வானம் வசப்பட்டது! நிலவில் கால் பதித்தது இந்தியா!

-சேக்கிழான்

நிலவைக் காட்டி சோறூட்டிய அன்னையர்களால் வளர்ந்தவர்கள் நாம்.  இன்று அதே நிலவில் நமது  ‘சந்திரயான் – 3’ விண்கலத்தின்  ‘விக்ரம்’ லேண்டர் இறங்கி நிலைகொண்டிருக்கிறது. அதன் குழந்தையான ‘பிரக்யான்’ ரோவர் நிலவில் இறங்கி ஆராய்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இனிவரும் தலைமுறைகளில் குழந்தைகளுக்கு சந்திரனைக் காட்டி சோறூட்டும்போது,  ‘சந்திரயான்’ அங்கு இருப்பதும் கூறப்படும். இது ஒரு பொன்னான தருணம். உலகில் இந்தியர்கள் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட தருணம்.

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் ‘லேண்டர்’ கால் பதித்துள்ளதன் மூலம் இந்தியா இந்த உலக சாதனையை 2023 ஆக. 23ஆம் தேதி மாலை 06.04 மணியளவில் நிகழ்த்தியது. நிலவு ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா,  சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முன்னணி நாடாக உயர்ந்திருக்கிறது. அதேசமயம்,  நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இச்சாதனையை மற்ற மூன்று நாடுகளும் இதுவரை நிகழ்த்தவில்லை!

அன்று ஒரே நாளில் நாடு முழுவதும் இதுவே பேசுபொருளானது. கிராமத்து விவசாயி முதல் கல்லூரி மாணவர் வரை, அரசியல்வாதி முதல் தொழிலதிபர்கள் வரை, சேரியில் குடியிருக்கும் பரம ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரையும் ’சந்திரயான்’ என்று உச்சரிக்க வைத்தது நமது விஞ்ஞானிகளின் வெற்றி. இது எளிதில் கிடைக்கவில்லை. இதற்காக உழைத்த நமது விஞ்ஞானிகளின் பெரும்படையின் சிரத்தையும் ஞானமும், கண் துஞ்சாக் கடமை உணர்வும் தான் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன. 

நிலவுக்கு  ‘அப்போலோ’வை அமெரிக்கா அனுப்பி அங்கு தனது விண்வெளி வீர்ர்களைத் தரையிறங்கச் செய்த 1964இல் தான், இந்தியாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அமைந்தது. தீர்க்கதரிசனம் கொண்ட விஞ்ஞானியான விக்ரம் சாராபாயின் தளரா முயற்சியால் இஸ்ரோ அமைந்தது. விண்வெளியை ஆராய்வதற்கான அறிவியல் பயணத்தில் இஸ்ரோ செய்துள்ள சாதனைகள் பல. அவற்றை தனி ஒரு நூலாகவே எழுதலாம்.

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்கள் உருவாக்கம், அதில் இடம்பெறும் கருவிகள் வடிவமைப்பு, அவற்றைக் கட்டுப்படுத்தும் அற்புதமான தொழில்நுட்பங்கள் என இஸ்ரோ அளித்துள்ள பணிகளின் பரப்பு மிகப் பெரியது. இதில்  கடந்த 70 ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான விஞ்ஞானிகள் தங்கள் உழைப்பை நல்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சந்திரயான் 3 திட்டத்தின் மகத்தான வெற்றி, வாழ்வின் பொருளை அளித்திருக்கிறது. இந்தியா விஞ்ஞான உலகில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

கடந்து வந்த பாதை:

நிலவை ஆராயும்  ‘சந்திரயான்’ அடித்தளமிட்டவர் நமது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். நிலவை ஆராயும் ‘சந்திரயான்’ திட்டம் அவரது ஆட்சிக்காலத்தில் தான் தொடங்கப்பட்டது. இதற்கான சிந்தனையை விதைத்தவர்கள், அன்றைய ஜனாதிபதி ஏ.பிஜே.அதுல் கலாம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, அன்றைய இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் ஆகியோர். 2003ஆம் ஆண்டு செங்கோட்டையிலிருந்து ஆற்றிய சுதந்திர தின உரையில் இதனை அறிவித்தார் வாஜ்பாய். இதற்காக இஸ்ரோவுக்கு கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டது.

