பாவியும் யோகி ஆகலாம்!

-பேரா. இளங்கோ  ராமானுஜம்

கிரிஷின் வாழ்க்கை நெறி தவறி, வழி தவறிச் சென்றவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. எந்தப் பாவியும் மனதார பகவானின் நாமத்தை உச்சரித்தால், தன் தவறுகளுக்காக வருந்தி புதிய பாதையை நோக்கிப் பயணித்தால் இறைவன் தன் அன்புக் கரம் நீட்டுவார். கிரிஷ் என்றுமே கோழையாக இருந்தது இல்லை. தன் பாவச் செயல்களை ஒருபோதும் மற்றவரிடம் மறைக்கவில்லை. கள்ளங் கபடம் இன்றி வெளிப்படையாகச் சொன்னார்.

“நான் குடித்த ஒயின் பாட்டில்களை ஒன்றன் மீது ஒன்றாக நிறுத்தி வைத்தால் அவை இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தைத் தொட்டுவிடும்” என்று நகைச்சுவையாகச் சொன்னார் கிரிஷ் சந்திர கோஷ் எனும் வங்காள நாடக ஆசிரியர்.

யார் இந்த கிரிஷ் சந்திர கோஷ்?

19ஆம் நூற்றாண்டின் வங்காள நாடக இயலின் தந்தை என்று போற்றப்படுபவர்; மிகச் சிறந்த நடிகர். தயாரிப்பாளர். எழுத்தாளர்.

பாரதக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு அவர் படைத்த நாடக இலக்கியங்கள்-  ‘சைதன்ய லீலா’ – போன்றவை வங்காள ரசிகர்களைச் சுண்டி இழுத்தன. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற துறவியர்கள், வித்யாசாகர் போன்ற அறிஞர்கள், எட்வின் அர்னால்டு போன்ற கவிஞர்கள்,  அன்றைய வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் அவரின் பரம ரசிகர்கள் ஆனார்கள்.  ‘சைதன்ய லீலா’ என்ற நாடகத்தில் மெய் மறந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் பரவச நிலை (Ecstasy – இறைவனோடு இரண்டறக் கலந்த போது உணரப்படும் தன்னை மறந்த நிலை) அடைந்து நாடக மேடைக்கே  சென்று அவரோடு நடனம் ஆடினார் என்றால் கிரீஷின் எழுத்தாற்றல், நடிப்புத் திறன் இரண்டுமே நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஆனாலும் ஒப்பற்ற நாடக நடிகரான இவரது மறுபக்கம் நம்மை சற்றே அதிர்ச்சி அடையச் செய்கிறது.

மதுவிற்கு அடிமை. கஞ்சா புகைப்பார். விலைமாதரோடு கொல்கத்தாவின் பாக்பஜாரில் உள்ள சிகப்பு விளக்கு பகுதிகளில் வாழ்க்கை. சதா கோர்ட், கேஸ் என்று (Court Bird) ஓட்டம். இவரை  சுவாமி சித்பவானந்தர்  ‘பாவங்களின் மொத்த வியாபாரி’ (Wholesale Sinner)  என்று சிலாகித்துச் சொல்வார்.

இதற்கிடையில் இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணமும் கிரிஷாரின் மனதின் அடித்தளத்தில் உயிரோட்டமாக உறங்கிக் கொண்டிருந்தது.

ஆனாலும் இந்த மிகச்சிறந்த கலைஞன் அழிவுப் பாதையில் போகிறானே என்ற பரிதாபம் கூட நமக்கு சில சமயங்களில் வருகிறது. கடவுளே! ஏன் இந்த அற்புதமான கலைஞனுக்கு இந்தத் தடம் புரண்ட வாழ்க்கை எனும் நம் கேள்விக்கு விடை அளிக்கிறார் கிறிஸ்டோபர் இஷர்வுட்.  

(Christopher Isherwood: “Girish was a person of great animal vitality, strength, ingenuity,force, drive, and indeed genius- a protean kind of talent. He was a poet,a dramatist, an actor,and he threw himself into everything with the utmost vitality. It was a function, an aspect, of this vitality that he was  also exceedingly sensual; he had  a considerable sex life, which was much discussed by everybody around him; and he drank enormously; took opium, and so forth. A modern poet has said : “A saint  is easy to recognise; his constitution is designed for vice.” He meant that in the case of somebody like Girish , without this energy he would not have had all the positive qualities as well as the negative ones.”)

ஆம், உண்மைதான்! அளப்பரிய ஆற்றலும், மிருக பலமும், அறிவும், படைப்பாற்றலும் கொண்டவர்கள் வாழ்க்கையில் சாதிப்பார்கள் அல்லது வழிதவறி பாவக் குழியிலும் வீழ்வர், அவர்களுக்கு சரியான வழிகாட்டி இல்லை என்றால்.

