-வ.மு.முரளி
விஜயபாரதம் முன்னாள் ஆசிரியரும், ‘பொருள்புதிது’ இணையதளத்தின் தொடர்ந்த வாசகராக இருந்தவருமான அமரர் திரு. சுந்தர.ஜோதி அவர்கள் காலமாகி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. அவரைக் குறித்து, பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி தனது தளத்தில் எழுதி இருக்கும் கட்டுரை இங்கு நினைவஞ்சலியாகப் பதிவாகிறது...

திரு. சுந்தர. ஜோதிஜி இன்று நம்முடன் இல்லை. ஆனால், அவரைப் பற்றிய நினைவுகள் என்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும். கடுகடுப்பான முகம், ஆனால் கனிவான குணம். சங்கமொன்றே அவரது வாழ்க்கை. “சங்கப் பணி என்பது தெய்வப் பணி. அதைச் செய்ய யாராவது வந்துகொண்டே இருப்பார்கள்” என்பது அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை.
அவருடனான எனது உறவு சகோதர உறவு போன்றது. கோவையில் பொறியியல் துறையில் பணி புரிந்துகொண்டிருந்த என்னிடம் இருந்த எழுத்தார்வத்தைக் கண்டறிந்து, அதை சங்கத்திற்குப் பயன்படுத்த விரும்பி, விஜயபாரதம் வார இதழில் பணியாற்ற அழைத்தார். எனது வாழ்க்கைப் பயணம் திசை மாறியது அவரால்தான். இல்லையேல், நான் கோவையில் ஏதோ ஒரு நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டோ, சிறு தொழில் நிறுவனத்தை நடத்திக் கொண்டோ இருந்திருப்பேன். எனது ஆற்றல் எழுத்தில் இருப்பதை எனக்கே அடையாளம் காட்டியவர் அவர்.
1985 முதல் விஜயபாரதத்தின் வாசகர் நான். 1989 முதல் விஜயபாரதத்தில் கவிதைகளை எழுதி வந்தேன். 1997 சுதந்திரப் பொன்விழாவின் போது நடத்தப்பட்ட போட்டியில் எனது கவிதை முதல் பரிசு பெற்றது. அது விஜயபாரதம் சுதந்திரப் பொன்விழா மலரிலும் வெளியானது. அப்போது ஜோதிஜி ஒரு பாராட்டுக் கடிதம் எழுதி இருந்தார். அன்று தொடங்கிய உறவு அவர் மறையும் வரை தொடர்ந்தது.
கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த என்னை, கோவையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் குறித்து கள நிலவரமாக எழுதச் சொன்னவரும் அவரே. எனது அந்த முதல் நேரடி ரிப்போர்ட் விஜயபாரதத்தில் 2 பக்கங்கள் வெளிவந்தது. அப்படித்தான் கவிஞனான நான் பத்திரிகையாளனாக ஆவதற்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒருநாள், அவரிடமிருந்து அஞ்சல் அட்டை ஒன்று வந்தது. “விஜயபாரதத்தில் பணியாற்ற உங்களைப் போன்றவர்கள் வர வேண்டும்” என்றது அக்கடிதம். அதைத் தொடர்ந்து தொலைபேசியிலும் பேசினார். 1998 ஜூன் மாதத்தில் சென்னைக்குக் கிளம்பிவிட்டேன்.
சென்னை, சேத்துப்பட்டில் சங்க காரியாலயம் எதிரே அமைந்திருந்த விஜயபாரதம் அலுவலகத்திலேயே ஜோதிஜியுடனேயே தங்கினேன். 2001 ஜனவரி இறுதி வரை அவருடன் இருந்த அக்காலம், அவர் என்னைச் செதுக்கிய காலம். களிமண்னை சிலையாகச் செய்வது போல, என்னை ஜோதிஜி தான் வடிவமைத்தார். பல்வேறு பிரமுகர்களை அறிமுகம் செய்தது, அவர்களை நேர்காணல் செய்ய வைத்தது, அமரர் திரு. ராம.கோபாலன், திரு. வி.சண்முகநாதன் ஆகியோரின் தொடர்களை எழுத வைத்தது, ஆங்கிலக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யச் செய்தது, கட்டுரைகளைச் செப்பனிடும் பணி, பிழைத் திருத்தும் பணி, செய்தி சேகரிப்புப் பணி, ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்து எழுத வைத்தது, தீபாவளி மலர் தயாரிப்புப் பணி என, ஒரே ஆண்டில் என்னை ஒரு முழுநேரப் பத்திரிகையாளராக்கி விட்டார்.
இதனிடையே, வேலையை விட்டுவிட்டு சென்னை சென்றதால் என்மீது பெற்றோர் கொண்ட அதிருப்தியையும், கிணத்துக்கடவுக்கு – எனது வீட்டிற்கே நேரில் வந்து பேசி சரி செய்தார் ஜோதிஜி. “உங்கள் பையன் நல்ல எழுத்தாளனாக வருவான். அவன் உங்களுக்கு மட்டுமே சொந்தமல்ல” என்று அவர் கூறியது தான் அவர்களின் மனதை மாற்றியது. எனது பெற்றோரிடம் ஆசியும் அனுமதியும் பெற்று வந்தார் அவர்.
சென்னை, ஐ.சி.எஃப். காந்திநகர், ஹவுஸிங் யூனிட்டில் இருந்த அவரது வீட்டிற்குச் செல்லும் பேறும் கிடைத்தது. அவரது பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்றேன். அப்போதுதான் அவர் வீட்டிற்கு ஒரே மகன் என்பதும், அவரது குடும்பச் சூழலும் எனக்குத் தெரிய வந்தது. ஜோதிஜியை விட, தங்கள் ஒரே மகனை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர ஊழியராக அனுப்பி வைத்த அவரது பெற்றோர் அற்புதமான தியாகசீலர்கள்.
