வாழ்ந்து வழிகாட்டிய மகாத்மா புலே

-திருநின்றவூர் ரவிகுமார்

மகாத்மா ஜோத்ராவ் புலே

1954-இல் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் தெரிவித்துள்ளார். தனஞ்செய் கீர் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். டாக்டர் அம்பேத்கர் அவ்வாறு கூறக் காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் அரிஜனங்களுக்காகவும் பெண்களுக்காகவும் முதன்முதலில் பள்ளிக்கூடம் துவங்கி, சமூகப் புரட்சிக்கு, மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர்.

பிராமண எதிர்ப்பாளர், இந்துமத விரோதி, ஆங்கிலேயர்களின் அடிவருடி என்றெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் தூற்றப்பட்டாலும், பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம், அரிஜனர் கல்வி, வேலைவாய்ப்பு, அவர்களது சமூக மேம்பாடு ஆகியவற்றுக்காக பாடுபட்ட முன்னோடி. ஆனால் அவர் அரிஜனர் அல்ல. மாலி என்ற மிகவும் பிற்பட்ட வகுப்பை (MBC) சேர்ந்தவர். புத்தர், கபீர்தாசருக்கு இணையாக அவரை மதித்ததால்தான், டாக்டர் அம்பேத்கர் அவரது வாழ்க்கை வரலாற்றை தாமே எழுத விரும்பினார்.

மகாத்மா புலேவின் இயற்பெயர் ஜோதி. அவருடைய தாத்தாவின் ஊதாரித்தனத்தாலும் தீய நட்பினாலும் வளமையிலிருந்து மாறி வறுமைக்கு வந்தது அவரது குடும்பம்.  எனவே அவருடைய மூன்று மகன்களும், அதாவது மகாத்மா புலேவின் அப்பாவும் இரண்டு பெரியப்பாக்களும், தினம் ஒரு பைசா கூலிக்கு ஆடு மேய்ப்பவர்களாக பூனாவில் வாழ்ந்தார்கள்.

அவர்களது முதலாளி இரக்கப்பட்டு தான் செய்துவந்த பூக் கட்டும் வேலை, பூந்தோட்டம் அமைத்தல், தோட்டப் பராமரிப்பு ஆகியவற்றில் ஈடுபடுத்தி அந்தத் தொழிலை அவர்களுக்கு கற்றுத் தந்தார்.

பையன்கள் தொழிலை நன்கு கற்றுத் தேர்ந்து, அதில் தங்களுக்கென சிறப்பாக பெயர் பெற்றார்கள். சிவாஜி மகாராஜாவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த பேஷ்வாக்களில் கடைசி பேஷ்வா இரண்டாம் பாஜிராவ். அவரது தர்பாருக்கும் அரண்மனைக்கும் பூக்கள், மலர் மாலைகள், மலர்ப் போர்வை ஆகியவற்றை வழங்கும் நிலைக்கு உயர்ந்து, அரசு மானியம் பெற்று உயர்ந்தார்கள். இதனால் அவர்களது குடும்பப் பெயரான ‘கோரே’ என்பது மறைந்து  ‘புலே’ (பூக்காரர்) என்ற பெயர் நிலைபெற்றது.

புலே சகோதரர்களில் இளையவரான கோவிந்த புலே,  மகாத்மா ஜோதிராவ் புலேவின் தந்தை. தாயின் பெயர் சிம்னாபாய். ஜோதிக்கு ஓர் அண்ணன். அவரது பெயர் ராஜாராம். ஜோதிராவ் 1827,  ஏப்ரல் 11-ம் நாள் பிறந்தார். பிறந்த ஓராண்டுக்குள் அவரது தாய் காலமானார்.

வெள்ளையர் ஆட்சியுடன் வந்தது புதிய கல்விமுறை. அதனால் பிற்பட்ட வகுப்பினரும் கல்வி கற்க வாய்ப்பு ஏற்பட்டது. ஜோதி ராவ் புலே தனது ஏழாவது வயதில் மராட்டியப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பிராமணர் அல்லாதவர் கல்வி அறிவு பெறுவதை விரும்பாத தீய சக்திகள், ஆங்கிலேயரின் கல்வியால் என்ன பயன்? மாறாக அந்தக் கல்வியால் பாவமே சேரும் என்று செய்த விஷம பிரசாரத்தால் ஜோதிராவின் பள்ளி படிப்பு மூன்றாண்டில் முடிவுக்கு வந்தது.

