வீர சாவர்க்கரின் தியாகத்தைப் போற்றிய மகாத்மா காந்தி

-ஜெ.நந்தகுமார்

கம்யூனிஸ்டுகளைப் பொருத்த வரையில், வரலாறு என்பது அவர்களது கருத்தியலுக்கு வசதியான விஷயங்களை வெளிப்படுத்தப் பயன்படும் கருவி மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக உள்ள கசப்பான உண்மைகளை மறைப்பதற்கும் உதவும் கருவி. ஆனால் இந்த அறிவுசார் அழிச்சாட்சியங்கள் எல்லாம் இனிமேலும் எடுபடாது.

உலகில் மிக வன்மத்தோடும் வலிமையோடும் அவதூறுக்கு உள்ளான தலைவர்கள் மிகவும் குறைவு. அவ்வாறு உள்ளானவர்களில் ஒருவர் ‘வீர சாவர்க்கர்’ எனப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளாக இருந்த எம்.என்.ராய், ஹிரேந்திரநாத் முகர்ஜி, எஸ்.ஏ.டாங்கே உட்பட எண்ணற்ற அரசியல் தலைவர்களுக்கும் தேசியவாதிகளுக்கும் பெரும் உத்வேகம் அளிப்பவராக இருந்தவர் வீர சாவர்க்கர். ஆனால் கம்யூனிச முன்னோடிகளின் வழியிலிருந்து விலகி நவ இடதுசாரிகள் ஒருதலைபட்சமாக அந்த மாபெரும் புரட்சியாளரை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரான  துரோகி, சதிகாரர்  என்று சித்தரிக்கிறார்கள்.

அந்தமான் சிறையில் இருந்த காலத்தில் சாவர்க்கர் ஆங்கில அரசாங்கத்திற்கு பலமுறை கருணை மனு அனுப்பினார் என்பது அவர் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு என்பதை பலரும் அறிவார்கள். இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி காலகட்டத்திற்குக் பிறகுதான் இந்தச் சர்ச்சை எழுப்பப்படுகிறது.

நெருக்கடி காலகட்டத்திற்குப் பிறகு தேசிய சிந்தனை வலுப்பெற்றதைக் கண்டு கலங்கிப்போன நவ இடதுசாரிகளுக்கு சாவர்க்கர் சுலபமான இலக்காகவும் ஹிந்துத்துவத்தைத் தோற்றுவித்தவராகவும் தெரியத் தொடங்கினார். அவர்கள்  ‘புதிய கண்டுபிடிப்பு’களைத் தேடி ஆழமாகத் தோண்டிச் சென்று, உண்மைக்கு மாறான  வதந்திகளை மாற்று வரலாறாகக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்தார்கள்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,  ‘ஹிந்துத்துவ’த்தின் மீது விமர்சனங்களைக் கொண்டிருந்த போதிலும், சாவர்க்கரின் சமகாலத்தவர்களான எம்.என்.ராய், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்ற முன்னணி இடதுசாரித் தலைவர்கள் சாவர்க்கரை மிகவும் உயர்வாகவே மதித்தார்கள். அதற்கு மாறாக நவ இடதுசாரி அறிவாளிகள் தங்களது அரசியல் எஜமானர்களின் விருப்பத்திற்கு ஏற்ப  ‘சான்றுகளை உற்பத்தி செய்து’ புதிய வரலாற்றுப் பாடங்களை எழுதி வருகிறார்கள்.

சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் அவரது வரலாற்றுத் தருணம் பற்றி நவ இடதுசாரிகளின் பிரசாரமும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக அவர்கள் முன்வைக்கும் உண்மைகளும், அதை ஒட்டியும் மறுத்தும் எழுதப்பட்டுள்ள  நூல்களும் பொதுவெளியில் நிறையவே கிடைக்கின்றன.

இந்நிலையில் புதிய கண்டுபிடிப்புகளாக அவர்கள் முன்வைப்பவை உண்மையில் புதியவையா?

சாவர்க்கர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த இடதுசாரிகள் அவரை விமர்சிக்காமல் விட்டது ஏன்? ஏனெனில், அவர்களைப் பொருத்த வரையில் சாவர்க்கர் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தேசபக்தர்; தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்; தீரமான சுதந்திரப் போராளி.

