-எஸ்.குருமூர்த்தி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பிரபல பத்திரிகையாளரும் ‘துகள்க்’ ஆசிரியருமான திரு. எஸ்.குருமூர்த்தி எழுதிய, இரு பாகங்கள் கொண்ட ஆங்கிலக் கட்டுரை, திரு. திருநின்றவூர் ரவிகுமார் அவர்களின் தமிழாக்கத்தில் நமது தளத்தில் மீள்பதிவாகிறது...

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலைப் போலவே இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சி. இரண்டு, உலகத் தலைவராக பிரதமர் மோடியின் வளர்ச்சி. இரண்டும் பின்னிப் பிணைந்துள்ளன.
மோடியின் வளர்ச்சியானது அதிசயம் என்பதை விடவும் அதிகம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவரொரு குட்டி ஹிட்லராக சித்தரிக்கப்பட்டு வந்தார். மிகவும் வெறுக்கப்பட்ட நபர் என்பதிலிருந்து வெறும் பத்தாண்டுகளில் உலகம் புகழும் தலைவராக உருவெடுத்துள்ளார்.
பலவீனமான பொருளாதாரம் கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவை மிகவும் வலிமையான பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஐந்தாவது இடத்திற்கு அவர் மாற்றி அமைத்ததை உலகம் வியப்புடன் பார்க்கிறது. வெறுக்கப்பட்டவராக இருந்த நிலையில் இருந்து புகழப்படுபவராக மாறி உள்ள மோடி, கடந்த ஆண்டு ஜி20 நாடுகள் அமைப்புக்கு தலைமை ஏற்றார்.
இன்று இத்தாலியப் பிரதமர் கூறுகிறார், ‘உலகில் மிகவும் விரும்பப்படுகின்ற தலைவர் மோடி’ என்று. ஆஸ்திரேலியா பிரதமர் அவரை ‘பாஸ்’ என்று அழைக்கிறார். மோடி மிகவும் பிரபலமானவராக இருக்கிறார், ‘நான் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க விரும்புகிறேன்’ என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. வளர்ச்சியடைந்த நாடுகள் தங்கள் அடியாழத்திலிருந்து வெறுத்த ஒருவரை இன்று புகழ்வது ஏன்?
மறைந்திருக்கும் புள்ளிகளை இணைத்தால் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்தியாவுக்கு இணையாக இருந்த சீனா கடந்த முப்பதாண்டுகளில் இந்தியாவை விட பல மைல்கள் முன்னேறி சென்று விட்டதை மேற்கத்திய நாடுகள் பார்த்தன. அவை ஜனநாயக நாடுகளாக இருந்த போதிலும் இந்திய ஜனநாயகத்தை விட சீன சர்வாதிகாரத்தை மேலானதாகக் கருதின. எனவே சர்வாதிகார சீனாவைப் புகழ்ந்தன. ஜனநாயக இந்தியாவைப் புறந்தள்ளின. இந்தப் பின்னணியில்தான் மோடியின் தலைமையில், எல்லா வகையிலும் இந்தியா எழுச்சி பெறுவதைப் பார்க்கும் மேற்கத்திய நாடுகள், அதிர்ச்சி அடையவில்லை என்றாலும், வியப்படைகின்றன.
இந்தியாவின் வளர்ச்சி தாமதமானதற்கு ஜனநாயகம் காரணமா?
ஃபோர்ப்ஸ் என்ற பத்திரிகை ‘ஏன் சீனா பறக்கும்போது இந்தியா வெறுமனே வளர்கிறது?’ என்ற தலைப்பில் (2019) கட்டுரை வெளியிட்டது. ‘1980இல் இந்தியாவுக்கு இணையாக இருந்த சீனா 2014இல் இந்தியாவைவிட 3.5 மடங்கு அதிகமாக வளர்ந்து விட்டது. சீனாவின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் சர்வாதிகார ஆட்சி. இந்தியா வளர்ச்சியில் பின்னடைந்ததற்குக் காரணம் அதன் கட்டுப்பாடற்ற ஜனநாயகம்’ என்றது அந்தக் கட்டுரை.
