சென்னை வெள்ளம்: சில சிந்தனைகள்

-ஹரன் பிரசன்னா, ச.சண்முகநாதன், வேதாந்ததேசிகன் மணி, சீரங்கத்தான், ராஜசங்கர் விஸ்வநாதன்

‘மிக்ஜம்’ புயலால் சென்னை மாநகரமும், புறநகர்ப் பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. புயல் கடந்து, மழை நின்று இரண்டு நாட்களாகியும், இன்னமும் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை; சென்னையில் வாழும் மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு காக்க வரும் என்று காத்திருந்து பயனில்லை என்பதை உணர்ந்து, மூன்று நாள் பட்டினி இருந்த களைப்புடன் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறும் மக்களைக் காண்கையில் வேதனையாக இருக்கிறது. இதற்கு யார் காரணம், என்ன தான் தீர்வு? இங்கு சில சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன….

1. தீராத பிரச்னை… தீராத அரசியல்!

-ஹரன் பிரசன்னா

சென்னையில் பேய் மழை. இந்த நேரத்தில் இந்தப் பதிவை எழுதுவதுதான் சரி எனத் தோன்றுகிறது.

இதேபோல் 2015இல் பெய்த மழையின்போது  ஜெயலலிதாவைத் திட்டித் தீர்த்தார்கள்.  இது போன்ற பேரிடர் நேரங்களில், நம் போதாமை, முன்னெரிச்சரிக்கையாக இல்லாத தன்மை எல்லாவற்றையும் தாண்டி, அரசுடன் நிற்பதே சரியான வழி. திட்டுவதெல்லாம் மீட்புப் பணிகள் முடிந்த பின்னர். இப்போதும் என் நிலை அதுவே. இதுபோன்ற மழையில், சென்னை போன்ற நகரங்களில் மழையின் பாதிப்பு தவிர்க்க முடியாததே. ஆனால் ஜெயலலிதாவுக்கு  ‘செம்பரம்பாக்கத்தம்மன்’ என்று பெயரே கொடுத்தார்கள்.

அன்று ஜெயலலிதா செய்த தவறு என்ன? மழைநீர் வரத்தை அவர் பாஸிடிவாகப் பார்த்தார். வெதர் மேன் போன்றவர்கள் அன்று இல்லை என நினைக்கிறேன். அல்லது இத்தனை தீவிரமாக இல்லை. பெரிய மழை வரும்போது நீரை சேமிக்கலாம்; அதை முன்னரே திறந்துவிட்டுப் பின்னர் மழை குறைவாக இருந்தால் என்ன செய்வது, சென்னைக்கு இந்த மழை நீரே ஆதாரம்  என்று யோசித்து இருந்துவிட்டார்கள். ஜெயலலிதா தீவிரமாக இறங்கிப் பணி செய்யாமல் இருந்தார். அல்லது தன் அதிகாரிகளை நம்பினார். இதனால் நிகழ்ந்த உயிர்ப் பலி பாதிப்பு அவருக்குப் பெரிய அளவில் கெட்ட பெயரைக் கொண்டு வந்தது. 

பல வீடுகளில் நீர் புகுந்தது. ஜெயலலிதாவின் ஆட்சி என்றால் ஊடகங்கள் ஓவர்டைம் செய்யும் என்பது நாம் அறிந்ததே. அத்தனையும் ஜெயலலிதாவுக்கு எதிராக நின்றன.

உண்மையில் அன்று பெய்தது வரலாறு காணாத மழை. அதற்கு முன்பும் பெருமழை பெய்து தீர்த்து விட்டிருந்தது. அரசு கொஞ்சம் சுதாரித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாகச் சமாளித்திருந்திருக்கலாம். ஆனாலும் பாதிப்பு இருந்திருக்கவே செய்யும். அந்த அளவுக்கு மழை. இன்றும் அப்படியே.

