புத்தொளியில் மதச்சார்பின்மை

-திருநின்றவூர் ரவிகுமார்

பாரதத்தில், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை தாழ்த்துவதும் மதச் சிறுபான்மையினரை உயர்த்துவதும் என்ற போலித்தனம் இருந்தது. அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்வது, ஆதரிப்பது என்பதுதான் சரியான மதச்சார்பின்மை. அதுவே ஹிந்துத்துவம். மோடி அதனை சரியாக நடைமுறைப்படுத்தி  வருகிறார். 

தேசம் மதரீதியில் பிரிவினைக்குள்ளாகி பாகிஸ்தான் உருவானபோது, ‘இங்குள்ள முஸ்லிம் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஹிந்துக்களுக்கு உள்ளது’ என்றார் நேரு. பிரதமராக இருந்தபோது, ‘இந்நாட்டு வளங்களின் மீது இங்குள்ள மதச் சிறுபான்மையினருக்குத்தான், குறிப்பாக முஸ்லிம்களுக்கு தான், முதல் உரிமை உள்ளது’ என்றார் முனைவர் மன்மோகன் சிங். கோத்ரா சம்பவத்தை மறைத்துவிட்டு அதன் பிறகு நடந்த கலவரத்தின் பழியை முதல்வராக இருந்த நரேந்திர மோடி மீது சுமத்தி, அவரை  ‘மரண வியாபாரி’ என்றார் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி. இதுதான் காங்கிரஸ் கட்டமைத்த மதச்சார்பின்மை.

மதச் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என்று சித்தரிக்கப்பட்ட பாஜக பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் 2014இல் ஆட்சி அமைத்தது. குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்தில் ராம பக்தர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட கொடுமையை அடுத்து எழுந்த கலவரத்தை முன்வைத்து வில்லனாக சித்தரிக்கப்பட்ட நரேந்திர மோடி, கூட்டணி அரசின் பிரதமராகப் பதவியேற்றார். இனி பாரதத்தில் மதச்சார்பின்மை இருக்காது, மதச் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள் என்றெல்லாம் பிம்பம் கட்டமைக்கப்பட்டு, ஊதி பெரிதாக்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டில்லியில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில், ‘நம் அரசின் சாதனைகளை மதச் சிறுபான்மையிடம், குறிப்பாக போரா, அகமதியா, பாஸ்மந்தா முஸ்லிம்களிடமும் கிறிஸ்தவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்’ என்று பிரதமர் மோடி சொன்னபோது எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அதை கேலியும் கிண்டலும் செய்யவில்லை. மாறாக சிறுபான்மையினர் வாக்குகளை வளைக்க முயற்சிக்கிறார் என்று ஓலமிட்டன.

ஜூன் மாதம் அமெரிக்கா சென்று திரும்பும் வழியில் எகிப்து நாட்டுக்குச் சென்றார் பிரதம மோடி. தலைநகரான கெய்ரோவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும் உலகின் நான்காவது பழமையானதுமான அல் ஹக்கீம் மசூதிக்கு அவர் சென்றார். அது ஷியா பிரிவைச் சேர்ந்த தாவூதி போரா முஸ்லிம்களுக்கானது. 400 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டது. அதைப் புதுப்பிக்கும் பணியில் பாரதத்தில் உள்ள போரா முஸ்லிம்களின் நிதி கணிசமானது. பிரதமர் மோடியை வரவேற்க கெய்ரோவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டிருந்தனர்.

அவர்களிடையே பேசிய மோடி, ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து (எகிப்தில் இருந்து ஏமன் வழியாக 1539 இல்) பாரதம் வந்த போரா முஸ்லிம்கள் பாரத நாட்டுடன் ஒன்றிவிட்டார்கள்; பாரத நாட்டின் மீது தேசபக்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள். பாரத நாட்டு சட்ட திட்டங்களை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் அமைதியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்’ என்றார்.

