சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம்- 3

-திருநின்றவூர் ரவிகுமார்

சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது இறுதிப் பகுதி)…
  • (பகுதி-1)
  • (பகுதி-2)

விவசாயிகள் சங்கத் தலைவர்

அரசியலில் மதத்தைக் கலப்பதை சகஜானந்தர் ஏற்கவில்லை. அது இஸ்லாமாக இருந்தாலும் ஹிந்துவாக இருந்தாலும் அவர் ஏற்கவில்லை. காந்திஜி அவ்வப்போது தனது  ‘மனசாட்சியின் குரல்’ சொல்லியபடி என்றும்,  ‘கடவுளின் கட்டளைக்கு இணங்கி’ என்றெல்லாம் பேசுவது சகஜானந்தருக்குப் பிடிக்கவில்லை.

அதேபோல, அரசியலில் உயர்ந்த தார்மிகத்தை வலியுறுத்துவது, அதிலும் சாதாரண ஜனங்களிடம் உயர்ந்த தார்மிக, ஒழுக்க நிலைப்பாடுகளை எதிர்பார்ப்பது சரியல்ல என்று சகஜானந்தர் கருதினர். நடைமுறை சார்ந்து முடிவெடுக்க வேண்டுமென்றும், சாதாரண மக்களை அவர்கள் நிலையிலேயே ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் விரும்பினார். வங்காளத்தில் சவுரி சவுரா நிகழ்வை சுட்டிக்காட்டிய அவர், உயர்ந்த தார்மிக நிலைப்பாட்டை காந்திஜி மேற்கொண்டதை ஆதரிக்கவில்லை.

சகஜானந்தரின் சிந்தனைகள் புதியவையல்ல. அவர் தலைமுறையைச் சேர்ந்த மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், சுபாஷ் சந்திர போஸ் போன்றோர் அரசியலும் தார்மிகமும் தனித்தனியானவை என்று கருதினார்கள். இவர்களது சிந்தனை இடதுசாரிச் சிந்தனையாக இருந்தது என்றும் கூறலாம். எனவே காங்கிரசுக்குள் சோஷலிச, கம்யூனிச சிந்தனை கொண்ட தலைவர்கள் சகஜானந்தருக்கு நெருக்கமானார்கள்.

ஏற்கனவே கண்டது போல 1927 சகஜானந்தர் தொடங்கிய சீதாராம் ஆசிரமம் ஜமீன்தார்களின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட அனைத்து ஜாதியைச்  சேர்ந்த விவசாயிகள் முறையிடும் இடமாக ஆனது. ஏற்கனவே ஜமீன்தாரி முறையின் மீது வெறுப்புக் கொண்டிருந்த சகஜானந்தர், விவசாயிகளை ஒருங்கிணைத்து மேற்கு பாட்னா கிஸான் சபாவைத் தொடங்கினார்.

1929இல் புதிய குத்தகைதாரர் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது விவசாயிகளை மேலும் தாக்குவதாக இருந்தது. இதனால் மேற்கு பாட்னா விவசாயிகள் சபாவை பிகார் மாநிலம் முழுமைக்குமான சங்கமாக விரிவு படுத்தினார் சகஜானந்தர். அவர் காந்தியவாதியாக இருந்தபடியால், வர்க்க மோதல் என்றில்லாமல் வர்க்க சமரசம் என்று விவசாயிகளுக்கும் ஜமீன்தார்களுக்கும் இடையேயான பிரச்சினைகளை வன்முறையற்ற அமைதி வழிப் போராட்டங்கள், பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார், ஆரம்பத்தில்.

இது விஷயமாக சர்தார் படேலைப் பற்றி சகஜானந்தர் எழுதியுள்ள குறிப்பு படேலின் ஆளுமையைப் பற்றி விளக்குவதாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. இது நடந்தது 1929 ஆண்டின் இறுதியில்.

சர்தார் படேல்:

குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்டத்தில் உள்ள பர்தோலி தாலுகாவில் 1925 ஆம் ஆண்டு நில வரியை முப்பது சதவீதமாக ஆங்கில அரசு அதிகரித்தது.  வழக்கறிஞரான வல்லபபாய் படேல், முதலில் அரசுக்கு வரியை குறைக்குமாறு மனு கொடுத்தார். அரசு ஏற்காத காரணத்தால் விவசாயிகளிடம் வரி கொடுக்க வேண்டாம் என்று கூறினார். (பர்தோலி சத்யாகிரஹம்- வரி கொடா இயக்கம்).

