-பிபேக் தேப்ராய்
பொருளாதார நிபுணர் திரு. பிபேக் தேப்ராய், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறார்; ‘நிதி ஆயோக்’ உறுப்பினர். அண்மையில் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய இவரது இந்தக் கட்டுரை 14 ஆகஸ்ட் 2023இல் ‘மின்ட்’ பத்திரிகையில் வெளிவந்தது. இதனை தமிழில் வழங்கி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…

இந்த விடுதலைத் திருநாளில் 1947இலிருந்து நாம் சாதித்தது என்ன என்று, கோபத்துடன் அல்ல வியப்புடன், திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த காலம் நிகழ்காலத்துடனும் நிகழ்காலம் எதிர்காலத்துடனும் உரசலின்றி கச்சிதமாய் இழைந்து போகிறது. காலனி ஆதிக்கத்தில் இருந்த மனப்பான்மையை நாம் ஓரளவு மீறி வந்துள்ளோம் என்பதற்கு அண்மையில் வெளியாகி உள்ள மூன்று குற்றவியல் சட்டங்களே சான்று. மறந்து போன நம் பாரம்பரியத்தை மீட்டு வருகிறோம் என்பதற்கு மற்றுமொரு அடையாளம் செங்கோல்.
தீநுண்மீ நோய்த் தொற்றை இன்றைய இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிகரமாக வெளிவந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாடு தழுவிய அளவில் நம்முடைய அடித்தளங்கள் வலிமையாகவும் பலமாகவும் உள்ளன. நமது வளர்ச்சி விகிதம் 6.5 %இலிருந்து 7% ஆக இருக்கும் என்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமல்ல.
விடுதலையின் நூற்றாண்டை நோக்கி நாம் பயணிக்கும் இந்த அமிர்த காலத்தில் ‘வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்’ என்பது நமது தாரக மந்திரமாக இருக்கிறது. கவிஞர் ஹோரேஸின் மேற்கண்ட கூற்று எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்தியாவுக்கு அது பொருந்தாது. ஏனெனில் அதன் எதிர்காலம் பெருமையும் நம்பிக்கையும் 2047 இல் ‘வளர்ச்சியடைந்த நாடு’ என்றாக வேண்டும் என்ற லட்சியமும் கொண்டதாக உள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பில் (OECD) இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் ‘வளர்ச்சியடைந்த நாடு’ என்பதற்குப் பொருள் என்று யாராவது கருதலாம். ஆனால் அதைத் தவிர ‘வளர்ச்சியடைந்த’ என்பதற்கு தெளிவான விளக்கங்கள் ஏதுமில்லை. ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் அளவு, டாலருக்கு நிகரான மதிப்பு அல்லது வாங்கும் சக்தி, தனி நபர் வருமானம் போன்றவையும் வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகளில் சில. இது தவிர, மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) பன்முகப் பரிமாணத்தில் வறுமைக் குறியீடு (MDPI) என்று இன்னும் சில விஷயங்களும் உள்ளன. உண்மையான ஒட்டுமொத்த வளர்ச்சி (GDP), மக்கள் தொகை வளர்ச்சி, பண வீக்கம், அந்நிய பண பரிமாற்று விகிதம் என ஏனைய விஷயங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, 2047 இந்தியா உயர் நடுத்தர வகுப்பு வருமானம் உள்ள நாடாக மாறிவிடும்; வறுமை என்பதன் இயல்பும் மாறிவிடும் என்று பொருளாதாரக் கணிப்புகள் கூறுகின்றன. (பீமாரு மாநிலங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்தில் கொள்க). *1
இந்த மாற்றங்கள் விரைவாகவும், தரம் மிக்கதாகவும், உறுதியாகவும் ஏற்பட வேண்டுமென எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்கான நிகழ்ச்சி நிரலாக சீர்திருத்த நடவடிக்கைகள் உள்ளன. அது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. சந்தை (நிலம், உழைப்பு, மூலதனம்) வரிச் சீர்திருத்தம், அரசு செலவினத்தில் முன்னுரிமை, அரசின் பங்களிப்பு குறித்து மறுபரிசீலனை, (சமூக, தூலமான) கட்டமைப்பு, அரிக்கும் துருவை (தேவையற்றவை) நீக்குவது, அதிகார மாற்றமும் அதிகாரப் பரவலாக்கலும், தொழிலாளர் மற்றும் தொழில் சந்தையை முறைப்படுத்தல், நகரமயமாக்கல், சட்டம் மற்றும் நீதி துறையின் செயல்திறனை அதிகரித்தல் என பல்வேறு விஷயங்கள் சீர்திருத்த நிரலில் உள்ளன. இதில் இன்னும் சில விஷயங்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் 2047 இறுதி இலக்கு ஆண்டு என்பதை கவனத்தில் கொள்ளவும்.