ஆனால் இந்த அரசுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க பலர் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.  ‘நான் என் வீட்டுப் பக்கம் போய்ப் பார்த்தேன், ரோட்டில் சொட்டு நீர் இல்லை’ என்று எழுத எழுத்தாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாள்களில் மெல்ல எட்டிப் பார்ப்பார்கள்.

சென்னையில் மழைக்காலம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். அதிமுக ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது. மழை நின்ற பிறகு போய்ப் பார்த்தால் சென்னையின் முக்கியச் சாலைகளில் 95 % இடங்களில் சொட்டு நீர் கூட இருக்காது. ஆனால் சிறிய சாலைகளில் சென்று பார்த்தால் தெரியும், சென்னை எப்படி மிதக்கிறது என. எந்தச் சாலையை எந்த நேரத்தில் நாம் குறிப்பிட்டுச் சொல்லப் போகிறோம் என்பதில் இருக்கிறது  அரசியல்.

இன்னொரு பிரச்னையும் இதில் உண்டு. சென்ற மழையில் நீர் தேங்கி இருக்கும் இடத்தைச் சரி செய்திருப்பார்கள். அதை மட்டும் சொல்லி, இந்த அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்பார்கள். இது அதிமுக ஆட்சியிலும் இப்படித்தான். ஆனால் நீர் வேறொரு இடத்தில் தேங்கி நின்று கொண்டிருக்கும்.

அதிமுகவைத் திட்டியவர்கள் இப்போது ‘இத்தனை பெரிய மழைக்கு என்ன செய்ய முடியும்?’ என்பார்கள். அதிமுக அரசு என்ன செய்துவிட முடியும் என்று சொன்னவர்கள், இன்றைய அரசைத் திட்டிக் கொண்டிருப்பார்கள். அரசியல்வாதிகளும் இப்படியே.

‘இத்தனை செலவு செய்தோம், ஒரு மணி நேரத்தில் நீர் வடிந்துவிடும்’ என்ற கதை கட்டல்களுக்கு மழை ஒரே அடியாகப் பதில் சொல்லிவிட்டது. அரங்கநாதன் சப்வேயில் நீர் நிற்கும் வீடியோவைப் பார்த்துவிட்டுத்தான் இதை எழுதுகிறேன். பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இத்தனை கோடி செலவுக்குப் பிறகு இப்படியா என்று, இந்நிலையில கேட்பது தவறு. ஆனால் எந்த ஆட்சியிலும் சென்னை இப்படித்தான் இருந்திருக்கிறது. எள்ளளவு கூட மாற்றமில்லை.

இந்தப் பிரச்னையை முழுமையாக யார் தீர்க்கிறார்களோ அவர்கள்தான் நிஜமான திறமைசாலிகள். அதுவரை இப்படி மாறி மாறி அரசியல் செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

  • திரு. ஹரன் பிரசன்னா, எழுத்தாளர், சுவாசம் பதிப்பக உரிமையாளர். இவரது முகநூல் பதிவு இது…

***

2. மீண்டுவரக் காத்திருப்போம்!

-ச.சண்முகநாதன்

 “Stay safe”  என்று ஒரு வரியில் எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பி இருந்தாலும், நண்பர்கள் நினைவிலேயே இந்த இரண்டு நாட்களும் கழிந்தது. 

சாதாரணமான நாட்களில் தரையில் ஈரம்  இருந்தாலே, குதிகாலில் நடந்து செல்லும் அளவு  ‘சென்சிடிவ்’  ஆள் நான்;  இங்கே நண்பர்கள் வீட்டினுள் மழை  நீர் புகுந்து, கட்டில் fridge என்று எல்லாவற்றையும் கவ்விக்கொண்டது என்று கேட்ட பொழுது வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. சாக்கடை நீர் உள்ளே வருகிறது என்ற செய்தி நெஞ்சைப் பிசைகிறது. 