அதன் பலனாக,  2008 அக். 22ஆம் தேதி பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் மூலம் ரூ. 365 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 1 விண்கலத்தை விண்ணில் இஸ்ரோ ஏவியது. அது 2009 நவ. 14ஆம் தேதி 100 கி.மீ. தொலைவில் நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 11 அறிவியல் ஆராய்ச்சிகளைத் தாங்கி சென்ற சந்திரயான் 1, நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. 310 நாட்கள் நிலவை சுற்றி வந்த சந்திரயான் 1, 2009ஆம் ஆண்டு ஆக. 28ஆம் தேதி தனது ஆராய்ச்சியை நிறுத்திக்கொண்டது.  

சந்திரயான் 1 வெற்றிக்குப் பிறகு, நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும்  ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்ட  லேண்டர்,  ‘பிரக்யான்’ என்ற ரோவர் ஆகியவை கொண்ட ரூ. 604 கோடி செலவில் உருவான சந்திரயான் 2 விண்கலம், எல்விஎம் மார்க் 3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆக. 20ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் ஆர்பிட்டர் நிலைநிறுத்தப்பட்டது.

அதன்பிறகு, உந்துகலனில் இருந்து வெளியேற்றப்பட்ட லேண்டர்,  செப். 6ஆம் தேதி நிலவின் மீது இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தோல்வியில் முடிவடைந்தது; வேகமாக தரையிறங்கியதால், நிலவின் மேற்பரப்பில் பலமாக மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் ரோவர் ஆராய்ச்சி வாகனத்தை செயல்படுத்த இயலாமல் போனது. ஆனால், 7.5 ஆண்டுகள் செயல்படும் திறன் கொண்ட ‘ஆர்பிட்டர்’ மட்டும், 3 ஆண்டுகள், 12 மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது.

சந்திரயான் 3 திட்டம்:

சந்திரயான் 2 திட்டத்தின் தோல்வியால் இஸ்ரோ முடங்கிவிடவில்லை. முன்னை விட வேகமாகப் பணியாற்றிய விஞ்ஞானிகள், நிலவில் லேண்டரை மென்தரையிறக்கம் செய்வதற்கான தொழில்நுட்பத்துடன் நவீனக் கருவிகளை உருவாக்கினர். தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டர், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விக்ரம்சாராபாய் ஏவுதளத்தில் இருந்து 2023 ஜூலை 14 ஆம் தேதி எல்விஎம் மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இது புவி சுற்றுவட்டப்பாதையில் பல நாட்கள் சுற்றி அதன் சுற்றுப்பாதையின் தொலைவு அதிகரிக்கப்பட்டது. ஆக. 5இல் இந்தக் கலன், புவி சுற்றுப்பாதையிலிருந்து விலக்கப்பட்டு, நிலவின் சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டது. மிக எளிதாக எழுதிவிட்ட இச்செயலை நிகழ்த்த நமது விஞ்ஞானிகள் துல்லியமாகக் கணித்த பல தரவுகள் ஆதாரமாக இருந்தன.

பூமியில் இருந்து புவிவட்டப்பாதையில் பயணித்து, அதை தொடர்ந்து, நிலவின் வட்டப்பாதைக்கு மாறி, பிறகு நிலவு சுற்றுப்பாதையின் தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டது. பூமிக்கும் நிலவுக்குமான 3.84 லட்சம் கிமீ தொலைவை 42 நாட்களில் கடந்து பயணித்த சந்திரயான் 3 விண்கலத்தின் உந்துகலனில் இருந்து ஆக. 17 ஆம் தேதி  ‘விக்ரம்’ லேண்டர் சாதனம் விடுவிக்கப்பட்டது. அதன்பிறகு, விண்கலனுக்கும் நிலவின் தரைப்பகுதிக்கும் இடையிலான தொலைவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 

அதன்பிறகு, ’17 நிமிட சிக்கல்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்பட்ட லேண்டர் சாதனத்தின் மென்தரையிறக்கம், கடந்த ஆக. 23, புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தரையிறங்கும் நடைமுறைகளை லேண்டர் சாதனம் தானியங்கி முறையில் செயல்படுத்தியது. மெதுவாக தரையிறங்குவதற்காக லேண்டர் சாதனத்தின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 4 ராக்கெட் என்ஜின்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் மணிக்கு 1,500 கி.மீ. வேகத்தில் இறங்கிய லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது.

