அக்டோபர் 21: இந்திய வரலாற்றில் ஒரு பொன்னாள்

-திருநின்றவூர் ரவிகுமார்

1943 அக்டோபர் 21 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் சிங்கப்பூரில் முதல் தேசத்திற்கு வெளியிலான  சுதந்திர  இந்திய அரசு நிறுவப்பட்டது (Govt in Exile). அந்த அரசின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்றார்.  

“சுபாஷ் சந்திர போஸ் ஆகிய நான் இறைவன் சா ட்சியாக இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். இந்தியத் திருநாட்டையும் 38 கோடி இந்தியர்களையும் விடுதலை பெறச் செய்யும் புனித சுதந்திரப் போராட்டத்தை என் இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்து நடத்துவேன்” என்று ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றார் அவர்.

அவருடன் பதினொரு பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். ராஷ் பிஹாரி போஸ் தலைமை ஆலோசகர் ஆனார். ஏ.என்.சர்க்கார் சட்ட ஆலோசகர். அவருடன் ஆறு பேர் ஆலோசர்களாகப் பதவியேற்றனர். அடுத்த சில நாட்களிலேயே ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மலாயா, சிங்கப்பூர் உட்பட ஒன்பது நாடுகள் இந்த சுதந்திர இந்திய அரசை அங்கீகரித்தன.

நேதாஜி தலைவரானார்!

நேதாஜி 1943 பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலில் புறப்பட்டு மடகாஸ்கர் வந்தார். அங்கிருந்து ஏப்ரல் 28ஆம் தேதி ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலில் புறப்பட்டு ஜூன் 16ஆம் தேதி ஜப்பான் போய்ச் சேர்ந்தார். ஜப்பானியப் பிரதமர் டோஜோ, இந்திய சுதந்திரத்திற்கு தன்னாலான உதவிகளைச் செய்வதாக அறிவித்தார். பிறகு அங்கிருந்து ராஷ் பிகாரி போஸ், அபித் உசைன் ஆகியோருடன் ஜூலை இரண்டாம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தார். ஜூலை நான்காம் தேதி நடந்த பிரம்மாண்டமான கூட்டத்தில் ராஷ் பிஹாரி போஸ்,  ‘உங்களுக்கு இந்தப் பரிசைக் கொண்டு வந்திருக்கிறேன்’  என்று கூறி நேதாஜியை கூட்டத்தின் முன்பு நிறுத்தினார். அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

“நாம் தில்லியில் உள்ள செங்கோட்டைக்குச் சென்று அங்கு அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்துவோம். அதற்காக நாம் ரத்தம் சிந்த வேண்டும், தியாகங்களைச் செய்ய வேண்டும், எல்லா விதமான தடைகளையும் கடந்து செல்ல வேண்டும். பசி, தாகம், துன்பம், துயரம் – இவையெல்லாம் நம் வழியில் வரும். போரின் இறுதியில் நம்மில் எத்தனை பேர் உயிருடன் இருப்போம் என்பது தெரியாது. எது விஷயம்….. எது சரியான விஷயம்….. எது மிக முக்கியமான விஷயம் என்றால் – இறுதியில் நாம் வெல்வோம். இந்தியா சுதந்திரம் அடையும்” என்று நேதாஜி ஹிந்துஸ்தானி மொழியில் அந்தக் கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றினார்.

பல மொழிகளும், மொழிகளிடையேயான சச்சரவுகளையும் தீர்க்கும் விதமாக ஹிந்தியும் உருதுவும் கலந்த ஹிந்துஸ்தானிய மொழியை அவர் முன்வைத்தார். அந்தக் காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களில் அந்த மொழி பேசப்பட்டது. படைவீரர்களுக்காக இரண்டு செய்தித்தாள்களை அவர் ஆரம்பித்தார். ஒன்று,  ‘ஆவாஸ்-இ-ஹிந்த்’ என்ற பெயரில் ஹிந்துஸ்தானிய மொழியிலும், மற்றொன்று ‘வாய்ஸ் ஆப் இந்தியா’ (இந்தியாவின் குரல்) என்று ஆங்கிலத்திலும் பெயரிடப்பட்டது.

இந்தியாவுக்கு வெளியே படை திரட்டியது ஏன்?