எளிதில் கிடைக்கும் எல்லாமே அரிதாகிப்போனது ஒரே நாளில். 

மொபைல் charge எவ்வளவு முக்கியம்! 

சில நண்பர்களை அழைத்து விசாரிக்கவும் தயக்கம். அவர்களுடைய மொபைல் சார்ஜ் நம்முடைய அழைப்பால் விரயம் ஆகுமே என்று. தயக்கமே இல்லாமல் அழைத்துப் பேசிய நண்பர்களிடம், நாம் பேசி அவர்களுடைய சார்ஜ் இருப்பை வீணடிக்க வேண்டாம் என்ற எண்ணம் ஒரே நாளில். 

அப்படியும் அழைத்துப் பேசிய நண்பர்கள் உற்சாகமாக பேசியது மனதுக்கு ஆறுதல். நண்பர் ஒருவர்  “கீழ்தளத்தில் காரை நிறுத்தியிருக்கிறேன். என்ன ஆனதென்றே தெரியவில்லை. சென்று பார்க்கவும் வழியில்லை” என்கிறார். எவ்வளவு கஷ்டம்!

“இன்னும் இரண்டு மணிநேரத்தில் மழை  நிற்கவில்லையென்றால் படகில் வந்துதான் எங்களை யாராவது  காப்பாற்ற  வேண்டும்” என்று castleஇல் மாட்டிக்கொண்ட கதாநாயகி போல யாருக்காகவோ காத்திருக்கிறார்கள். 

ஏனிந்த நிலை என்று நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லையா? வருடந்தோறும் மழை வெள்ளம் வரும் என்று தெரிந்தும், இத்தனை ஆண்டுகள் உருப்படியாக எதுவும்   செய்யவில்லை என்பதை மெத்தனம் என்பதா, அலட்சியம் என்பதா இல்லை அரசியல் அராஜகம் என்பதா? Words would fail us.

‘திராவிட மாடல் அரசு’ என்று பீத்திக் கொண்டவர்களுக்கும்  ‘why stalin should become the PM of India?’ என்று புத்தகம் எழுதியவர்களுக்கும் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்து விட்டிருக்கிறது இந்த புயல். 

This is a reality check. 

ஒரே ஒரு கோயில், நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது  என்ற காரணத்தினால் அந்தக் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கியது இதே அரசு. பக்தர்களுக்கு விக்கிரகங்களைக் கூட எடுத்துக்கொள்ள அவகாசம் கொடுக்காமல் கோயிலை தரைமட்டமாகியது இதே அரசு. பக்தர்கள் வடித்த கண்ணீர் இன்னும் நெஞ்சிலேயே இருக்கிறது, ஈரம் காயாமல்.

நீர்நிலைகள்  மீது கட்டியதாகச் சொல்லப்படும் கோயில்களை இடித்த அரசு அதற்கப்புறம் வேறு எதையும் செய்ததாக நினைவில்லை. கோயிலை இடிப்பதில் காட்டிய ஆர்வம் நீரை ஆற்றுப்படுத்தும் முயற்சியில் இல்லை. கோயிலை இடிப்பதே குறி அன்று.

ஆனால் இன்று எத்தனை எத்தனை குடியிருப்பு வளாகங்கள், தெருக்கள் நீர்நிலை மீது கட்டப்பட்டிருக்கின்றன என்று எண்ணி முடியவில்லை. ஒரு கோயிலை இடிக்க வரும் வீரம் மற்றவற்றின் மீது வருமா? இந்த அராஜகத்துக்கு பதில் சொல்லியிருக்கிறது இயற்கை, துரதிர்ஷ்டவசமாக மக்களும் அவதிப் படவேண்டிய நிலை. 

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு. 

(முறை தவறிச் செயல்படும் அரசன், தன் பொருளையும் குடிமக்களையும் ஒருங்கே இழப்பான்)

என்ற  குறளை கோபாலபுரத்துச் சுவற்றில் எழுதிவைக்க வேண்டும். 