நிலவில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு லேண்டர் வந்தபோது, அதன் வேகம் பூஜ்ஜியமானது. லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவுக் கணினி, விண்கலத்தில் உள்ள கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து சரியான இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையை உறுதிசெய்தது. அதன்பின் அந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்ந்த லேண்டர் தனது திரவ இயந்திரங்களின் விசையைக் குறைத்து 150 மீட்டர் உயரத்துக்கு வந்தது. இந்தக் கட்டத்துக்கு வந்ததும் லேண்டர் அப்படியே சில விநாடிகள் நிறுத்திவைக்கப்பட்டது.

எந்த இடத்தில் தரையிறங்குவது என்பதை ஆராந்த லேண்டர், மேடு பள்ளங்கள் இல்லா சமதளத்தைக் கண்டறிந்தபிறகு,  லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் கேமரா, நிலவில் தரையிறங்கும் பகுதியை துல்லியமாகப் படம்பிடித்தது. அதன் மூலம் தரையிறங்கும் இடத்தை உறுதி செய்யும் லேண்டர், 10 மீட்டர் உயரத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து லேண்டர் சாதனம், வெற்றிகரமாக நிலவின் தரையில் கால்பதித்து, உலக சாதனை படைத்தது. இப்பணியை நிறைவேற்றுவதற்கு லேண்டருக்கு, சந்திரயான் 2இல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் உதவியாக இருந்தது.

மிகவும் பரபரப்பான அபாயக் கட்டத்தை கடந்து,  ஆக. 23ஆம் தேதி அந்தப் பொன்னான மாலை நேரத்தில் நிலவின் தென்துருவத்துக்கு அருகே மான்சினஸ் சி மற்றும் போகுஸ்லாவ்ஸ்கி பள்ளங்களுக்கு இடையே லேண்டர் வெற்றிகரமாக மென்மையாக, ஒரு பறவையின் இறகு போலத் தரையிறங்கியது.

அடுத்த சில நிமிடங்களில், ‘நான் இலக்கை அடைந்துவிட்டேன்.. நீங்களும்தான்’ என்று இஸ்ரோவுக்கு லேண்டர் குறுஞ்செய்தி அனுப்பியது. பெங்களூரில் இஸ்ரோ தலைமையகத்தில் இதனைக் கண்காணித்துக் கொண்டிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.

பிரதமர் வாழ்த்து: 

தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்தபடியே, இந்தக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார். இதனை உலகிற்கு வெற்றிச் செய்தியாக காணொலியாக அவரே அறிவித்தார்.

இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்தையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினார். அப்போது அவர் “உங்கள் பெயர் சோம்நாத். சோம்நாத் என்றால் நிலா என்று பொருள். உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் வாழ்த்துக்கள். உங்களை விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பேன்” என்றார்.

சோம்நாத் பேசும்போது “அன்புள்ள பிரதமரே  நிலவில் லேண்டரை வெற்றிகரமாகத் தரையிறக்கிவிட்டோம். இந்தியா இப்போது நிலவில் அடியெடுத்து வைத்துள்ளது. இஸ்ரோவின் தலைமை மற்றும் விஞ்ஞானிகளின் சிறப்பான பணியே இந்த வெற்றிக்கு காரணம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சொன்னபடியே, தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு, வெளிநாட்டுப் பயனம் முடிந்தவுடன், பெங்களூரு இஸ்ரோ மையத்திற்கு ஆக. 26இல் நேரில் வந்து விஞ்ஞானிகளைச் சந்தித்து வாழ்த்தினார் பிரதமர் மோடி.

14 நாட்கள் ஆய்வு:

நிலவின் பரப்பில் வெற்றிகரமாக லேண்டர் இறங்கிய பிறகு,  ‘பிரக்யான்’ ரோவர் ஆராய்ச்சி வாகனம் தரையிறங்குவது உறுதி செய்யப்பட்டது. பெங்களூரு, பைலாலுவில் உள்ள இந்திய ஆழ்விண்வெளி மையத்தில் இருந்து அளிக்கப்பட்ட சமிக்ஞைகளின் அடிப்படையில், லேண்டர் சாதனத்தின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த சரிவுத்தளம் திறக்கப்பட்டது.