இது ஏதோ புதிய பாசம் அல்ல, வாக்கு வங்கிப் பேச்சல்ல. போரா முஸ்லிம்கள் மிக அதிகமாக குஜராத்திலும் (சூரத்), மகாராஷ்டிராவிலும் (மும்பை) மத்திய பிரதேசத்திலும் வசிக்கிறார்கள். 2011இல் முதல்வராக இருந்தபோது அந்த மதப்பிரிவைச் சேர்ந்த மதகுரு சையத்னா புர்ஹானுதீன் என்பவர் நூறு வயதை எட்டியதைக் கொண்டாடும் விழாவில் மோடி கலந்து கொண்டார். அந்த மதத் தலைவர் 2014இல் மும்பையில் காலமானபோது மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது நியூயார்க் நகரில் நடந்த கூட்டத்திலும், ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்த கூட்டத்திலும், போரா முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பன்ஜில் அரண்மனையில் நடந்த கூட்டத்திலும் நிறைய முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தானியரான லாகூரைச் சேர்ந்த அகமதியா முஸ்லிம் டாக்டர் தாரிக் பட், ‘அனைத்து மதத்தையும் மதிப்பவர் மோடி. இதை என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். இங்குள்ள எனது இந்திய நண்பர்கள் பல நல்ல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறோம். இதனால் எங்களிடையே வேற்றுமை குறைந்து வருகிறது; நல்லுறவு வளர்ந்து வருகிறது. மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் மோடியைப் பின்தொடர்கிறார்கள்’ என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நாளேடு, கராச்சியைச் சேர்ந்த தாஹார் சக்கீர் என்ற போரா முஸ்லிம்,  ‘மும்பையில் போரா சமய பிரிவைச் சார்ந்த பல்கலைக்கழகம் தொடங்க மோடி நிறைய உதவிகள் செய்துள்ளார். ஆகவே அவரைப் பார்க்கவும் அவருக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும் இங்கு வந்துள்ளோம்’ என்று கூறியதையும் பதிவு செய்துள்ளது.

இம்தியாஸ் அகமத் நக்வீ என்ற அஹமதியா முஸ்லிம் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவர்,  ‘மதங்களிடையே நல்லிணக்கம், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் மோடியின் பணி சிறப்பாக உள்ளது’ எனப் புகழ்கிறார். காங்கிரஸ் காலத்தில் இந்தியாவுக்கு எதிராக இருந்த தாலிபான்கள் கூட இன்று பாரதத்திற்கு எதிரான செயல்பாடுகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளனர். முஸ்லிம் பொதுமக்கள் மட்டுமல்ல, அமைப்புகளும் மோடியை, பாஜகவை, பாரதத்தைப் பார்க்கும் பார்வை மாறியுள்ளது.

முத்தலாக் தடை:

1989-ல் ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் முறையை தவறென்று தடை விதித்தது. அப்போது நாடாளுமன்றத்தில் மிருகபலத்துடன் – 400 உறுப்பினர்கள் – இருந்த காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி, அடிப்படைவாத முஸ்லிம் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, உச்ச நீதிமன்றத்தின் நியாயமான தீர்ப்புக்கு எதிராக சட்டம் இயற்றி, முத்தலாக் முறையை உறுதிப்படுத்தினார். அதை எதிர்த்து அவரது அமைச்சரவையில் இருந்த ஆரீப் முகமது கான் (இப்பொழுது கேரள ஆளுநராக இருப்பவர்)  ராஜினாமா செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ராஜீவ் காந்தியின் செயலை கடுமையாகச் சாடினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நீதிமன்றக் கதவைத் தட்டினார்கள். 2017 மே மாதத்தில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் முறையை சட்டவிரோதம் என்று மீண்டும் தீர்ப்பளித்தது. அதை தடை செய்ய சட்டம் இயற்றுமாறு அரசுக்கு ஆலோசனை கூறியது. 27 முஸ்லிம் நாடுகளில் தடை செய்யப்பட்ட முத்தலாக் முறையை, 2018இல் அவசரச் சட்டம் மூலம் தடை செய்தார் மோடி. 2009 ஜூலை மாதம் முத்தலாக் தடை சட்டத்தை முறையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ராஜதந்திரத்துடன் காய் நகர்த்தி தனது கட்சிக்கு பலம் இல்லாத ராஜ்ய சபையிலும் வெற்றி பெறச் செய்து அதை சட்டம் ஆக்கினார். முஸ்லிம் பெண்கள் அணி அணியாய்த் திரண்டு வந்து அவருக்கு நன்றி கூறினார்கள்.