இந்தக் கருத்தை நிறுவ ஒரு எடுத்துக்காட்டை முன்வைத்தது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. இந்தியாவில் நர்மதா அணையையும் சீனாவில் யாங்சே அணையையும் ஒப்பிட்டது அது. யாங்சே அணையைக் கட்டியதில் 13 மாநகரங்களும் 140 நகரங்களும் 1,350 கிராமங்களும் மூழ்கின. 1.2 மில்லியன் மக்கள் (12 லட்சம்) தங்கள் வசிப்பிடத்தை இழந்து இடம்பெயர வேண்டியதானது. இருந்தாலும் அந்த அணையை சீனா பன்னிரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்தது.
நர்மதா அணை திட்டத்தால் எந்த ஒரு மாநகரமோ நகரமோ பாதிக்கப்படவில்லை. வெறும் 178 கிராமங்களும் அதிலிருந்த ஒரு லட்சம் மக்களும்தான் இடம்பெயர வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் அந்த அணையைக் கட்ட இந்தியாவுக்கு அறுபது ஆண்டுகளானது. காரணம் என்ன? அணையைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பு மற்றும் சிலரின் செயல்பாடுகள்.
ந.ப.அ. அமைப்பின் மனுவை ஏற்று 1995 இல் உச்சநீதிமன்றம் அணை கட்டத் தடை விதித்தது. நான்கு ஆண்டுகள் கழித்து, அணையின் உயரத்தைக் குறைத்துக் கட்ட அனுமதி அளித்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, ஆண்டுக்கு சுமார் 2.5 மீட்டர், அதிகரித்து ஆரம்பத்தில் திட்டமிட்ட 139 மீட்டர் உயரத்தை எட்ட இருபது ஆண்டுகளாயின. இன்று மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் வளர்ச்சிக்கு வழிகோலியது அந்த அணை.
ஃபோர்ப்ஸ் போலவே கார்ப்பரேட் ஆதரவாளர்களும் ஜனநாயகம் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், சீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை வளர்ச்சிக்கு ஆதரவாகவும் உலக வளத்திற்குப் பங்களிப்பதாகவும் போற்றி வர்ணித்தனர். இந்தக் கருத்து மேற்கத்திய நாடுகளிடையே ஆழமாகப் பதிந்தது. இந்த நிலையில்தான் அனைவராலும் மோசமாகச் சித்தரிக்கப்பட்ட நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆனார்.
பிரச்னை வேறு என்றார் மோடி
இந்தியாவின் வளர்ச்சி மெதுவாக இருப்பதற்குக் காரணம் இங்குள்ள ஜனநாயகம் என்று மேற்கத்திய நாடுகள் சித்தரிப்பதைக் கண்டு மோடி தனக்குள் சிரித்திருப்பார். எந்த ஜனநாயகம் திறனற்றது என்று கொச்சைப்படுத்தப்பட்டதோ அதே ஜனநாயகத்தின் மூலம்தான் குஜராத்தின் முதல்வராக, அபாரமான வளர்ச்சியை ஏற்படுத்திக் காட்டினார்.
ஊடகங்கள் அவருக்கு நட்பாக இல்லாத போதிலும், அவரை சிறந்த முதல்வராக மீண்டும் மீண்டும் தேர்வு செய்தன. இந்தியா மெதுவாக வளர்வதற்குக் காரணமான குறைபாடு அதன் ஜனநாயகத்தில் இல்லை என்பது மோடிக்குத் தெரியும். கடந்த இருபது ஆண்டு காலமாக முரண்பாடுகளைக் கொண்ட பலவீனமான கூட்டணி ஆட்சிகளே இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன. இந்திய ஜனநாயகத்தைப் பற்றி மேற்கத்திய நாடுகள் காணத் தவறிய உண்மைகளைப் பாருங்கள், புரியும்.