அதன்பிறகு, சரிவுத்தளத்தின் வாயிலாக 6 சக்கரங்கள் கொண்ட 26 கிலோ எடையுள்ள ரோவர் கருவி மெதுவாக ஊர்ந்து சென்று ஆக. 24, 00.30 மணியளவில் தரையிறங்கியது. ரோவரும் லேண்டரும் பரஸ்பரம் படம் எடுத்து, அதை பூமியில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

நிலவின் தரைப்பகுதியில் 14 நாட்கள் பயணிக்கும் ரோவர், மெதுவாகப் பயணித்து நிலவின் பரப்பை ஆராய்ச்சி செய்கிறது. சூரிய ஒளித் தகடுகள் மூலம் கிடைக்கும் ஆற்றலில் இயங்கும் லேண்டரிலும் ரோவரிலும் பொருத்தப்பட்டுள்ள அறிவியல் கருவிகள் ஆய்வு ப்பணிகளை மேற்கொள்கின்றன.

நிலவின் மேற்பரப்பில் உள்ள மண், கற்கள், கனிமங்களின் தன்மை ஆராயப்படும். மேலும் நிலவில் நீர் பனி இருக்கிறதா? என்பது ஆராயப்படுகிறது. நிரந்தரமாக நிழல் பகுதியில் அமைந்திருக்கும் தென் துருவத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக்க் கூறப்படுகிறது. நிலவின் வளிமண்டலப் பரிணாமங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும். இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தககட்டமாக சந்திரயான் 4 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலம், நிலவுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து, ககன்யான் திட்டத்தின் மூலம் நிலவுக்கு ரோபோக்களையும், அதை தொடர்ந்து மனிதனையும் அனுப்பவும் இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், விண்வெளித் துறையில் மட்டுமல்லாது, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையிலும் இந்தியா முன்னேறிவிட்டதை உலக நாடுகள் உணர்ந்துவிட்டன. சந்திரயான் திட்டத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தியது ஏ.இ. துறை தான். பூமிக்கு 3.84 லட்சம் தொலைவில் உள்ள பூமியின் துணைக்கோளான சந்திரனைச் சுற்றிவரும் உந்துகலனையும், ஆர்பிட்டரையும், நிலவில் இறங்கியுள்ள லேண்டர், அதிலிருந்து நிலவில் இறந்தியுள்ள ரோவர் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது மாபெரும் மானுட சாதனை. இதனை நிகழ்த்தியதன் மூலமாக பாரதம் பெருமை பெறுகிறது.

”வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று பாடிய தமிழின் மகாகவி பாரதி முன்னுரைத்த இலக்கை இன்று நாடு நிறைவேற்றி இருக்கிறது. உலகின் தலைமைப் பொறுப்பை பாரதம் ஏற்பதற்கான பாதையில் இது ஒரு மைல் கல். இந்திய விஞ்ஞானிகள் சாதனைகள் தொடர்கின்றன.


சாதனை நிகழ்த்திய நாயகர்கள்

சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றிக்கு ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்களின் சேவை காரணமாக உள்ளது. எனினும் இதனை தலைமை தாங்கி நடத்தியவர்களை அறிந்துகொள்வது அவசியம்

சந்திரயான் 1 திட்டத்தின் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 திட்டத்தின் திட்ட இயக்குநர் வனிதா முத்தையா, சந்திரயான் 3 திட்டத்தின் திட்ட இயக்குநர் ப.வீரமுத்துவேல் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பது நமக்கு கூடுதல் பெருமிதம் அளிக்கிறது.

சந்திரயான் 1 திட்டத்தை (2008) தலைமை தாங்கியவர் அன்றைய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர். சந்திரயான் 2 (2019) திட்டத்துக்கு தலைமை தாங்கியவர் அன்றைய இஸ்ரோ தலைவர் சிவன். சந்திரயான் 3 திட்டத்துக்கு (2023) தலைமை தாங்கியவர் இன்றைய இஸ்ரோ தலைவர் எஸ்.சோநாத்.

இவர்கள் அல்லாது, சந்திரயான் 3 திட்ட அணியில், விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநர் எஸ்.உன்னிகிருஷ்ணன், துணை திட்ட இயக்குநர் கே.கல்பனா, பெங்களூரு யுஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின்  இயக்குநர் எம்.சங்கரன், துணை இயக்குநர் வனிதா முத்தையா (இவர் சந்திரயான் 2 திட்டத்திலும் பங்கேற்றவர்), திருவனந்தபுரம் திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தின் இயக்குநர் வி.நாராயணன், பெங்களுரிலுள்ள இஸ்டிராக் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.