சென்னையின் துயர் துடைக்கப்பட வேண்டும்.

சென்னை மீண்டு வரும். காத்திருப்போம்.

Stay safe நண்பர்களே.

  • பெங்களூரில் வசிக்கும் திரு.ச.சண்முகநாதன், சமூகநலம் விரும்பும் தொழில்நுட வல்லுநர். இது இவரது முகநூல் பதிவு இது…

***

3. சென்னையும் மழையும் 

-வேதாந்ததேசிகன் மணி

தமிழகம் முழுக்கவே இதுதான் நிலை என்றாலும் கூட, சென்னையில் மழை பெய்தால் அது பேசும் பொருளாக விளங்குகிறது காரணம் மழை நீர் வடிவதில் ஏற்படும் சிக்கல்தான்.

இது இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை தான். என்றாலும் கூட, இந்த அரசாங்கம் வந்தவுடன் அது குறித்து தீவிர ஆலோசனை செய்து ஆங்காங்கே மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு நிச்சயம் இந்த முறை அது போன்று எல்லாம் நிகழாது என்றெல்லாம் தொடர்ந்து அமைச்சர்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நிலைமை என்னவோ வழக்கம் போலத் தான், கடந்த ஆண்டுகளைப் போலவே தான். இந்த ஆண்டும் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கி அதை அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்காகச் செலவழிக்கப்படும் தொகை எல்லாம் யாரிடம் போகிறது அல்லது என்னவாகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிலைமை சீரடையவே இல்லை 

உண்மையில் இது ஆராய்ச்சிக்குரிய விஷயமாகத் தான் இருக்கிறது. அரசு முயற்சி செய்யவில்லை என்று சொல்ல முடியவில்லை ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை என்னும் பொழுது, எங்கோ நிர்வாகத்தில் ஓட்டை இருக்கிறது என்று தான் பொருள் 

இதில் நிச்சயம் முழு கவனத்தைச் செலுத்தி சரி செய்ய வேண்டி ஒன்றாக அரசு கருத வேண்டும்.

மழையை பெய்யும் போது அதற்கான முன்னெச்சரிக்கைகள் செய்வதும், பின்னர் நிவாரணங்கள் அளிப்பதும் மட்டும் ஒரு அரசின் கடமையல்ல. அந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதிலும் அந்த வேகம் வேண்டும். 

எங்கு தவறு நிகழ்கிறது எனத் தெரியவில்லை; இதற்காகச் செலவழிக்கப்படும் தொகையெல்லாம் கண்ணுக்குக் காணாமல் போக, தண்ணீர் மட்டும்தான் பார்த்த இடங்களில் எல்லாம் இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

இன்று இதைப் பற்றி பேசும்போது சென்னை மேயர் குறித்துக் கூற வேண்டியதாக இருக்கிறது. அவர் நிர்வாகத்திற்குப் புதியவர் மட்டுமல்ல, இளைஞியும் கூட. அவரால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறார். ஆனால் அதைத் தாண்டி அரசியல் குறிக்கீடுகள் இருக்கின்றன என்பதை, அவர் பேட்டி அளிக்கும் விதத்திலே தெரிந்து கொள்ளலாம்.

அவரைப் பேச விடாமல் மூத்த மந்திரிகள் இருவர்  ‘ஓவர் டேக்’ செய்து பேசுவதும், அவரை இயங்க விடாமல் செய்வதும் இயல்பானது தானா அல்லது ஏதாவது மறைக்கப்படுகிறதா என்றும் தெரியவில்லை.

பெண்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கூட நடைமுறைகள் அவர்களைச் செயல்பட விடாமல் தடுப்பது தொடர்கிறது. 

