புத்தொளியில் தேர்தல் ஆணையம்

-திருநின்றவூர் ரவிகுமார்

தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தில் தனித்துவமும் சுயாட்சியும் பெற்ற அமைப்பு. இந்தியாவில் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தும் இந்த அமைப்பு முன்னர் எப்படி இருந்தது, இப்போது எப்படி மாறி இருக்கிறது என்று அலசுகிறது இக்கட்டுரை....

சுதந்திரமாக ச் செயல்படக்கூடிய தன்னாட்சி பெற்ற அமைப்புதான் தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் அரசு அதிகாரிகள் ஆளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பதால் அது அரசின் கைப்பாவையாக இருந்து வந்துள்ளது. ஏனெனில் தேர்தல் ஆணையரை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி சுதந்திரம் அடைந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகளாகியும் கூட, எந்த ஒரு முறைமையும் ஏற்படுத்தப்படவில்லை.

இங்கே சில முந்தைய வரலாற்று நிகழ்வுகளைத் தெரியப்படுத்துவது அவசியமாக உள்ளது.

1984-89இல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாளராக இருந்த டி.என்.சேஷன் தேசத்தின் தலைமை தேர்தல் ஆணையராக்கப்பட்டார். அவர் அந்தப் பதவிக்கு வந்த பிறகுதான் அந்த பதவிக்குரிய அதிகாரம், வல்லமையெல்லாம் வெளிப்பட்டன என்று கூறப்படுகிறது. அவரும் பல தடபுடலான காரியங்களைச் செய்து பிரபலமானார்.

இலங்கையைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் ராஜீவ் காந்தி 1991இல் கொல்லப்பட்டார். அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது; ராஜீவ் காந்தி காலத்தில் அரசியல் சன்னியாசம் வாங்கி ஒதுங்கி இருந்த நரசிம்ம ராவ் பிரதமரானார். அப்போது சுவிட்சர்லாந்தில் இருந்த முனைவர் மன்மோகன் சிங் டில்லி வந்து நிதி அமைச்சரானார். இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. முனைவர் மன்மோகன் சிங் ராஜ்யசபை உறுப்பினரானார். நரசிம்ம ராவ் ஆந்திராவில் உள்ள நந்தியால் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வாக்களிக்க மின்னணு எந்திரங்கள் பயன்பாட்டில் இல்லை. வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் இருந்தது.

நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் பெற்ற தேர்தல் ஆணையரான சேஷன் தலைமையில் அசம்பாவிதங்கள் இல்லாமல் நல்ல முறையில் தேர்தல் நடந்தது. பிறகு வாக்குகள் எண்ணப்பட்டன. பாதி அளவு வாக்குகள் எண்ணப்பட்ட  நிலையில் டில்லியில் இருந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி உத்தரவிட்டார் சேஷன். அடுத்த சில மணி நேரங்களில் நரசிம்ம ராவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அந்தத் தொகுதியில் இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் தொண்ணூறு சதவீதம். பதிவான வாக்குகளில் பாதி இன்னும் என்ன படாமலே இருந்தன.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு ப.சிதம்பரம் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அவர் தோற்றுவிட்டார் என்று அவரது தேர்தல் முகவரே ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு விட்டார். எல்லோருக்கும் விஷயம் தெரிந்து விட்டது. ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டாம் என டில்லியிலிருந்து, தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வந்தது அடுத்து  சில மணி நேரத்தில், ப.சிதம்பரம் 3,354 வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றதாக டில்லியில் இருந்து அறிவிப்பு வந்தது. தோற்றவரான ராஜ.கண்ணப்பன் தொடுத்த வழக்கு ஐந்து ஆண்டு காலம் நடந்தது.

இவை காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் கால அனுபவங்கள். இதே தேர்தல் ஆணையம் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் இப்போது பார்ப்போம்…

மோடி முதல்முறையாக பிரதமரான போது அந்த அமைச்சரவையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சரானார். அப்போது காஷ்மீர் மாநிலத்தில் பி.டி.பி (மெஹபூபா முப்தி கட்சியை) சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சிக்கு மாறியதால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. 2017 ஏப்ரலில் தேர்தல் நடத்துவது என்று தேர்தல் ஆணையர் முடிவெடுத்தார். அமைச்சர் ராஜ்நாத் சிங்,  ‘இப்போது அங்கு சூழ்நிலை சரியில்லை. எனவே தேர்தலை நடத்த வேண்டாம். தள்ளி போடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

வந்ததே கோபம், தேர்தல் ஆணையருக்கு!  ‘தேர்தலை எப்போது நடத்த வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். பாதுகாப்புக்கு படைகளை அனுப்ப முடியுமா, முடியாதா?’ என்று காட்டமாகக் கேட்டார். உடனே மோடி அரசு பணிவுடன்,  ‘உங்களுக்கு எத்தனை பட்டாலியன் சிஆர்பிஎஃப் மற்றும் துணை ராணுவப் படையினர் வேண்டும், எப்பொழுது வேண்டும்?’ என்று கேட்டது. தேர்தல் ஆணையர் கேட்டபடி படைகள் அனுப்பப்பட்டன.

பயங்கரவாதிகள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று மக்களை அச்சுறுத்தினர். தேர்தல் நடந்தே தீரும் என்று வீம்பாகச் சொன்னது தேர்தல் ஆணையம். 2017 ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. இருநூறு வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் பதிவாகின.  வன்முறையில் சிலர் உயிரிழந்தனர். சிஆர்பிஎஃப் படையினர் தாக்கப்பட்டார்கள். என்றபோதும் அவர்கள் திருப்பித் தாக்கவில்லை. அந்த வீடியோ எங்கும் பரவியது. துணை ராணுவப் படையினர் தாக்கப்பட்ட போதும் திருப்பித் தாக்காமல் இருந்த வீடியோவும் வெளியானது. மொத்த வாக்குப்பதிவு வெறும் 7.14 சதவீதம் மட்டுமே. இந்திய தேர்தல் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்கு பதிவானது அந்தத் தேர்தலில் தான்.