1943 ஜூலை 9 ஆம் தேதி ஜான்சி ராணி படைப்பிரிவை உருவாக்கப் போவதாக பொதுக்கூட்டத்தில் நேதாஜி பேசினார். அந்த படைப்பிரிவுக்கு தமிழச்சியான டாக்டர் லக்ஷ்மி சுவாமிநாதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரே லட்சுமி சேஹலாக பின்னாளில் பாரத ஜனாதிபதி பதவிக்கு கம்யூனிஸ்டுகளால் முன்னிறுத்தப்பட்டு (2002)  டாக்டர் அப்துல் கலாமிடம் தோற்றார் என்பதை யாவரும் அறிவர்.

அந்தக் கூட்டத்தில் தான், ‘(இந்திய) நாட்டுக்குள் இருந்தே இயக்கம் நடத்தி விடுதலையைப் பெற முடியுமென்றால், படை திரட்டிப் போரிடும் முட்டாள் தனத்தை நான் செய்திருக்க மாட்டேன்’ என்று காங்கிரஸ் மற்றும் காந்தியின் போதாமையை நேதாஜி சுட்டிக் காட்டினார். பின்னாளில் இங்கிலாந்து பிரதமராக இருந்த அட்லியும்,  “காந்தியையோ அவரது அஹிம்சை போராட்டத்தையோ கண்டு நாங்கள் பயப்படவில்லை. சுபாஷ் சந்திர போஸின் செயலும், பம்பாயில் இந்திய கடற்படையினரின் கலகமும் எங்களை அச்சுறுத்தியது” என்று கூறினார். அவர் பிரதமராக இருந்த போது தான் இந்தியாவுக்கு சுதந்திரம் தந்துவிட்டு இங்கிலாந்து விலகிச் செல்வதாக அறிவித்தார்.

நேதாஜியின் நிர்வாகம்

நேதாஜியின் படை நிர்வாகமே வித்தியாசமாக இருந்தது. பிரிட்டிஷ் பழக்கப்படுத்தி இருந்த ஜாதிரீதியான படைப் பிரிவை அவர் நீக்கினார். அப்போது பழக்கத்தில் இருந்த ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனியான சமையல் என்பதை மாற்றினார். அனைவருக்கும் ஒரே சமையலறை. அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில் உணவருந்துவது என்று ஏற்பாடு செய்தார். தலைமைத் தளபதியாக இருந்த போதிலும் ஒவ்வொரு முகாமுக்கும் அவர் நேரில் சென்று வீரர்களுடன் அளவளாவினர். அவர்களது உணவை சுவை பார்த்தார்.

‘ஜெய்ஹிந்த்’ என்பது ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லும் வார்த்தையாக்கப்பட்டது.  ‘ஜன கண மன’ பாடல் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பாடலை மொழிபெயர்த்து இசையமைத்த உசைன் என்ற இளைஞனுக்கு நேதாஜி 1000 சிங்கப்பூர் டாலர்கள் (அந்தக் காலத்திலேயே) அளித்துப் பாராட்டினார்.

கைராட்டை இல்லாத மூவர்ணக் கொடி தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.  ‘சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்புகள், மத சுதந்திரம் அளிக்கப்படும்’ என சுதந்திர இந்திய அரசு அறிவித்தது. சிப்பாய்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 26 டாலர்களும் பின்னர் பதவிக்கு ஏற்ப படிப்படியாக அதிகரித்தும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூபாய் 20 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எல்லா ஜாதி, மதத்தைச் சேர்ந்த படைவீரர்களுக்கும் வெற்றித் ‘திலகம்’ அணிவிக்கும் பழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சமய சமத்துவத்தை நடைமுறையில் காட்ட விரும்பிய நேதாஜி, சீக்கிய, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ உயர் அதிகாரிகளுடன் சிங்கப்பூரில் டேங்க் சாலையில் உள்ள செட்டியார் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.