நெருக்கடி காலகட்டத்திற்குப் பிறகு சாவர்க்கருக்கு எதிராக எழுப்பப்பட்ட இந்த அடிப்படையற்ற அவதூறுகளுக்குத் துணையாக, நவ இடதுசாரிகள் சாமர்த்தியமாக அவருக்கு சித்தாந்த எதிரியாக மகாத்மா காந்தியை முன்னிறுத்தினார்கள். அத்துடன் வரலாற்று உண்மைகளை தரைவிரிப்பிற்கு அடியில் மறைத்து விட்டனர்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் அரசருக்கு கருணை மனு போடுவது, அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்ததொரு விஷயம் மட்டுமல்ல, சாவர்க்கரைப் பொருத்த வரையில் அது அவரது புரட்சிகரச் செயல்பாடுகளில் ஒரு முன்னெடுப்பு.

‘அவர் காலத்தில் கருணை மனு போடுவது எல்லோரும் செய்ததில்லை. அது விதிவிலக்கானது. அது மட்டுமன்றி அவர் கருணை மனு போட்டது அவர் காலத்தில் யாருக்குமே தெரியாது’ என்று இப்பொழுது விமர்சிக்கிறார்கள் . ஆனால் மகாத்மா காந்தியின் எழுத்துக்களில் இதற்கு நேர்மாறான விஷயங்கள் பதிவாகியுள்ளன.

சாவர்க்கருக்கு எதிராக காந்திஜியை நிறுத்துவது நவ இடதுசாரிகளின் விருப்பமான செயலாக இருப்பதால், சாவர்க்கரைப் பற்றி காந்திஜி என்ன நினைத்தார், என்ன எழுதியுள்ளார் என்பதை நமக்கு அவர்கள் ஒருபோதும் சொல்லவில்லை.

சாவர்க்கருக்கு எதிரான இடதுசாரிகளின் பிரசாரம் இன்று குப்பைக்கூடையில் வீசப்பட்டுள்ளது என்றாலும், எம்.என்.ராய், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், எஸ்.ஏ.டாங்கே போன்ற பெரிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் கருத்துக்கள், இதுவரை வெளிவராமல் மறைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் எழுத்துகள் ஆகியவை சாவர்க்கரைப் பற்றிய இடதுசாரிகளின் மோசடியை அம்பலப்படுத்தி, முற்றிலும் தகத்தெறிவதாக உள்ளன.

சாவர்க்கரின் சுயசரிதையில் மட்டுமின்றி, பலர் எழுதியுள்ள அவரது சரித குறித்த நூல்களைப் படிக்கும்போது, சாவர்க்கரின் வாழ்க்கை தீரமும், முழுமையாக தியாகமயமானதாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட தீரத்தை, தியாகத்தை இடதுசாரிகளால் – முன்னெடுப்பதை விடுங்கள் – கற்பனையில் கூட நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் அவரது புரட்சிகர வாழ்க்கை வேறு யாருடனும் ஒப்பிட முடியாதபடி தனித்துவத்தோடு விளங்குகிறது.

அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சிகளில் அரசியல் லாபம் பெறுவதை நோக்கமாகக் கொண்ட கம்யூனிச வரலாற்றாளர்கள் கருணை மனுவை காரணமாகக் காட்டி வீர சாவர்க்கரின் தேசபக்தியைக் கொச்சைப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். அவர்களது குற்றச்சாட்டில் உள்ள போலித்தனத்துக்கு எதிராக,  பல அரசியல் கைதிகளுக்கு  ‘அரசின் கருணை’ கிடைத்த வேளையில் சாவர்க்கர் சகோதரர்களுக்கு மட்டும் நீதி மறுக்கப்பட்டது எப்படி என்பதை மகாத்மா காந்தியே விளக்கியுள்ளார்.

சாவர்க்கர் சகோதரர்களைப் பற்றி மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மிகவும் உயர்வானதாகவும், அவர்களைப் போற்றுவதாகவும் இருக்கின்றன. ஒத்துழையாமை போராட்ட முறை பற்றி மாறுபட்ட கருத்துக்களை சாவர்க்கர் கொண்டிருந்த போதிலும், சுதந்திரப் போராட்டத்தில் அவரது புரட்சிகரமான பங்களிப்பு பற்றி மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மிகவும் சுவாரசியமாகவும் கவனிக் கத்தக்கதாகவும் இருக்கின்றன.