சீனாவில் டெங் ஜியாவோபிங் தலைவராக இருந்த காலத்தில் (1978- 1990) அவர் ஒருவர் மட்டுமே தலைவர். அதே சமமான காலகட்டத்தில் (1989- 1998) இந்தியாவில் ஏழு பிரதமர்கள். அதில் சிலர் சில மாதங்களே பிரதமராக இருந்தனர். சிலர் வெறும் சில நாட்களே பிரதமராக இருந்தனர். வி.பி.சிங் பதினோரு மாதம், சந்திரசேகர் நான்கு மாதம், நரசிம்ம ராவ் ஐந்து ஆண்டுகள், வாஜ்பாய் 13 நாட்கள், தேவெ கௌடா பதினோரு மாதம், ஐ.கே.குஜரால் பதினோரு மாதம், வாஜ்பாய் (மீண்டும்) 13 மாதங்கள் பிரதமர்களாக இருந்தனர். அரசுகள் சீட்டுக்கட்டு மாளிகையாகச் சரிய, இந்தியா நான்கு பொதுத் தேர்தல்களைச் சந்தித்தது.
பிறகு 25 கட்சிகளைக் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நாடு பலவிதங்களிலும் வளர்ச்சியைக் கண்டாலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதிலேயே அதிக சக்தி செலவானதால், அவரது திறமைக்கு ஏற்ப தேசம் வளர்ச்சி காண முடியவில்லை. பிறகு வந்த மன்மோகன் சிங்கும் பல கட்சி கூட்டணி அரசை நடத்தினார். அவரை பின்னால் இருந்து சோனியா காந்தி இயக்கியதாலும், ராகுல் காந்தியால் பலமுறை வெளிப்படையாக அவமதிக்கப்பட்டதாலும், அவரது ஆட்சி ஊழலில் திளைப்பதாக, திறனற்றதாக இருந்தது. அதனால் உலகில் ஐந்து பலவீனமான பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறியது; ஏறத்தாழ திவால் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது.
அவரது ஆட்சியில் புள்ளி விவரங்களின்படி மட்டுமே வளர்ச்சி இருந்தது. வேலைவாய்ப்பு 56.4 சதவீதத்தில் இருந்து 50.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு வெறும் 2.8 மில்லியன் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. வேலைவாய்ப்பு அதிகரிக்காமலே பொருளாதார வளர்ச்சி என்பதாக அது இருந்தது. இந்த நிலையில்தான் 2014 இல் பாஜகவின் பிரதம வேட்பாளரானார் நரேந்திர மோடி. அவர் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார்; 700க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்; மக்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தினர். மக்கள் அவருக்கு பெரும்பான்மை இடங்களைக் கொடுத்து புதிய வரலாற்றை உருவாக்கினார்கள்.
இந்தியாவை மாற்றியமைத்தார்
பத்தோடு பதினொன்றாக உலகத்தால் அலட்சியமாக நினைக்கப்பட்ட இந்தியாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான ஆட்சியானது உறுதியான தலைமையின் கீழ் அமைந்தவுடன் உலகம் இந்தியாவை கவனிக்கத் தொடங்கியது. கடினமாக உழைக்கக்கூடிய, திறமையான, உறுதியான தலைமையின் கீழ் இந்தியா வேகமாக வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
மோடிக்கு ஏராளமான பிரச்னைகள் முன்னின்றன. தேசத்துக்குள்ளும் உலக அளவிலும் தன்னைத் திட்டமிட்டே மோசமாக சித்தரிப்பதற்கு எதிராக அவர் போராட வேண்டியிருந்தது. அவர் மீது வேண்டுமென்றே பூசப்பட்ட களங்கங்களை அவர் வெற்றிகரமாகத் துடைத்தெறிந்தார்.