கருத்து வேறுபாடும் தன்மானமும்

1943 நவம்பரில் டோக்கியோவில் நடந்த அகண்ட கிழக்காசிய மாநாட்டில் நேதாஜி கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய ஜப்பானியப் பிரதமர் டோஜோ,  ‘சுதந்திர இந்தியாவின் சுப்ரீம் கமாண்டராக (அதிகபட்ச அதிகாரங்கள் கொண்ட தலைவராக) நேதாஜி விளங்குவார்’ என்று குறிப்பிட்டார். அதைக் கேட்ட எந்தத் தலைவரும் மனம் குளிர்ந்திருப்பார் என்பது நிச்சயம். ஆனால் நேதாஜி உடனே எழுந்து,  ‘இதைச் சொல்ல ஜெனரல் டோஜோவுக்கு உரிமை இல்லை. இந்தியாவில் யார் என்னவாக இருப்பார்கள் என்பதை இந்திய மக்கள் தான் முடிவு செய்வார்கள். நான் இந்தியாவுக்கு சேவை செய்யும் சாதாரண சேவகன்’ என்று கூறினார்.

ஜப்பானியிடம் அவர் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை என்பது அந்நாட்டு தலைமைத் தளபதி சுகியாமாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புரிந்தது. அவர் அந்தத் தளபதியிடம்  ‘கடனாக உதவிகளைத் தாருங்கள், விடுதலை அடைந்ததும் இந்தியா அவற்றையெல்லாம் திருப்பி அடைத்து விடும்’ என்றார்.

ஜப்பானிய வீரர்களும் இந்திய வீரர்களும் இணைந்து போர்ப் பாதையில் பயணிக்கும் போது ஜப்பானிய படைத் தலைவரே இருவருக்கும் தலைவராக இருப்பார் என்றும், படை அதிகாரிகள் சந்திக்கும் போது ஜப்பானிய அதிகாரிக்கு இந்திய அதிகாரி சல்யூட் செய்ய வேண்டும் என்றும், ஜப்பானிய ராணுவத் தளபதி கூறினார். அதை நேதாஜி ஏற்க மறுத்தார். இந்திய வீரர்களுக்கு இந்திய அதிகாரி தான் கட்டளையிடுவார். அதேபோல இருதரப்பு அதிகாரிகளும் சந்திக்கும்போது இருவரும் ஒரே நேரத்தில் சல்யூட் செய்ய வேண்டும் என்றும் நேதாஜி உறுதியாக கூறி அதை ஏற்க வைத்தார்.

நிதி – நெகிழ்ச்சியும் உறுதியும்

சுதந்திர இந்திய அரசையும் இந்திய தேசிய ராணுவத்தையும் நடத்த ஏராளமான நிதி தேவைப்பட்டது. ஜப்பான் அதற்கு பணம் கொடுக்கும் என்பது நேதாஜிக்குத் தெரியும். ஆனால் இந்திய மானத்தையும் மரியாதையும் காக்க, கிழக்காசிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் நிதியைத் தர வேண்டும் என நேதாஜி விரும்பினார். சுதந்திர இந்திய அரசின் நிதித் துறை சார்பாக அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் நன்கொடையாகப் பெறப்பட்டன. போர் முடிந்த மூன்று ஆண்டுகளில் திரும்பத் தரப்படும் வகையில் கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

கந்தல் ஆடையுடன் ஒரு ஏழைப் பெண்மணி நேதாஜியைப் பார்க்க வந்தார். மூன்று ரூபாய் நன்கொடை கொடுத்தார். கண்ணீர் மல்க அதைப் பெற்றுக் கொண்ட நேதாஜி,  ‘இந்த மூன்று ரூபாய் தான் அவளது சொத்து. அதையும் கொடுத்த பின் அவர் மிகவும் கஷ்டப்படுவாள். ஆனால் இந்திய விடுதலைக்காக அந்தத் தாய் கொடுக்கும் பணத்தை நான் வாங்க மறுத்தால் அவரது தன்மானம் இழிவுபடுமே என்ற எண்ணத்தினால்தான் இதை வாங்கிக் கொள்கிறேன். இதை வெறும் மூன்று ரூபாயாக நான் நினைக்கவில்லை, பல லட்சம் மதிப்புள்ளதாக கருதுகிறேன்’  என்று நெஞ்சுருகினார்.

நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள், சால்வைகள் எல்லாம் ஒரு லட்சம்,  அஞ்சு லட்சம் என்று ஏலம் போடப்பட்டு நிதி சேர்க்கப்பட்டது. ரங்கூனைச் சேர்ந்த ஹபீப் என்பவர் தன் சொத்துக்களை எல்லாம் தானமாகக் கொடுத்தார். அந்த நாளிலேயே அதன் மதிப்பு ஒரு கோடி. நேதாஜி அவருக்கு ‘சேவக் – இந்த – ஹிந்த்’ என்ற பட்டமளித்துப் பாராட்டினார். அவரோ நேதாஜியிடம் இரண்டு விஷயங்களைக் கேட்டார். ஒன்று, தனக்கு காக்கிச் சீருடை தர வேண்டும். இரண்டு, இந்திய சுதந்திரத்திற்காக தொடர்ந்து செய்யும் ஏதாவது பணி ஒன்றை அளிக்க வேண்டும். நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று பர்மாவில் மட்டுமே இருபத்தி ஐந்து கோடி ரூபாய் நன்கொடையாக வந்தது.

ஆனாலும் நிதிப் பற்றாக்குறை இருந்தது. 1943 அக்டோபர் மாத இறுதியில் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் நேதாஜி. ‘சட்டப்படி போரில் ஈடுபட்டிருக்கும் தேசத்தில் எந்த சொத்தும் தனி உடமை அல்ல. உங்களிடம் உள்ள பணமும் சொத்தும் உங்களுடையது என்று நினைத்தால் அது தவறு. உங்கள் வாழ்க்கையும் சொத்தும் இந்தியாவுக்குத் தான் சொந்தம். இந்த எளிய உண்மை உங்களுக்குப் புரியாவிட்டால், உங்களுக்கு உரிய இடம் சிறைச்சாலை அல்லது பிரிட்டிஷ் ஆட்சியில் இருப்பது’ என்று காட்டமாக அறிவிக்கை வெளியிட்டார். அடுத்த சில வாரங்களில் நிதிப் பிரச்னை தீர்ந்தது.

போர்ப் பிரகடனம்

1943 அக்டோபர் 23 ஆம் தேதி கூடிய சுதந்திர இந்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவின்படி, இந்திய மண்ணில் இருக்கும் பிரிட்டிஷாரை எதிர்த்து போர்ப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

1943 டிசம்பர் 29 ஆம் தேதி தான் கைப்பற்றிய அந்தமான் நிகோபார் தீவுகளை ஜப்பான் நாடு சுதந்திர இந்திய அரசிடம் ஒப்படைத்தது. அது ஒரு வரலாற்றுத் தருணம். இந்திய மண்ணின் மீது முதல் இந்திய அரசுக்கு அதிகாரம் கிடைத்தது. நேதாஜி அங்குள்ள ஜிம்கானா மைதானத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்தமானுக்கு ‘ஷாயீத்’ என்றும் நிகோபருக்கு ‘ஸ்வராஜ்’ என்றும் பெயரிட்டார். அதே வழியைப் பின்பற்றி அந்தமானைச் சுற்றியுள்ள பல குட்டி தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அண்மையில் சூட்டியதை இங்கு நினைவு கூரலாம்.

போர் நடந்து கொண்டு இருப்பதால் அந்தமான் நிகோபாரில் அவரால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் கல்வி, உணவு உற்பத்தி, கைத்தறி, நிதித்துறை, பெண்கள் முன்னேற்றம்  ஆகியவை தொடர்பான அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டு, மேஜர் ஜெனரலாக உயர்வு பெற்ற லோகநாதனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, சிங்கப்பூர் திரும்பினார். அரசின் தலைமையகம் சிங்கப்பூரிலிருந்து ரங்கூனுக்கு மாறியது. காரணம் இந்தியா – பர்மா எல்லையில் போர் நடந்தது. போரை நடத்த அருகில் இருப்பது தான் சரியென இந்த மாற்றம் செய்யப்பட்டது.

ஆஸாத் ஹிந்த் தளம்

விடுதலை பெற்ற இந்திய பகுதிகளில் ஆட்சி நிர்வாகம் செய்ய அதிகாரிகளை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் விரும்பினார் நேதாஜி. அதற்காக, இப்பொழுது உள்ள ஐஏஎஸ் போல, ஆஸாத் ஹிந்த் தள் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். சிங்கப்பூரில் உள்ள ரீ கன்ஸ்ட்ரக்ஷன் கல்லூரியில் இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப் பட்டார்கள். அவ்வாறு பயிற்சி பெற்ற எழுபது அதிகாரிகள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டார்கள். பிரிட்டிஷாரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளான குடிநீர், உணவு, அகதிகள் நிவாரணம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநிறுத்துமாறு அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.

