-திருநின்றவூர் ரவிகுமார்
அண்மையில் சென்னையில் காலமான ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகரும் ‘விஜயபாரதம்’ முன்னாள் ஆசிரியருமான திரு. சுந்தர.ஜோதி அவர்களுக்கு நினைவஞ்சலிக் கட்டுரை இது…

அயோத்தியில் ஸ்ரீ ராமஜென்ம பூமியில் குழந்தை ராமருக்கான பிரம்மாண்டமான கோயில் நிறுவப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜன. 22ஆம் தேதி, ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ராமர் சிலை (ஸ்ரீராம் லல்லா) பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஹிந்துக்களின் வரலாற்றில் இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த நிகழ்வுகளுக்கு வித்திட்டது தமிழகம் என்பது பலரும் அறியாத சேதி…
தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தைப் பற்றி மூன்று கிண்டலான பேச்சு வழக்குகள் உண்டு. ஒன்று, அதிகாரம் இல்லாத போலீஸ். இரண்டு, அழகில்லாத பெண்கள். மூன்று, சுவாமி இல்லாத கோயில்.
வேலூரில் காவலர் பயிற்சிக் கல்லூரி உண்டு. பயிற்சியாளர்கள் என்பதால் அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. எனவே முதல் வழக்கு வசனம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் மிக அதிகமாக வெயில் வாட்டி வதைக்கும் பகுதி வேலூர். பாலாற்றைச் சார்ந்து விவசாயம் நடக்கிறது. பயிர்த் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வெயிலில் பணி செய்வதால் முகமும் உடல்நிறமும் கறுத்து விகாரப்பட்டு இருப்பது இயற்கையானதே. அதனால் வந்தது இரண்டாவது வசனம்.
வேலூர்க் கோட்டையில் இருந்த ஜலகண்டேஸ்வரர் என்ற சுரகண்டேஸ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்க மூர்த்தியை முஸ்லிம் படையெடுப்பின் போது காப்பாற்ற வேண்டி, கோயிலை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டு, பல கி.மீ. தொலைவில் உள்ள சத்துவாச்சேரி என்ற ஊரில் ஜலகண்ட விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. எனவே மூன்றாவதான ‘சுவாமி இல்லாத கோயில்’ என்ற அவச்சொல் நிலவியது.
பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு இக்கோயிலில் சுவாமியை மீண்டும் பிரதிஷ்டை செய்ய பல பெரியோர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள ஆஸ்திக அன்பர்கள் அனைவரது நெஞ்சிலும் நீங்காது இடம் பிடித்துள்ள குகஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகளின் முயற்சி குறிப்பிடத்தக்கது. ஆயினும் இறைவனின் சித்தம் வேறாக இருந்தபடியால் அவரது முயற்சியும் ஆஸ்திக அன்பர்களின் ஆசை ஈடேற்றவில்லை.
ஹிந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச 1980இல் ஆரம்பிக்கப்பட்டது இந்து முன்னணி. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கர்ப்பகிருஹத்தில் மூலவர் சுவாமியை மீண்டும் நிறுவும் பணியை இந்து முன்னணி முதல் சவாலாக ஏற்றது. 1981இல் சிவபெருமானின் ஆசியும் அதற்குக் கிடைத்தது; ‘சுவாமி இல்லாத ஆலயம்’ என்ற அவச்சொல் அகன்றது.
அந்த வரலாற்றை தமிழகம் நன்கு அறியும். அந்தப் போராட்டத்தில் களமாடியவர்களில் ஒருவர் சுந்தர.ஜோதி. கோயில் கருவறைக்குள் சிவலிங்க மூர்த்தியை தோளில் சுமந்து சென்று நிறுவியவர்களில் அவரும் ஒருவர்.
ஹிந்து சமுதாயம் சாதிகளாய்ப் பிளவுபட்டு, தீண்டாமையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு சாஸ்திரங்களின் ஆதரவும் ஆசியும் உண்டு என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ஸ்ரீ குருஜி கோல்வல்கரின் முன்னெடுப்பால் விஸ்வ ஹிந்து பரிஷத் களமிறங்கியது. கோயில் நவகிரகங்களைப் போல வெவ்வேறு திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஹிந்து தர்மாச்சாரியர்களை பரிஷத் ஒருங்கிணைத்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் பிரம்மாண்டமான அகில பாரத மாநாட்டை 1969இல் நடத்தியது. அதில் ஒரே மேடையில் வந்தமர்ந்த நவயுக நாயகர்கள் “தீண்டாமை ஒரு பாவம். அதற்கு சாஸ்திர அனுமதி கிடையாது. ஹிந்துக்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது. ஹிந்துக்கள் அனைவரும் சரி சமமானவர்கள். சகோதரர்களே” என்று பிரகடனம் செய்தனர்.