“இந்திய அரசு மற்றும் மாகாண அரசுகளின் நடவடிக்கையால் சிறையில் வாடிக் கொண்டிருந்த பலர் அரசின் கருணையைப் பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது. ஆனால் சில அரசியல் குற்றவாளிகள்  இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அதில் முக்கியமானவர்கள் சாவர்க்கர் சகோதரர்கள். அவர்களைப் போன்றே தீவிர தன்மையுடைய பல அரசியல் கைதிகள், உதாரணமாக பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சகோதரர்களுக்கு கருணை மனு அளித்து ஐந்து மாதங்கள் ஆகியும் விடுவிக்கப்படவில்லை“’ ”

-என்று 1920 மே மாதம் 26 தேதியிட்ட ‘யங் இந்தியா’ பத்திரிகையில்  ‘சாவர்க்கர் சகோதரர்கள்’ என்ற தலைப்பில் காந்திஜி எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (மகாத்மா காந்தி நூல் தொகுப்பு பாகம் 20 – பக்கம் 368)

நிபந்தனைக்கு உட்பட்ட விடுதலை கோரி கருணை மனுவை அப்போது சிறையில் இருந்த பலரும் அதற்கென உள்ள படிவத்தில் அளித்துள்ளனர். மகாத்மா காந்தி எழுதியுள்ளதிலிருந்து சாவர்க்கரின் கருணை மனு பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது. அது அப்போது பழக்கத்தில் இருந்த விஷயம் என்பதும், பல அரசியல் கைதிகள் கருணை மனுவை அளித்து அரசின் கருணையைப் பெற்று விடுதலை ஆகியுள்ளனர் என்பதும் தெரிகிறது. இதைத்தான் மன்னிக்க முடியாத, முன்மாதிரியற்ற குற்றமாக சாவர்க்கர் விஷயத்தில் இடதுசாரிகள் சித்தரிக்கிறார்கள்.

காந்திஜி எழுதியுள்ள அந்தக் கட்டுரையில் கணேஷ் தாமோதர சாவர்க்கர் வாழ்க்கையை சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்:   

“இரண்டு சகோதரர்களின் மூத்தவரான கணேஷ் தாமோதர சாவர்க்கர் 1879இல் பிறந்துள்ளார்; சாதாரணமான கல்வி பெற்றுள்ளார்; 1908இல் நடந்த சுதேசி இயக்கத்தில் நாசிக் பகுதியில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார். அதன் காரணமாக ஆங்கில அரசு அவரை 1909 ஜூன் 9 ஆம் தேதி அந்தமானுக்கு நாடு கடத்தியது. 121, 121ஏ, 124 ஏ மற்றும் 153 ஏ சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி அரசு அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ததுள்ளது. இதுவரை (1920) பதினோரு ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.”

“பஞ்சாப் நீதி விசாரணையின் போது  ‘அரசருக்கு எதிராக போர் தொடுத்தது’ என்று 121 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. அதன்படி, குறைந்தபட்சத் தண்டனை என்பது சொத்துக்களைப் பறிமுதல் செய்து நாடு கடத்துவதாகும். 121 ஏ சட்டப்பிரிவும் அதுபோன்றதே. 124ஏ என்பது ஆட்சிக்கு எதிராக சதி செய்வது.   ‘பேச்சாலோ எழுத்தாலோ அல்லது வேறெந்த வகையாலோ’ இரு பிரிவினருக்கிடையே எதிர்ப்பை மோதலை உருவாக்குவது குற்றமென்கிறது 153 ஏ சட்ட பிரிவு.”

“இதிலிருந்து (மூத்த) சாவர்க்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் பொது சமூகம்/ பொதுமக்கள் தொடர்புடையதாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் வன்முறையில் ஈடுபடவில்லை. அவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. பதினெட்டு மாதங்களுக்கு முன் அவரது மனைவியும் அந்த இரண்டு பெண் பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள்.”