இதே அசுர பலத்தைக் கொண்டவர் தான் விவேகானந்தர். சிறுவயதில் இவரது அளப்பரிய சக்தியின் வெளிப்பாட்டைத் தாங்க இயலாத அவரது அன்னை புவனேஸ்வரி மாதா அவர்தம் தலையில் ஒரு குடம் குளிர்ந்த நீரை ஊற்றி அவரின் வேகத்தைத் தணித்து “சிவா, சிவா, சிவா” என்ற மந்திரத்தைக் காதில் ஓதும்போது,  விவேகானந்தர் அடங்கி, ஒடுங்கி அன்னையரின் மடியில் அமர்ந்து அவரின் குருகுலத்தில்  ‘சத்தியம், தூய்மை, தியாகம்’ போன்றவற்றைக் கற்றதாலேயே பிற்காலத்தில் நெறி தவறவில்லை என்று மனம் திறந்து கூறுகிறார்.

கிரிஷுக்கு அன்னையரின் மடி என்ற குருகுலம் கிடைக்கவில்லை. ஆறு வயதில் தாயை இழந்த இந்தச் சிறுவன் “அன்னையிலாச் சேய் போல அலக்கண் உற்றான்”. வழிநடத்த ஆளில்லை. வழி தவறியதில் வியப்பில்லை. கலை உலகில் அவரது முத்திரை பதித்த பயணம். ஒரு பக்கம் வியக்கத்தகு நாடக இலக்கியப் படைப்புகள். மறுபக்கம் நெறி தவறிய பாதையில் உல்லாசப் பயணம். வாழ்க்கைப் பயணத்தில் இவரது ஓட்டம் தொடர்ந்தது. ஓடினார்,  ஓடினார், அவரது ஆன்மீக வழிகாட்டியாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற குருதேவரைச் சந்திக்கும் வரை. அவரைத்  தடுதாட்கொண்டார் குரு தேவர். அவரிடம் தன் அன்னையைக் கண்டார் கிரிஷ் சந்திர  கோஷ். நெறி தவறிய வாழ்க்கை ஓட்டமும் ஒரு முடிவுக்கு வர ஆரம்பித்தது.

கொல்கத்தாவின்  ‘ஸ்டார்’ நாடக அரங்கில் டிசம்பர் 14,1884 அன்று  ‘சைதன்ய லீலா’ என்ற நாடகத்தைக் காண வந்தபோது குருதேவரைச் சந்தித்துத் தன்னை அறிமுகம் செய்கிறார் கிரிஷ் சந்திர கோஷ்,  “மகராஜ்! நான் ஒரு பாவி”.

“இல்லை மகனே கிரிஷ்! எவனொருவன் தன்னை பாவி,  பாவி என்று பகர்கின்றானோ அவன் உண்மையிலேயே பாவியாகி விடுவான். கிரிஷ்! யாரும் இந்த உலகில் பாவி இல்லை. அனைவரும் கடவுளின் குழந்தைகள். அறியாமை தான் கண்களை மறைக்கிறது.”

“நான் உட்கார்ந்து இடம் புனிதத்தை இழந்து விடும். புல்புண்டு கூட அங்கே முளைக்காது சுவாமிஜி”.

“அப்படிச் சொல்லாதே கிரிஷ். ஆயிரம் ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்ட இருட்டறையில் ஏற்றப்படும் விளக்கு ஒரு நொடியில் அந்த இருளை அகற்றி விடாதா?… .ம்.. ம்..  உன்னால் குடிப்பதை நிறுத்த முடியாதா கிரிஷ்?”

சட்டென்று கிரிஷின் முகம் மாறியது. “அப்படி எல்லாம் உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது”.

கிரிஷின் முரட்டுத்தனம் கொஞ்சம் தலைதூக்கியது. புன்முறுவலோடு அவரைத் தட்டிக் கொடுக்கிறார் குருதேவர்.

“சரி , சரி , கடவுளிடம் பொறுப்பைக் கொடுத்து விடு. எல்லாம் சரியாகிவிடும்”.

கிரிஷுக்கு இந்த வார்த்தை  ‘பொறுப்பு’ (Power  of Attorney) மிகவும் பிடித்திருந்தது. தன்னைத் திருத்தும் பொறுப்பை இறைவனிடமோ,  குருதேவரிடமோ ஒப்படைத்து விட்டால் தான் கவலையற்று சுதந்திரமாகத் திரியலாம் என்று நினைத்தார் கிரிஷ்.

சற்று நேரத்தில், “காளிதேவியின் பிரசாதம் இதோ” என்று கூறி கிரிஷின் வாயருகே அதைக் கொண்டு செல்கிறார் குருதேவர்.

‘ஷாக்’ அடித்தவர் போல் அலறினார் கிரிஷ்!