அந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தக் களமாடியவர் சூரிஜி என்று தமிழக ஸ்வயம்சேவகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சூரியநாராயண ராவ். அந்த அனுபவத்தை அவர் பின்னாளில் நினைவுகூர்ந்து எழுதி உள்ளார். அதை அடியேன் தமிழாக்கம் செய்தேன். பிறகு அவரைச் சந்தித்தபோது, உடுப்பி சென்றுள்ளதைப் பற்றிக் கூறி, அந்த மாநாட்டுப் பந்தல் அமைக்க அடிக்கோலிட்ட போது பாம்பு வந்ததைப் பற்றிக் கேட்டேன்.
“அதுதான் எழுதியிருக்கேனே பா” என்றபடி ஆரம்பித்து அந்த அனுபவத்தை முக மகிழ்ச்சியுடன் மீண்டும் சொன்னார். அந்த மாநாடு ஹிந்து சமுக வரலாற்றில் மட்டுமின்றி, அவரது வாழ்க்கையிலும் ஒரு மைல்கல். அதை அவர் சொன்ன போது என்னுடன் இருந்தார் ‘விஜயபாரதம்’ ஆசிரியரான ஜோதிஜி.
வாழ்நாள் சாதனை:
சூரிஜிக்கு உடுப்பி மாநாடு போல, ஜோதிஜிக்கு வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி பிரதிஷ்டை. பலமுறை அதுபற்றி என்னிடம் சொல்லி உள்ளார்; பலரிடமும் சொல்லி உள்ளார். கோபால்ஜி, வீரபாகுஜி ஆகியோர் சொல்லியும் கேட்டுள்ளேன்.
விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகி நிர்வாகப் பொறுப்புக்கு வந்த காலத்தில்,வேலூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தேன். சென்னை திரும்பிப் போக தன்னுடன் காரில் வருமாறு அழைத்தார். செலவு மிச்சம் என்று சேர்ந்து கொண்டேன். அன்று மாலை வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் என்ற சுரகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்குள்ள நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று அப்போது அங்கிருந்த தலைமை அர்ச்சகரிடம் பணிவுடன் தன்னை ‘சங்க பிரச்சாரக்’ என்று அறிமுகம் செய்து கொண்டு எங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டார். “சொல்றேன் போங்கோ” என்ற அர்ச்சகர் உள்ளே இருந்தவர்களைப் பார்த்து கை காட்டினார். எனக்கு லேசாக எரிச்சல் கிளம்பியது. “தேவைதானா அண்ணா?” என்றேன். “சும்மா வா” என்று அழைத்துக்கொண்டு போனார்.
கருவறை வாசலில் கொண்டுபோய் நிறுத்தப்பட்டோம். வைணவனான எனக்கு இங்கென்ன வேலை என்று கேள்வி ஒரு கணம் மனதில் எழுந்தது. அருகில் இருந்த ஜோதிஜி “நமச்சிவாய, நமச்சிவாய” என்றார்.
நான் கவனத்தைத் திருப்பி சுவாமியை நன்றாகப் பார்த்தேன். வேலூர் குறித்த அவச் சொல்லை அகற்றிய சுவாமி. மீண்டும் மீண்டும் எழுச்சி பெறும் ஹிந்து சமுதாயத்தின் பாரம்பரியத்தின் வரலாற்று ஆவணமாக காட்சி அளித்தது அந்த சிவலிங்க மூர்த்தி. வரலாற்றுத் தருணத்தின் சான்றாக என் அருகில் ஜோதிஜி. அர்ச்சகர் ஆரத்தி எடுக்க சுவாமியை மகிழ்ச்சியுடனும் மனத்தெளிவுடனும் வணங்கினேன்.
வெளியே வந்தோம். சிலர் குடும்பத்துடன் அமர்ந்திருந்தனர். பல ஜோடிகள் ஆங்காங்கே இருந்தனர். கோயிலைச் சுற்றிக் காண்பித்தார். பிறகு ஓர் இடத்தில் உட்கார்ந்தோம். அப்போது சொன்னார், “இந்த சுவாமி, கோயில், கூட்டம் எல்லாம் இன்று இருப்பதற்குக் காரணம் சங்கம்தான். நான் சங்கப் பிரச்சாரக் மட்டுமல்ல, இந்த சுவாமியை கோயிலுக்குள் சுமந்து சென்று கருவறையில் பிரதிஷ்டை செய்தவர்களில் ஒருவன்” என்று தொடங்கி ஜலகண்டேஸ்வர லிங்கத்தின் உயரம், அது எவ்வளவு ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளது, ஆவுடைப் பீடம் எப்படிப் பொருத்தப்பட்டுள்ளது, பொருத்தும் போது ஏற்பட்ட சிக்கல் என்று எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னார். பிறகு அந்தப் போராட்ட வரலாற்றை மீண்டும் சொன்னார்.