ஆங்கில அரசு, வரி கொடுக்காதவர்களின்  சொத்துக்களையும் நிலத்தையும் அபகரித்துக் கொண்டது. ஆனால் அதை யாரும் வாங்க முன் வராதபடி படேல் பார்த்துக் கொண்டார். இறுதியில் அரசு பணிந்தது. வரி உயர்வை ரத்து செய்து, நிலங்களையும் சொத்துக்களையும் உரியவர்களிடம் ஒப்படைத்தது. இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது 1928இல். இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய காரணத்தால் படேலை மக்கள் சர்தார் (தலைவர்) என்று பட்டப்பெயர் இட்டு கொண்டாடினர்.

அதன் பிறகு படேல் பிற மாநிலங்களுக்குச் சென்று அங்கு விவசாயிகளைச் சந்திக்கத் தொடங்கினார். அதன்படி பிகாருக்கு வந்தார்; சகஜானந்தருடன் பல கூட்டங்களில் கலந்து கொண்டார்.

சீதாமாரி என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில்,   ‘பிகாருக்கு ஜமீன்தாரி முறை தேவையில்லை. பிகாருக்கு மட்டுமல்ல, நாட்டிற்கே அது தேவையில்லை. நாட்டுக்கு இந்த ஜமீன்தாரர்களினால் என்ன பயன் கிடைத்துள்ளது? ஒன்றும் இல்லை. ஜமீன்தார்கள் பலவிதமான கொடுமைகளை விவசாயிகளுக்கு இழைப்பதாக அறிந்தேன். விவசாயிகள் அவர்களைப் பார்த்து அச்சப்படுகிறார்கள் என்றும் தெரிகிறது. ஆனால் ஏன் அச்சப்பட வேண்டும்? உண்மையில் ஜமீன்தார்கள் மிகவும் பலவீனமானவர்கள். நம்முடைய வலிமையான கரங்களைக் கொண்டு அவர்களது தலையை நசுக்கினால் அவர்களது மூளை பிதுங்கி வெளியே வந்துவிடும்’ என்று படேல் பேசியுள்ளார்.

மூங்கார் என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பேசும்போது, விவசாயிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் அரசியல் மாநாட்டில் ஏன் விவசாய சங்கத் தலைவர்கள் எழுப்புவதில்லை என்று கேட்டதுடன், இந்த பிரச்சினைகளுக்கு இடமில்லை என்றால் அரசியல் மாநாடு எதற்கு?  என்றும் காட்டமாகப் பேசியுள்ளார் படேல்.

இதைக் குறிப்பிட்டு,  ‘இன்று இப்படிப் பேசுவாரா படேல்?’  என்று கேட்கிறார் சகஜானந்தர். இது படேல் பக்குவப்பட்டு உள்ளதையே நமக்குப் புரிய வைக்கிறது. அதே வேளையில் படேலின் ஆக்ரோஷம், தேசத்தை இணைத்ததிலும் ஹைதராபாத் இணைப்பிலும் அதே தீவிரத்துடன் தொடந்ததை நம்மால் பார்க்க முடிகிறது.

‘படேலுக்கு பிகார் மாநிலத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர் இருந்த பம்பாய் மாகாணத்தில் ஜமீன்தாரி முறை இல்லை. ஆனால் பிகாரில் அது கோலோச்சுகிறது’ என்று குறிப்பிடும் சகஜானந்தர், விவசாயிகளின் கோரிக்கைகள் அரசியல் மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று படேல் சொல்லியதையும் ஏற்றுக் கொண்டார்.