“வேண்டாம், வேண்டாம், சுவாமிஜி! என் உதடுகளை உங்கள் புனிதமான விரல்கள் தொடக் கூடாது. இவை பாவம் செய்தவை. கணக்கற்ற விலை மாதர்களின் கன்னங்களை வருடியவை குருதேவா! மன்னித்து விடுங்கள்!”

சிரித்தவாறு கிரிஷுக்குப் பிரசாதத்தை ஊட்டி விடுகிறார். மறுக்காது அதை ஏற்றுக் கொள்கிறார் கிரிஷ்.

”இனி காளிதேவி தான் உனக்கு கர்ணனின் கவச, குண்டலங்களைப் போல இருந்து உன்னைக் காப்பாற்றுவாள். பொறுப்பை அவளிடம் விட்டுவிடு மகனே!”

“உத்தரவு மகராஜ்!” பவ்வியமாக  பிரசாதத்தை ஏற்றுக் கொள்கிறார் கிரிஷ்.

அன்று இரவே மதுவின் மயக்கத்தில்,  தன் இரண்டு நண்பர்களோடு விலைமாது ஒருத்தியின் வீட்டுக் கதவைத் தட்ட எத்தனிக்கும்போது, அவர் மனதில் பொறி தட்டுகிறது. கதவைத் தட்ட மனம் வரவில்லை. 

“எனக்கென்னவோ, என் குருதேவர் ராமகிருஷ்ணர் என்னை அழைக்கும் குரல் கேட்கிறது. இந்தக் கேவலமான செயலுக்கு அந்த உத்தமர் எப்படி பொறுப்பேற்றுக் கொள்வார்? இப்போது என் எல்லாச் செயல்களுக்கும் அவர் அல்லவோ கர்த்தா! இந்தக் குதிரை வண்டியை தட்சிணேஸ்வரத்திற்குத் திருப்புங்கள்.” நண்பர்களுக்குக் கட்டளை இடுகிறார் கிரிஷ்.

அரை மணி நேரத்தில் ராமகிருஷ்ணரின் அறைக் கதவைத் தட்டுகிறார்.  “இந்த நள்ளிரவில் இங்கே என்ன செய்கிறாய் கிரிஷ்?” சிரித்துக்கொண்டே ராம கிருஷ்ணர் கேட்கிறார்.

குடிபோதையில் தட்டுத் தடுமாறி பேசுகிறார், கிரிஷ். “தெரியாமல் குடித்துவிட்டேன். இனி இப்படிச் செய்ய மாட்டேன் குருதேவரே! இச் செயலை உங்களுக்கு எப்படி அர்ப்பணிப்பது? மன்னித்து விடுங்கள். நள்ளிரவிலும் உங்கள் இதயக்கதவு எனக்காகத் திறந்திருக்கிறதே சுவாமிஜி!”

விலைமாதுவின் வீட்டுக் கதவைத் தட்ட எண்ணிய கிரிஷைத் தடுத்து ராமகிருஷ்ணரின் அறைக் கதவைத் தட்டவைத்தது இறைவன் திட்டமே!

கிரிஷின் இரு கைகளையும் இறுகப் பற்றி ராமகிருஷ்ணர் பகவான் நாமத்தை உச்சரித்து, காளி மாதாவின் பெருமைகளைப் பாடி அவரோடு நடனமாடி பரவச நிலையை அடைகிறார்.

குருதேவர் ராமகிருஷ்ணரின் அடைக்கலக்காதை ஆரம்பித்துவிட்டது. ராமர் பாதம் பட்ட அகலியைப் போல கிரிஷுக்கு விமோசனம் எனும் விடியலும் பிறந்துவிட்டது. குரு தேவரின் பரவசநிலை  கிரிஷின் மது மயக்க நிலைக்குவிஷமுறிவு அருமருந்தானது.

‘என் குடும்பத்தார்களே என்னைத் தொடத் தயங்கி, வெறுத்து ஒதுக்கும்போது என்னைத் தொட்டு, நடனமாடி,  என்னை ஆன்மிகப் பாதையில் நடாத்திச் செல்லும் இந்த உத்தமர் கடவுளின் அவதாரமே! சந்தேகமில்லை!’ கிரிஷின் அறிவுக்கண் விழித்துக் கொண்டது.

ஆஸ்கார் ஒயில்ட் (Oscarwild) ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது.  “யோகிக்கும், பாவிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், ஒவ்வொரு யோகிக்கும் கடந்த காலம் உள்ளது. ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உள்ளது.” (The only difference between the Saint and the sinner is that every Saint has a past, and every sinner has a future).