“ஜலகண்டேவரர் கோயிலில் சுவாமி வழிபாட்டை நிலைநாட்டிய பின், சங்கம் அந்த ஆலய நிர்வாகத்தை ஏற்கவில்லை. மாறாக அதை சமுதாயத்திடம் ஒப்படைத்துவிட்டு விலகி, தன் வழக்கமான பணியைத் தொடர்ந்தது. நான் மட்டுமல்ல யாராக இருந்தாலும் இப்பொழுது உள்ள நிர்வாக அமைப்பை ஏற்றுக் கொண்டு பின்பற்றியாக வேண்டும். நாம் கூட எதுவரை அனுமதி உண்டோ அதுவரை தான் சென்றோம்” என்றும் சொன்னார்.
அது சங்கத்தைப் பற்றி மட்டுமல்ல, அதை நடைமுறைப்படுத்தும் அவரது மாண்பையும் வெளிப்படுத்தியது. அது ஒரு பாடம்தான். அகில பாரத அளவில் வேலூர் நிகழ்வு வேறொரு பாடத்தைக் கொடுத்தது.
***
ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு அடித்தளம்:
தமிழகத்தின் வேலூரில் சுவாமி இல்லாத ஆலயத்தில் சுவாமியை பிரதிஷ்டை செய்ய முடியும் என்றால், உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் சுவாமி இருக்கும் கோயிலை பக்தர்கள் வழிபட முடியாதபடி ஏன் பூட்டி வைத்திருக்க வேண்டும்? அதை பக்தர்கள் வழிபாட்டிற்காகத் திறக்க முடியாதா? அந்த சுவாமியின் மேற்கூரை ஏன் கும்மட்டமாக இருக்கிறது? அதை பாரம்பரியத்துக்கு ஏற்ப உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட கோயிலாக்க முடியாதா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன அகில பாரத அளவில். இத்தகைய கேள்விகளால் எழுந்ததே அயோத்யா ராமர் ஆலய மீட்புப் போராட்டம்.
1986 இல் பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட, பக்தர்கள் வழிபட ராமர் கோயிலின் பூட்டைத் திறந்தது ராஜீவ் காந்தியின் அரசு. பல நூற்றாண்டுகளாய் அயோத்யா ஸ்ரீ ராமஜென்ம ஸ்தானத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டதும், மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டதும், அப்பொழுது இருந்த கும்மட்டம் ஆங்கிலேயர்கள் ஆட்சியால் இடித்துக் கட்டப்பட்டது என்பதையும் மக்களுக்கு நினைவூட்டியது விஸ்வ ஹிந்து பரிஷத். விழிப்புற்ற ஹிந்து சக்தியால் கும்பட்டம் 1992இல் அகற்றப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு, உலகமெங்கும் உள்ள ஹிந்துக்களின் பங்களிப்போடு, எழும்பி வருகிறது ஸ்ரீ ராமனுக்கான பிரம்மாண்டமான ஆலயம். இக்கோயிலில் அடுத்த மாதம் மூலவரான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை ஆகப் போகிறது. அதை நேரில் பார்க்க ஜோதிஜிக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று மனம் வெதும்புகிறது.
ஜோதிஜி சிரத்தாஞ்சலியின் போது பாஜக தலைவர்கள் இருவர் இரண்டு வெவ்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தனர். பாஜக மாநில அமைப்பு செயலாளரான கேசவ விநாயகம், “ஜோதிஜி சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கவனித்துச் செய்வார்” என்று சொன்னார். மாநிலத் தலைவரான அண்ணாமலை “இவர் Aggressive பிரச்சாரக் என எனக்குச் சொல்லி உள்ளனர். இதே இடத்தில் (சக்தி கார்யாலயத்தில்) இவரை முதல் முறை பார்த்தேன். சிரித்த முகத்தோடு அன்போடு என்னிடம் பேசினார்” என்று நினைவு கூர்ந்தார்.