ஆனால் அதற்காக அந்த மேயரை குறை சொல்ல முடியாது. காலப்போக்கில் தான் சரியாகும். எனினும், நமக்குத் தெரிந்து மேயரின் கணவர் எதுவும் அதுபோல ஆளுமை செய்யவில்லை; அதற்கு பதில் இங்கு உள்ள அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பேச விடாமல் செய்கிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது.

இது எப்படியோ, மக்கள் இன்னும் வெள்ளத்தின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயம் இது சரி செய்யப்பட வேண்டும். இது சென்னைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் இதுதான் நிலை. ஆனாலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடப்பதுதான் பெரும்பாலும் வெளியில் தெரியும். அந்த வெளியில் தெரியும் இடங்களில் கூட இவர்களால் தடுக்க முடியவில்லை என்பது நிச்சயம் அரசின் தோல்வியே.

  • திருப்பூரில் வசிக்கும் திரு. வேதாந்ததேசிகன் மணி, சமூக ஆர்வலர்; இவரது முகநூல் பதிவு இது…

***

4. தேவை புதிய சிந்தனை!

-சீரங்கத்தான்

செங்கல்பட்டு, சென்னாப்பட்டிணம் என்ற இந்தப் பரப்புகள், நதிகள் இல்லாத, மழைநீரைத் தேக்கி ஏரிப்பாசனத்தை ஆதாரமாகக் கொண்ட விளைநிலங்கள் அடங்கிய கிராமங்கள். சிறிய, பெரிய எண்ணிலடங்கா ஏரிகளும் ஏரிக்கரைகளும் கொண்ட வித்தியாசமான நிலத்திணை.

மிலேச்சியர் ஆக்கிரமிப்பின் போது இங்கு தொடங்கிய துறைமுகம் மற்றும் நகரமயமாக்கல்  இன்று வரை நீடிக்கிறது, முன்னூறு ஆண்டுகளாக. துறைமுக வளர்ச்சி சரி….. ஒத்துக் கொள்ளலாம். ஏன், வரைமுறையற்ற மனித குடியேற்றங்கள்?… தமிழ்நாட்டில் வேறு இடங்களா இல்லை?

காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற நிலையான ஆற்று நீரோட்டங்கள் கடைநிலையில் டெல்டா எனப்படும் பரந்த பிரதேசமாக தன்னை பரப்பிக் கொண்டு கடலில் கலக்கும். 

ஆனால் ஏரிகளும் குளங்களும் கொண்ட நீர்நிலைகளில் இருந்து வழிந்தோடும் மழைநீரை சதுப்புநிலக் காடுகள் அவற்றைத் தாங்கி, உள் வாங்கி, பின்னர் கடல் ஓதத்தை (High Tide, Low Tide) அனுசரித்து காலக்கிரமத்தில் வெள்ளத்தை கடலில் கலக்க விடும். கடலுக்கும் நிலத்திற்கும் இடைப்பட்ட களிமண் உவர் நீர் அலையாத்திக் காடுகள் தான் நெய்தல் நில வெள்ளத்தைத் தாங்குகிறது. அலையாத்திக் காடுகள், சிதம்பரம் – பிச்சாவரம் தொடங்கி ஆந்திர எல்லைவரை உள்ளன. ஆனால் இவையெல்லாம் நகரமயமாக்கல் மற்றும் இறால்  வளர்ப்புக்காகவும் அழிக்கப்பட்டு விட்டன. 

கடலோர நிலப்பரப்பு என்றுமே நகரமயமாக்கலுக்கு உகந்ததல்ல. இன்னும் ஐம்பது, நூறு ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் நான்கு அடிகள் வரை உயரும் என்பது விஞ்ஞானக் கணிப்பு. நமக்கு நட்டம் எவ்வளவு? இனியும் சென்னையில் காசைச் செலவிடுவது கடலில் கொட்டுவது போன்றது. அளந்து கணிக்க வேண்டாமா? புத்திசாலித்தனமாக திட்டம் தீட்ட வேண்டும் அல்லவா? 