இந்தப் பணிகளை ஜப்பானுடன் சேர்ந்தே செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஜப்பானிய அதிகாரியே தலைமை தாங்குவார் என்றும் அவரே நிதியை கையாள்வார் என்றும் ஜப்பானியர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியப் பகுதிகளில் இந்திய அதிகாரிகளே எல்லா பணிகளுக்கும் தலைமை ஏற்பார் என்றும், நிதி அவர் மூலமாகத் தான் செலவிடப்படும் என்றும் தெளிவு படுத்தினார் நேதாஜி. அந்தப் பகுதிகளில் ஜப்பானிய வங்கிகளோ, நிதி நிறுவனங்களோ செயல்படக் கூடாது என்று தெரிவித்த நேதாஜி, அதற்காக  ‘நேஷனல் பேங்க் ஆப் ஆசாத் ஹிந்த்’ என்ற பெயரில் ஒரு இந்திய தேசிய வங்கியை 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கினார்.

வருவாய்த் துறை அமைச்சராக ஏ.என்.சர்க்கார் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் மூலமாக சுதந்திர இந்திய அரசு நேதாஜியின் ஒப்புதலோடு ரூ. 50, ரூ. 20, ரூ. 5, ரூ. 1, எட்டணா, நாலணா, ரெண்டனா நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டது. இரண்டு பைசா, ஒரணா மதிப்புள்ள தபால் தலைகள் வெளியிடப்பட்டன. அதில் தில்லி செங்கோட்டையில் மூவண்ணக் கொடி பறப்பது அச்சிடப்பட்டு இருந்தது.

தில்லியை நோக்கி

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்த ஜப்பானியப் படைகளுக்கு தலைவராக இருந்த ஃபீல்டு மார்ஷல் மசாடேக், போரிடுவதை ஜப்பானியப் படைகள் பார்த்துக் கொள்ளும்; இந்தியப் படை பிரசாரமும் விளம்பரமும் செய்தால் போதுமென்றார். ஜப்பானியர்களின் தியாகத்தில் இந்தியா விடுதலை பெறுவதைவிட அது அடிமைப்பட்டே கிடைக்கலாம் என்று நேதாஜி கருதினார். எனவே இந்திய மண்ணில் விழும் முதல் துளி ரத்தம் இந்தியருடையதாக இருக்க வேண்டும் என்று நேதாஜி உறுதிப்படத் தெரிவித்தார். வேறு வழியின்றி நேதாஜியின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார் ஜப்பானியத் தளபதி. அதுமட்டுமன்றி, நேதாஜி விதித்த கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் அவர் ஏற்க வேண்டியதாயிற்று. நேதாஜி விதித்த அந்த நிபந்தனைகள்:

1.  இந்திய அதிகாரிகள் தான் இந்திய வீரர்களுக்கு கட்டளை இடுவார்கள். ஜப்பானிய அதிகாரிகள் அல்ல.

2. ஒரு பட்டாலியனுக்கும் குறைவான, சிறிய அணியாக இந்திய தேசிய ராணுவம் போரிடாது.

3. பிரிட்டிஷாரிடமிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள் உடனடியாக சுதந்திர இந்திய அரசுடன் ஒப்படைக்கப்பட்டு அவர்களால் சிவில் நிர்வாகம் நடத்தப்படும்.

4. இந்திய தேசிய ராணுவம் ஜப்பானிய ராணுவத்தின் கீழ் பணி புரியாது. மாறாக அவர்களுக்கு சமமாக, இணைந்து போரிடும்.

5. இந்திய தேசிய ராணுவச் சட்டங்கள் இந்தியப் படையினருக்கு மட்டுமே பொருந்தும். ஜப்பானியர்களுக்குப் பொருந்தாது.

6. எந்த வீரராவது, அவர் ஜப்பானியராக இருந்தாலும், கற்பழிப்பில் ஈடுபட்டதாகத் தெரிந்தால் அவர் உடனே சுட்டுக் கொல்லப்படுவார்.

