-திருநின்றவூர் ரவிகுமார்
சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது முதல் பகுதி)…

ஆங்கிலேயர்களின் ஆட்சி அமைந்த பிறகு இந்திய சமுதாயத்தில் மாற்றங்களும் மறுமலர்ச்சிச் சிந்தனைகளும் ஏற்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி நவீனத் தொழில் புரட்சி மற்றும் மேற்கத்திய நாகரிகத்தை நாம் எதிர்கொண்டதால் ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது.
ராம் மோகன் ராயினால் முன்னெடுக்கப்பட்ட பல சமூக மாற்றங்கள் மேற்கத்திய சமுதாயத்தைப் போல இந்திய சமுதாயத்தை ஆக்குகின்ற முயற்சிகளாகப் பார்க்கப்படுகின்றன. அதே வேளையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஹிந்து ஆன்மிகவாதிகள், தலைவர்கள், ஹிந்து பண்பாடு, பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தை நவீனப்படுத்த வேண்டும் என விழைந்தனர்.
‘அவ்வுலகு’ என்பதற்கு முக்கியம் தராமல் இவ்வுலகில் இப்போது உடனிருக்கும் ஏழை, தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவிட வேண்டுமென்று பல சமய – சமூக சீர்திருத்த இயக்கங்கள் தொடங்கப்பட்டன. அதில் முன்னோடியாக இருந்தோர், சுவாமி விவேகானந்தரும் அவரது ராமகிருஷ்ண மிஷனும், சுவாமி தயானந்த சரஸ்வதியும் அவரது ஆரிய சமாஜம் அமைப்பும். அவை இன்னும் உயிர்ப்புடன் அவர்களையும் அவர்களது சிந்தனைகளையும் முன்னெடுத்து வருகின்றன.
சகஜானந்தரைத் தெரியாமல் போனது எதனால்?
இவர்களுக்கு இணையாக அதேபோல சமூக சிந்தனையுடன் மிகவும் வறிய நிலையில், ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்ந்த விவசாயிகளுக்காகப் போராடியவர், இயங்கியவர் சுவாமி சகஜானந்த சரஸ்வதி. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளுக்காக இயக்கம் கண்ட அவரை கம்யூனிஸ்டுகள் கபளிகரம் செய்ததால், அவரது பெயர் பிகாருக்கு வெளியே தெரியாமல் போனது.
ஆரிய சமாஜத்தைத் தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி ஹிந்தியிலேயே பேசியும் எழுதியும் இருந்த போதிலும், படித்த ஹிந்துக்கள், உயர் குடியினர் அவரை ஆதரித்தனர் .நம்மூரில் உள்ள டிஏவி (Dayanand Angelo Vedic School) பள்ளிகளெல்லாம் அவரது கருத்துக்களை முன்னிறுத்தி அவர்கள் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தான்.
சுவாமி விவேகானந்தர் ஆங்கிலத்தில் பேசும் எழுதியும் இருந்தது மட்டுமின்றி, வங்கத்தைச் சேர்ந்த மேட்டுக்குடியினர் அவரை ஆதரித்தனர்.
ஆனால் சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் சிந்தனைகளும் சுயசரிதமும் செயல்பாடுகளும் ஹிந்தி மொழியிலேயே இருந்தன; ஹிந்தி மொழி பேசிய மக்களை மையமாகக் கொண்டே இருந்தன. அது மட்டுமன்றி கம்யூனிஸ்டுகளுடனும் காங்கிரசுடனும் அவருக்கு பிற்காலத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவரது கருத்துக்கள் பிகார் மாநிலத்திற்கு வெளியே பரவாதபடி அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். அவர் ஆரம்பித்த விவசாய சங்கம் அவரது மறைவுக்குப் பின் செயலிழந்து போனதுடன், அதை கம்யூனிஸ்டுகள் அதை தங்கள் கட்சி அரசியலுக்காக கபளீகரம் செய்து விட்டனர். இப்போதுதான் அவரது சுயசரிதை ஆங்கிலம் வழியாக பிற மாநிலத்தவர்க்கும் தெரிய ஆரம்பித்துள்ளது.
