பாரதத்தையும் சநாதன தர்மத்தையும் மதிப்போம்!

-டேவிட் ஃப்ராலே

அமெரிக்காவைச் சார்ந்த இந்தியாவின் தோழரும், ஹிந்துத்துவ இயலில் ஆராய்ச்சியாளருமான திரு. டேவிட் ஃப்ராலே இணையதளம் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இது...

‘பகவத் கீதையால் உத்வேகம் பெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உண்மையான அடிப்படை சநாதன தர்மமே. இதிலிருந்து முரண்படுவது உண்மையான காங்கிரஸ் கட்சியே அல்ல’.

பாரம்பரியம் மிக்க பாரதம் என்ற பெயரைத் தவிர்த்து விட்டு இந்தியாவைப் புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பாவை விட பழமையான நாகரிகத்தைக் கொண்டது இந்தியா. அது மட்டுமன்றி அந்த நாகரிகத்தை பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாகப் பின்பற்றி வருகிறது. பாரதம் என்ற பெயரைச் சொன்னாலே அந்தத் தொன்மையான வரலாறு மனதில் தோன்றுகிறது.  ‘பாரதிய சமஸ்கிருதி’ எனப்படும் அதன் பண்பாட்டு அடையாளம், பரந்து விரிந்த தர்மத்தின் அடிப்படையிலான நாகரிகமும், உலக அரங்கில் எதிரொலிக்கும் அதன் குரலும் தாக்கமும் மனதில் எழுகின்றன.

இந்திய அரசியல் சாசனத்தின் தொடக்கத்தில் உள்ள  ‘இந்தியா எனப்படும் பாரதம்’ என்ற வாக்கியம் நவீன தேசிய அரசை ஏற்படுத்த வேண்டும் என்பதை மட்டுமன்றி, இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த, தொன்மையான நாகரிகத்திற்கு மீண்டும் புத்துயிருட்ட வேண்டியதன் தேவையையும் வெளிப்படுத்துகிறது.

அதேபோல  ‘ஹிந்துயிசம்’ என்பதை சநாதன தர்மம் என்பதற்கு இணையாக இல்லாமல் வேறு எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாது. சநாதன தர்மம் என்றால் உலகளாவிய, நிரந்தரமான, தொடர்ந்து இருக்கக்கூடிய தர்மமாகும். பாரதத்துக்கே உரிய, தர்மத்தின் அடிப்படையிலான மரபை அதற்கே உரிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள உதவுவது  ‘தர்மம்’ என்ற வார்த்தை.

ஆழ்ந்த ஆன்மிகம், சமயம், தத்துவம், அறிவியல், கலை, பண்பாட்டு மரபு, எண்ணற்ற மகத்தான ரிஷிகள், யோகிகள், குருமார்கள், இறை வடிவங்கள், கோயில்கள், தன்னை அறிவது, உயர்ந்த ஆன்மிக விழிப்புணர்வு ஆகியவை எல்லாம் தர்மம் என்ற வார்த்தைக்குள் அடங்கும்.  ‘ஹிந்துயிஸம், ஹிந்து தர்மம், சநாதன தர்மம்’ என்பதை பெயர்ச் சொல்லாக எளிமைப்படுத்தக் கூடாது. மாறாக அதன் பொருள் மற்றும் தொடர்புடைய உட்பொருள் என்பதுடன் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம், இந்திய அரசியல்வாதிகள்  ‘பாரதம் அல்லது இந்தியா /பாரதம்’ என்பதை தங்கள் அடையாளமாக ராஜ்ய நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்திக் கொள்வதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இது, காலனிய அடிமை மனப்பான்மையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு அவசியமானது. அது மட்டுமன்றி உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம், அது முன்வைக்கும் நாகரிகத்தை மறு ஆய்வு செய்வதற்கான அழைப்பாகவே உள்ளது. அதேபோல ஹிந்துயிஸத்தை சநாதன தர்மத்துடன் அடையாளப்படுத்திக் கொள்வதும் முக்கியமானது.

சநாதன தர்மம் என்பது ஒரு வகையில் இனம் சார்ந்தது. அது எல்லா வகையான தர்மத்தையும் சொல், செயல், கண்ணோட்டம் மற்றும் ஞானத்தால் அரவணைத்துக் கொள்கிறது. ஹிந்து தர்மம் என்பது பல பிரிவுகளையும், சம்பிரதாயங்களையும் – சைவ, வைணவ, சாக்த, காணாபத்ய, சௌர, கௌமார என ஆதிசங்கரர் வெகு காலம் முன்பே அங்கீகரித்துள்ளவை உட்பட – வேத, இதிகாச/ புராண, தாந்திரீக மற்றும் பல நவீன இயக்கங்களையும் கொண்டது. இப்படி பல்வேறு வகையிலும் வெளிப்படும் ஹிந்து சிந்தனைகள் எல்லாம் சநாதன தர்மத்தில் இருந்து கிளைத்தவையே.

யோகா, ஆயுர்வேதம், வேதாந்தம், ஜோதிஷம், வாஸ்து போன்ற வேத விஞ்ஞானங்கள் உலகம் முழுவதும் பரவி ஹிந்துயிஸத்தின் அடிப்படையாக உள்ள சநாதன தர்மத்தின் உலகளாவிய கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றன. ஹிந்து கலை, பண்பாடு, இசை, நடனம், விழாக்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் உயிர்த்துடிப்பு மிக்க சநாதன வாழ்வியலின் வெளிப்பாடே. பிரம்மாண்டமான கோயில்கள், உள்அர்த்தம் பொதிந்த அதன் வடிவமைப்பு, அழகு மிக்க அலங்காரமான சிற்பங்கள் எல்லாம் அந்த சநாதன ஹிந்துயிஸத்தில் பொதிந்தவையே.