 370வது சட்டப் பிரிவு ரத்து:

முத்தலாக் சட்டத்தின் மீது கை வைத்தால் நாடே ஆர்ப்பரிக்கும், பாரதம் கலவர பூமியாகும் என்று சில்ர் மிரட்டினார்கள். ஒரு கல்வீச்சு கூட நடக்கவில்லை. அதேபோல  “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கினால்….”. என்று கொக்கரித்தார்கள். ஆமாம் என்று ஒத்து ஊதினர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர். ஜனாதிபதி உத்தரவின் பேரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது; தேசத்துடன் பூரணமாக இணைக்கப்பட்டது. ஒரு கலவரமும் ஏற்படவில்லை. மாறாக அமைதியும் வளர்ச்சியும் கண்டு வருகிறது அந்த மாநிலம். சட்டப்பிரிவு ரத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கு விசாரணையைக் கவனித்தவர்களுக்கு தெரியும், தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது.

பெண்கள் தனியாக ஹஜ் பயணம்:

ஆண் துணையில்லாமல் பெண்கள் பயணம் செய்யக் கூடாது என்பது இந்தியாவில் உள்ள இஸ்லாமியப் பழக்கம். மோடி அதை மாற்றி பெண்கள் ஆண் துணையில்லாமல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்தார். 2018 முதல் முஸ்லிம் பெண்கள் அப்படி புனிதப் பயணம் சென்று வருவதைக் காண முடிகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அப்படி புனிதப் பயணம் செய்துள்ளனர் என்கிறார், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை  அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வீ. இது முஸ்லிம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது; அந்தச் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்தவர்களின் போக்கு:

‘இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழவும் முன்னேற்றம் காணவும் அங்குள்ள பெரும்பான்மையினரே – ஹிந்துக்களே – காரணம். இந்தியா ஆன்மீக பூமி மட்டுமல்ல, மதச்சார்பற்ற பூமியும் கூட’  என்கிறார் பிலிப்ஸ் ஜேம்ஸ் ஹக்கின்ஸ். இவர் ஆஸ்திரேலியாவில் ஆங்கிலீகல் சர்ச்சின் பேராயராக இருக்கிறார். ‘மோடி வாடிக்கனுக்குப் போனார்; போப்பைச்  சந்தித்தார். அவரால் நல்லுறவுவை வளர்க்க முடிகிறது. அவரும் அவரது கட்சியும் ஆட்சியும் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று கூறப்படுவதை நான் நம்பவில்லை’  என்று அவர் இந்திய நாளேடு ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சிரியன் கத்தோலிக்க சபை, மார்தோமா சபை ஆகிய இரண்டும் பலம் மிகுந்த அமைப்புக்கள். இவற்றின் இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்னையைத் தீர்க்க பிரதமர் மோடியை அணுகினார்கள். அவர் மீது கிறிஸ்துவ சமுதாயத்தினர் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அவர்கள் சோனியா காந்தியை அணுகவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

அண்மையில் மோடி கேரளாவுக்குச் சென்ற போது எட்டு கிறிஸ்தவ சமயப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றாக அவரைச் சந்தித்தனர். அதன் பிறகு வந்த ஈஸ்டர் விழாவின் போது பிரதமர் மோடி, டில்லியில் உள்ள சர்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முதல்வராகவும் பிரதமராகவும் எல்லா மதப் பண்டிகையின் போது அவர் வாழ்த்து தெரிவிக்கிறார். தெலுங்கு, மலையாள ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துவிட்டு தமிழ் ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்க மறுக்கும் திராவிட அரசியல்வாதிகளைப் போல அவர் செயல்படுவதில்லை. எல்லா மதத்தினரையும் ஒன்றுபோல் அணுகுகிறார்.

ஹிந்துக்களின் நாயகர்:

கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு என்றால் மண்டியிட்டு சிலுவைக் குறியிட்டுக் கொள்வது என்றும், முஸ்லிம்களுக்கு ஆதரவு என்றால் குல்லா போட்டுக் கொண்டு அவர்கள் நிகழ்ச்சியில் ஹிந்து சமயத்தை வசை பாடுவது என்றும் வழக்கமாக்கியுள்ள இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபட்டது, பாஜகவும் அதன் பிரதமரான மோடியின் செயல்பாடும். தான் ஹிந்து என்பதை மோடி ஒருபோதும் மறைத்ததும் இல்லை, வெளிப்படுத்தத் தயங்கியதும் இல்லை.

காசியின் பிரமாண்டமான மாற்றம்:

2014க்கு முன்னர் காசிக்குச் சென்றவர்களுக்குத் தெரியும் அது எப்படி இருந்தது என்று. இன்று எப்படி இருக்கிறது என்பதை உலகமே அறியும். ஹிந்துக்களின் புனித ஸ்தலங்களில் முக்கியமான காசிக்கு விடிவுகாலம் பிறந்து மோடியினால் தான்.

