-ஆசிரியர் குழு

குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 நாடு முழுவதும் 2024 மார்ச் 11ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலமாக, மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு அகதிகளாக இந்தியா வந்தபோதும், பல்லாண்டுகளாக இந்தியக் குடியுரிமை பெற முடியாமல் ஏங்கித் தவித்த லட்சக் கணக்கான மக்கள் பயன் பெற வாய்ப்புக் கிடைத்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்ற தலைப்பில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவிக்கை செய்துள்ளது. அதன்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் திங்கள்கிழமைமுதல் அமலுக்கு வந்துவிட்டது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இவை ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்று அழைக்கப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெறத் தகுதியுள்ள நபர்கள், இந்த விதிகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்டுள்ள வலைதளம் மூலம் இணையவழியில் மட்டுமே இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் கூறுவது என்ன?
இந்தியாவிலிருந்து 1947க்கு முன்னர் மதத்தின் அடிப்படையில் பிரிந்த அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷில் இருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த முஸ்லிம் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கம, குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 வகை செய்கிறது. இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த எந்தச் சட்டத்தையும் அமல்படுத்துவதற்கான விதிகள் ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்; அல்லது நாடாளுமன்றக் குழுவிடம் கால நீட்டிப்பு கேட்கப்பட வேண்டும். அந்த வகையில், குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகளை வெளியிடுவதற்கு 2020-லிருந்து உரிய கால இடைவெளியில் நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து அவகாசம் பெற்று வந்தது.
எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தச் சட்டத்தை தவறாக விளக்கி முஸ்லிம் மக்களைத் தூண்டியதால் 2020 தொடக்கத்தில் நாடு முழுவதிலும் பல இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் இந்த சட்டத்தால் வெளியேற்றப்படுவார்கள் என்று பொய்யான பிரசாரத்தை சில கட்சிகள் முன்னெடுத்து வெறியேற்றியதால், இச்சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தப் போராட்டங்களின் இறுதியில் பல இடங்களில் கலவரம் வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது.
தவிர, கரோனா பெருந்தொற்றும் 2020 தொடக்கத்தில் உலகைப் பீதியில் ஆழ்த்தியது. எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை இந்திய அரசு சிறிதுகாலம் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்க விதிகள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் கூறியிருந்தார். அதன்படி, இச் சட்டம் நாடு முழுவதும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “இந்த அறிவிக்கை மூலம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கம் போல விமர்சனம் செய்துள்ளன. முஸ்லிம் மக்களை தூண்டும் விதமாக மீண்டும் அவை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மமதா பானர்ஜி, பிணராயி விஜயன் போன்றோர், தங்கள் மாநிலங்களில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். ஆனால், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த சட்டப்படி, இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் அகதிகள், மத்திய அரசிடம் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை முழுவதும் ஆன்லைன் முறையில் நடைபெறும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் தயாராக இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
***
காண்க: இந்தியக் குடியுரிமை சட்டம் அமலாக்கம் குறித்த அரசிதழ் அறிவிப்பு:
***
குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள்- 2024:
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் சில:
- சிஏஏ 2019-இன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோர், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டுகளுக்கு குறையாமல் விண்ணப்பதாரர் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவர்.
- சொந்த நாட்டுக் குடியுரிமையைக் கைவிடுவதாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரர் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
- இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர், இந்திய குடியுரிமை பெற்றவரைத் திருமணம் செய்தவர், இந்தியக் குடியுரிமை பெற்றவரின் 18 வயதுக்கு உள்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவர், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவர் தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
- சட்டபூர்வமாக இந்திய குடியுரிமை கோருவோர், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும்.
- இத்தகைய விண்ணப்பதாரர்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதிமொழியை வழங்க வேண்டும்.
- இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், “இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டிருப்போம்; இந்திய சட்டங்களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்; இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூர்த்தி செய்வோம்“ என்று விண்ணப்பதாரர் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு பாஸ்போர்ட், தங்கும் அனுமதி (விசா), வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். (இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல).
- இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், சிஏஏ- 2019இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு அதற்கான டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்தியக் குடியுரிமை சான்றிதழ் கோருவோர் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
***
விரிவாகப் படியுங்கள்: ‘குடியுரிமை திருத்தச் சட்டம்: தெளிவான கண்ணோட்டம்’
குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 தொடர்பாக தெளிவாக அறிந்துகொள்ள, நமது தளத்தில் வெளியான ‘குடியுரிமை திருத்தச் சட்டம்: தெளிவான கண்ணோட்டம்’ நூலின் கட்டுரைகள் உதவும்.

கீழே உள்ள இணைப்புகளை (URL) சொடுக்கினால் கட்டுரைகளை விரிவாகப் படிக்கலாம்…
- பதிப்புரை
- குடியுரிமைத் திருத்தச் சட்டம் – யாருக்கானது?
- திட்டமிட்ட வன்முறைகளும் மக்களின் மௌனமும்…
- கேள்வி – பதில் வடிவில் சில தகவல்கள் (பகுதி-அ), (பகுதி-ஆ)
- குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டப்பூர்வமானது
- நேரு- லியாகத் அலிகான் ஒப்பந்தம் சொல்வது என்ன?
- நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்
- காற்றில் பறக்கலாமா தலைவர்களின் உறுதிமொழி?
$$$