மொழி பெயர்ப்பாளர் பற்றி:

இந்த நூலை மொழி பெயர்த்தவர் முனைவர் ராமசந்திர பிரதான். இவர் ஒரு காந்திய அறிஞர். பல விருதுகளைப் பெற்றவர். தனது சிறுவயதில், 9- 10 வயதில், சுவாமி சகஜானந்த சரஸ்வதியை நேரில் பார்த்தவர். இவரது கிராமம் சுவாமியின் செயல்களில் முக்கிய இடமாக இருந்ததால் பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. அது மட்டுமன்றி அவர் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவர்கள் மொழி பெயர்ப்பாளருக்கு சுவாமிஜி பற்றி பல விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளனர்; ஹிந்தியில் இருந்த அவரது நூல்களை அறிவுலகத்திற்கு அறிமுகம் செய்யத் தூண்டினர். ராமசந்திர பிரதான் இப்பொழுது மகாராஷ்டிரத்தில் உள்ள வார்தாவில் காந்தி மையத்தில் பேராசிரியராக இருக்கிறார்.
சுவாமி சகஜானந்தரைப் பற்றி…
பிகாரில் அனைவரும் மதிக்கக் கூடியவராக இருக்கும் சுவாமி சகஜானந்த சரஸ்வதி, அன்றைய ஐக்கிய மாகாணத்தில், (இன்றைய உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள) காசிபூர் மாவட்டத்தில், தேவ என்ற கிராமத்தில் 1889 ஆம் ஆண்டு மகா சிவராத்திரியன்று (22 பிப்ரவரி) பிராமணக் குடும்பத்தில் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். நவ்ரங் ராய் என்பது இவரது இயற்பெயர்.
நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தையாரின் பெயர் பெனி ராய். இவர் பிறந்த இரண்டாம் ஆண்டிலேயே தாயார் இறந்து விட்டார். அடுத்த சில ஆண்டுகளிலேயே தந்தையும் இறந்து விட்டார். இவரது பெரியப்பாவும் பெரியம்மாவும் தான் இவரை வளர்த்தனர்.
கல்விக்கான சூழ்நிலை இல்லாத போதிலும் குழந்தைப் பருவத்திலேயே கல்வி கற்பதில் ஆர்வம் காட்டியதால் பத்தாவது வயதில் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆறு ஆண்டுப் படிப்பை மூன்றே ஆண்டில் முடித்தார். நடுநிலை பள்ளிப் படிப்பை அடுத்த இரண்டு ஆண்டில் முடித்து 1904இல் நல்கை பெற்று காசிபூரில் இருந்த ஜெர்மன் மிஷன் ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

ஆன்மிக நாட்டம்:
சிறு வயது முதலே ஆன்மிக நாட்டம் கொண்ட இவருக்கு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்த இருவரின் – சிவதானி சிங், ராம்தாஸ் சிங் – நட்பு அந்த நாட்டத்தை அதிகரிக்கச் செய்தது. பள்ளிப் படிப்பின் போது ஒரு சிவன் கோயிலில் இருந்த அறையில் தங்கி இருந்துதான் நவ்ரங் பள்ளி சென்று வந்தார். அந்த சிவன் கோயிலில் காசிக்குச் சென்று வரும் துறவிகள் தங்கிச் செல்வார்கள். அவர்கள் மூலமாக காசியில் இருந்த அபர்ணாத் மடத்தின் விலாசம் கிடைத்தது.
ஆன்மிக நாட்டம் கொண்ட நவ்ரங் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக காசிக்குக் கிளம்பி விட்டார். அவர் காணாமல் போனதைத் தெரிந்த குடும்பத்தினர், காசிக்கு போய்க் கொண்டிருந்த அவரை பாதி வழியிலேயே கண்டுபிடித்து அழைத்து வந்தனர்; பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். அந்தப் பெண் சிறிது காலத்திலேயே இறந்து போனாள். அவளது தங்கையை இவருக்கு மறுமணம் செய்ய முடிவெடுத்தனர் பெரியப்பாவும் பெரியம்மாவும். விஷயம் தெரிந்துகொண்ட நவ்ரங் ரகசியமாய் ஓட்டமெடுத்தார்.
துறவியாதல்:
இம்முறை காசியில் இருந்த அபர்ணாத் மடத்திற்குச் சென்று அங்கிருந்த சுவாமி அச்சுதானந்தா என்பவரிடம் தீட்சை பெற்று, காவியுடை தரித்து துறவியானார். இது நடந்தது 1907 இல். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. அவரது குரு அளித்த சந்நியாசப் பெயர்தான் சுவாமி சகஜானந்த சரஸ்வதி என்பது.