ஜோதிஜி எம்ஜிஆரின் பரம ரசிகர். நான் சற்று வேறுபடுபவன். “நல்ல பண்புகளை சினிமா மூலம் மக்கள் முன்வைத்தார் அவர்” என்பார். “அது திட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டது” என்று போட்டுத் தாக்குவேன். “எம்ஜிஆர் சிகப்பு அல்ல ரோஸ் கவரில் இருப்பார்” என்று வியந்து பேசுவார். “நீங்கள் கருப்பாக இருப்பதால் கவரப்படுகிறீர்கள். எனக்கு அப்படி இல்லை” என்று ஆரம்பித்து அவரது அரசியலையும் நிர்வாகத் திறனையும் விமர்சிக்கத் தொடங்கி விடுவேன். “சரிப்பா, வேண்டாம். நிறுத்துவோம்” என்று சொல்லி வேறு விஷயத்துக்குப் போய்விடுவார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு வெள்ளமென மக்கள் வருவதும், மணிக் கணக்கில் எதிர்பார்த்து நின்று அவரைப் பார்ப்பதும் பேச்சைக் கேட்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாதயாத்திரையையும் அவரது பேச்சையும் ஜோதிஜி தவறாமல் கேட்டு விடுவார். என்னிடம் அது பற்றிப் பேசுவார். “எம்ஜிஆருக்குத் தான் இது போல மக்கள் வருவார்கள். அவருக்குப் பிறகு இவருக்குத் தான் வருகிறார்கள்” என்று சொல்வார். எனக்கும் அந்த வியப்பு உண்டு. எனவே மறுக்காமல் கேட்டுக் கொள்வேன்.
‘தொகுதிதோறும் அந்தந்தத் தொகுதியைச் சார்ந்து அவர் குறிப்பிடும் ஆன்மிகப் பெரியோர்கள், பிரபலத் தலைவர்கள், ஊரின் சிறப்பு ஆகியவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடலாம்’ என்று சொல்வேன்.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் செயல் துடிப்புள்ள (Aggressive) பிரச்சாரக்காகக் களமாடிக் கொண்டிருந்தவர், சூழ்நிலையின் கட்டாயத்தின் காரணமாக திடீரென்று விஜய பாரதத்தின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தத் துறை அவருக்கு முற்றிலும் புதியது; அறிமுகமே இல்லாதது. ஆனாலும் அதில் தன்னை நிறுவிக் காட்டினார். அது மட்டுமல்லாமல், பல பத்திரிகையாளர்களை உருவாக்கினார். அவர் உருவாக்கிய பலர் இன்று முன்னணி செய்தித்தாள்களில் முக்கிய பதவிகளிலும், மீடியாக்களில் முன்னணியிலும் இருக்கிறார்கள்.
ஜோதிஜியின் மற்றொரு பரிமாணம்:
விஜயபாரதத்துக்கு வந்த பிறகுதான் அவரது இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. அது படிப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாடு. அதுவே இரண்டு விதத்தில் வெளிப்பட்டது. ஒன்று படிப்பது, இன்னொன்று படிப்பவர்களுக்கு உதவுவது. அதுவும் விஜயபாரதம் ஆசிரியராக அவரது வெற்றிக்கு உரமானது.
‘மாணவர் சக்தி’ என்ற மாத பத்திரிகையின் பொறுப்பாளராக இருந்தார் இப்போது பாஜக மாநில அலுவலகச் செயலாளராக உள்ள மு.சந்திரன். முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’ ஆங்கிலத்தில் முதலில் வெளிவந்தது. அதன் முதல் அத்தியாயத்தை மொழி பெயர்த்து ‘மாணவர் சக்தி’ வெளியிட்டது. ஏனோ தெரியவில்லை, முதல் சில பத்திகளுடன் அது நின்று விட்டது. (பதிப்புரிமை காரணமாக இருக்கலாம்).
ஜோதிஜி அந்த ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி என்னிடம் கொடுத்தார். “இதைப் படி. இது பற்றி எனக்கு எழுதிக் கொடு” என்றார். “விஜயபாரதத்தில் அரைப் பக்கத்துக்கு நூல் அறிமுகம் என்று எழுத வேண்டுமா?” என்றேன். “இல்லை, இல்லை. இதைப் படித்துவிட்டு எனக்குச் சொல்வதற்கு பதில் எழுதிக் கொடு. அவ்வளவுதான்” என்றார். எழுதிக் கொடுத்தேன். அவர் படித்துவிட்டு “நன்றாக இருக்கிறது. பதிப்பு பிரச்னையும் வராதபடி தான் உள்ளது” என்று கூறி அதை விஜயபாரதத்தில் தொடராக வெளியிட்டார்.
வாரம் இரண்டு இரண்டரை பக்கமென நான்கைந்து வாரங்கள் வெளிவந்தது. விஜயபாரதத்துக்கு பல பாராட்டுக் கடிதங்கள் வந்தன. பல பள்ளிகளில் அத்தொடர் பிரதி செய்யப்பட்டு, ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மாணவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது என்று அவர் பிறகு என்னிடம் சொன்னார். கண்ணதாசன் பதிப்பகம் மு.சிவலிங்கம் மூலம் அதை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முன்னதாகவே, அதற்கு தமிழகத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தார் ஜோதிஜி.
நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் ஒரு துறவியைப் பற்றி தேடியபோது, ‘வெல்ல முடியாத ஸ்ரீ கோல்வல்கர்’ என்ற தலைப்பில் ரங்க ஹரிஜி எழுதிய புத்தகம் கண்ணில் பட்டது. படம் பிடித்து அவருக்கு அனுப்பினேன். “இது எப்படி நம்ம கண்ணில் படாமல் போச்சு?” என்று சொல்லி, “உடனே, ஆன்லைனில் ஆர்டர் போடு” என்றார். “நான் இருக்கிற விலாசத்திற்கு அவர்கள் வருவதில்லை. மோகன் மூலம் சொல்லி வாங்கலாம்” என்றேன்.
வாங்கிவிட்டார். ஒவ்வொரு அத்தியாயம் படித்த பிறகும், அது பற்றி போனில் பேசுவார். அவர் புத்தகம் படித்தால் அடிக்கோடிடுவார், அபிப்ராயங்களை பக்க ஓரங்களில் எழுதுவார். மூன்று நான்கு அத்தியாயங்கள் படித்த பிறகு, “நீ அவசியம் படிக்க வேண்டும். தமிழில் கொண்டுவர வேண்டும்” என்றார். “தமிழில் வருவது இருக்கட்டும். நான் படிக்க வேண்டும் என்றால் உடனே தபாலில் அதை அனுப்பவும். ஏனென்றால் பக்கத்தைத் திறந்தால் நீங்கள் கோடிட்டிருப்பது தான் முதலில் கவனத்தைக் கவரும். அது படிப்பதற்கு இடையூறாக இருக்கும் எனக்கு” என்றேன். உடனே அனுப்பி வைத்தார்.
நான் படித்துவிட்டு அது பற்றி அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது தான் ஹரி சேட்டன் பரமபதித்தார். அவர் பற்றிய நினைவஞ்சலியில் பத்மகுமார்ஜி தன்னுடன் ஹரி சேட்டன் அந்தப் புத்தகம் பற்றி பேசியுள்ளதையும் நினைவு கூர்ந்திருந்தார். தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஜோதிஜியிடம் நேரில் புத்தகத்தை திருப்பிக் கொடுத்து, பேசி விட்டு வந்தேன். கடைசியாக அவரைப் பார்த்தது அப்போதுதான். புத்தகத்தை வாங்கியவர் அதிலிருந்து ஒரு அட்டையை எடுத்தார். நான் உடனே, “அது நீங்கள் படித்த கடைசிப் பக்கம். நீங்கள் வைத்த அட்டைதான்” என்றேன். “அப்படியே வைத்திருக்கிறே” என்று சொல்லிச் சிரித்தார். இயல்பாக சிரித்த அந்த முகம் நினைவிலாடுகிறது.
அவருடைய அறையில் திருவாசகம் புத்தகம் எப்போதும் இருக்கும். சித்பவானந்தர் விளக்க உரையுடன் கூடியது. காரியாலயம் தற்காலிகமாக மாறியபோது அந்தப் புத்தகத்தை மறந்து விட்டு வந்ததால் புதியதாக ஒரு புத்தகத்தை வாங்கினார். அதிலிருந்து பாடல்களை அவ்வப்போது படிப்பது மட்டுமின்றி அது பற்றிப் பேசுவார். “உனக்கு ஒன்னும் வாங்கித் தரேன். நீ இதைப் படிக்க வேண்டும். நீயா இதை வாங்க மாட்டேன்னு தெரியும்” என்றார்.
***
சிறந்த ஹிந்துக் குடும்பம்:
தமிழ் பக்திப் பாடல்களின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டிற்குக் காரணம் அவரது தாத்தா என்று கூறுவார். அவர் ராமலிங்க வள்ளலார் பாடல்களை உரத்த குரலில் பாடுவது மட்டுமின்றி, பேரக் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்துள்ளார். ஜோதிஜிக்கு தன் தாத்தா பாட்டி, அப்பா, அம்மா பற்றி பெருமிதம் உண்டு. “சாதாரணக் குடும்பம்தான் ஆனால் ஹிந்துப் பண்புகளுடன் வாழ்ந்தவர்கள் அவர்கள்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார்.
