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

ஜாதிகள் மீதான ஆர்.எஸ்.எஸ். அணுகுமுறையில் குறைந்தது மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளதாக நான் கருதுகிறேன். முதலாவதாக, சமூகரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு அது தனது தெளிவான ஆதரவைத் தெரிவிக்கிறது. இரண்டாவதாக, நமது அன்றாட நடத்தையிலும் சமூகநீதி பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அது வலியுறுத்துகிறது. மூன்றாவதாக, சிறிய அடையாளங்கள் (ஜாதி அமைப்பு) ஒரு மாபெரும்  அடையாளத்தின் (ஹிந்து தர்மம்) பிரிக்க முடியாத பகுதிகளே என்ற கண்ணோட்டத்தில் ஜாதிகளை ஆர்.எஸ்.எஸ். அணுகுகிறது.

ஜாதி வேற்றுமையுடன் தொடர்புடைய இந்த அனைத்து கொந்தளிப்பான பிரச்னைகளுக்கும் தீர்வாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்முறைக்கு வழிகாட்டும் தத்துவம் ‘சாமாஜிக் சமரசதா’ அல்லது சமுதாய நல்லிணக்கம் ஆகும். ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தில், இந்த இரு சொற்களும், சமூக சமத்துவம் என்ற கருத்தாக்கத்திற்கு மேலும் மதிப்பைச் சேர்க்கின்றன. சமத்துவம், சமூக நீதி ஆகியற்றின் பொருள், அனைவரும் சமம் என்று அறிவுப்பூர்வமாக ஏற்பது மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாக அதனை ஏற்பதாகும். அதாவது சமூகங்களிடையே உணர்வுப்பூர்வமான அக்கறையும் பகிர்வும் இருக்க வேண்டும்.  என்னைப் பொறுத்த வரை  ‘சமரசதா’ என்பது உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பாகும். விளிம்புநிலையில் உள்ள ஒடுக்கப்பட்டோரின் நலனையும் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த சமுதாயமும் செயல்படக் கூடிய வகையிலும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் அங்கமாக ஒடுக்கப்பட்டோரும் தங்களைப் பொருத்திக்கொள்ளும் வகையிலும் இருப்பதே சமரசதா ஆகும். இதில் அனுதாபத்தை (சிம்பதி) விட பச்சாதாபம் (எம்பதி) அதிகமாகத் தேவைப்படுகிறது.

அதேசமயம், இந்தச் சிந்தனை உணர்வுப்பூர்வமாக இருப்பது மட்டும் அல்ல;  இதனை நடைமுறைப்படுத்தக்கூடிய அறிவார்ந்த நம்பிக்கையையும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பையும் துணையாகக் கொண்டிருப்பதாகும். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சமூகநலத் துறை அமைச்சகத்தை சமூகநீதி அமைச்சகம் என்று பெயர் மாற்ற முடிவு செய்ததற்கு வேறெந்தக் காரணமும் இல்லை. தவிர,  இந்த உணர்வு சமூக சமத்துவத்தை ஒரு வெறும் மதிப்பீடாக மட்டுமல்லாது,  இயல்பான சமுதாய நல்லிணக்க அனுபவமாகவும் ஆக்குகிறது.

பாஜக முன்னாள் நிர்வாகியான ராம் மாதவ் ஒரு வலைப்பதிவில் சுட்டிக்காட்டியபடி, “சமதா என்பது எண்ணங்களில் சமத்துவம்; சமானதா என்பது சட்டத்தில் சமத்துவம்; ஆனால் சமரசதா என்பது உணர்வுகளின் சமத்துவம். சமரசதா – சமூக நல்லிணக்கத்தை அடைவதற்கு வழி  சகோதரத்துவம் மட்டுமே”.

1982-இல், புணேவில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய மாபெரும் ஹிந்து சம்மேளனத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூன்றாவது சர்சங்கசாலக் (தேசியத் தலைவர்) பாளாசாகேப் தேவரஸ்,  “தீண்டாமை பாவம் இல்லை என்றால், உலகில் வேறெதுவுமே பாவம் இல்லை; எனவே இந்த சமூகச் சீர்கேடு வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.களுக்கான இடஒதுக்கீடு தடையின்றித் தொடர வேண்டும் என்று தற்போதைய சர்சங்கசாலக் (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தற்போதைய தலைவர்) மோகன்ஜி பாகவத் திரும்பத் திரும்பக் கூறுவதும் அதனால்தான்.  

கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக நிற்கிறது. அரசியல் சாசனத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட, உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, சமூகத்தில்  தேவைப்படுபவர்களுக்கு, தேவைப்படும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. அவர்களின் வாழ்க்கைத்தரம்,  சமூக நிலைப்பாட்டில் பின்தங்கிய நிலை, சமத்துவமின்மை போன்ற காரணங்களுக்காகவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

அவர் மேலும் விரிவாகப் பேசுகையில், “நமது சமூக அமைப்பில் சக மனிதர்களையே நாம் புறக்கணித்துவிட்டோம். கடந்த 2000 ஆண்டுகளாக நாம் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. நம்மால் (நம் முன்னோரால்) புறக்கணிக்கப்பட்ட அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும் வரை, சில சிறப்புத் தீர்வுகள் இருந்தாக வேண்டும். அதில் இடஒதுக்கீடும் ஒன்றாகும்” என்று தீர்மானமாகக் கூறி இருக்கிறார். மொத்தத்தில், இடஒதுக்கீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் தெளிவான ஆதரவைப் பற்றி ஒரு துளி சந்தேகமும் தேவையில்லை.