ஆய்வுப் பணிகள் என்னென்ன?

நிலவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்கியுள்ளது. அந்தப் பகுதியில்தான் சந்திரயான் 3 தனது ஆய்வுகளைச் செய்து வருகிறது. இந்த ஆய்வுகளில்,  சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர், அதிலிருந்து நிலவின் தரையில் இறங்கிய ‘பிரக்யான்’ ரோவர், சந்திரயான் 3 உந்துவிசைக் கலன், சந்திரயான் 2 ஆர்பிட்டர் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஈடுபட்டு வருகின்றன.  

நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளப் போவது என்னவோ தாய் (லேண்டர்), சேய் (ரோவர்) கலன்கள் மட்டுமே. ஆனால், அந்தத் தரவுகளை அனுப்புவதில் லேண்டருடன், சந்திரயான் 2இன் ஆர்பிட்டரும்,சந்திரயான் 3 இன் உந்துவிசைக் கலனும் பங்களிக்கின்றன.

நிலவில் ஹீலியம் போன்ற வாயு மூலக்கூறுகள், நிலவு உருவான விதம், பனிக்கட்டிகளின் நிலை, தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் முக்கிய பணியாகும். நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்கலாம் என்பதால் இங்கே ஆய்வு செய்ய உலக நாடுகள் விரும்புகின்றன.

ஏற்கனவே நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1960 களின் தொடக்கத்தில், நிலவில் அப்போலோ தரையிறங்குவதற்கு முன்பு, விஞ்ஞானிகள் நிலவில் தண்ணீர் இருக்கலாம் என்று ஊகித்தனர். ஆனால் 1960 களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் அப்போலோ பூமிக்கு கொண்டு வந்து திரும்பிய மாதிரிகள் உலர்ந்ததாக காணப்பட்டது.  இதனால் அதில் தண்ணீர் இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து 2008 ஆம் ஆண்டில், பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் அந்த மாதிரிகளை மறுபரிசீலனை செய்தனர். அதில் கண்டுபிடிக்கப்பட்ட எரிமலை துகள்களின் உள்ளே இருந்த கண்ணாடி போன்ற துகள்களின் உட்பகுதிக்குள் ஹைட்ரஜனைக் கண்டறிந்தனர். அதாவது தண்ணீருக்கான மூல ஆதாரம் இதில் இருந்தது. அதன்பின் 2009 ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் 1 ஆய்வில் இங்கே இருந்த நீர் கண்டுபிடிக்கப்பட்டது.  

ஆனால் அங்கிருக்கும் நீரின் அளவு, தன்மை ஆகியவை இன்னும் கண்டறியப்படவில்லை. அங்கே உள்ளே நீரை ஆய்வு செய்வதன் மூலம் பல விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும். முக்கியமாக பூமி மீது மோதிய எரிகற்கள் நிலவின் மீதும் மோதி உள்ளன. இதனால் அந்த கற்களின் பண்புகளை அறிந்து கொள்ள முடியும். அதேபோல அங்கே உள்ள எரிமலையைப் பற்றி அறிய முடியும்.  

தாய்க் கலமான லேண்டரில் மொத்தம் நான்கு கருவிகள் உள்ளன. அந்தக் கருவிகள்:

1 ரம்பா (RAMBHA) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கருவி. அதன் முழுப் பெயர் Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere.

2 சேஸ்ட் (ChaSTE) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கருவி. அதன் முழுப் பெயர், Chandra’s Surface Thermo physical Experiment

3 ஐ.எல்.எஸ்.ஏ என அழைக்கப்படும் இந்தக் கருவியின் முழுப் பெயர் Instrument for Lunar Seismic Activity

4 எல்.ஆர்.ஏ. – இதன் முழுப் பெயர் LASER Retroreflector Array

முதல் கருவியான ரம்பா, நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்யும். நிலவில் வளிமண்டலம் இல்லையென்பதால் பகலில் அதீத வெப்பநிலையுடனும் இரவில் உறைபனிக் குளிரோடும் இருக்கும். அந்த நிலையை இந்தக் கருவி ஆய்வு செய்யும். நிலாவில் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து மண்ணில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்களை இந்தக் கருவி ஆய்வு செய்யும்.