காவி உடை கிடைத்ததும் திருப்தி அடையாமல், இறை அனுபவத்தைத் தேடிப் புறப்பட்டார் சகஜானந்தர். ரிஷிகேஷ், உத்தரகாசி, பத்ரிநாத், கேதார்நாத் என இமயமலைச் சாரலில் அலைந்து திரிந்தார். பல கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு சாஸ்திர ஞானம் தனது தேடலுக்கு வழிகாட்டும் எனக் கருதினார். வடமொழி இலக்கணம், நியாயம், மீமாம்சம், வைசேஷிகம் என பாரத பாரம்பரிய தத்துவங்களை காசியிலும் தர்பாங்காவிலும் கற்றார். அறிவாளியானார்.
சுவாமிகளின் சுயசரிதை
சுவாமி சகஜானந்தர் தனது சுயசரிதையில் தன் வாழ்க்கையை மூன்றாகப் பிரித்து எழுதி உள்ளார். ஆரம்ப காலம், இடைநிலை, கடைசி காலகட்டம் என்று அவர் கூறுகிறார். வசதிக்காக நாம் வேறு விதமாக பிரித்துக் கொள்ளலாம். 1. சமூகப் புரட்சியாளர்; 2. சுதந்திரப் போராட்ட வீரர்; 3. விவசாய சங்கத் தலைவர் என்று அதைக் காணலாம்.
சமூகப் புரட்சியாளர்:
சகஜானந்தர் பிராமண ஜாதியில் பூமிகார் என்ற உட்பிரிவில் பிறந்தார். அது பிராமண ஜாதியிலேயே தாழ்ந்ததாகக் கருதப்பட்டது. அவர்கள் நில உடமையாளர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களது பூமிகார் பிராமண மகா சங்கம் வலிமை உள்ளதாக இருந்தது. நில உடமையாளர்களாக இருந்ததால் அவர்கள் ஆங்கில அரசுடன் மோதாமல் இணக்கமான போக்கைக் கடைபிடித்தனர்.
சகஜானந்தர் தனது ஜாதி மற்ற பிராமணர்களுக்குத் தாழ்ந்தவர்கள் இல்லை என்றும் மற்ற பிராமண ஜாதியைப் போன்று தங்கள் பிரிவும் தூய்மையானதே என்று சொல்ல, சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி பூமிகார் பிராமண மகா சங்கத்தில் உரையாற்றினார். தனது உரையில் ஜெர்மானிய அறிஞர் மார்க்ஸ் முல்லரைப் புகழ்ந்து பேசினார்.
அது முதல் உலகப்போர் காலம். ஆங்கிலேயர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் மோதல். எனவே மகா சங்கத்தின் தலைவர்களுக்கு ஆங்கிலேயருக்கு எதிரான ஜெர்மானியரைப் புகழ்வது பிடிக்கவில்லை; சகஜானந்தரை ஓரம் கட்டினார்கள்.
ஜாதிக்குள் சமத்துவம் தேடிய போதுதான் அவருக்கு இன்னொரு விஷயம் புரிந்தது. தன்னுடைய ஜாதிக்குள்ளேயே பணம் படைத்த ஜமீன்தார்கள் வசதியற்ற மற்றவர்களை இழிவாக நடத்துவதைத் தெரிந்து கொண்டார். பூமிகார் பிராமணர்கள் புரோகிதம் செய்யக் கூடியவர்கள் அல்லர்; நிலத்தில் பயிர்த் தொழிலில் ஈடுபடுபவர்கள்.
சகஜானந்தர் சமஸ்கிருதம் நன்கு கற்றவர் மட்டுமின்றி, ஹிந்து சாஸ்திரங்களை நன்கு கற்று அறிந்தவர். இது விஷயமாக அவர் பல நூல்களை எழுதி உள்ளார். அவற்றில், சில ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து கொண்டு அவற்றை வைத்து புரோகிதம் செய்வதாக உருட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அறிவற்ற பிராமணர்களைச் சாடியுள்ளார். படிப்பறிவும் சமஸ்கிருத மற்றும் சாஸ்திர ஞானமும் உள்ள பிராமணர்கள் சடங்காச்சார தொழிலில் ஈடுபடுவதை அவர் வேண்டாமெனக் கண்டித்துள்ளார்.