சமூக சமத்துவம், சமூக நீதி ஆகியவை மிக முக்கியமான அடிப்படைக் கொள்கைகள்;  எனவே யாரும் இவற்றை எதிர்க்க முடியாது. இருப்பினும், இந்த கருத்தாக்கங்களை கொள்கைரீதியாக ஏற்பதாகக் கூறும் பலரும்கூட, இயல்பு வாழ்க்கையில் இதனை முழு மனதுடன் கடைப்பிடிப்பதில்லை.

இந்த விஷயத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனால் உத்வேகம் பெற்று இயங்கும் பல்வேறு அமைப்புகள் (சங்க பரிவார்) வேறுபடுகின்றன. இவை இந்தக் கொள்கைகள் தொடர்பாக, வெளிப்பார்வைக்கு வெற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றாமல் அல்லது மேடையில் முழங்காமல்  இருக்கலாம். ஆனால் இந்த மதிப்பீடுகளுக்கான சங்க பரிவார் அமைப்புகளின் அர்ப்பணிப்பு, பெரும்பாலும் அவர்களின் நடத்தையில் பிரதிபலிக்கிறது.

மகாத்மா காந்தியும் டாக்டர் அம்பேத்கரும், ஆர்.எஸ்.எஸ். நடத்திய பயிற்சி முகாம்களுக்கு நேரில் சென்றபோது, அங்கு ஜாதி வேறுபாடே இல்லாத, தீண்டாமை உணர்வே இல்லாத சூழலைக் கண்டு வியந்தனர். ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஜாதி  அல்லது சமூகப் பின்னணி பற்றிய விவரங்கள் எதுவும் கேட்கப்படுவதில்லை என்பதையும், அதற்கு அவர்களிடம் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை என்பதையும் நேரில் கண்டு அவர்கள் திருப்தி அடைந்தனர். இது வரலாறு. ஆர்.எஸ்.எஸ்.ஸில் உள்ள பலரும் தாழ்த்தப்பட்ட பிரிவினருடன் தங்களைப் பிணைத்துக் கொள்ள உணர்வுப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். 33 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பேத்கரின் பிறந்த நூற்றாண்டு விழாவின் போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள பலரும், அம்பேத்கரின் திருவுருவப்படம் தங்கள் வீடுகளை அலங்கரிப்பதை உறுதி செய்தனர். புணேவைச் சேர்ந்த கிரிஷ் பிரபுனே போன்ற ஸ்வயம்சேவகர்கள் பலர் ஒதுக்கப்பட்டவர்களான பட்டியல் சமூகத்தினர் மற்றும் நாடோடி சமூகங்களின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்து வருகின்றனர்.

1980களின் பிற்பகுதியில், சமூகங்களிடையே பிணைப்பை ஏற்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. 1982-83இல் பால்தாக்கரே உள்ளிட்ட சில ஹிந்துத் தலைவர்கள் அம்பேத்கரின்  ‘ரிடில் ஆஃப் ராம்’ நூலைத் தடை செய்யக் கோரியபோது, ஆர்.எஸ்.எஸ்., பாஜக அமைப்புகள் அவ்வாறு தடை கோருவதைத் தவிர்த்தன.

வினய் சஹஸ்ரபுத்தே

ஒட்டுமொத்த சமூகத்துடனும் ஜாதிகள் மற்றும் சமூகங்களின் இணக்கத்தை விளக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். சுயமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. நமது உடலின் ஒவ்வொரு பாகமும் முக்கியமானது; ஒன்று சிறந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பதற்கு இடமே இல்லை. ஒவ்வொரு உடல் பாகமும் ஒன்றையொன்று சார்ந்தவை; அவை ஒருங்கிணைந்தவை. முழு உடலுடனும் ஒரு உடல் உறுப்பு கொண்டிருக்கும் பரஸ்பர உறவைப் போலவே, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இந்த மாபெரும் சமூகத்துடன் பெரிய அளவில் இணைந்திருக்கிறார்கள். இந்த உறவானது ஒரே நேரத்தில் பரஸ்பரம் நலன் விளைவிப்பதாவும், முழு உடலின் இயக்கத்துடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. எனவே, உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்ற பேதமோ, அதனால் எழும் மோதலோ தேவையே இல்லை. இங்கே சமூக நல்லிணக்கம், கூட்டுப்பணி மற்றும் பரஸ்பர நல்லுணர்வால் நிறைவேறுகிறது.

‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கத்தைப் பொருத்த வரை, வெற்று கோஷங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ். எப்போதும் விலகியே உள்ளது. ‘சமரசதா’ என்பது ஆர்.எஸ்.எஸ். தலைமையின் சிந்தனையில் உருவான ஒரு மௌனப் புரட்சி. இந்த விஷயத்தில் அறிவுசார் நேர்மை, அதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு நாம் நடைமுறையில் மேடையில் பேசும் சமத்துவம் என்பது மேலோட்டமானதாகவும் குறுகிய வாழ்நாள் கொண்டதாகவுமே இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறும் ‘சமரசதா’ எனப்படும் நல்லிணக்கம் மிகவும் ஆழமானது; இது நம் ஒவ்வொருவரின் நடத்தை, உணர்வுகளில் கவனம் செலுத்துகிறது. இதுவே சேவையாற்றுவதில் நிலவும் பாசாங்குத்தனத்தை அகற்றுவதற்கான ஆர்.எஸ்.எஸ்.ஸின் சுயமான வழிமுறையாக மாறி இருக்கிறது.

நன்றி: தினமணி (14.05.2024)

குறிப்பு: கட்டுரையாளர், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்; பாஜகவின் முன்னாள் தேசிய துணைத் தலைவர்.

இக்கட்டுரை  ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் (08.05.2024) வெளியான ‘Why the RSS supports reservation?’ என்ற கட்டுரையின் தமிழ் வடிவம்.

$$$

Leave a comment