கிரிஷின் வாழ்க்கை நெறி தவறி, வழி தவறிச் சென்றவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. எந்தப் பாவியும் மனதார பகவானின் நாமத்தை உச்சரித்தால், தன் தவறுகளுக்காக வருந்தி புதிய பாதையை நோக்கிப் பயணித்தால் இறைவன் தன் அன்புக் கரம் நீட்டுவார். கிரிஷ் என்றுமே கோழையாக இருந்தது இல்லை. தன் பாவச் செயல்களை ஒருபோதும் மற்றவரிடம் மறைக்கவில்லை. கள்ளங் கபடம் இன்றி வெளிப்படையாகச் சொன்னார்.

“The recognition of sin is the beginning of salvation”என்பது மார்ட்டின் லூதரின் கருத்து. கிரிஷ் தன் பாவங்களைப் பட்டியலிட்டு ராமகிருஷ்ணரிடம் சொல்லி மன்றாடினார்.

குருதேவர் ராமகிருஷ்ணர் தன் வாழ்வின் இறுதியில் தான் பெற்ற ஆன்மிகச் செல்வங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி விவேகானந்தரின் கையில் ஒப்படைத்து  “இதை மனித குலத்தின் மறுமலர்ச்சிக்கு பயன்படுத்துவாயாக” என்று கட்டளையிட்டார். பாரதத்திற்கு மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளுக்கும் சென்று அங்கே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தினார் விவேகானந்தர். ஆனால் ஒதுக்கப்பட்ட, நலிந்த,  துன்பத்தில் உழன்று கொண்டிருந்த, சிவப்பு விளக்குப் பகுதிகளில் வசித்து வசித்துக்கொண்டிருந்த, வழிதவறிய பெண்களுக்கு ராமகிருஷ்ணரின் உன்னதச் செய்திகளைக் கொண்டு சென்றவர் கிரிஷ் சந்திர கோஷ்.

இதை மனதார உணர்ந்த,  அக்காலகட்டத்தில் வங்காள நாடக உலகில் கோலோச்சிய நடிகைகள் வினோதினி, தாராசுந்தரி, டிங்கரி போன்றோர் வாஞ்சையோடு தங்கள் சுயசரிதையில் பதிவிடுகின்றனர்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மனிதனது அகங்காரம் அழியத் தொடங்குகிறது.  இறைவனிடம் சரண் புகும் எண்ணம் எழத் துவங்குகிறது. அகங்காரம் அற்ற மனிதனின் பொறுப்புகளை இறைவனே எடுத்துக் கொள்கிறார். எனவே கிரிஷ் தன் தவறுகளை உணர்ந்து இறுதி நிலையில் குருதேவரிடம் தன் பொறுப்பு முழுவதையும் ஒப்படைத்து விடுகிறார்,  பச்சிளம் கைக்குழந்தை தன் தாயிடம் பொறுப்பினை ஒப்படைப்பதைப் போல.

கிருஷ்ணரும், இயேசுவும் இதையே தங்கள் சீடர்களுக்குச் சொல்கிறார்கள். “வாழ்வின் துன்பச் சுமை சுமையில் துயரப்படும் நீங்கள் என்னிடம் வாருங்கள். மன அமைதி தருகிறேன்”.

குருதேவர்,  கிரிஷ் சந்திர கோஷை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதற்குக் காரணம், கிரிஷின் சரணாகதியில் கபடத்தனம் இல்லை. அவரது வெளிப்படைத் தன்மை குருதேவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

“காலை, மாலை மட்டும் சில நொடிகள் இறைவனை நினை” என்று குருதேவர் சொன்னதற்கு  “இதெல்லாம் முடியாது, சுவாமிஜி! எது காலை, எது மாலை என்று தெரியாதவாறு மயங்கிக் கிடப்பேன். கட்டுப்பாடுகள் என்னைக் கட்டுப்படுத்தாது. அவற்றை நான் வெறுக்கிறேன்” என்றார் கிரிஷ்.”அப்படி என்றால் உன் முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார் குருதேவர். மகிழ்ந்தார் கிரிஷ்.

கிரிஷுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.. அவரை அறியாமலேயே அவரே தன் கழுத்தில் அன்பு எனும் சுருக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டதை! அவர் நெஞ்சம் முழுதும் குருதேவரின் அன்பு கலந்த அருள் நிறைந்திருந்தது. அங்கே கீழ்த்தரமான எண்ணங்கள் மறைந்து விட்டன. உண்ணும் போதும், உறங்கும்போதும் அவர் நெஞ்சம் ராமகிருஷ்ணரின் அருளில் லயித்துவிட்டது.

நான், எனது என்ற அகங்காரம் மறைந்து விட்டது. கிரிஷ் சந்திர கோஷின் மனதில் இருள் மறைந்து, அருள் நிறைந்தது. ஒரு பாவி, யோகி ஆனார். இதனை  அறிகையில், சாதாரண மனிதனின் மனதில், நாமும் உய்வடையலாம் என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

$$$

Leave a comment