பாரதமும் சநாதன தர்மமும்:

சநாதன தர்மத்துடன் உள்ள ஆழ்ந்த இணைப்பைத் தவிர்த்து விட்டு பாரதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் பாரதம் எப்போதும் தன்னை தர்மத்தின் அடிப்படையிலான நாகரிகமாகவே கருதி வந்துள்ளது. அதே வேளையில் பாரதம், சநாதன தர்மம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், குறுகிய, மதம் சார்ந்த அரசை உருவாக்குவதாக கருதக் கூடாது. மாறாக தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய நாகரிகத்தையும் யோகா, வேதாந்தம் மூலமாக உலகளாவிய உண்மையையும் விழிப்புணர்வையும் தேடுவதை அங்கீகரிப்பதாகும் அது.

எனவே இந்தியா என்பதற்குப் பின்னால் உள்ளார்ந்து இருக்கும் உண்மை பாரதம் என்பதையும், ஹிந்துயிஸம் என்று மக்கள் சொல்வதன் சாரமாக இருப்பது சநாதன தர்மம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சநாதன தர்மமானது, மானுடம் அனைத்தையும், உலகில் வாழும் அனைத்து உயிர் இனங்களையும், இந்த மண்ணில், இயற்கையில் ஊன்றி நிற்கும் அனைத்தையும் அரவணைத்துச் செல்வதான ஹிந்துயிசத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. உலகமனைத்தும் ஒரே குடும்பம், பிரபஞ்சத்தில் உள்ள உயிருள்ள – உயிரற்ற அனைத்தும் நம்முடைய சுயத்தின் அங்கம், இறைத்தன்மை என்பது நம்மை விட்டு விலகியதாக, வேறுபட்டதாக இல்லை என்ற கண்ணோட்டத்தை, தரிசனத்தைத் தருகிறது அது.

நான் ஹிந்துயிஸம் அல்லது ஹிந்து தர்மம் என்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல வரவில்லை. மாறாக  ‘சநாதன தர்மம்’தான் அதற்கு அடிப்படை என்பதை ஏற்கச் சொல்கிறேன். அதேபோல உலகப் பயன்பாட்டில் இருந்து இந்தியா என்ற வார்த்தையைத் தவிர்த்து விட முடியாது. ஆனால் நாட்ட்டின் சாரத்துடன் தெளிவாகவும் உயர்வாகவும் புரிய வைப்பது  ‘பாரதம்’ என்ற சொல் என்கிறேன்.

சநாதன தர்மமும் 2024 தேர்தலும்:

அரசியல் களத்தில் சிலரால் ஹிந்துயிஸம்/ சநாதன தர்மமானது எதிர்மறையாக சித்தரிக்கப்படுவது சோகமளிக்கிறது. பழைய காழ்ப்புணர்வு இப்பொழுது புதிய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. கேரளத்தில் உள்ள கம்யூனிச அரசும் தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசும் ஹிந்து விரோத, சநாதனத்துக்கு எதிரான அரசுகளாக இருக்கின்றன. தங்கள் சுயநலத்திற்காக அவை சநாதன தர்மத்தை அவதூறு செய்யவும் அழிக்கவும் முயல்கின்றன. இதே கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி இவர்களுடைய ஹிந்து விரோதத் தாக்குதலைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது. தனக்குத் தேவைப்படும்போது தன்னை ஹிந்துவாகக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, அவர்களை எதிர்க்கவோ சநாதன தர்மத்தைக் காக்கவோ முயற்சி செய்ய திராணியற்று இருக்கிறது.

டேவிட் ஃப்ராலே

சநாதன தர்மமே கோயில்கள், வேத ஞானத்தின் மூலமாக தொன்மையான கேரள, தமிழ்ப் பண்பாட்டில் அடிப்படையாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பகவத்கீதையால் உத்வேகம் பெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உண்மையான அடிப்படை சநாதன தர்மமே. இதிலிருந்து முரண்படுவது உண்மையான காங்கிரஸ் கட்சியே அல்ல.

தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பாரம்பரியத்தை எதிர்க்கின்ற அரசியல் கட்சிகளை வரும் தேசிய தேர்தலின் போது ஒதுக்கித் தள்ள வேண்டும். அவர்களது மதிப்பில், பிரதிநிதித்துவத்தில் பாரதமோ சநாதன தர்மமோ இல்லை என்றால், அவர்கள் எந்த நாட்டை, எந்த நாகரிகத்தை, எந்தப்பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பவர்கள்? யாருடைய பிரதிநிதிகள்/ அங்கங்கள் அவர்கள்?

இந்தியா எனப்படும் பாரதத்தையும் ஹிந்துயிஸம் எனப்படுகின்ற சநாதன தர்மத்தையும் நாம் மதிப்போம். இவ்விரண்டின் உயர்வையும் புரிந்து கொள்வோம்.

திரு. டேவிட் ஃபிராலே, அமெரிக்காவைச் சார்ந்த, ஹிந்துத்துவ அறிஞர்.
தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
நன்றி: நியூஸ்18.காம் (09.12.2023)

$$$

Leave a comment