பாரதி போற்றும் தேசியக் கல்வி- 1

-சேக்கிழான்

1. கல்வி சிறந்த தமிழ்நாடு!

தமிழன்னையின் தவப்புதல்வர் மகாகவி பாரதி. ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின் வாராது வந்த மாமணி அவர். அடிமைப்பட்ட நாட்டில் பிறந்திருந்தாலும், சுதந்திரத்துக்காக ஏங்கிய அவரது உள்ளத்தில் கனன்ற தேசபக்தியும், சமுதாய உணர்வும், தாய்மொழிப் பற்றும், அற்புதமான படைப்புகளாக மாறி, இன்றும் நமக்கு வழிகாட்டுகின்றன.

ஒரு நாட்டின் உயர்வுக்கு கல்வியே அடிப்படை என்ற எண்ணம் மிகுந்தவரான பாரதி, தமிழ்நாட்டைப் பற்றிய பெருமிதம் தொனிக்கும் வகையில் பாடிய பாடல் இது…

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
   கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
   பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
   வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
   யாரம் படைத்த தமிழ்நாடு 

      (தேசிய கீதங்கள் – செந்தமிழ்நாடு: 5-6)

தமிழ் மட்டுமல்லாது, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி, வங்கம், பிரெஞ்சு மொழிகளும் அறிந்தவர் அவர். எனவே தான் அவரால்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
   இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
   இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
   வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
   பரவும்வகை செய்தல் வேண்டும்.

      (தேசிய கீதங்கள் – தமிழ்: 1)

என்று பாட முடிந்தது.

அதே வேளையில், தனது காலத்தில் நாட்டில் நிலவிய அறியாமை, அடிமைத்தனம், கல்வியில் பின்தங்கிய நிலை குறித்த கவலைகளும் இருந்தன. சொல்லப்போனால், கல்வியறிவு குறைந்ததே நமது அடிமைத்தனத்திற்குக் காரணம் என்ற எண்ணத்தையே கொண்டிருந்தார் பாரதி.

“காளயுக்தி என்பது கால யுக்தி; அதாவது, காலத்தின் பொருத்தம்; காலம் இந்த வருஷத்தின் ஆரம்பத்தில் எந்தப் பெருஞ் செயல்களுக்கும் மிகவும் பொருத்தமாகச் சமைந்திருக்கிறது.

தேசீயக் கல்வி, மனுஷ்யஜாதியின் விடுதலை, இவ்விரண்டு பெருங் காரியங்களைத் தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருக்கிறது.

இவற்றுள் மனுஷ்யஜாதியின் விடுதலை நிறவேற வேண்டுமாயின் அதற்கு பாரத தேசத்தின் விடுதலை இன்றியமையாத மூலாதாரமாகும். 

இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்கு தேசீயக் கல்வியே ஆதாரம்.”

      (தேசியக் கல்வி-2- சுதேசமித்திரன்)

-என்று தனது தேசியக் கல்வி கட்டுரைத் தொடரின் இணைப்புக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி. கல்வியால் மட்டுமே நாட்டை மாற்ற முடியும் என்ற மாறாத நம்பிக்கை இந்தக் கட்டுரையில் வெளிப்படுகிறது.

இக்கருத்தை மனிதனின் நாற்றங்கால் பருவமான மழலைப் பருவத்திலேயே விதைப்பது முக்கியம் என்றும் அவர் கருதி இருக்கிறார். எனவே தான், குழந்தைகள் பாடி மகிழும் விதமாக ‘பாப்பா பாட்டு’ எழுதியபோதும் கூட, அதிலும் கல்வியின் முக்கியத்துவத்தை விதைக்கிறார் பாரதி.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
      கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு!
மாலை முழுதும் விளையாட்டு – என்று
      வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!  

       (பல்வகைப் பாடல்கள் - பாப்பா பாட்டு: 6)   

கல்வியானது இனிமையானதாக இருக்க வேண்டும்; விளையாட்டும் பாட்டும் கூடியதாக, களிப்பூட்டக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவரது தாபம் இப்பாடலில் வெளிப்படுகிறது.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
      தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் – அதைத்
      தினமும் புகழ்ந்திடடி பாப்பா!   

       (பல்வகைப் பாடல்கள் - பாப்பா பாட்டு: 12)   

-என்று பாரதி பாடுகையில் தமிழ் மொழியின் உயர்வும் பாரத தேசத்தின் உயர்வும் இரு விழிகளாகக் கருதிய அவரது நோக்கும் புரிகிறது.

வைரத்தின் ஒவ்வொரு முகப்பும் ஒளியுடன் திகழ்வது போல, மகாகவி பாரதியின் கவிதைகளும் கட்டுரைகளும் தேசநலனை மட்டுமே ஒளியாக உமிழ்கின்றன. அவற்றில் கல்விக்கு அவர் அளிக்கும் இன்றியமையாமையை மட்டும் இங்கு நாம் தொடராகத் தொகுத்துக் காணலாம்.

பாரதியின் கல்விச் சிந்தனைகளை, ஆன்மிகக் கல்வி, சுதேசிக் கல்வி, தாய்மொழிக் கல்வி, இளைஞர் கல்வி, பெண் கல்வி, தொழிற்கல்வி எனப் பலவகையாகப் பகுத்து ஆராயலாம்.

(தொடர்கிறது)

$$$

Leave a comment