தேசத்தின் மனநிலையையும், அரசியலையும், சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தும் பிரம்மாண்டமான பணியை அவர் ஒரே நேரத்தில் செய்யத் தொடங்கினார். அதில் வெற்றியும் கண்டார். அவரது வெற்றி தனித்துவமானது; முன்மாதிரியற்றது. அவர் செய்த வேலையின் பிரம்மாண்டமும் வேகமும், அதில் கிடைத்த வெற்றியும் கண்டு உலகம் அதிர்ந்து நின்றது; பலகாலமாக, மெல்ல நடக்கும் யானையாகக் கருதப்பட்ட இந்தியாவின் குதிரைப் பாய்ச்சலை வியப்புடன் பார்த்தது.
தைரியமாக அவர் மேற்கொண்ட பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, எல்லோருக்கும் வங்கிக் கணக்கு, சலுகைகளை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவது, தூய்மை இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத், வீடற்றவர்களுக்கு வீடு, என்று அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளைக் கண்டு நாடே வியந்து நின்றது; சிலவற்றை உலகமே வியந்து பார்த்தது. ஒவ்வொன்றும் நாட்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக் கணக்கில் என, திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டன.
50 கோடி வங்கிக் கணக்குகள், 12 கோடி கழிப்பறைகள், 11 கோடி இலவச எரிவாயு இணைப்புகள், இரண்டு கோடி கிராமப்புற வீடுகள், 100 கோடி பேருக்கு ஆதார் அட்டை இணைப்பு என உலக அளவில் முன்மாதிரியற்ற திட்டங்கள், குறித்த காலத்துக்குள் நடந்து முடிந்தன. உலகம் அவரைப் பாராட்டத் தொடங்கியது. மோடியின் செயல் திட்டத்தின் பிரம்மாண்டமும் வேகமும் உலக அரங்கில் இந்தியா பற்றி ஃபோர்ப்ஸ் போன்றவர்களின் கருத்தை உடைத்தெறிந்தது.
மிகவும் பிரபலமான தலைவர்
‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நம்பத் தகுந்த அமெரிக்க பொருளாதார நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகில் உள்ள இருபத்தியாறு ஜனநாயக நாடுகளில் உள்ள தலைவர்களில் மிகவும் பிரபலமானவர்களின் பட்டியலைத் தயாரித்தது. அதில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது, மோடியின் அந்தஸ்து இன்று எப்படி இருக்கிறது என்பதற்கு சான்று. உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் நம்பகத் தன்மையை மோடி காப்பாற்றி விட்டார் என்றால் அது மிகையல்ல.
அது மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகள் இந்தியாவைத் தேடி வந்து அரவணைத்துக் கொள்ளும் நிலையை உருவாக்கி விட்டார். இந்திய ஜனநாயகம் மேற்கத்திய ஜனநாயக சக்திகளுக்கு வலுச் சேர்த்துள்ளது. இந்தியா இல்லாவிட்டால் மேற்குலகின் ஜனநாயக சக்தி உலக அரங்கில் வெறும் பதிமூன்று சதவீதமாக, மிகவும் பலவீனமாகவே இருக்கும்.
சுதந்திரமான ஜனநாயகங்கள் தங்கள் விவாதங்களில் ஒரு சமமற்ற நிலையை, சீனாவுக்கு ஆதரவான தாக்கத்தை, பெரும் சவாலாக எதிர்கொண்டு வருகின்றன. 2008 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு, குறிப்பாக அமெரிக்காவில் ஒபாமா ஆட்சியின்போது ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு சீனா தன்னை அமெரிக்காவுக்கு இணையான உலக சக்தியாக முன்னிறுத்தியது.
அது மட்டுமன்றி ஊடகங்கள், கார்ப்பரேட்டுகள் மூலம் சீனா மேற்கத்திய ஜனநாயக முறையை விட தனது ஆட்சி முறையே சிறந்தது என்ற கருத்தாக்கத்தை நோக்கி மேற்கத்திய நாடுகளை ஈர்த்து வந்தது. அமெரிக்காவில் உள்ள பல அரசியல் சிந்தனையாளர்கள் சீனாவின் பணத்தாலும், கருத்தாலும் அதற்கு சாதகமாக மாறிக் கொண்டிருந்தனர்.