மதராஸிலிருந்து கால் பங்கு ஜனத்தொகையைக் குறைத்து மிதக்கும் (floating population) மக்கள் தொகையையும் கரைத்து, சென்னையைக் காப்பாற்ற வேண்டும்.

இல்லையேல் குடிமை வசதிகள் பற்றாக்குறை ஆகி, சென்னை நகர வாழ்க்கை நரகமாகி விடும்.

தலைநகர் மாற்றம் தேவை:

தலைநகரை முல்லைத்திணையான தமிழ்நாட்டின் மையத்திற்கு மாற்றினால் கால்பங்கு அரசு பணியாளர்கள் எண்ணிக்கையும், மிதக்கும் மக்கள்தொகையும் குறையும். இந்தத்  திட்டமிடல் விடயத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக திராவிடம் தோற்றுவிட்டது என்றுதான் நான் சொல்வேன். ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிப் பரப்பி கூறு போட்டது யார்? அதனால் பயன் அடைந்தது யார்? என்றெல்லாம் இனிப் பேசிப் பயனில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் திட்டமிட்டுச் செயல்படுவோம். 

மாற்றி யோசிப்போம்! குஜராத்திகள் அகமதாபாத்தில் இருந்து காந்திநகருக்கு தலைநகரை மாற்றிக்கொள்ள வில்லையா? பஞ்சாப் ஹரியாணா  மாநிலங்கள், அதிநவீன சண்டீகர் (Chandigarh) எனும் நகரம் அமைத்துக்கொண்டு அனுபவிக்க வில்லையா? ஆந்திராவுக்கு அமராவதியும் அமையவிருக்கிறது அல்லவா? நமக்கு ஏன் இந்தச் சிந்தனை வரவில்லை?

சென்னையின் விரிவாக்கம் இனியாவது தடுக்கப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் திட்டமிடல் பரவலாக வேண்டும்.

தலைநகரை தமிழகத்தின் மையப்பகுதிக்கு மாற்ற வேண்டும்.

தலைநகரம், மாநிலத்தின் மையப்பகுதியில் (திருச்சிராப்பள்ளி அல்லது மதுரை அருகே) அமையுமானால்,  ஒவ்வொரு தமிழனும் வீட்டில் இருந்து காலை 4 மணிக்கு கிளம்பி தலைநகரில் தங்களின் வேலையை முடித்து விட்டு இர்வௌ 11 மணிக்குத் திரும்பி விடலாம். மிதக்கும் மக்கள்தொகையை மொத்தமாகக் கழித்து விடலாம்.

தமிழனுக்கு இன்றைய தேவை, மாற்றம்… சிந்தனையில் மாற்றம்… செயல்பாட்டில் மாற்றம்…. விரிந்து பரந்த முன்னேற்றம்…

இளைஞர்களுக்கு இனி இலக்கு இதுவாகட்டும்!

தமிழ்நாட்டை ஜப்பான் *1 ஆக்குவோம்! சென்னையை மும்பை *2  ஆக்குவோம்! மாநில மையத்தை தலைநகர் ஆக்குவோம்! இதற்கான தலைவனைத் தேடுவோம்!

பி.கு.:

*1 ஜப்பான் போன்று கன தொழில் (heavy  industries) வளம் கொழிக்கும் மாநிலம்

*2 மும்பை போன்று (financial capital) நிலைத்த நிதி நகராக்கம்.

  • சீரங்கத்தான் என்ற பெயரில் எழுதும் கேப்டன் ஏ.மோகன், சமஸ்கிருத பாரதி அமைப்பின் தென் தமிழக துணைத் தலைவர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார்.

***

5. அன்றும் இன்றும்…

-ராஜசங்கர் விஸ்வநாதன்

2015 இல் நிகழ்ந்த வெள்ள பாதிப்பின்போது, பொதுமக்களே முன்நின்று ஏகப்பட்ட வேலைகள் செய்தார்கள். 

