-ச.சண்முகநாதன்

தமிழக நடிகர்கள் இன்னும் ‘மானாட மயிலாட’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மூத்த ஆண் கலைஞர் ஒருவர் “அவர் தான் தமிழை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தவர்” என்றும், இன்னொருவர் “அவர் வசனத்தைப் பேசி நடித்திருக்கலாம். முடியாமப் போச்சு” என்று வருத்தம் தெரிவித்தும், தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கின்றனர். ஸ்ருதி சேரவில்லை.
“அவர்தான் தமிழை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்” என்பது ஒரு படித்தவன், அறிவுள்ளவன் பேசுகின்ற பேச்சாக இருக்காது; சுயநலவாதிகளின் வாக்காகத் தான் இருக்கும்.
அன்னை பராசக்தியின் பெயரால் ஒரு நாத்திக குப்பைப் படத்தை எடுத்து அதன்மூலம் விஷக் கருத்துக்களைக் கக்கிய ஒருவர் தமிழை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தாரா? வேடிக்கையாக இருக்கிறது. கல்கி, ஜெயகாந்தன், திஜா, லாசரா இவர்களின் எழுத்தையெல்லாம் தேடித் தேடிப் படித்த தமிழர் கூட்டம் 1970களில் இருந்தது. பாரதி இன்றும் சிறப்பாக தமிழாட்சி நடத்தி கொண்டிருக்கிறான். கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் தமிழரை சிந்திக்க வைத்துக் ன்றன; காதலிக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
எவ்வளவு சாமானியர்கள் ‘அவரது’ எழுத்தைப் படித்திருக்கிறார்கள்? தமிழில் அதிகம் வாசிக்கப்பட்ட எழுத்தாளர்கள் வரிசையில் முதல் 20பேரில் கூட தேற ‘அவர்’ மாட்டார். எப்படி “அவர்தான் தமிழை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்” என்று கூச்சமில்லாமல் ஒருவரால் எப்படி பேச முடிகிறது?
சினிமா வசனம் தான் என்றாலும் ‘பராசக்தி’ப் பிதற்றல்களை பொதுமக்கள் யாரும் மேடையில் உபயோகப்படுத்தியது கிடையாது. ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனம் மிக மிகப் பிரபலம். “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்குக் கேட்கிறாய் வரி? யாரைக் கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம், உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை!” என்ற வசனம் புரளாத தமிழ் நாவே கிடையாது. இந்த வசனத்தைச் சொல்லும்போதே ஒரு உற்சாகம் பிறக்கிறது; இந்தத் தமிழ் மீது காதல் வருகிறது.
70களில் பள்ளிக்குச் சென்ற எல்லோருக்கும் தெரியும், ‘Monoacting’ என்றொரு கலை இருந்தது. Monoacting செய்பவர்கள், எல்லா மேடைகளிலும். வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசி மேடையை அதிர வைத்த காலம் அது. இரண்டாவதாக “அள்ளி அள்ளிக் கொடுத்தேனடி காந்தா” வசனம். ஆனால் எங்கும் யாரும் ‘பராசக்தி’ வசனம் பேசிக் கேட்டதே இல்லை.
“வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கட்ட வேண்டும் வரி?” என்கிற வசனம் was ranked eighth on Outlook’s 20 October 2008 list of 13 Cheesiest, Chalkiest Lines in Indian Cinema என்கிறது செய்தி. இதன் வசனகர்த்தா யார் என்று எத்தனை தமிழருக்குத் தெரியும்? சக்தி டி.கே.கிருஷ்ணசாமி என்பவர் தான் இந்த வீரத் தமிழுக்கு சொந்தக்காரர். ஆனால் இவர்கள் வியாபாரம் செய்வது திராவிட சினிமா எழுத்தாளர் ஒருவரை.
உலகமகா கவிஞனான கம்பன், மன்னனிடம் கோபம் கொண்டு “எனக்கு என் தமிழ் இருக்கிறது. நீ யார் என்னை அடிமைப்படுத்த? உன்னை விட்டு நீங்கினால் எனக்கு நன்மை தான். என்னை ஏற்றுக்கொள்ள வையமே வழிமேல் விழி வைத்துக்காத்திருக்கிறது” என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டு வெளியேறியது வரலாறு.
“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்- என்னை விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு”
மன்னனிடம் தலை குனிந்து நிற்பதைவிட தமிழால் தலை நிமிர்ந்து நிற்பேன் என்று மன்னனையே எடுத்தெறிந்து பேசிவிட்டு வெளியேறிவன் எங்கள் தமிழ்ப் புலவன் கம்பன்.
அந்தக் கம்பனை மறைத்து வெறும் அரசியல் லாபங்களுக்காக இலக்கியம் பேசும் சுயநலவாதிகளையெல்லாம் தமிழின் முகவரி என்று சுயநலத்துக்காக கொண்டாடுவதைப் பார்க்கும் பொழுது, மகாகவி பாரதியின் “விதியே விதியே தமிழச்சாதியை என் செய்ய நினைத்தாய் எனக் குரையாயோ” என்ற மனக்குமுறல் தான் நினைவுக்கு வருகிறது.
அடக்கி ஆள நினைத்த வேந்தனையே, எதிர்க் கேள்வி கேட்டு ”இனி உன்னிடம் நான் இருத்தலாகாது. உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? கிளம்புகிறேன். என்னை விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ?” என்று சுயமரியாதையை துளியும் விட்டுக்கொடுக்காதவன் நம் நாயகன்.
இங்கே ஒரு வியாபாரச் சறுக்கலுக்கே தன்னையும், தன்மானத்தையும் விற்கும் நிழல் நாயகர்கள் உலக நாயகர்களாம்!
$$$