2018இல் ஹூவர் இன்ஸ்டிட்யூட் (ஸ்டாண்போர்டு பல்கலைக்கழகம்) ஒரு கட்டுரையை வெளியிட்டது. ‘சீனாவின் தாக்கமும் அமெரிக்காவின் நலன்களும்: தேவை நேர்மறையான விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியானது. அதில், அமெரிக்கர்களின் மனங்களில் சீனா ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தி வருவதைப் பற்றி எச்சரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. அமெரிக்க ஊடகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் உள்ள பல சிந்தனையாளர்களும், மக்கள் கருத்தை உருவாக்குபவர்களும் சீனாவுக்கு ஆதரவான மனப்போக்கைக் கொண்டுள்ளனர். தீநுண்மீ (கொரோனா) நோய் தொற்றுக் காலம், ரஷ்ய- உக்ரைன் போர் ஆகியவற்றுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், பல தளங்களிலும் பல நிலைகளிலும் சீனாவின் ஊடுருவல் பற்றி, மக்களின் மனதில் அதன் செல்வாக்கைப் பற்றி, அதனால் ஏற்படும் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஜனநாயக முறைக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் ஜனநாயக இந்தியாவின் எழுச்சி முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக மேற்குலகு எதை நம்பியதோ- ஜனநாயகத்தால் சிறப்பாகச் செயல்பட முடியாது என்பதை- மோடியின் வெற்றி மற்றும் இந்தியாவின் எழுச்சி மறுக்கிறது. ஜனநாயகத்தாலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற கருத்தை மோடி தெளிவாக நிருபிக்கும்போது, சுதந்திர ஜனநாயக சக்திகள் சீனாவின் பல்முனை அச்சுறுத்தலுக்கு எதிராக, தங்களை சமன்படுத்திக் கொள்கின்றன.
ஜி7 நாடுகள், கீழை ஜனநாயக நாடுகளை அணுக இந்தியாவின் துணையை மிகவும் எதிர்பார்க்கின்றன. மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா எப்படி தேவைப்படுகிறதோ அதுபோலவே இந்தியாவுக்கும் மேற்குலகு தேவைப்படுகிறது. இந்த இடத்தில்தான் மோடி தன்னை சிறப்பாக நிறுவுகிறார். மேற்குலகிற்கு எதிரியாக உள்ள ரஷ்யாவுடன் மோடி நட்புறவு கொண்டுள்ளார். அதே வேளையில், மேற்குலகின் வலையில் விழுந்து விடாமல், அவர்களது புவிசார் அரசியலில் ஆழ்ந்த நட்புணர்வுடன் செயல்படுகிறார். மோடியின் முதிர்ச்சியான ராஜதந்திரச் செயல்பாடுகள் மேற்கத்திய திட்டங்களை மீறி இந்திய நலன்களைப் பாதுகாப்பதாக உள்ளன. மோடி உலகில் மிகப் பிரபலமான தலைவரென ‘மார்னிங் கன்சல்ட்’ கூறுகிறதென்றால் அதற்கு சரியான காரணங்களும், முழுமையான தகுதியும் அவருக்கு உள்ளது.
இந்தியா இப்போது தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தனக்கான பிரதமரை மட்டுமல்ல, தன் மண்ணிலிருந்து ஒரு உலகத் தலைவரையும் அது தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் இன்று மோடிக்கு நிகராக யாரும் இல்லை என்பதைக் கூற, எந்த ஒரு அறிஞரும் தேவையில்லை. எல்லோருக்கும் இது தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில் இந்திய வாக்காளர்கள் முன்னுள்ள தேர்வுகள் என்ன?
(தொடர்கிறது)
குறிப்பு: நன்றி: இது கடந்த சனிக்கிழமை (13-4-24) ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் திரு. எஸ்.குருமூர்த்தி எழுதிய Modi’s message to West — Democracies too can deliver கட்டுரையின் மொழிபெயர்ப்பு. தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$