அதுவரை காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினராக இருந்த போதிலும் அதன் தீர்மானங்களில் பெரிய அளவில் பங்களிப்பு ஏதும் செய்யாத சகஜானந்தர், விவசாய நிலங்களின் குத்தகை உயர்வு சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மாநாட்டில் பேசினார்; தீர்மானம் கொண்டுவர முயன்றார். ஆனால் மேட்டுக்குடியினரின் மேடையாக இருந்த காங்கிரஸ் அந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை. மாறாக காங்கிரசுக்கு போட்டி அமைப்பாக விவசாய சங்கம் செயல்படுவதாகக் கூறி, அதன் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றது. விடுதலைக்குப் பிறகும் ஜமீன்தார்களின் கட்சியாகவே காங்கிரஸ் தொடர்ந்தது என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

வரி அதிகரிப்பு, கந்து வட்டி, குத்தகை அதிகரிப்பு, பாக்கி வசூலிக்க அடாவடித் தனத்தைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு எதிராக விவசாயிகளை  ஒன்றுதிரட்டி சகஜானந்தர் தொடர்ந்து போராடினார். அவரது லட்சியமாக இருந்தது இதுதான்:

1. எல்லாவிதமான சுரண்டல்களையும் போக்க / நீக்கப் பணிபுரிவது.

2. விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான பொருளாதார, அரசியல் வலிமையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வது.

3. முழு சுதந்திரத்திற்காக தேச விடுதலைப் போராட்டத்தை தீவிரப் படுத்துவது. தொழிலாளர், விவசாய சமூகத்தினரின் உரிமைகளை அடைவது.

கட்சி அரசியல் சார்பற்ற விவசாய சங்கம்:

மனம் தளராமல் சகஜானந்தர் தொடர்ந்து விவசாயிகளையும் விவசாய கூலித் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து வந்தார். அரசியல் கட்சியின் கைப்பாவையாக விவசாயிகளின் சங்கம் இருக்கக் கூடாது என்று சகஜானந்தர் கருதினார். அதனால் அவர் காங்கிரஸில் இருந்தபோதே கிஸான் சபாவின் காங்கிரஸின் மூவர்ணக் கொடியை நீக்கிவிட்டு சிவப்புக் கொடியை ஏந்தினார். இடதுசாரிகள் இவருடன் கைகோர்த்துக் கொண்டனர். மாநில அளவில் இருந்த கிஸான் சபாவை அகில இந்திய அளவில் விரிவாக்குவதாகக் கூறி புதிய சங்கத்தைத் தொடங்கி தலைமையைக் கைப்பற்றிக் கொண்டனர்.

சகஜானந்தர் விவசாயிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தபோதும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகவில்லை. அதனால் 1936இல் நடந்த பைஸ்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இவரது முயற்சியால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தீர்மானம் போடப்பட்டது. அதில்,

1. புதிதாக குத்தகை மற்றும் நில வரியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

2. லாபமற்ற விவசாயத்திற்கு குத்தகை வசூலிக்கக் கூடாது.

3. விவசாய வருமானத்திற்கான வரி விதிப்பு ஒரே மாதிரியாக இல்லாமல் படிநிலைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

4. கூட்டுறவுப் பண்ணை விவசாய முறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

5. விவசாயக் கடன்கள், அதற்கான வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

6. மேய்ச்சல் நிலங்களை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள மேய்ச்சல் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

7. விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வூதியம் கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான பணிச் சூழல் மேம்படுத்தப்பட வேண்டும்.

-என்ற விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன. ஆனால் இதில் ஜமீன்தாரி முறை ஒழிப்பது பற்றி பேச்சே இல்லை.

காங்கிரஸ், தீர்மானம் போட்டதே பெரிய விஷயம் என்பது போல இருந்து விட்டது. மேலும், அக்கட்சி ஆட்சியிலிருந்து பிகார், உத்தரப்பிரதேசத்தில் இதை நடைமுறைப்படுத்தவில்லை; ஜமீன்தார்களோடு சமரசம் செய்து கொண்டது. ஏனெனில், அவர்கள்தான் காங்கிரஸ் தலைமையை ஆட்டுவித்தனர்.

சகஜானந்தர் வரி மற்றும் வட்டி வசூலிக்க வரும் ஜமீன்தார்களின் ஆட்களுக்கு எதிராக தடியை உயர்த்தும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.  ‘கோழையாக இருப்பதை விட வன்முறையாளனாக இருப்பது மேலானது’ என்று காந்திஜி கூறியதை அவர் மேற்கோள் காட்டினார்.  ‘தடி எடுப்பது வன்முறையல்ல, தற்காப்பு’ என்றார்.

