-சேக்கிழான்

திருமண விருந்து பந்திகளிலும் உணவகங்களிலும், வீடுகளிலும் கூட, மிகவும் சாதாரணமாக “ஒயிட் ரைஸ் கொண்டாருங்கள்” என்ற சொல்லாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதென்ன ஒயிட் ரைஸ்? வெள்ளை அரிசி? வேகவைக்கப்பட்ட அரிசியைத் தான் நாம் நாகரிகமாக (?) குறிப்பிடுகிறோம். உண்மையில் இதற்கு அழகான தமிழ்ப் பெயர் இருக்கிறது.
அது – சோறு.
ஆனால், தமிழில் ‘சோறு’ என்று சொன்னால் ஏதோ அவமானம் என்பது போல நாம் ‘ஒயிட் ரைஸ்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு ‘சாதம்’ என்ற வடமொழிச் சொல்லே பரவாயில்லை. இறைவனுக்குப் படையலிடும் சாதம் பிரசாதம். போலவே இறைவனுக்கு படைக்கும் நெய்யும் வெல்லமும் கலந்த சோறு ‘அக்கார அடிசில்’ எனப்படுகிறது (நாம் கோயிலில் சாப்பிடும் பொங்கலே தான்!).
தமிழ் மொழியில் ‘சோறு’ என்பதற்கு 27 விதமான பெயர்கள் (ஒருபொருட் பன்மொழி) இருப்பது தெரியாமல்… White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice, Boiled Rice என ஆங்கிலத்தில் உணவை அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் நம் தமிழர்கள்!
‘ஒருபொருட் பன்மொழி’ என்பது தொல்காப்பியமும் நன்னூலும் வழங்கும் ஒரு தமிழ் இலக்கணக் குறியீடு. ஒரு பொருளையே தரும் பல சொற்களைக் குறிப்பிடுவது ஒருபொருட் பன்மொழியாகும். இதனை ஆங்கிலத்தில் ‘synonym’ என்று சொல்வர்.
நம் உணவுக்கு சோறு என்பது 27 பெயர்களில் ஒன்று என்று ‘சூடாமணி நிகண்டு’ சொல்கிறது. இதோ அந்தப் பெயர்கள் அகர வரிசையில்:
1. அசனம்
2. அடிசில்
3. அமலை
4. அயினி
5. அன்னம்
6. உண்டி
7. உணா
8. ஊண்
9. ஓதனம்
10. கூழ்,
11, சரு
12. சொன்றி
13. சோறு
14. துற்று
15. பதம்
16. பாத்து
17. பாளிதம்
18. புகா
19. புழுக்கல்
20. புன்கம்
21. பொம்மல்
22. போனகம்
23. மடை
24. மிசை
25. மிதவை
26. மூரல்
27. வல்சி
நாம் உண்ணும் உணவு நம் மனதில் நல்ல எண்ணங்களைச் சமைக்கிறது என்று பெரியோர் கூறுவர். அதேபோல, நாம் உண்ணும் உணவின் பெயர்களும்கூட நம் மனதில் தாக்கம் செலுத்த வல்லவை.
சோறு என்பது நமது பண்பாட்டின் அடையாளம். உணவுக்கு நமது முன்னோர் அளித்த முக்கியத்துவம் காரணமாகவே, ’சோறு’ என்னும் ஒரே பொருளுக்கு இத்தனை பெயர்ச் சொற்கள் அமைந்துள்ளன என்று சொன்னால் மிகையில்லை.
இனியேனும் நல்ல தமிழில் நமது உணவை அழைப்போமா?
$$$