அவரது சித்தப்பாக்கள் சென்னை நகருக்கு வந்த பிறகு திசை மாறிப் போக, அப்பா மட்டும் சங்கத் தொடர்புக்கு வந்ததால், ஜோதிஜிக்கு ஆன்மிக நாட்டமும் தேசிய நோக்கமும் தெளிவாக வந்து சேர்ந்தது. பிரச்சாரக்காக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதை பெரும் பேறாகக் கருதினார். இதனை பலமுறை என்னிடம் கூறியுள்ளார்.
சங்க பிரச்சாரக்கான பிறகு அவருக்கு சமஸ்கிருதம் பற்றி உயர்வான கருத்து ஏற்பட்டது. அதனால் சமஸ்கிருத மொழியில் உள்ள வேதாந்த தேசிகர் நூலை வாங்கிப் படித்து அதில் பிடித்தமான சில ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து கொண்டார். விஜயபாரதத்தின் முன்னாள் ஆசிரியரான சிவராமகிருஷ்ண சர்மாவிடம் – அப்போது அவர் விஜயபாரதத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தார் – சென்று குருவாக ஏற்று ‘ஆதித்ய ஹிருதயம்’ கற்றுக் கொண்டார். பல சமஸ்கிருத சுபாஷிதங்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தார்.
தென்மொழிதான் தேன்மொழி என்று அவரிடம் வம்புக்கு கேலி பேசினாலும், அவர் சொல்லுக்கு இணங்கி வடமொழியில் தேசிகர் எழுதியுள்ள ஸ்தோத்திர மாலாவை வாங்கிப் படித்தேன். அதை அடிப்படையாகக் கொண்டு கட்டுரை எழுதியபோது, அவர் மிகவும் மகிழ்ந்து, பாராட்டினார்.
மாணவர்களுக்கு நிதியுதவி:
பள்ளி, கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்கள் யாராவது இவரை அணுகி பண உதவி கேட்டால் தயங்காமல் உதவி செய்ய முயற்சிகள் மேற்கொள்வார்.
ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு முறை அவரை அழைத்துக்கொண்டு போக வேண்டியிருந்தது. அறைக்குச் சென்றேன். படுத்திருந்தவர் எழுந்தார். “முகம் கழுவிக் கொண்டு வருகிறேன். இதைப் படி. சரியாக இருக்கிறதா என்று சொல்” என்று ஒரு நீண்ட தாளில் அவர் எழுதியிருந்ததைக் கொடுத்தார். “யாருக்கு இந்த லவ் லெட்டர்?” என்றேன், கிண்டலாக. “படிச்சிப் பாரு” என்று போய்விட்டார்.
அது ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம். அதில், அவர் ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆண்டுக் கட்டணமாக ‘இத்தனை’ ரூபாய் கொடுத்து படிப்பைத் தொடர உதவியதற்கு நன்றி தெரிவித்திருந்தார். நான் சில வார்த்தைகளை மாற்றி வாக்கியத்தைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்றேன். அவருக்கும் சரியெனப் பட்டது. உடனே தான் எழுதியதை அடித்து விட்டு, நான் சொன்னதை அவர் கையால் எழுதிக் கொண்டார்.
இரண்டு நாள் கழித்து நான் சொல்லிய திருத்தங்களுடன், சங்க லெட்டர் பேடில் தட்டச்சு செய்யப்பட்டு அவர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை போட்டோ பிடித்து எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். எனக்கெதற்கு என்றால், ஏற்கனவே கேசவ விநாயகம் சொன்னதுதான். சின்னச் சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருப்பது மட்டுமின்றி, அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு, எந்த வகையில் சம்மந்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்குத் தெரிவிப்பார்.
இரண்டாயிரம் கொடுத்த எனக்கும், இருபதாயிரம் கொடுத்த பெரிய மனிதருக்கும் ஒரே மாதிரியாக, எவ்வளவு பணம் சேர்க்கப்பட்டது, யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது, அதற்குச் சான்று மற்றும் போட்டோவுடன் தகவல் தெரிவிக்கப்படும். எனக்கு அலைபேசியிலோ வாட்ஸ்அப்பிலோ; பெரியவர்களுக்கு ஆவணங்களாக தபாலில்.
இந்த மாதிரியான உதவிகளை நிறைய பேர் செய்கிறார்கள். பொதுவாக, நாம் ஹிந்துக்களுக்கு செய்வோம் என்றொரு கருத்து உண்டு. ஜோதிஜி அதிலும் வேறுபட்டவர். கிறிஸ்தவப் பிள்ளைகளுக்கும் அவர் உதவி செய்துள்ளார். அதற்கு சான்றுகள் உண்டு. ஆனால் வெளியில் உள்ளவர்கள் ‘மதவாத….. பிராமணிய…’ என்றெல்லாம் மடவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் மூன்று நான்கு பேருக்கு தனியாளாக இவர் படிப்பதற்கு பண உதவி செய்து கொண்டிருந்தார். அதுபற்றி அவருக்கொரு நிறைவுணர்வு இருந்தது.