பர்மா பகுதிகளில் ஜப்பானியர் ராணுவம் நுழைந்த போது கற்பழிப்புப் புகார்கள் ஏராளமாக வந்தன. இந்திய மண்ணில் அது நடக்கக் கூடாது என்பதில் நேதாஜி உறுதியாக இருந்தார். நேதாஜி இந்திய விடுதலையை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை, அதன் மானம், மரியாதையும் கருத்தில் கொண்டு செயல்பட்டார். ‘இந்திய விடுதலையை பொருத்த வரையில் நீங்கள் யாரையும் நம்ப வேண்டாம், ஜப்பானியர்களைக் கூட. உங்கள் வலிமை ஒன்றே, யாரும் உங்களை ஏமாற்றாமல் காப்பாற்றும். இந்தியாவை எந்த ஜப்பானியராவது ஆதிக்கம் செய்ய முயல்வதை நீங்கள் பார்த்தால், பிரிட்டிஷாருக்கு எதிராக எவ்வளவு வீரியத்துடன் போரிடுவீர்களோ, அதே வீரியத்துடன் அவர்களையும் எதிர்த்துப் போரிடுங்கள்’ என்று நேதாஜி தன் படைவீரர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்திய தேசிய ராணுவத்தில் பத்தாயிரம் பேர் கொண்ட முதல் டிவிஷன் போருக்கு நின்றது. இரண்டாவது மூன்றாவது டிவிஷனும் வேகமாக உருவாகி வந்தது. முதல் டிவிஷனில் இருந்த காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், ஆசாத் பிரிகேட்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு கொரில்லா படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. அந்தப் பிரிவைச் சேர்ந்த வீரர்களே அதற்கு  ‘சுபாஷ் பிரிகேட்’ என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். அந்தப் படை 1943 நவம்பர் மாதம் பர்மா எல்லையை நோக்கிப் புறப்பட்டது. கொரில்லா படையினரைத் தவிர, சுபாஷ் பிரிகேட்டில் மூன்று பட்டாலியன்கள் இருந்தன.

பர்மாவின் எல்லையில் இருந்த கலாதன் நதி பகுதியில் பிரிட்டிஷ் ராணுவம் தனது மேற்கு ஆப்பிரிக்க படைப்பிரிவை நிறுத்தி இருந்தது. மேஜர் ரத்தூரி தலைமையில் இந்திய தேசிய ராணுவம் அந்தப் பகுதியை முற்றுகையிட்டது. இரண்டாவது மூன்றாவது பட்டாலியன்கள் மேஜர் ரண சிங், மேஜர் பதாம் சிங் தலைமையில் சீனக் குன்றுகள் பகுதியில் இருந்து நுழைந்தன. போரில் இந்திய வீரர்களின் தீரம் நேதாஜியின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக அமைந்திருந்தது. அர்கான் பகுதியில் குண்டு மழைக்கிடையே தீரமாகப் போரிட்ட மேஜர் மிஸ்ரா, மேஜர் மெஹர் தாஸ் ஆகியோரை  ‘சர்தார்-இ-ஜாங்’ என்று விருதளித்து கௌரவித்தார் நேதாஜி. அதேபோல தனியொரு ஆளாக ஏழு பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்ற லெப்டினன்ட் ஹரி சிங்குக்கு  ‘ஷேர்-இ-ஹிந்த்’ (ஷேர் என்றால் சிங்கம்) விருது வழங்கப்பட்டது.

1944 ஏப்ரல் 14 ஆம் தேதி மேஜர் சௌகத் அலி மாலிக் தலைமையிலான குழு இந்திய பர்மா எல்லையைக் கடந்து இம்பாலுக்குள் அருகில் உள்ள மொய்ராங் என்ற இடத்தை அடைந்தது. அது இந்தியப் பகுதி. அதை வென்று,  இந்திய மண்ணில் இந்திய தேசிய ராணுவம் முதல் முதலாக மூவர்ணக் கொடியை ஏற்றியது. அது நமக்கு புத்தாண்டு நாள். இந்தியாவுக்கு புதுயுகம் பிறந்தநாள்.

$$$

Leave a comment