இந்த நேரத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி, குத்தகைச் சட்டத்தை எதிர்த்து இரண்டு சிறு நூல்களை வெளியிட்டார். அது அரசின் கண்களை உறுத்தியது. காந்தியவாதிகளுக்கு எதிராக சகஜானந்தர் சுபாஷ் சந்திர போஸை ஆதரித்தார். பாகிஸ்தான் தீர்மானத்தை வெளிப்படையாக எதிர்த்தார். இந்த நிலையில் 1940இல் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கில அரசு அவரை மூன்று ஆண்டுகள் சிறையில் அடைத்தது.

மூன்று ஆண்டுகள் கழித்து அவர் வெளியே வந்த போது சூழ்நிலை முற்றிலும் மாறி இருந்தது. இவர் தொடங்கிய கிஸான் சபா வலுவிழந்து  கிடந்தது. கம்யூனிஸ்டுகள் அகில இந்திய கிஸான் சபா தலைமையைக் கைப்பற்றி இருந்தனர். காங்கிரஸ் கட்சியும் இவரை ஏற்க தயார் இல்லை என்ற நிலை நிலவியது.

முன்னோடி:

ஆனாலும் அவர் பிகார் மாநில கிஸான் சபாவை மீண்டும் கட்டி எழுப்பினார். 1949 மார்ச் மாதம் நடந்த அதன் பதினாறாவது மாநாட்டில்  ‘ஜெய் கிஸான் ஜெய் மஸ்தூர்’  கோஷத்தை எழுப்பினார்.  “உணவையும் உடையையும் தயாரிப்பவனே சட்டத்தையும் இயற்றுவான்; அவனே இந்த நாட்டின் புதிய ஆட்சியாளன்” என்ற கோஷத்தை அவர் முன்னிறுத்தினார்.

தன்னுடன் பணிபுரிந்து பிரிந்து சென்ற இடதுசாரிகளை ஒருங்கிணைக்க முயற்சித்தார். 1949 அக்டோபரில் அதற்காக கல்கத்தாவில் மாநாடு கூட்டினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவரது உடல் நலனைப் பாதித்தன. 1950 ஜூன் மாதம் முஸாபர்பூரில் அவர் காலமானார்.

சுவாமி சகஜானந்த சரஸ்வதி

இன்றைக்கும் அவர் தேவை:

சகஜானந்தர் தனது காலத்தில் இரண்டு விஷயங்களுக்காகப் போராடினார். ஒன்று, ஒன்றுபட்ட பாரத தேச விடுதலை. இரண்டு, ஜமீன்தாரி முறையை ஒழிப்பது. ஜமீன்தாரி முறை என்பதை, சுரண்டல், ஒடுக்குமுறை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

இன்று, இந்தியா ஒரு தேசம் என்ற கருத்தியலே தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. பிரிவினைவாதமானது, காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், தமிழ்நாடு என பல பகுதிகளில் எழுப்பப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். அந்த வகையில் சகஜானந்தரின் கருத்துக்கள் இன்றும் தேவையானவை; பொருத்தமானவையே.

இரண்டாவதாக, அவர் தன்னலத்தைத் துறந்து, சமுதாயத்திற்காக அர்ப்பணிப்போடு வாழ்ந்தார். 1907இல் துறவறம் பெற்றதிலிருந்து 1950 இல் அவர் காலமாகும் வரை அதே தியாக உணர்வுடன் கூடிய அர்ப்பணமான வாழ்வு வாழ்ந்தார். தனிமனித மோட்சத்தை விடுத்து நாட்டிற்காகவே வாழ்ந்தார்.

அரசியல் கட்சியின் வாலாக, எடுபிடியாக சமூக அமைப்புகளும் இயக்கங்களும் இருக்கக் கூடாது என்றார் சகஜானந்தர். அதேபோல பொதுப்பணத்தைக் கையாள்வதில் அவருக்கு இருந்த நேர்மை இன்று மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

பல தோல்விகளை அவர்தம் வாழ்வில் சந்தித்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக அவரது வாழ்க்கை இன்றும் நமக்கு முன்னுதாரணமாக, பின்பற்றத்தக்கதாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

(நிறைவு)

என் வாழ்க்கைப் போராட்டம்
The Struggle of My Life
(ஆங்கில நூல்)

ஆசிரியர்: சுவாமி சகஜானந்த சரஸ்வதி
மொழி மாற்றம்: ராமசந்திர பிரதான்

வெளியீடு: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்
விலை: ரூ.1395-

$$$

Leave a comment