***
வாழ்வின் மர்மம்:
அவரது அகால மரணம் பற்றிய செய்தி கேட்ட பிறகு, அவரால் எனக்கு அறிமுகமான நண்பரொருவர் தொலைபேசினார். எப்போதும் கவனமாக இருக்கக் கூடியவருக்கு, எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுரை கூறுபவருக்கு இந்த ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது, ஏன் கையில் பணம் வைத்திருந்தார், ஏன் அங்கே போனார், நடக்க ஒத்துழைக்காத உடம்போடு அவ்வளவு தூரம் ஏன் நடந்து போனார், எப்போதும் யாராவது ஒருவருடன் போவாரே, ஏன் தனியாகப் போனார்? என்று ஏகப்பட்ட கேள்விகளை என்மீது போட்டார்.
கேட்டவர் பக்கத்து மாநிலத்தில் இருக்கிறார். நான் பக்கத்து மாவட்டத்தில் வசிக்கிறேன். ஜோதிஜியின் அகால மரணம் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் என் உடலும் மனமும் சில நிமிடங்கள் உறைந்து போயின. பிறகுதான் ஸ்மரணை வந்தது. நண்பர் அழைத்தது மறுநாள் இரவு என்பதால், அவருக்கு ஒரு கதையை நினைவூட்டினேன்.
பெருமாளை சேவிக்க வைகுண்டம் வந்தான் எமன். (எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் இவன் அவன் என்ற ஏக வசனம்) நுழையும் போது அங்கு ஒரு சிறிய அணில் குஞ்சு விளையாடிக் கொண்டிருந்தது. அதை ஒரு மாதிரியாகப் பார்த்தான் அவன். பெருமாளை சேவிக்க உள்ளே போய் விட்டான். ஆனால் அணில் அந்தப் பார்வையால் பயந்துவிட்டது.
கருடாழ்வாரிடம் தஞ்சம் புகுந்தது. ‘பயப்பட வேண்டாம்’ என்றார் அவர். ஆனால் அணில் குஞ்சு நடுங்கியது. ‘சரி. நான் என்ன செய்தால் உனக்கு திருப்தி ஏற்படும்?’ என்று கேட்டார். ‘விரஜா நதியைக் கடந்து அதற்கு அப்பால் வெகு தூரத்தில் உள்ள மலையில் ஒரு மரப்பொந்தில் என்னைக் கொண்டுபோய் விட்டு விடுங்கள். அவன் வெளியே வந்து பார்க்கும் போது கண்ணில் படவில்லை என்றால் விட்டு விடுவான்’ என்றது அணில் குஞ்சு.
கருடாழ்வார் அணில் விரும்பியபடியே விரும்பிய இடத்தில் விட்டுவிட்டு வைகுண்டம் திரும்பினார். அவர் வாசலில் வந்து சடசடவென இறங்கவும் எமன் வெளியே வரவும் சரியாக இருந்தது. எமன் அவரைப் பார்த்து, ’வேர்த்துவழிய எங்கு போய்விட்டு மூச்சிரைக்க வருகிறீர்கள்?’ என்று கேட்டான். அவர் விஷயத்தைச் சொன்னதும் ஓங்கிச் சிரித்தான்.
‘சிரிப்பது ஏன்?’ என்று அதட்டினார் கருடன். எமன் சொன்னான், “அந்த அணில் குஞ்சு அடுத்த சில நிமிடங்களில் தொலைதூரத்தில் உள்ள அந்த இடத்தில் பாம்பின் வாயில் அகப்பட்டுச் சாக வேண்டும் என்று இருக்கிறது. அது இங்கிருக்கும் போது எப்படி சாத்தியமாகும் என நினைத்துக் கொண்டே உள்ளே போனேன். உம்மால் அது சாத்தியமாயிற்று” என்று சொல்லியபடி மர்மமாகப் புன்னகைத்தான்.
புராணங்கள் கற்பனைக் கதைகள் என்றுதான் நினைத்திருந்தேன், கடந்த ஞாயிறு வரை. ஜோதிஜியின் மறைவு எனக்கு துயரத்தைத் தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க்கையில் மர்மங்களும் உண்டு என்பதை யோசிக்கத் தொடங்கியுள்ளேன். ஆனாலும் அதை இவர் மூலம் சொல்லியிருக்க வேண்டாம். மகாகவி பாரதி எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது:
“காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்….”