தமிழர்களுக்கும் காசிக்கும் உள்ள உறவு தொன்மையானது; உணர்வுப் பூர்வமானது. திராவிட அரசியலால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அந்த உறவை பிரதமர் மோடி அண்மையில் அவருக்கே உரிய பாணியில் மீட்டு, புத்துயிர் ஊட்டினார். காசி தமிழ்ச் சங்கமம் மூலம் ஆன்மிக உணர்வு கொண்ட தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கையை வளர்த்தார். அதில் ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் கலந்து கொண்டது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் ஆலயம்:

1992இல் அயோத்தியில், ராமர் பிறந்த புண்ணிய ஸ்தலத்தில், சர்ச்சைக்குரிய கட்டடம் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் நாடெங்கும் கலவரங்கள், வெடிகுண்டு வீச்சுக்கள், சென்னையில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு பலர் இறந்தனர் என ஹிந்துக்களுக்கு எதிரான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. உலகமெங்கும் ஹிந்துக்கள் தாக்கப்பட்டார்கள். மதவாதத்தை ஊக்குவித்த காங்கிரஸ் கட்சியின் பிரதமர் நரசிம்ம ராவ், அதே இடத்தில் மசூதி கட்டி தரப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது.

மோடி ஆட்சியில் தான் உண்மையான வரலாற்று ஆவணங்களை – உண்மை ஹிந்துக்கள் பக்கம் தான் – அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. உச்ச நீதிமன்றத்தில் ஏகமனதாக நீதிபதிகள் குழுவும் தீர்ப்பு வழங்கியது. அதை ஏற்றுக்கொள்ள மோடி அரசு முஸ்லிம்களுடன் பேச்சு நடத்தி சமரசம் ஏற்படுத்தியது. இன்று பிரம்மாண்டமான கோயில் அதே இடத்தில் எழும்பி வருகிறது. வரும் சங்கராந்தியின் போது ஸ்ரீ ராமபிரான் பிறந்த இடத்தில் கோயில் வழிபாட்டுக்குத் திறக்கப்படுமென அறிவிப்பு வந்துள்ளது.

இதர ஆலயங்கள்:

காஷ்மீரில் வைஷ்ணவ தேவி ஆலயம்,  நிலச் சரிவில் பாதிக்கப்பட்ட கேதார்நாத், மத்திய பிரதேசத்தில் மகா காலேஸ்வர் என்று எல்லா புனித ஸ்தலங்களுக்கும் மோடி விஜயம் செய்கிறார். அங்கு வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். அவரைப் பார்த்து ஹிந்துக்கள் எல்லோரும் அங்கு செல்கிறார்கள்;  அரசு உயர் அதிகாரிகள் முதல் சாதாரணமானவர்கள் வரை அனைவரும் செல்ல முனைகிறார்கள். அவ்வாறு செல்ல வசதிகளை அவர் ஏற்படுத்தித் தருகிறார்.

ஹிந்துக்களின் நாயகர் என்றால் அவர் ஹிந்துக்களை மட்டுமே ஆதரிப்பவர், மற்ற மதங்களுக்கு எதிரானவர் என்பதல்ல. தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்பவர் அவர். இதுவே ஹிந்துத்துவம். ஹிந்துத்துவமே உண்மையான மதச்சார்பின்மை.

மேற்கத்திய (கிறிஸ்தவ) நாடுகளில் மதம் வேறு, அரசு வேறு. மதத்தை ஆதரிப்பது அரசின் வேலை அல்ல. அதனிடமிருந்து விலகி இருப்பது தான் அங்கு மதச்சார்பின்மை. பொதுவெளியில் மத அடையாளங்கள் கூடாது என்பது அங்குள்ள மதச்சார்பின்மை.

பாரதத்தில், மதச்சார்பின்மை என்றால் ஹிந்துக்களை தாழ்த்துவதும் மதச் சிறுபான்மையினரை உயர்த்துவதும் என்ற போலித்தனம் இருந்தது. அனைத்து மதங்களையும் அரவணைத்துச் செல்வது, ஆதரிப்பது என்பதுதான் சரியான மதச்சார்பின்மை. அதுவே ஹிந்துத்துவம். மோடி அதனை சரியாக நடைமுறைப்படுத்தி  வருகிறார். எனவே அவர் நல்ல ஹிந்துத்துவர். அதனால்தான் அனைத்து சமய மக்களும் அவரை ஆதரித்து வருகின்றனர்.

$$$

Leave a comment