இவற்றை ஆய்வு செய்வதன் மூலம், அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வைத்து அதன் வளிமண்டலம் சாதாரணமாக உள்ளதா அல்லது அயனிகள் ஆக்கப்பட்ட வளிமண்டலமாக உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்தத் தரவுகள் நிலவின் வயதைக் கணக்கிட உதவும்.

இரண்டாவது கருவியான சேஸ்ட், நிலவில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டதா அல்லது அந்த வெப்பத்தில் உடையக்கூடிய பொருட்களாக உள்ளனவா என்பது போன்ற தகவல்களைக் கண்டறியும். அதோடு, துருவப் பகுதியில் வெப்பத்தால் அந்த மண்ணில் ஏற்படும் விளைவுகளை இதன்மூலம் அறிய முடியும். அதோடு, மண் கெட்டியாக உள்ளதா, துகளாக உள்ளதா அல்லது தூசுகளாக உள்ளதா என்பன போன்ற விஷயங்களையும் அது ஆராயும்.

மூன்றாவது கருவியான ஐ.எல்.எஸ்.ஏ, நிலாவின் மேற்பரப்பில் இருக்கும் நில அதிர்வுகளை ஆராயும். பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகளைச் சேகரிக்கும்.

நான்காவது கருவியான எல்.ஆர்.ஏ, நிலாவின் சுழற்சியை ஆய்வு செய்யும். நிலா பூமியைச் சுற்றி வரும்போது அதன் இயக்கம் எப்படி உள்ளது, அந்த இயக்கம் சீராக உள்ளதா இல்லையா, அதிர்வுகளுடனேயே சுற்றுகிறதா என்ற தகவல்களைச் சேகரிக்கும்.  

இவை தவிர, லேண்டரில் ஒரு பிரதிபலிக்கும் தகடு பொருத்தப்பட்டுள்ளது; அந்தத் தகட்டில் பூமியில் இருந்து அனுப்பப்படும் லேசர் கதிர்வீச்சு எதிரொலித்து வரும். அதை வைத்து நிலவின் இயக்கத்தை விஞ்ஞானிகள் அளவிடுவார்கள்.  இந்த மாதிரியாக அளப்பதன் மூலமாக அது பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது, ஆண்டுக்கு எவ்வளவு தொலைவு விலகிச் செல்கிறது என்பன போன்ற தகவல்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.

அதேசமயம்,  சேய்க் கலமான ரோவர் நிலவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

இதில் இரண்டு கருவிகள் உள்ளன. அவை,

1 எல்.ஐ.பி.எஸ் எனப்படும் LASER Induced Breakdown Spectroscope

2 ஏ.பி.எக்ஸ்.எஸ் எனப்படும் Alpha Particle X-Ray Spectrometer

இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது.

ஒரு கன கிராம் மண்ணை எடுக்கிறது என வைத்துக்கொண்டால், அதற்குள் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும்.

 ‘விக்ரம்’ லேண்டர் மற்றும் அதனுள் வைக்கப்பட்ட  ‘பிரக்யான்’ ரோவர் ஆகியவற்றின் செயல்படும் காலம் 14 நாள்கள் மட்டும்தான். அதன் பிறகு சூரிய ஒளி கிடைக்காமல் அவற்றால் இயங்க முடியாமல் போய்விடும். எனினும் அவற்றை கூடுதலாக இயங்க வைப்பதற்கு இஸ்ரோ ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது.

சூரிய ஒளி படும் 14 நாள்களிலும் ரோவரில் இருக்கும் மின்கலங்களை போதுமான அளவுக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டு, அதன் பிறகு 14 நாள்களுக்கு ரோவரை தூக்க நிலையில் வைத்துவிட இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் மின்சக்தி சேமிக்கப்பட்டு இருக்கும். மீண்டும் சூரிய ஒளி படத் தொடங்கியதும் ரோவரை இயக்குவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்வார்கள். அப்படி இயங்கினால் அது இஸ்ரோவுக்கு கூடுதலான வெற்றியாக இருக்கும்.