என்னைப் பொருத்த வரையில் இவை அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது அரசியல் சாசனம். மற்றவை எல்லாம் பிறகுதான். 1950இல் நமக்குக் கிடைத்த அரசியல் சாசனம் இன்று நம்மிடம் இல்லை. அது பலமுறை திருத்தப்பட்டுவிட்டது. அந்த்த் திருத்தங்கள் அனைத்துமே நம்மை மேம்படுத்தியுள்ளன; அதற்காகக் கொண்டுவரப்பட்டன என்று கூற முடியாது. 1973இல் ‘அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை’ மாற்ற முடியாது * 2 என்று நமக்குக் கூறப்பட்டது. அது நாடாளுமன்றத்தின் மூலம் எழுகின்ற மக்கள் விருப்பமா, மீறலா என்பது நீதிமன்றங்களின் விளக்கத்தைப் பொறுத்ததே என்றும் கூறப்பட்டது.

A new Constitution has to be rewritten. We have said it again and again. India has blindly borrowed her Constitution and her democratic institutions from the West.
Nehru did not bother to adapt them to India's own particular needs, to the immense diversity of her people, who have shown throughout the ages that they are bound to India by something else, than mere petty nationalism.
India's civilization is at least 7000 years old and should have a Constitution framed after her own history. Not only that, but the whole democratic system of India has to be reshaped to suit that new, that true nation, which will manifest the wonder that Is India.
-Francois Gautier
(பிரெஞ்ச் எழுத்தாளர், சிந்தனையாளர்)
எனக்குப் புரிந்தவரை, 1973இல் வழங்கப்பட்ட தீர்ப்பு இப்போதுள்ள, அவ்வப்போது திருத்தப்பட்ட, அரசியல் சாசனத்துக்குப் பொருந்துமே தவிர புதிய சாசனத்திற்கு பொருந்தாது.
சிகாகோ சட்ட பல்கலைக்கழகம், எழுதப்பட்ட அரசியல் சாசனம் குறித்து பல்வேறு நாடுகளில் நடத்திய ஆய்வில், அவ்வாறான சாசனங்களின் சராசரி ஆயுள் 17 ஆண்டுகள் மட்டுமே என்று தெரிய வந்துள்ளது. நாம் நமது அரசியல் சாசனத்தைப் பொருத்த வரை, 1950லிருந்து 73 ஆண்டுகள் கடந்து 2023இல் இருக்கிறோம்.
நம்முடைய அரசியல் சாசனம் 1935இல் பிரிட்டிஷார் இயற்றிய இந்திய அரசு சட்டம் என்ற சட்டத்தையே பெரும்பாலும் தழுவி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் அதுவுமொரு காலனிய ஆதிக்கத்தின் தொடர்ச்சிதான். நம் அரசியல் சாசனத்தின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட கமிஷன் 2002இல் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அது ஒரு அரை மனதுடன் செய்யப்பட்ட முயற்சி.
சட்ட சீர்திருத்தங்களின் பல்வேறு அம்சங்களைப் பார்க்கும் போது ‘இங்கொரு தையல்… அங்கொரு ஒட்டு’ என்பது உதவாது. 2047இல் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்குத் தேவைப்படும் அரசியல் சாசனம் என்ன? இதனைக் குறித்து, முன்னர் இந்திய அரசியல் சாசன சபையில் நிகழ்ந்தது போல, மீண்டும் முதல் கொள்கையில் இருந்து நாம் விவாதத்தைத் தொடங்க வேண்டும்.
அரசு என்பது பொது நலன்களை வழங்குவதற்காகவே. அதை எந்த அளவுக்கு வழங்க வேண்டும்? எத்தனை மாநிலங்கள் தேவை? மாநிலங்களை ஏற்படுத்துவது மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டா அல்லது பரப்பளவைக் கொண்டா? இன்றுள்ள மாநில அமைப்பு தரம் குறைவாக, தாழ்ந்ததாக உள்ளது ஏன்? 1955இல் அமைக்கப்பட்ட மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் மேற்சொன்னவற்றை கருத்தில் கொண்டு ஆய்வு செய்தது. ஆனால் மாநிலங்கள் உருவாவது, அதைத் தவிர மற்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.