மற்றவர்களை விட நான் கொஞ்சம் அதிகமாகக் கொடுத்து வைத்தவன். ஏனென்றால் நான் அவருடனேயே தங்கி இருந்தேன்; அவரது பேரன்பில் திளைத்திருக்கிறேன். தினசரி அவருடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்துகொண்டு செல்வேன். சென்னை மாநகரின் பல பகுதிகளை எனக்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். அது மட்டுமல்ல, அவருடன் சென்றால், சென்னையில் உள்ள சரவணபவன் ஓட்டல் கிளை ஒன்றில் அவரது செலவில் சாப்பிட்டே ஆக வேண்டும். அவருக்கு டிகாஷன் காபி மீது அலாதி பிரியம். எனக்கும் அவரிடமிருந்து அந்தப் பற்று தொற்றிக் கொண்டிருக்கிறது.
பல பிரபலங்களை, பிரமுகர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்து மகிழ்வார் ஜோதிஜி. எழுத்தாளர்கள் ஞானக்கூத்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், பத்திரிகையாளர்கள் மாலன், மதன், பத்மன், லேனா தமிழ்வாணன், துக்ளக் ஆசிரியர்கள் சோ ராமஸ்வாமி, எஸ்.குருமூர்த்தி, தினமணி ஆசிரியர் ராம.திரு.சம்பந்தம், அரசியல் தலைவர்கள் இரா.செழியன், த.ராஜாராம், பழ.கருப்பையா, தமிழருவி மணியன், இயக்குநர் மகேந்திரன், நாடக நடிகர் ஆர்.எஸ்.மனோகர் போன்ற பலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, சிலரிடம் பேட்டியும் எடுக்க வைத்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் அவர் பேட்டி எடுக்க, அதை நான் தொகுத்திருக்கிறேன். என் மீது நம்பிக்கை வந்த பிறகு நானே தனித்துப் பேட்டி எடுக்க, நண்பர் நாகமணியுடன் சேர்த்து அனுப்பி வைப்பார். எதிர்முகாமில் இருந்த பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன் போன்றோரையும் கூட பேட்டி எடுத்திருக்கிறோம்.
“சங்கப் பணி போலவே விஜயபாரதம் பணியும் தெய்வீகப் பணி. நாம் நமது கடமையைச் செய்வோம்” என்பார். தலையங்கம் எழுதுவதற்கான அவரது தயாரிப்புப் பணி மிகவும் தீவிரமாக இருக்கும். தினமணி, த பயோனீர், ஹிந்துஸ்தான் டைம்ஸ், டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இண்டியன் எக்ஸ்பிரஸ், த ஹிண்டு, இண்டியா டுடே, அவுட்லுக், த வீக் உள்ளிட்ட பல பத்திரிகைகளைப் படிப்பார். அவற்றிலிருந்து தகவல்களைச் சேகரிப்பார். ஒரு கட்டுரையை ஆதாரப்பூர்வமாக எழுதத் தேவை இந்த அர்ப்பணிப்பு தான் என்பதை அவரிடமிருந்து நானும் கற்றுக் கொண்டேன்.
விஜயபாரதத்தில் சிறு பிழையும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை காட்டுவார். விஜயபாரதம் செய்திப்பிரிவில் வேறு எவெரும் தலையிடுவதை ஏற்க மாட்டார். அந்த விஷயத்தில் மிகவும் கண்டிப்பாகவே இருப்பார். சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் அந்த வார இதழை அச்சுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று பரபரப்பார். விஜயபாரதத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதிலும், படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுடன் எவ்வாறு இடையறாத தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார். விஜயபாரதத்தில் எழுதுவதற்கான ஒரு படையையே (உம்: திருநின்றவூர் ரவிகுமார், டாக்டர் ஷ்யாமா, காந்தாமணி நாராயணன், நிகரியவாதி, கோமளா கல்பகவல்லி, பி.ஆர்.ராஜாராம், வெற்றிச்செல்வன்) உருவாக்கினார். அது மட்டுமல்ல, என்னைப் போன்ற பத்துக்கு மேற்பட்ட இதழாளர்களையும் அவர் உருவாக்கினார்.
தான் விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் மட்டுமல்ல, சங்கத்தின் பிரசாரகர் என்பதையும் மனதில் கொண்டு நம்மை செயல்பட்டதால் தான் இது சாத்தியமாயிற்று என்று நான் நம்புகிறேன். விஜயபாரதம் வார இதழை வெறும் பத்திரிகையாக அவர் பாவிக்கவில்லை; அதனை ஓர் இயக்கமாக வளர்த்தார். இன்று தமிழக பத்திரிகைத் துறையில் ஓர் இதழாளனாக நான் பயணிக்க அவரே காரணம். எனது இதழியல் குருநாதர் அவரே.
சங்கத்தில் அமரர் திரு. வீரபாகுஜியின் கீழ் பணிபுரிந்த காலத்தைப் பற்றிச் சொல்லும்போது, “வாழைக்கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே” என்ற திரைப்பாடலை ஜோதிஜி சுட்டிக்காட்டுவார். அதுவேதான் எனக்கும். விஜயபாரதம் என்னும் தேசிய இதழின் பயணத்தில் நானும் சிறிது காலம் ஜோதிஜியின் தண்ணிழலில் பணி புரிந்திருக்கிறேன் என்பதை இறையருள் என்றல்லாமல் வேறெப்படிச் சொல்வது?
$$$