நிலவின் தென் துருவத்தில் எப்போதும் சூரிய ஒளி இருப்பதில்லை. குறிப்பாக சந்திரயான் 3 தரையிறங்கும் பகுதியில் ஒரு மாதத்திற்கு 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவு என்ற நிலை நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நிலவில் ஒரு நாள் நிறைவடைய பூமியில் 28 நாட்கள் ஆக வேண்டும். ஏனெனில், நிலா தன்னைத் தானே சுற்றி வர பூமியின் நாள் கணக்குப்படி 28 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அதனால்தான், இஸ்ரோ 14 நாட்கள் பகல் இருக்கும் காலகட்டத்தில் ஆய்வு செய்ய ஏதுவாகக் கணக்கிட்டு விண்கலத்தை அனுப்பியுள்ளது.

இதன்மூலம் தரையிறங்கிய பிறகு 14 நாட்களுக்கு லேண்டர், ரோவர் இரண்டும் அவை மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொண்டு பூமிக்குத் தகவல்களை அனுப்பிவிடும்.

சந்திரயான் 3 லேண்டரை சுமந்து வந்த உந்துவிசைக் கலனும் தற்போது நிலவைச் சுற்றி வருகிறது. இது அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நிலவின் மேற்பரப்பைச் சுற்றி வர முடியும் என்றும் அதற்கான எரிபொருள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிட்டர் போன்று பல கட்ட ஆய்வுக் கருவிகள் சென்சார்கள் உந்துவிசைக் கலனில் கிடையாது. ஆனால், சந்திரயான் 3 உந்துவிசைக் கலன் பூமியின் வளிமண்டலத்தையும் சூரிய குடும்பத்தின் கோள்களின் நிலையையும் கண்காணிக்கும் வகையில் செயல்படும். நிலவின் மேற்பரப்பில் விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கண்டறிய முடியும்!


தோல்வியும் வெற்றிக்கு ஒரு படியே!

2019 செப். 6, 2019 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த அறிவியல் உலகமும், சந்திரயான் 2ன் தரை இறங்குதல் நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 2.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, இன்ஜின் கோளாறால் நிலவின் மேற்பரப்பில் மோதியது. சந்திரயான் 2 திட்டத்தின் தரையிறங்கும் திட்டம் தோல்வி அடைந்தபோதும், அதன் ஆர்பிட்டர் நிலவை தொடர்ச்சியாக சுற்றி வந்தது.

அதாவது, ‘சந்திரயான் 2 திட்டம் முழுமையாகத் தோல்வி அடையவில்லை. பகுதியாக மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. தற்போது இதிலிருந்து நம்மால் பாடம் கற்றுக் கொள்ள முடியும்

ஆரம்பத்தில் ஒரு வருடம் மட்டுமே ஆர்பிட்டர் செயல்படும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், எரிபொருள் மிச்சத்தால் ஏழரை வருட காலம் சந்திரயான் 2 ஆர்பிட்டரால் நிலவை சுற்றிவர முடியும் எனத் தெரியவந்தது.

நிலவைச் சுற்றி போலார் சுற்றுவட்டப் பாதையில், ஆர்பிட்டர் சென்று கொண்டிருக்கிறது. அது தரும் தரவுகளை வைத்து பல ஆராய்ச்சிகளை இவ்வளவு நாட்கள் இஸ்ரோவால் செய்ய முடிந்தது. புகைப்படங்கள் எடுக்கக்கூடிய உள்கட்டமைப்பு இதில் இருப்பதால், நிலவின் வெவ்வேறு கோணங்களினாலான புகைப்படங்கள் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்தது.

இதுதான் சந்திரயான் 3 திட்டத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு சாதகமாகவும் அமைந்தது. கடந்த ஆக. 21 ஆம் தேதி சந்திரயான் 2இன் ஆர்பிட்டர், சந்திரயான் 3 லேண்டரோடு தொலைதொடர்பு ஏற்படுத்திக் கொண்டது. 

நிலவை சந்திரயான் 3 நெருங்கியவுடன், அதை வரவேற்றதே சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர்தான். அது சரியாக வேலை செய்து வருவதால்தான் சந்திரயான் 3 இல் ஆர்பிட்டரை வைக்காமல் இஸ்ரோ அனுப்பி இருக்கிறது.

சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களால்தான், சந்திரயான் 3 முறையாக, நேர்த்தியாகத் தரையிறங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.  

விடா முயற்சியே வெற்றிக்கு வழி என்று சும்மாவா சொன்னார்கள்?

$$$

Leave a comment