கணேஷ் சாவர்க்கர் பற்றி சுருக்கமாகச் சொன்ன பிறகு மகாத்மா காந்தி வீர சாவர்க்கரை அறிமுகம் செய்கிறார்:

“மற்றொரு சகோதரர் (வீர சாவர்க்கர்) 1884இல் பிறந்தவர்; லண்டனிலிருந்து செயல்பட்டவர். ஆங்கில காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக கப்பலில் வெளிச்சம் வருவதற்காக இருந்த ஜன்னல் துவாரம் வழியாக கடலில் குதித்து பிரெஞ்சு நாட்டு மண்ணில் ஏறி பிடிபட்ட பரபரப்பான சாகசம் பொதுமக்கள் மனதில் இன்னமும் மறையாமல் இருக்கிறது. பெர்குசன் கல்லூரியில் படித்து, பின்பு லண்டன் சென்று படித்து பாரிஸ்டர் ஆனவர். 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் பற்றி அவர் எழுதிய வரலாற்று நூல் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது.” 

“1910 இல் விசாரணைக்குப் பிறகு இவரது மூத்த சகோதரருக்கு விதித்த அதே தண்டனை இவருக்கும் 1910 டிசம்பர் 24 ஆம் தேதி விதிக்கப்பட்டது. 1911இல் கொலைக் குற்றமும் இவர் மீது சுமத்தப்பட்டது. இவர் மீதான வன்முறையில் ஈடுபட்டதாக கூரப்பட்ட குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. இவருக்கும் திருமணமாகி, 1909 இல் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவரது மனைவி உயிருடன் இருக்கிறார்.”

ஆங்கில அரசுக்கு சாவர்க்கர் எழுதிய கடிதத்தின் விவரங்களை பற்றி மகாத்மா காந்தி எழுதுகிறார்:

“இரண்டு சகோதரர்களும் தங்களது அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள். புரட்சி செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று சொல்லி உள்ளார்கள். தங்களை விடுதலை செய்தால் சீர்திருத்தச் சட்டத்திற்கு (இந்திய அரசியல் சட்டம் - 1919) உட்பட்டு நடந்து கொள்வதாகவும், அந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டாலே இந்தியாவின் அரசியல் பொறுப்பை அடைய முடியும் என நம்புவதாகவும் எழுதியுள்ளனர்.”

மகாத்மா காந்தி அசல் கடிதத்தில் உள்ள நிபந்தனைகளை மேற்கோள் காட்டி எழுதியுள்ளதற்கு முன்  இடதுசாரிகளின் பொய்யான திரிபுகள் சரிந்து விழுந்து விட்டன.

சாவர்க்கர் எழுதிய கடிதத்தின் ஷரத்துக்களைப் பற்றி, காந்தி உட்பட  பலருக்கும் தெரிந்திருந்தது என்பது, காந்திஜியின் கட்டுரையில் இருந்து தெளிவாகிறது. இவ்வளவும் தெரிந்த பிறகும், அவர் சாவர்க்கரை  ‘பாரதத் தாயின் உண்மையான புதல்வர்’, ‘தீரமிக்கவர்’ என்று தயங்காமல் கூறுவது கவனிக்கத்தக்கது.

கருணை மனு போடுவது வழக்கமாக இருந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட  ‘புத்திசாலி’ என்று சாவர்க்கரைப் பாராட்டி எழுதியுள்ள காந்தி, அந்தக் காலகட்டத்தில் பல ஆயுதப் புரட்சியாளர்களுக்கும் அரசியல் கைதிகளுக்கும் அரசு கருணை காட்டி சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இந்தியாவில் இப்போது வன்முறைப் பாதையை ஏற்று செயல்படுபவர்கள் யாரும் இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். இந்நிலையில் இரண்டு சகோதரர்களையும் விடுதலை செய்யாமல் இருப்பதற்கு  ‘பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்’ என்ற ஒரே ஒரு காரணத்தை மட்டுமே அரசால் சொல்ல முடிகிறது. அதைப் பொருத்த வரையிலும், சிறையில் உள்ள கைதிகளுக்கு மன்னர் கருணை காட்டும் தன் அதிகாரத்தை வைஸ்ராயிடம் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் முடிவு செய்ய வைஸ்ராய்க்கு முழு அதிகாரம் உள்ளது”

-என்று சொல்லிய காந்தி தன் வாதத்தை தொடர்ந்து எழுதுகிறார்:

“இரண்டு சகோதரர்களும் நீண்ட காலமாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அதனால் அவர்களது உடல்நலனும் எடையும் குறைந்துள்ளது. ஏற்கனவே அவர்கள் தங்களது அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக அறிவித்து விட்டனர். இவர்களால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லாவிட்டால் வைஸ்ராய் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.”