தேர்தல் நடக்கும் காலத்தில் அந்தப் பகுதியின் நிர்வாகம் முழுக்கவும் தேர்தல் ஆணையத்திடம் வந்துவிடும். தேர்தலை சுதந்திரமாக நடத்த, ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள் என்று சந்தேகிக்கப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றிவிடும். பாதுகாப்புக்குத் தேவையான மத்திய படைகளின் எண்ணிக்கையை ஆணையமே தீர்மானித்து, வாங்கிக் கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் ஆணையம் தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்.

2021இல் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடந்தது. தேர்தலை ஒட்டியும்,  தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட மூன்று நாட்களிலும் மிகப் பெரும் வன்முறையை ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்டது. பாஜகவுக்கு ஓட்டு போட்டவர்கள் என்று கருதிய பலரும் தாக்கப்பட்டார்கள்; வீடுகள் கொளுத்தப்பட்டன; நூற்றுக் கணக்கான பெண்கள் மானபங்கம் (சிபிஐ 21 பலவந்த வழக்குகளை விசாரிக்கிறது) செய்யப்பட்டனர். ஆண்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் (சிபிஐ வசம் 52 கொலை வழக்குகள் உள்ளன). கொலை செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையம் சூழ்நிலையைத் திறம்பட கையாளவில்லை என்ற புகார் எங்கும் எழும்பியது. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கூட, உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி, ஆளுங்கட்சிக்கு ஓடிப் போனார்; பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் மத்தியில் இருந்த மோடி அரசு தேர்தல் ஆணையத்தை ஒன்றும் சொல்லவில்லை.

அண்மையில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததை அனைவரும் அறிவர். அப்பொழுது நீதிபதி ஒருவர், வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல், ‘காஷ்மீரில் எப்பொழுது தேர்தல் நடத்துவீர்கள்?’  என்று அரசைப் பார்த்து கேட்டார். அதற்கு மோடி அரசு, ‘தேர்தலை எப்பொழுது வேண்டுமானாலும் நடத்தலாம். அதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். எப்பொழுது நடத்தினாலும் அரசு ஒத்துழைக்க தயார்’  என்று தன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது.

தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக எந்த விதமான முறைமையும் சுதந்திரம் அடைந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகளாகியும் உருவாக்கப்படவில்லை. முறைமை உருவாக்கப்பட வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்பொழுது முனைவர் மன்மோகன் சிங் பிரதமர். இதோ உருவாக்கி விடுகிறோம் என்று கூறி இழுத்தடித்துக் கொண்டே வந்தது காங்கிரஸ் அரசு. ஆட்சியும் மாறியது.

இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம்  ‘தேர்தல் ஆணையரை நியமிப்பது தொடர்பான முறைமையை மத்திய அரசு ஏற்படுத்தவில்லை என்றால், அரசு அதை தயார் செய்யும் வரை, இது போல் செய்யுங்கள் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்’ என்று தடாலடியாகக் கூறியது. அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் தேர்தல்  ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இடம் உண்டு என்று தன்னைத் தானே நுழைத்துக்கொண்டது.

இது வழிகாட்டும் அறிவுறுத்தல் தானே அன்றி, தீர்ப்பு அல்ல. எனவே, மோடி அரசு தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வதற்கான முறையையும் அவரது பதவி அதிகாரத்தையும் ஒழுங்கு செய்து சட்டம் இயற்றி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது (ஆக. 10, 2023). நீதிமன்ற அறிவுறுத்தலின்படி எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுக் குழுவில் இருக்கிறார். ஆனால் தன்னைத் தானே நுழைத்துக் கொண்ட நீதிமன்றத்தை மோதி அரசு தடுத்து, அதற்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் இடம் பெறுவார் என்று கூறியது. அதேபோல தலைமை தேர்தல் ஆணையர் அந்தஸ்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான அந்தஸ்து என்பதையும் அமைச்சரவைச் செயலருக்கு இணையாக மாற்றியது; அதேசமயம், அதிகாரம், ஊதியம், சலுகைகள் எல்லாம் தலைமை நீதிபதிக்கு இணையாக வழங்கப்படும் என்றது.

நடைமுறைச் சிக்கலுக்குத் தீர்வாக இந்த மாற்றத்தை – ஏதாவது இருந்தால் தானே மாற்றுவதற்கு. இங்கு தான் எதுவும் இல்லையே. எனவே மாற்றம் என்ற வார்த்தையே தவறு – கொண்டு வந்தது. இது காங்கிரஸுக்கும் மற்ற  கட்சிகளுக்கும் தெரியும். ஆனாலும் நீதிமன்றத்தை மோடி அரசு அவமதித்துவிட்டது என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சித்தார்கள். வழக்கம்போலத் தோற்றுப் போனார்கள்.

ஆனால் அவர்கள் போட்ட கூச்சலால், இதுவரை தேர்தல் ஆணையம் எப்படி இருந்தது? காங்கிரஸ் கட்சி அதை எப்படி வைத்திருந்தது? மோடி அரசு எப்படி அதை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறது, எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக தெளிவில்லாமல் இருந்த பிரச்னையை எப்படி தற்போதைய அரசு தீர்த்தது, என்பதெல்லாம் மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் மீது மட்டுமல்ல, மோடி அரசு எப்படி ஜனநாயக விழுமியங்களை மதிக்கிறது என்பதன் மீதும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

$$$

Leave a comment