சி.ஏ.ஏ.: மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை

-ஆசிரியர் குழு

சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது மற்றும் அதன்மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதாவது,  இந்தியாவில் தஞ்சமடைந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. 

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ – 2019) கடந்த 11-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதனிடையே,  ‘‘சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’ என தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறையில், குடியுரிமை கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது மற்றும் அதன்மீது இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசு அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, பாகிஸ்தான், பங்களாதேஷ்,  ஆப்கானிஸ்தானிலிருந்து தஞ்சமடைந்த அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் தடுப்பதற்கான வாய்ப்பே இல்லை. இதனை பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மத்திய அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டது:

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 7-வது அட்டவணையின்படி ராணுவம், வெளியுறவு, வெளிநாட்டினர் உள்ளிட்ட 97 பிரிவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரம் 17-வது பிரிவின் கீழ் வருகிறது.

மேலும், சிஏஏ சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலித்தல் மற்றும் அதன் மீது இறுதிமுடிவு எடுத்தல் ஆகிய பணிகளை முறையே மாவட்ட மற்றும் மாநில அல்லது யூனியன் பிரதேச அளவிலான குழுக்கள் மேற்கொள்ளும் என சிஏஏ விதிகள் 2024-ல் கூறப்பட்டுள்ளன. இவ்விரு குழுக்களிலும் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக மத்திய அரசு அதிகாரிகள் இருப்பார்கள் என்றும், 2 அழைப்பாளர்களில் ஒருவராக மாநில அரசைச் சேர்ந்தவர் ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறுவார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அளவிலான குழுவின் தலைவராக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு இயக்குநர் இருப்பார். உளவுத் துறை அதிகாரி, வெளிநாட்டினருக்கான மண்டல பதிவு அதிகாரி, மாநில தகவல் அதிகாரி மற்றும் மாநில அஞ்சல் துறை அதிகாரி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதில் 2 பேர் அழைப்பாளர்களாக இருப்பார்கள். இதில் ஒருவர் மட்டும் மாநில அரசின் முதன்மை செயலாளர் (உள்துறை) அல்லது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரி இடம்பெறுவார். மற்றொருவர் ரயில்வே அதிகாரியாக (மண்டல மேலாளர்) இருப்பார்.

இதுபோல மாவட்ட அளவிலான குழுவின் தலைவராக அஞ்சல் துறை மூத்த கண்காணிப்பாளர் அல்லது கண்காணிப்பாளர் இருப்பார். மாநில தகவல் அதிகாரி உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாநில அரசு சார்பில் வட்டாட்சியர் அந்தஸ்து அதிகாரியும் மத்திய அரசு சார்பில் ரயில்வே அதிகாரியும் (நிலைய அதிகாரி) அழைப்பாளர்களாக இருப்பார்கள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இரு குழுக்களிலும் தலைவர் உட்பட மொத்தம் 2 பேர் மட்டுமே இறுதிமுடிவு எடுக்க முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால், மாநில அரசுப் பிரதிநிதியின் ஒப்புதல் இல்லாமலேயே இக்குழு விண்ணப்பப் பரிசீலனை மற்றும் இறுதி முடிவு எடுத்தல் பணிகளை முடித்துவிட முடியும்.

சிஏஏ சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் (அங்குள்ள இஸ்லாமியர்களால்) மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

இணையதளம் தொடக்கம்:

சிஏஏ சட்டத்தின்படி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் https://indiancitizenshiponline.nic.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியுரிமைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

***

சி.ஏ.ஏ.: எதுவும் தெரியாமல் எதிர்க்கலாமா?

-கே.அண்ணாமலை கேள்வி

 குடியுரிமை திருத்தச் சட்டம் என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே, சில அரசியல் கட்சிகள் முட்டாள்தனமாக இதனை எதிர்க்கின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைமையகத்தில் மார்ச் 13ஆம் தேதி, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் என்னவென்றே தெரியாமல், அவர்களாகவே எதையோ ஊகித்துக் கொண்டு, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இது அரசியம் விஷமமாகும்.

1950-ஆம் ஆண்டு ஜன. 26 முதல் 1987-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வரை இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 2003-ஆம் ஆண்டு வரை, தந்தை, தாய் இருவரும் இந்தியாவில் பிறந்திருந்தால் மகன் அல்லது மகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின் தந்தை, தாய் இருவரில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் மற்றொருவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்திருக்கக் கூடாது என்னும் விதிமுறை பின்பற்றப்பட்டது. இவ்வாறு 3 முறை குடியுரிமை வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் சட்டம் திருத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 அண்டை நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகளாக அறிவித்துக் கொண்டவை. அங்கு மதம் காரணமாக சலுகைகள் மறுக்கப்பட்ட பிற மதத்தினர் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தியாவுக்குள் வந்துவிட்டனர். அவர்கள் அகதி மறுவாழ்வு முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு அகதிகளாக வந்தவர்கள் 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தால் இயற்கையாகவே குடியுரிமை கிடைக்கும். தற்போதைய திருத்தச் சட்டத்தின்படி, 2014-ஆம் ஆண்டு டிச. 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த ஹிந்து, கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மதத்தினர், 5 ஆண்டுகள் வசித்திருந்தாலே குடியுரிமை கிடைக்கும்.

இது குடியுரிமையைக் கொடுப்பதற்கான சட்டமே தவிர,  யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைக் குழப்புவதை விட்டுவிட்டு, எங்கு தவறு நடந்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

இதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என கூற முதல்வருக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர் கூறுவது, முதல்வர் எடுத்த சத்தியப் பிரமாணத்துக்கு எதிரானது. இலங்கை அகதிகள் அனைவருக்கும் விரைவாக குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பதே பாஜக நிலைப்பாடு என்றார்.

$$$

Leave a comment