“நீதிபதிகள் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்திற்கு உட்பட்டு இரண்டு சகோதரர்களுக்கு குறைந்தபட்சத் தண்டனை வழங்கினார்களோ அதுபோலவே,  ‘பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாது’ என்ற, அவர்கள் கூறும் உத்தரவாதத்தை உறுதி செய்து கொண்டு வைஸ்ராய் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.”

“இந்த வழக்கை பாய் பரமானந்தர் வழக்குடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அவர் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதால், பஞ்சாப் அரசின் முயற்சிகளால் அவர் விடுதலை செய்யப்பட்டார். கடைசி வரையிலும் தான் நிரபராதி என்று அவர் வாதிட்டார் என்று சாவர்க்கர் சகோதரர்களின் வழக்குடன் ஒப்பிட்டுச் சொல்லலாம். அரசாங்கத்தைப் பொருத்த வரையில் எல்லோரும் குற்றவாளிகள்தான்;  அதனால்தான் தண்டிக்கப் பட்டுள்ளார்கள்.”

“மேலும் அரசரின் கருணை என்பது வழக்குக்கு ஏற்ப மாறுபடாது. தண்டனை பெற்ற எல்லா குற்றவாளிகளுக்கும் ஒரே மாதிரிதான். அரசியல் குற்றமாக இருக்க வேண்டும் என்பதும், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாது என்று வைஸ்ராய் கருத வேண்டும் என்பதுமே கருணைக்கான நிபந்தனைகள்.”

“சகோதரர்கள் இருவரும் அரசியல் குற்றவாளிகள் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. பொதுமக்களைப் பொருத்த வரையில் அவர்களால் பொது அமைதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது தெரிந்த விஷயம். இவர்கள் விடுதலை தொடர்பான விஷயம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று வைஸ்ராய் கவுன்சில் கூறுகிறது. ஆனால் பம்பாய் அரசு அந்த சகோதரர்களுக்கு அனுப்பிய பதிலில் ‘அவர்களது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை’ என்று கூறியுள்ளது.  ‘இந்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க முடியாது’ என்று மான்டேகு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.” 

“ஆனால் இந்த வழக்கை அவ்வளவு எளிதாகக் கிடப்பில் போட முடியாது. மக்களைப் பொருத்த வரையில் (பிரிட்டிஷ்) அரசரின் கருணை என்பது அரசின் சட்டம்தான். எனவே இரு சகோதரர்களும் ஏன் விடுதலை செய்யப்படவில்லை, எதன் அடிப்படையில் அவர்களது சிறைவாசம் தொடர்கிறது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது”

-என்று காந்திஜி தன் கட்டுரையை முடிக்கிறார்.

‘ஹாரினிமானும் அவரது நிறுவனமும்’  என்ற தலைப்பில் காந்திஜி கட்டுரை எழுதியுள்ளார். அது மகாத்மா காந்தியின் முழு தொகுப்பு பாகம் 23 பக்கம் 156 இல் உள்ளது. சாவர்க்கரைப் பற்றிப் பேசவோ எழுதவோ தாம் தயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுவதற்கு மன்னிப்புக் கோருவதாகத் தொடங்குகிறது அந்தக் கட்டுரை.

“ஹார்னிமான் விஷயத்தில் * நான் அலட்சியமாக இருப்பதாக நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல சாவர்க்கர் சகோதரர்கள் விஷயத்தைப் பற்றியும் நான் எழுதுவதே இல்லையே என்கின்றனர் சிலர்… ஹர்னிமான் பற்றியோ சாவர்க்கர் சகோதரர்களைப் பற்றியோ குறிப்பிட்டு நான் எழுத வேண்டும் என்றால் அது அரசின் முடிவின் மீது தாக்கம் ஏற்படுத்துவதற்காக இல்லாமல் ஒத்துழையாமை நோக்கி மக்களின் சிந்தனையை மாற்றுவதற்காக வேண்டுமானால் எழுதலாம்.  ஹார்னிமான் தைரியமான தோழர். அவர் மீண்டும் நல்ல நிலையில் திரும்பி வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். அவர் நாடு கடத்தப்பட்டது அநீதியாகும்” 

என்று பலவீனமாகத் தொடங்குகிறார் காந்தி.