அவரவர் பகுதிகளிலே சேவைகளை அதாவது மின்சாரம் இன்ன பிறவற்றிலே அந்தந்தப் பகுதி மக்களே பல வேலைகளைச் செய்தார்கள். 

எங்கள் பகுதியிலே நாங்களே வீடுவீடாகப் போய் எந்த மின்சார போர்ட் தண்ணீரிலே மூழ்கியிருக்கிறது எனப் பார்த்துவிட்டு அந்த வீட்டின் மின் இணைப்பை மட்டும் மின்கம்பத்திலே துண்டிக்கச் சொன்னோம். 

மின்வாரிய ஊழியர்களுக்கு, போக்குவரத்து, தனியார் மின்சார தொழில்நுட்ப ஆட்களை வைத்து பணம் கொடுத்து சரிசெய்தோம். 

தண்ணீர் வெளியேற குழி தோண்டுவது, இருக்கும் குப்பைகளை அள்ளிப் போடுவது என பல வேலைகளை நாங்களே செய்து தண்ணீரை வெளியேற்றினோம். 

அந்தப் புயலிலும், அதற்கு பின்னர் வந்த வர்தா புயலிலும், இரண்டிலேயும் சரிந்த மின்கம்பங்களுக்குப் பதிலாக கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டுவரப்பட்டது. 

அதனால் மின்கம்பங்கள் சாய்வதால் மின்சார இணைப்பு பிரச்னை என்பது இப்போது இருந்திருக்கக் கூடாது. அதை மீறி மின்சாரம் துண்டிப்பு இருக்கிறது என்றால், என்ன சொல்வது?

அதேபோல இப்போது ஆர்எஸ்எஸ் தவிர எந்த ஒரு அமைப்போ தனியார் ஆட்களோ சேவைப்பணிகளை, உதவிப் பணிகளை எடுத்துச் செய்ய வரவில்லை.

களத்திலே கார்ப்பரேஷன் ஆட்களைத் தவிர ஆட்களே யாரும் கிடையாது.

இதுதான் பிரச்னை.

ஏன் மக்கள் வரவில்லை? அதற்குக் காரணம் என்ன?

இதற்கான விடையை யோசித்துப் பாருங்கள்.

***

இம்முறை (2023 இல்) 2015இல் பெய்ததை விட அதிக மழை என்பதெல்லம் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

அன்று பெய்த மழையில் பாதி மழை கூட இப்போது பெய்யவில்லை. 

புயல் காற்றும் வர்தா புயல் காற்றை விடக் குறைவு தான். 

2015 இல் தொடர்ந்து மூன்று நாள் மழை பெய்தது.  ஆனால் இப்போது ஒரே நாள் தான். 

சும்மா உருட்டக் கூடாது. 

2015 ஐ விட இப்போது மின்சாரம் கேபிள் வழியாக வருகிறது. அதனால் மின்கம்பங்கள் சேதாரம் அதிகமாக இல்லவே இல்லை. 

இன்றைய பிரச்னை, எல்லா இடங்களிலும் இஷ்டத்துக்கு தோண்டிப்போட்டிருப்பது, இஷ்டத்துக்கு சாலைகளை ஏற்றிக் கட்டியிருப்பது என தண்ணீர் வெளியேறாமல் பார்த்துக் கொண்டது தான். 

அதுக்கு 2015 இல் அரசு நிர்வாகம் ஒழுங்காகப் பணியாற்றினார்கள் என்று சொல்ல வரவில்லை.  அப்போது அதீத மழைக்கு மிக மிக மோசமாக இருந்தது.

இப்போது கொஞ்சம் மழைக்கே மிக மிக மோசமாக இருக்கிறது. 

அம்புடு தான்.

  • திரு. ராஜசங்கர் விஸ்வநாதன், சென்னையில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்; இது இவரது முகநூல் பதிவு…

$$$

Leave a comment