பிராமணர்களின் தொழில்:
தானம் பெறுவதும், சடங்குகளைச் செய்வதும் உண்மையான பிராமணர்களுக்கு உரிய வேலையல்ல என்று அவர் மனு ஸ்ம்ருதியை மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். புரோகிதத் தொழிலைச் செய்வதை விட பயிர்த் தொழிலில் ஈடுபடுவதே பிராமணர்களுக்கு மிகவும் ஏற்றது என்றார். அவரது ஆய்வு நூல் முதலில் 1916லும் பிறகு மிக விரிவாக 1925இலும் வெளியானது. இது குளவிக்கூட்டைக் கலைத்தது போல சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
‘இனி பூமிகார் பிராமணர்கள் வீட்டு சடங்குகளுக்கு நாங்கள் வர மாட்டோம்’ என்றும், ‘உங்களுக்குத் தேவையானதை நீங்களே செய்து கொள்ளுங்கள்’ என்றும் ‘முற்பட்ட’ பிராமண ஜாதியினர் கூறிவிட்டனர். சகஜானந்தர் இதற்கெல்லாம் கவலைப்படுபவர் அல்ல.
பூமிகார் பிராமணர்களுக்கு சடங்குகளைச் செய்வது எப்படி என்று சொல்லித் தரும் விதமாக ‘கர்ம கலாப்’ என்ற நூலை எழுதினார். அதைப் படித்து பூமிகார் ஜாதி பிராமணர்கள் சடங்குகளைச் செய்ய முடிந்தது. அது மட்டுமன்றி பூமிகார் பிராமணப் பையன்கள் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள பல சமஸ்கிருதப் பள்ளிகளை ஆரம்பித்தார். இதற்கு மையமாகச் செயல்பட சீதாராம் ஆசிரமத்தை 1927இல் தொடங்கினார்.
ஜாதி சங்கத்திற்கு சமாதி:
அதே வேளையில் பூமிகார் பிராமண மகா சங்கம் வசதி படைத்த ஜமீன்தார்கள் ஆதிக்கத்தில் இருப்பதையும் அவர்கள் அதே ஜாதியைச் சேர்ந்த ஏழைகளை ஏளனமாக நடத்துவதையும் மாற்ற முனைந்தார் சகஜானந்தர். எளிய பூமிகார் இளைஞர்களை மகா சங்கத்தில் ஈடுபடுத்தி, அதை ஜனநாயகப்படுத்தினார். அவர்களைக் கொண்டு, ஆதிக்க மனப்பான்மை கொண்ட பழைய தலைவர்களை எதிர்த்தார். மோதல் போக்கு உருவானது.
பைதாவில் 1927இல் சீதாராம் ஆசிரமத்தை தொடங்கிய போது பூமிகார் ஜாதி ஜமீன்தார்களால் பாதிக்கப்பட்ட யாதவர்களும் அங்கு வந்து அவருடன் சேர்ந்து கொண்டார்கள். சுருக்கமாகச் சொன்னால் ஜமீன்தாரி முறையால் பாதிக்கப்பட்ட சுய ஜாதியினரும் யாதவர்கள் போன்ற பிற ஜாதியினரும் சகஜானந்தர் தலைமையில் ஒன்று திரண்டு சமூக – பொருளாதார மாற்றத்தை வேண்டி போராடத் தொடங்கினர்.
எல்லா ஜாதியினரையும் இணைத்து அவர் மேற்கு பாட்னா விவசாயிகள் சபாவை ஆரம்பித்தார். சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்த அவரது செயல்பாடு சமூக – பொருளாதாரப் போராட்டத்திற்கு வித்திட்டது. அதன் விளைவாக 1929 இல் பூமிகார் மகா சங்கம் கலைக்கப்பட்டது. இது ஜமீன்தார்களின் சமூக – அரசியல் தலைமையை உடைத்தெறிந்தது. ஜனநாயக ரீதியாக மக்கள் ஒன்றுபட வழி வகுத்தது.
(தொடர்கிறது)
என் வாழ்க்கைப் போராட்டம் The Struggle of My Life (ஆங்கில நூல்) ஆசிரியர்: சுவாமி சகஜானந்த சரஸ்வதி மொழி மாற்றம்: ராமசந்திர பிரதான் வெளியீடு: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் விலை: ரூ. 1395-
$$$