மண்வெட்டி எடுத்துக் கொண்டு குடும்பத் தொழிலான தோட்டத் தொழிலுக்கு போனார் ஜோதிராவ். இதனிடையே அவரின் 13-ம் வயதில் சாவித்ரி என்ற  8 வயது பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

பள்ளிப் படிப்பு நின்றாலும் கற்பதில் ஜோதிராவுக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை. தோட்டத்தில் வேலை செய்த பிறகு வீட்டில் விளக்கொளியில் படிப்பதைத் தொடர்ந்தார். அவரது வீட்டருகே இருந்த ஆசிரியர்கள் இருவர் அதைப் பார்த்தனர்; கோவிந்த புலேவிடம் பையனின் படிப்பை தொடரச் செய்யுமாறு வற்புறுத்தினார்.  அதனால், மூன்றாண்டுகள் கழித்து  14-ம் வயதில் மீண்டும் பள்ளிக்குச் சென்றார். ஜோதிராவ் 1847-ல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

அப்போது நாடெங்கும் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் நடந்து வந்தது. ஆங்காங்கே புரட்சி வெடித்தது. இது இளைஞர்களின் உள்ளத்தில் தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்தியது. தனது மாணவப் பருவத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருந்ததாக தனது நூலான ‘அடிமைத்தன’த்தில் புலே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதையெல்லாம் மீறி சமூகப் புரட்சியாளராக அவரை மாற்றியது அந்தச் சம்பவம்…

பிராமண ஜாதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு அழைக்கப்பட்ட ஜோதிராவ், திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதைப் பார்த்த நண்பரின் உறவினர்,   “சூத்திரனான நீ பிராமண கல்யாணத்தில் பிராமணர்களுக்கு இணையாக ஊர்வலத்தில் வருவதா? எங்களை அவமானப்படுத்திவிட்டாய் நீ” என்று கோபமாக திட்டி, நண்பரின் திருமண ஊர்வலத்திலிருந்து விரட்டிவிட்டார்.

அவமானப்படுத்தப்பட்ட ஜோதிராவ் ஆழ்ந்து சிந்தித்தார். அரசியல் அடிமைத்தனத்தை விட மோசமானது சமூக அடிமைத்தனமும், அதை வலியுறுத்தும் ஜாதி அமைப்பும். அதற்கு எதிராக புரட்சிக் கொடியை உயர்த்தினார். சமூக விடுதலைக்கு வழிவகுக்க அனைவருக்கும் கல்வி,  குறிப்பாக பெண்களுக்கு கல்வி தேவை என்று முடிவெடுத்தார்.

1848-ல் பூனாவில் புதன்வார பேட்டையில் தனது நண்பர் பீடே என்பவரது வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார், ஜோதிராவ். இவர்தான் பெண்களுக்காக பள்ளியைத் துவங்கிய முதல் இந்தியர்.

பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சிறுவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே கஷ்டம். அதிலும் பெண்கள் என்றால் மிகவும் கடினம். எனவே, பள்ளியைத் துவங்கி எட்டு மாதம் கூட நடத்த முடியவில்லை.

இதனிடையே தீய சக்திகள் ஜோதிராவின் தந்தையின் மனதைக் கெடுக்க, அவர் மகனையும் மருமகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். பிழைப்புத் தேடி ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தார் ஜோதிராவ்.

ஆரம்பத்திலிருந்தே தன் மனைவிக்கு கல்வியறிவு கொடுத்த ஜோதிராவ், கல்வித் துறையிலிருந்த தன் நண்பரின் உதவி கொண்டு சாவித்ரிக்கு ஆசிரியர் பயிற்சியும் கொடுத்தார். தனக்கும் இரண்டாண்டுக்கும் மேலாக கல்வித் துறையில் கிடைத்த அனுபவத்துடன் மீண்டும் 1851 ஜூலை மாதம் 5-ம் நாள் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். 8 பேர்களுடன் துவங்கி சில மாதங்களிலேயே மாணவிகளின் எண்ணிக்கை  48- ஆக உயர்ந்தது.