அதேபோல உள்ளூர் அமைப்புகள் மற்றும் ஏழாவது அட்டவணை *3 பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. வளர்ச்சி என்பது நகரமயமாக்கல் என்றால் 73, 74 ஆவது திருத்தத்தை நாம் ஏன் முன்மாதிரி எனப் புகழ வேண்டும்? *4
ஆட்சி நிர்வாகம் என்பதில் பெரும் பகுதி, சட்டம் ஒழுங்கு மற்றும் விரைவாக சச்சரவுகளைத் தீர்ப்பதாகும். அதில் ஒரு பகுதியான குற்றவியல் சட்டம் குறித்து அண்மையில் வெளிவந்துள்ள சட்ட வரைவுகள் பேசுகின்றன. தேங்கியுள்ள வழக்குகளை விரைவாகத் தீர்ப்பது பற்றி சலித்துப் போகும் அளவு பேசியாகி விட்டது. இதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன? அது உயர் நீதிமன்றங்களை எவ்வளவு சிறப்பாக கட்டுக்குள் வைத்திருக்கிறது? அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பார்த்தால் மிகக் குறைந்த அளவாகவே அது இருக்கிறது.
நீதித்துறை பணி நியமங்கள் பற்றிய கருத்தென்ன?
மாநில அரசில் ஆளுநர்களின் பங்களிப்பு என்ன?
அரசாட்சியின் மூன்று தூண்களாக நிர்வாகம் [அதிகாரிகள், பணியாளர்கள்], சட்டமியற்றுதல் [சட்ட மன்றம், நாடாளுமன்றம்], நீதித்துறை [கீழமை நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை] ஆகியவை உள்ளன. அரசியல் சாசனத்தின் சில ஷரதுகள் திறமையான நிர்வாகத்திற்கு, குறைந்தபட்சம் இந்திய ஆட்சிப் பணியில் இடையூறாக உள்ளன. தேர்தல் சீர்திருத்தம் மற்றும் ராஜ்யசபையின் [நாடாளுமன்ற மேலவை, கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் உள்ள சட்ட மன்ற மேலவை] பங்களிப்பு என்ன? நாட்டின் சில பகுதிகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி அவற்றை மைய நீரோட்டத்தில் இருந்து விலக்கியே வைத்திருக்க வேண்டுமா ? (370 சட்ட பிரிவு மட்டுமல்ல, இன்னும் சிலது அது போல உள்ளன).
அரசின் பங்களிப்பைக் குறைப்பது மற்றும் அதுபற்றி மீள் கவனம் செலுத்துவது, சந்தையைக் கருத்தில் கொண்டு சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்றால் அரசியல் சாசனத்தின் வழிகாட்டுக் கொள்கைகளை எப்படி அவதானிப்பது? என் வாதத்திறனை நிரூபிக்கவோ, உங்களைக் களைப்படைய செய்வதற்காகவோ இந்தப் பட்டியல் தயாரிக்கப்படவில்லை.
நாம் விவாதிக்கத் தொடங்கிய விஷயமும், முடிக்கும் விஷயமும், அரசியல் சாசனம்தான். சில திருத்தங்களால் அதைத் தீர்க்க முடியாது. நாம் மீண்டும் வரைவு மேசைக்குச் சென்று முதல் கொள்கை கூறுவது என்ன என்று முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
சாசனத்தின் முன்னுரையில் உள்ள சோஷலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் என்ற வார்த்தைகளின் பொருள் இன்று என்ன என்று நாம் கேட்க வேண்டும். மக்களாகிய நாம் ஒரு புதிய அரசியல் சாசனத்தை நமக்கே வழங்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: *1 BIMARU - பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய- மாநிலங்கள் என்ற சொல்லாடல் 1980களில் அசீஸ் போஸ் என்பவர் உருவாக்கியது. பொருளாதார வளர்ச்சியில், கல்வி, சுகாதார, மருத்துவ வசதிகளில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் என்பதைக் குறிப்பிடுவது. *2. இந்திய உச்சநீதி மன்றம் 1973ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், “இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை நாடாளுமன்றம் கொண்டுவரும் திருத்தங்களால் மாற்ற முடியாது” என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. *3. அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணை மத்திய, மாநில அரசுக்கிடையேயான அதிகார பகிர்வு குறித்தது. *4. 73ஆவது திருத்தம்- கிராமப்புறங்களில் உள்ள பஞ்சாயத்துகளின் அதிகாரம், அதில் பட்டியலின மக்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வரையறை செய்கிறது. 74ஆவது திருத்தம் நகர்ப்புற நகராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிர்ணயிப்பது. காண்க: There’s a case for ‘we-the-people’ to embrace a new constitution By BIBEK DHEBROY / mint (14.08.2029).
$$$