குறிப்பு:
திரு. திருநின்றவூர் ரவிகுமார், அமரர் திரு. சுந்தர.ஜோதி அவர்களுடன் மிகவும் நெருக்கமான தோழமை உறவு கொண்டிருந்தவர். அவர்தம் அஞ்சலிக் கட்டுரை இது…
$$$
ஜோதிஜியின் வாழ்க்கைக் குறிப்பு
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த பிரச்சாரகரான சுந்தர.ஜோதி (68) கடந்த 2023 டிச. 10ஆம் தேதி, சென்னையில் அகால மரணம் அடைந்தார். அவரைப் பற்றிய சிறு குறிப்பு:
சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த திரு. சுந்தரம்- திருமதி உண்ணாமுலை தம்பதிக்கு 1955 மார்ச் 10 இல் பிறந்த ஒரே மகன் ஜோதி.
அப்போது வட சென்னை, பட்டாளம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா நன்கு நடைபெற்று வந்தது. திரு. சுந்தரம் புளியந்தோப்பு ஷாகாவின் ஸ்வயம்சேவகர். அவர் ஷாகா செல்லும் போது, தனது மகன் ஜோதியையும் அழைத்துச் செல்வார். ஜோதி பாலவயது முதலே ஸ்வயம்சேவகர்.
திரு சுந்தரம் பி அண்ட் சி மில்லில் பணியாற்றினார். அவர் 1948 சங்கம் மீதான தடையை எதிர்த்து சத்யாகிரஹம் செய்து சிறை சென்றுள்ளார்.
ஜோதி தனது பியுசி படிப்பை முடிந்தவுடன் வடசென்னையில் உள்ள மில்லில் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு பிரதம வர்ஷ சங்க சிக்ஷா வர்கவை (ஆர்.எஸ்.எஸ். முதலாம் ஆண்டு பயிற்சி முகாம்) திருப்பராய்த்துறையில் முடித்தார். 1978ஆம் ஆண்டு தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேலத்தில் நடைபெற்ற த்விதீய வர்ஷ சங்க சிக்ஷா வர்கவில் (இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்) கலந்து கொண்டார். வர்க முடிந்த பின் சங்க பிரச்சாரக் ஆனார். 1980இல் நாகபுரி சென்று மூன்றாம் ஆண்டு முகாம் பயிற்சியை முடித்தார்.
ஸ்ரீ ஜோதிஜியின் பிரச்சாரகர் வாழ்க்கை:
1978ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகர் பிரச்சாரக். 1980 ஆண்டு வேலூர் தாலுகா பிரச்சாரக். 1981இல் வேலூர் ஜில்லா பிரச்சாரக். 84இல் திருவண்ணாமலை ஜில்லா பிரச்சாரக். 87இல் வேலூர் சஹவிபாக் பிரச்சாரக். 1989இல் ராமேஸ்வரம் விபாக் பிரச்சாரக். 1995 முதல் விஜயபாரதம் ஆசிரியர்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஆசிரியர் பணியிலிருந்து விடுபட்டு, 2010 முதல் விஜயபாரதம் மேலாளராக இருந்தார். 2016 முதல் சென்னை சக்தி காரியாலயத்தின் இணை நிர்வாகியாக இருந்தார். உடல்நிலை இன்னும் மோசம் அடைந்த பின்னர், 2020 முதல் அவர் எவ்விதப் பொறுப்பும் இல்லாத பிரச்சாரக்காக காரியாலயத்தில் ஓய்வில் இருந்து வந்தார்.
அவர் கடந்த 2023, டிச. 10ஆம் தேதி, சென்னை, சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டுக் காலமானார்.
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் மீட்பு இயக்கத்தில் அமரர் ம.வீரபாகுஜியுடன் இணைந்து போராடி, அக்கோயிலில் மூலவர் சிலையை நிறுவியவர் சுந்தர.ஜோதிஜி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வார இதழான விஜயபாரதத்தில் இவர் ஆசிரியராகப் பணி புரிந்தபோது, பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கினார்.
முழுமை பெறாத வரலாறு:
தனது சங்க ஆசான் அமரர் திரு. வீரபாகு அவர்களின் வரலாற்றை திரு. சுந்தர.ஜோதி அவர்கள் தனது வலைப்பூவில் எழுதி வந்தார். முற்றுப் பெறாத இந்த வரலாற்றுத் தொடர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழக வரலாற்றில் முக்கியமான அங்கங்களைக் கொண்டிருக்கிறது. இத்தொடர், ஜோதிஜியின் உடல்நலக் குறைவால் முழுமை பெறாது போனது நமக்குப் பெரும் இழப்பே.
காண்க: எனது ஆசான் வீரபாகுஜி
$$$