இம்முறை பள்ளியை தனியாக துவங்காமல் தன்னுடைய நண்பர்களையும் சேர்த்து ஒரு அமைப்பை (டிரஸ்ட்) ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளியை நடத்தினார். அவரது மனைவி சாவித்ரி, அப்பள்ளியின் தலைமைப் பொறுப்பாளராக இருந்து பள்ளியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

பள்ளி மாணவியர்களின் கல்வி அறிவை ஆங்கில அரசு அதிகாரிகள் பொதுமக்கள் முன்பாக சோதித்தனர். மாணவியரின் பதில் அவர்களை மகிழ்ச்சிகொள்ள வைத்தது. எனவே அரசு மானியமாக ரூ. 75-ஐ கொடுக்கத் துவங்கியது. மேலும் வேறு சில இடங்களில் பள்ளியைத் துவங்கினார் ஜோதிராவ். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஒரு பள்ளியும் துவங்கப்பட்டது.

ஜோதிராவின் பணியின் வளர்ச்சியும் அதனால் பெண்களிடையே கல்வியறிவு ஏற்படுவதையும், தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்களிடையே கல்வியறிவும் விழிப்புணர்வும் ஏற்படுவதையும் சகிக்க முடியாத தீய சக்திகள் அவரைக் கொல்ல முடிவெடுத்தன.

ரமோஷி, கும்பார் என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் (அந்தக் காலத்திலேயே) கொடுத்து ஜோதிராவை கொலை செய்ய அனுப்பினர். இரவில் சத்தம் கேட்டு எழுந்த ஜோதிராவ், அவர்களை யார் என்று கேட்டார். விஷயத்தைத் தெரிந்துகொண்ட அவர்,  ‘என்னுடைய மரணம் தாழ்த்தப்பட்ட உங்கள் வாழ்வில் வளத்தைச் சேர்க்கும் என்றால் அதுவும் நல்லதே ’என்று வெட்ட வசதியாக தலையை நீட்டினார். அவரது பேச்சும் செயலும் கொலையாளிகளின் உள்ளத்தை மாற்றின.

பின்னர் அவர்கள் ஜோதிராவ் நடத்திய மாலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியறிவும் சமூக விழிப்புணர்வும் பெற்றனர். அதில் ஒருவரான ரமோஷி பின்னர் ஜோதிராவின் பாதுகாவலராக மாறி அவருடனே இருந்தார். கும்பார் பின்னர் பல நூல்களை எழுதி வெளியிட்டார். ஜோதிராவ் ஆரம்பித்த  ‘சத்யசோதக் சமாஜம்’ அமைப்பின் தூணாக விளங்கினார்.

பெண்கல்வி மட்டுமன்றி விதவா மறுமணம் போன்ற புரட்சிகரமான கொள்கைகளை முன்னோடியாக நடைமுறைப்படுத்திக்காட்டிய ஜோதிராவ் இப்புரட்சி கருத்துக்களை பரப்ப சத்யசோதக் சமாஜத்தை 1873 செப்டம்பர்  24-ல் துவங்கினார்.

தொழிலாளர்களையும் விவசாயிகளையும் முதன்முதலில் அமைப்பு ரீதியாகத் திரட்டி, சங்கம் அமைத்துப் போராடி உரிமைகளை பெற்றுத்தரக் காரணமாக இருந்தவர் ஜோதிராவும், அவர் ஆரம்பித்த சத்ய சோதக் சமாஜமும் தான்.

சமூகப் புரட்சிக்கு வித்திட்ட ஜோதிராவுக்கு பெரிதும் கடன்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது 60-வது வயது நிறைவின்போது 1888-ல், மிகப் பெரிய மாநாடு நடத்தி அதில் அவரை ‘மகாத்மா’ என்று போற்றி வணங்கினர்.

சமத்துவம், அறிவு, மனித நேயம் என்ற மூன்றையும் வலியுறுத்தி வாழ்ந்து காட்டி, மக்களால் மகாத்மா என்று போற்றப்பட்ட ஜோதிராவ் புலே 1890, நவம்பர் 28-ம் நாள் மறைந்தார்.

இந்து மத விரோதி என்று நிந்திக்கப்பட்டாலும்  ‘வாய்மையே வெல்லும்’ என்ற இந்து மத மகாவாக்கியத்தையே தனது கோஷமாகக் கொண்டவர் சமூகப் புரட்சியாளர் மகாத்மா புலே. அவரது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்த மகா வாக்கியத்தையே சுதந்திர இந்திய அரசு தனது வழிகாட்டியாக ஏற்றது அவருக்கு பொருத்தமான அங்கீகாரமாகும்.

$$$

Leave a comment