“சாவர்க்கர் சகோதரர்களின் திறமையை பொதுநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா சரியான நேரத்தில் விழித்துக் கொள்ளாவிட்டால் தனது சீரிய புதல்வர்கள் இருவரை இழந்து விடும் அபாயம் உள்ளது. இரு சகோதரர்களில் ஒருவரை நான் நன்கு அறிவேன். அவரை (விநாயக தாமோதர சாவர்க்கர்) லண்டனில் சந்தித்துப் பழகி உள்ளேன். அவர் தைரியசாலி; நல்ல புத்திசாலி; சிறந்த தேச பக்தர். அவரொரு புரட்சியாளர்; மறைந்திருந்த இந்த (பிரிட்டிஷ்) அரசின் கோர முகத்தை எனக்கும் முன்னரே தெரிந்து கொண்டவர். இந்தியாவை மிகவும் நேசித்ததற்காக அந்தமான் சிறையில் அவர் அவதிப்படுகிறார். நியாயமான அரசு இருந்திருந்தால் அவர் இந்நேரம் உயர் பதவியில் இருந்திருப்பார். அவர் மீதும் அவரது மூத்த சகோதரர் மீதும் நான் பரிவு கொண்டுள்ளேன். என்ன செய்வது? நான் ஒத்துழையாமை இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டி இருக்கிறதே?”

-என்று காந்தி எழுதியுள்ளார்.

உண்மையில், சாவர்க்கர் பற்றிய வரலாற்றுப் பூர்வமான உண்மைகளை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், அவரைப் பற்றிய மகாத்மா காந்தி எழுதியுள்ளதைத் தான்  புதிய கண்டுபிடிப்புகளாகக் கருத வேண்டும்.

இந்தியாவின் தீரமிக்க புதல்வர்களைப் பற்றி மக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பும் விதமாக பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்டுகள் கூறிவரும் பொய்களை காந்திஜியின் எழுத்துக்கள் உடைத்து நொறுக்குகின்றன.

ஜெ.நந்தகுமார்

கம்யூனிஸ்டுகளைப் பொருத்த வரையில், வரலாறு என்பது அவர்களது கருத்தியலுக்கு வசதியான விஷயங்களை வெளிப்படுத்தப் பயன்படும் கருவி மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக உள்ள கசப்பான உண்மைகளை மறைப்பதற்கும் உதவும் கருவி. ஆனால் இந்த அறிவுசார் அழிச்சாட்சியங்கள் எல்லாம் இனிமேலும் எடுபடாது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், அவர்களின் வாழ்க்கையில் இருந்து  எழுச்சி பெறுகின்ற தலைமுறை மறைந்து வருகின்ற சூழலில், எதிர்காலத்தை நினைக்கும் போது அச்சமாக இருக்கிறது. இந்த இக்கட்டான காலகட்டம், நம் தேசத்தின் பண்பாட்டையும் சமூகக் கட்டமைப்பையும் உடைக்கும் நோக்குடன்  செயல்படுபவர்களுக்கும் அவர்களது துஷ்பிரசாரத்திற்கும் தகுந்த விளைநிலமாகி விடக் கூடாது.

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு காலகட்டத்தில், சுய ஊக்கம் கொண்ட ஆய்வாளர்களும் எந்ச்த சார்புமில்லாத சுதந்திரமான வரலாற்றாளர்களும், ஹிந்து ஸ்வராஜ்ஜியத்தின் பிரகாசமான இரண்டு நட்சத்திரங்களாக விளங்கும் மகாத்மா காந்தி, வீர சாவர்க்கர் ஆகியோரிடையே இருந்த உறவு – அது மதிப்புடன் கூடியதாகவும் பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாகவும் இருந்துள்ளது – குறித்து தகுந்த முறையில் வெளிப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  • நன்றி: ஆர்கனைசர் வார இதழ்.
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
குறிப்பு:

திரு. ஜெ.நந்தகுமார், ‘பிரக்ஞா பிரவாஹ்’ என்ற அகில பாரத அமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர். இந்த அமைப்பு தமிழகத்தில் ‘தேசிய சிந்தனைக் கழகம்’ என்ற பெயரில் இயங்குகிறது.

* ‘பம்பாய் கிரானிக்கிள்’ பத்திரிகை ஆசிரியர் ஹார்னிமான். அவர் பம்பாயில் நடந்த தொழிலாளர் போராட்டத்திற்கு மிகவும் ஆதரவாகப் பேசியும் எழுதியும் வந்தார். அதனால் அந்த பத்திரிகை முடக்கப்பட்டது.

$$$

Leave a comment